தொன்மை மிக்க கதிர்காம முருகன் ஆலயம் | தினகரன் வாரமஞ்சரி

தொன்மை மிக்க கதிர்காம முருகன் ஆலயம்

ஈழத்தில் பண்டைய முருக வழிபாட்டில் முதன்மை பெற்ற இடங்களில் கதிர்காமமும் ஒன்றாகும். ஈழத்தின் தென்திசையில் மாணிக்க கங்கைக் கரையில் இது அமைந்துள்ளது.

கதிர்காமத்தின் தொடர்ச்சியான வரலாற்றினை ஈழத்தின் ஏனைய இந்து தலங்களைப்போல கட்டி எழுப்புவதற்கு போதிய தடயங்கள் காணக்கிடைக்காவிட்டாலும், காணக்கிடைக்கின்ற சான்றுகள் இதன் வரலாற்றுத் தொன்மையை உணர்த்துகின்றன.

கதிர்காமத் தலத்தின் மகிமைபற்றி பழந்தமிழ்  இலக்கியங்களான கந்தபுராணம், மகேந்திர யுத்தகாண்டம், தெட்சண கயிலாய புராணம், மச்சபுராணம், சுப்பிரமணிய பராக்கிரமம் ஆகியன குறிப்பிடுகின்றன. இத்திருத்தலம் பற்றி திரிகோணசலப் புராணம் பின்வருமாறுகுறிப்பிடும்

'கந்தவேள் குறக்கொடிதனைப் புனத்திற்

காண்டரு ஒட்டரும் கடிமணம் புணர்ந்து

வந்தவாறு மட்டாய் வரன்முறையே மகிழ்ந்து

போற்று முத்திலிங்க தேசிகர் தம்

சிந ;தை அன்புறத் தெரிசனை காட்டிச்

சிறந ;த நல்விளையாடல் செய்திருக்குஞ்

சுந்தரக் கதிர்காம நல் தலமும் சூழும் (பாடல் 36:வரி 1-7)

இவ்வாறு கதிர்காம முருகன் ஆலயத்தின் தொன்மைச் சிறப்புக்கள் பற்றி இப்பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, கதிர்காமத் தலத்தோற்றம் பற்றியும், இவ்வாலய வரலாறு பற்றியும் தொல்லியல் ரீதியாக நோக்குமிடத்து ஈழத்தில் திராவிடருக்கேயுரித்தான பெருங்கற்பண்பாடு நிலவியிருந்த காலத்தில் (கிமு 1000 - 300) கதிர்காம தலம் தோன்றியதென அறியமுடிகின்றது. அக்காலகட்டத்தில் கதிர்காமப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்களும் ஈழத்தின் பூர்வீக குடியினருமான நாகர், இயக்கர், வேடர் என்ற திராவிடக் குலங்களிடையே நிலவிவந்த வேல் வழிபாட்டின் தொடர்ச்சியே பிற்காலத்தில் முருகவழிபாடாக மலர்ந்தது.

இதனை விளங்கக் கூறுமிடத்து இலங்கையில் பெருங்கற்பண்பாடு நிலவியிருந்த காலத்தில் கிமு ஏழாம், ஆறாம் நூற்றாண்டுகளில் கதிர்காமப்பகுதியில் (திசமாறகம உள்ளிட்ட) வாழ்ந்து வந்த திராவிடரிடையே நிலவி வந்த வேல் வணக்கம் என்ற உருவ வழிபடே பிற்காலத்தில் கதிர்காமத்தில் முருகவழிபாடாகவும் (முருகன் ஆலயம்) வேல் வழிபாடாவும்  (கதிரமலை) விளங்கி வந்தன. பண்டைய வரலாற்றில் திராவிடர் என்பது தமிழரையே குறிப்பதாகும். ஈழத்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பிரதேசங்களில் கதிர்காமம் உள்ளிட்ட திசமாறக பிரதேசமும் அடங்கும் (ஈழத்து இந்து சமய வரலாறு, பக்,

கதிர்காமத்தில் பாண்டிய குலத்து அரசர்களது ஆட்சி கிமு 2ம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. இவர்களது ஆட்சிக்காலத்தில் கதிர்காமத்தில் வாழ்ந்திருந்த பாண்டியர், நாகர், இயக்கர் என்ற திராவிட மக்களில் பெருமளவினர் பௌத்தத்தை தழுவியிருந்தனர். இதற்கு பாண்டிய குலத்து தமிழ் அரசர்களே உறுதுணையாகவிருந்தனர் உறுகுணையில் திராவிட நாகரீகம் பௌத்தத்தை தழுவியிருந்த போதும் கதிர்காம முருகனையும் பக்தியுடன் வழிபட்டுவந்தனர். இவர்களது சந்ததியினரே பிற்காலத்தில் பௌத்த சிங்களவராயினர். கிபி முதலாம் நூற்றாண்டில்  உரோகணத்தில் சிற்றரசனாகவிருந்த கவந்தீசனின் மகனான துட்டகாமினி தமிழ் மன்னனான எல்லாளளைப் போரில் வெற்றி கொண்டால் கதிர்காம முருகன் ஆலயத்திருப்பணி செய்வதாக வேண்டுதல் செய்தான். எல்லாளனை (கிமு 145-101) போரில் வெற்றிகண்ட பின்னர் இவ்வாலயத் திருப்பணியை துட்டகாமினி மேற்கொண்டான்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான புகழேந்திப்புலவர் கதிர்காம முருகனைத் தரிசித்துள்ளார். நாவலர் சரிதையில் வரும் பாவொன்று இதனைக்குறிப்பிடுகின்றது.

அக்காலத்திலேயே செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காம யாத்திரிகர்கள் புறப்பட்டுக் கால்நடையாக கிழக்குக் கரையூடாக வெருகல், சித்தாண்டி, திருக்கோவில், உகந்தை ஆகிய முருகதலங்களைத் தரிசித்துக் கதிர்காமத்தைச் சென்றடையும் வழக்கம் நிலவிவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

கிபி 14ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த அருணகிரிநாதர், கதிர்காம முருகனைத் தரிசித்து அவரது அருளினால் 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளையும் சாற்றியுள்ளார்.

அக்காலத்தில் கதிர்காமம் இந்துக்களின் புகழ்பூத்த தலமாக விளங்கியிருந்ததை அருணகிரிநாதர் இத்தலத்தின் மீது பாடிய இருபத்தைந்து பாடல்களும் எடுத்துக்காட்டுவதோடு முருகனது அறுபடை வீடுகளோடு இதுவும் அருணகிரி நாதரின் பாடல்களில் இடம் பெற்றிருப்பது நினைவு கூறற் பாலது. போர்த்துக்கேயர் காலத்தில் புகழ்பெற்ற ஆலயங்கள் பல இடித்துச்

சேதமாக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டன. முன்னீசுவரம் சிவாலயம். தெய்வேந்துறை விஷ்ணு ஆலயம், கோணேஸ்வரம், திருக்கோவில் ஆகியன இவற்றில் அடங்கும் ஆனால் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மட்டும் போர்த்துக்கேயரது எண்ணம் ஈடேறவில்லை.

இதனை கிபி 1640ல் இலங்கையில் வாழ்ந்த போர்த்துக்கேயரான ரிபேயிரோ என்பவர் தனது இலங்கைச் சரித்திரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கண்டி மன்னர் காலத்தில் கதிர்காமம் கண்டி மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் கதிர்காம முருகன் ஆலயம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதுடன் ஆலய உற்சவம், பூசை வழிபாடுகள் ஆகியன ஒழுங்காகவும் இடம் பெற்றுவந்துள்ளன.

உற்சவ காலத்தில் (ஆடிவிழா) இலங்கையின் எல்லா இடங்களிலிருந்தும் வடஇந்தியாவிலிருந்தும் (காஸ்மீர்) யாத்திரிகர்கள் வந்து ஒன்று கூடுவர் இவர்களுக்கான தங்குமிடங்கள், பொலிஸ் பாதுகாப்பு, சுகாதார வசதி,  முதலியவற்றை அரசு செய்து கொடுக்கும். வரலாற்றுக் குறிப்புக்கள் மூலமாக இவற்றை அறிய முடிகின்றது.

கலாபூஷணம்
நா. நவநாயகமூர்த்தி

Comments