இந்திய எல்லைப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் தந்திரத்தில் சீனா! | தினகரன் வாரமஞ்சரி

இந்திய எல்லைப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் தந்திரத்தில் சீனா!

இந்திய எல்லைப் பிரதேசங்கள் பலவற்றில் சீனாவின் தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டேஇருப்பதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சு அண்மையில் மாற்றியிருந்தமையும்இங்கு குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்று கருதும் சீனா, இப்போது இந்தப் பெயர்களை தனது அதிகாரபூர்வ ஆவணங்களிலும், வரைபடங்களிலும் பயன்படுத்துகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், 'பெயர் மாற்றுவது' கள நிலைவரத்தின் உண்மைகளை மாற்றாது என்றும், 'அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்; எப்போதும் அப்படியே இருக்கும்' எனவும் இந்தியா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா தனது புதிய 'நில எல்லைச் சட்டத்தின்' கீழ் இந்தப் பெயர்களின் பட்டியலை முன்னர் வெளியிட்டிருந்தது. இது குறித்து இந்தியா கவலையும் தெரிவித்திருந்தது.

அருணாச்சலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது பல வருட காலமாகத் தொடர்கின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக, அருணாச்சல பிரதேசத்தின் ஆறு 'அதிகாரபூர்வ' பெயர்களை சீன நிர்வாகம் வெளியிட்டது. அப்போது, சீனாவின் இந்த நடவடிக்கை தலாய் லாமா அந்நாட்டுக்கு வருகை தருவதை எதிர்க்கும் விதமாகப் பார்க்கப்பட்டது.

சீனா வெளியிட்டிருந்த புதிய பட்டியல் முந்திய பட்டியலை விட நீளமானது. இது எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள் மற்றும் ஒரு மலைப்பாதை உட்பட 15இடங்களின் பெயர்களை உள்ளடக்கியது. மேற்கில் தவாங் முதல் கிழக்கில் அஞ்சோ வரை அருணாச்சல பிரதேசத்தின் 11மாவட்டங்களை இது கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் 90ஆயிரம் சதுர கிலோமீட்டர் பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என சீனா உரிமை கோருகிறது.

இந்தப் பெயர்கள் வெளியான பிறகு, இந்த இடங்கள் அனைத்து அதிகாரபூர்வ சீன வரைபடங்களிலும் அதே பெயரில் காணப்படுகின்றன. இது ஒரு குறியீட்டு நிலைப்பாடுதான். இதனால் இந்தியாவின் உண்மை நிலப்பரப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இது பிராந்திய பிரச்சினையில், சீனாவின் ஒரு புதிய அணுகுமுறையைக் குறிக்கிறது.

இந்திய நிலப்பரப்பில் தனது உரிமை கோரலை அடிக்கோடிட்டுக் காட்டவே சீனா இத்தகைய முயற்சியை மேற்கொண்டது என்பது புரியாத விடயமல்ல. அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா பெயரிட்டதும் அத்தகைய முயற்சியில் ஒரு பகுதியே ஆகும்.

இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு எல்லையில் கிராமங்களை அமைக்க சீனா திட்டம் வகுத்திருந்தது. அதன் கீழ் இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் 'முதல் வரிசை , இரண்டாவது வரிசை' என 628கிராமங்களை சீனா அமைத்தது. அங்கு வசிக்க, சீனா ஆடு மேய்ப்பவர்களையும் அனுப்புவது வழக்கம்.

அருணாச்சலப் பிரதேசம் குறித்து சீனா முந்திய காலங்களில் தொடர்ச்சியாக உரிமை கோருவதும், ஒவ்வொரு முறையும் இந்தியா அதனை கடுமையாக மறுப்பதும் வழமையாகும். தனது நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில், அருணாச்சலப் பிரதேசத்திற்கு இந்தியாவின் மூத்த தலைவர்களும் அதிகாரிகளும் வருகை தரும் போது, சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், எல்லைப் பிரச்சினையை அதிகரிக்கும் எந்தவொரு செயலையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்று சீனா தெரிவித்தது.

சீனாவின் இந்த எதிர்ப்புக்கு இந்தியா பலத்த கண்டனமும் தெரிவித்திருந்தது.இந்தியத் தலைவர்கள் அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகை தந்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க சீனாவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று இந்தியா பதிலடி வழங்கியிருந்தது.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு 2019ஆம் ஆண்டு வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. 2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்ற போதும் சீனா எதிர்ப்பு தெரிவித்தமை நினைவுகூரத்தக்கது.

இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம் ஆகும். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றது. அதை 'தென் திபெத்' என்று சீனா அழைக்கிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லைத் தகராறு இருந்தாலும் அதன் அழகான மலைகள், ஆறுகள், காடுகள் என அமைதியான மாநிலமாக இருந்து வந்தாலும், சில காலமாக அங்கு நிலைமை மாறி, எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுவது வழமையாகியுள்ளது.

லடாக்கில் முன்னர் இந்தியா-_சீனா இடையே நடந்த மோதலின் தாக்கம், 17இலட்சம் மக்கள் தொகை கொண்ட அருணாசல பிரதேசத்திலும் உணரப்பட்டது. ஆனால், அங்குள்ள நிலைமை தொடர்பான செய்திகள் மிகக் குறைவாகவே வெளிவருவதுண்டு. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்த போதிலும், மக்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று வருவது போல அங்கு நேரடியாக நுழைய முடியாது. சீனாவின் ஊடுருவல் காரணமாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம்.

அங்குள்ள கிராமங்களும் சிறியவையாகும். அவற்றுக்கு இடையில் பல கி.மீ தூர இடைவெளி காணப்படும். லடாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையேயான மோதல் நடந்தது முதல் இராணுவத்தினரின் இருப்பு இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சீன வீரர்கள் சில சமயங்களில் எல்லைக்கு அருகில் வருவார்கள் என்று அருணாச்சலப் பிரதேச கிராம மக்கள் கூறுகிறார்கள். சீன இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் எப்படி வருகிறார்கள் என்று கிராமத்தைச் சேர்ந்த சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.

"எல்லைக்கு அப்பால் இருந்து விவசாயிகளை வழிநடத்தியபடி சீன வீரர்கள் இந்தப் பகுதிக்கு வருகிறார்கள். அவர்கள் அந்த இடத்தைப் பின்தொடர்ந்து சுற்றி வளைக்கிறார்கள். அவர்கள் விலங்குகளை கொட்டகைகளில் விட்டுச் செல்வார்கள். பின்னர் அவர்கள் வந்து அவற்றை அழைத்துச் செல்வார்கள். வீட்டுக்கு முன்னால், வயல்வெளிக்கு முன்னால், சீன வீரர்கள் தங்கள் வாகனத்தை கொண்டு வந்து நிறுத்துவார்கள்".

அவ்வாறு மக்கள் கூறுகின்றனர். சீன வீரர்கள் வந்து நிற்கும் கிராமம் இந்தியாவைச் சேர்ந்தது. இந்திய எல்லைக்குள் சீனாவின் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்துள்ளன. சீன இராணுவம் இந்திய எல்லையில் அதன் கண்காணிப்பு கோபுரங்களையும் இராணுவ தளங்களையும் பெரிய அளவில் கட்டியிருப்பதாக தகவல் உள்ளது.

சீனாவின் ஊடுருவலை சமாளிக்கும் பலம் இந்தியாவிற்கு உள்ளது. ஆனால் சீனாவுடனான மோதல்களை இந்தியா பெருமளவு தவிர்த்தே வருகின்றது. ஆனாலும் சீனாவின் எத்தகைய அச்சுறுத்தலையும் முடியடிப்பதில் இந்தியப் படைகள் மிகுந்த பலத்துடன் எந்நேரமும் உஷார் நிலையிலேயே உள்ளன. சீனாவின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் இந்தியாவும் தனது எல்லையில் படையினரைக் குவித்துள்ளதுடன், பலத்தையும் அதிகரித்துள்ளது.

எஸ்.சாரங்கன்

Comments