சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகள், மலையக சமூகத்தின் பிரச்சினைகளை கண்டுகொள்ளுமா? | தினகரன் வாரமஞ்சரி

சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகள், மலையக சமூகத்தின் பிரச்சினைகளை கண்டுகொள்ளுமா?

தேசிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் மலையக அரசியலும் அல்லாடுவது வழமையாகிவிட்டது. அது குறித்ததான ஓர் அலசல் இது.

மலையக கட்சிகள் தாம் பங்காளியாகும் கட்சிகளுக்கு கடைசி வரை விசுவாசமாகவே நடப்பதில் பெயர் பெற்றவை. எந்த மக்களின் பெயரால் ஆட்சிபீடத்தில் அமர வாய்ப்புக் கிட்டுகின்றதோ அந்த மக்கள் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை, ஒட்டிய கட்சியுடன் உறவை வெட்டி விட எந்தவொரு மலையக தலைவரும் துணிந்ததே இல்லை. இதன் காரணமாகவே தேசிய கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் (மட்டும்) மலையக மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான வாக்குறுதிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் மலையகம் ஒன்றும் சில்லறை வாக்குகளைக் கொண்ட பிரதேசமல்ல. கணிசமான வாக்குகளைக் கொண்ட அரசியல் தளம் இங்கே உள்ளது.

ஆனால் கட்சி அரசியலுக்காக அதைக் கூறுபோட்டுக் குளிர்காயும் சந்தர்ப்பவாத அரசியல் இம்மக்களது சக்தியை மழுங்கடிப்பது என்னவோ மறுதலிக்கப்பட முடியாத உண்மை. ஆளும் தரப்போடு மல்லுக்கு நின்று எதனையாவது சாதிக்க முடியாது என்பது வெள்ளிடை மலை. இதை சாட்டாக வைத்துக் கொண்டு தமக்கு யார் சாதகமோ அவர் பக்கம் சாய்வதே தலைமைகளின் அரசியல் நாகரிகமாக காணப்படுகின்றது.

நாடு இன்னும் அரசியல் நெருக்கடியில் இருந்து கொஞ்சமேனும் விடுபடவில்லை. அரசியல் தளம்பல் நிலை நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. எரிவாயுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்குமான வரிசை இன்னும் அப்படியேதான் உள்ளது. இத்தனைக்கும் காரணம் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் என்பது முழுநாடே அறியும். அந்நியச் செலாவணி வர வாய்ப்பில்லாததால் சவாலுக்கு மேல் சவால். இதை எழுதும்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனைக்கு மேல் நிபந்தனைகளைப் போட்டு வருகின்றது. உலக வங்கி 'உள்நாட்டில் அரசியல் ஸ்திரம் ஏற்படும்வரை உதவி செய்ய வழியில்லை" என்று கையை உதறிக் கொண்டுள்ளது. அமெரிக்காவோ புதுப்புது வியாக்கியானங்களைச் சொல்லிக்கொண்டு காலம் கடத்துகிறது.

இதே சமயம் தற்போதுள்ள வரிசை நிலையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டால் நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று கத்துக்குட்டி அரசியல் கணக்கு போடும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.

உண்மையில் இயல்பு வாழ்க்கை என்றால் என்ன? சராசரி மனிதன் ஒருவன் தனக்கு தேவையானதை தேவைக்கேற்ப பெற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்க்கையை அநுபவிக்கும் ஒரு சூழல். ஆனால் இந்த இயல்பு வாழ்க்கைக்கான சுமுகமான சூழ்நிலை பெருந்தோட்டச் சமூகத்துக்கு அன்றும் இருந்தது இல்லை. இன்றும் இல்லை. சுருங்கக்கூறின் அத்தியாவசிய தேவைகள் கூட முழுமையாக உள்வாங்கப்படாத ஒரு கட்டமைப்புக்குள் காலம் போய்க் கொண்டிருக்கின்றது. வீடமைப்புத் திட்டம், சுகாதார மேம்பாடு, காணி உரிமம் போன்ற பல அம்சங்கள் தேசிய பொது வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படாததால் கெஞ்சிக் கூத்தாடி கூப்பாடு போட வேண்டிய நிலைமை. இவ்வாறான புறக்கணிப்புகள் சராசரி இலங்கைப் பிரஜையொருவரின் இயல்பு வாழ்க்கை அடையாளங்களில் இருந்து பெருந்தோட்ட சமூகத்தை வேறு பிரித்து வைக்கின்றது.

இத்தனைக்கும் இடையில் தேசிய அரசியலில் தாமும் பங்காளிகள் என்னும் மகுடம் சூடல். பிந்திய மலையக அரசியல் தளத்தில் இன்று இந்த மகுடத்தைச் சூடிக்கொள்ளப் பலர் பிரயத்தனப்படும் காட்சிகளைக் காணமுடிகின்றமை தான் எமது இந்த பதிவுக்கான பின்புலம். மலையகத் தலைமைகள் அமைச்சுப் பதவிக்காக அல்லாடுகிறார்களே என்று சிங்கள நண்பர் ஒருவர் கேட்டார்.

ஜீவன் தொண்டமான் இதற்கான முஸ்தீபுகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். இவரின் சகா ராமேஸ்வரன் ஜீவனை விட இதில் தீவிரம் காட்டுபவராக இருக்கிறார். அவர் மஹிந்த ராஜபக்ஷவோடு நெருக்கமான தொடர்பினைப் பேண விரும்பியவர். தற்போதைய ஜனாதிபதியோடு கை கோர்க்கும் முயற்சியில் இ.தொ.கா. ஈடுபாடு கொண்டுள்ளது.

இதேவேளை மனோ கணேசனும் கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். (சில வேளை இதை வாசிக்கும்போது அவர் மனோரதம் ஈடேறியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை) இதற்காக முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை ஊடக சந்திப்பில் கொட்டித் தீர்க்கின்றார். சர்வகட்சி ஆட்சி என்ற கோரிக்கை நீட்சிப் பெற்றிருக்கும் சூழ்நிலையில் மனோ கணேசன் ஜனாதிபதியோடு கைகோர்க்கும் பட்சத்தில் அவர் தலைமை ஏற்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்னவாயிருக்கும் என்னும் கேள்வி எழுவதற்கு முன்பே அதன் தலைவர்களில் ஒருவாரன பழனி திகாம்பரம் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கத் தயார். ஆனால் கூட்டணியாக மட்டுமே என்று கூறியிருக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய சூழலில் சர்வகட்சி ஆட்சி என்ற பொறிக்குள் சிக்கிக்கொள்ளத் தயாரில்லை என்பது வெளிப்படை.

சரி, மலையக தலைமைகள் சர்வகட்சி ஆட்சியில் பங்கேற்பதும்  ஏற்காததும் அவர்களின் கைகளில். ஆனால் பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு இதுவல்ல. முழுமையான சம்பள உயர்வு, விலைவாசி உயர்வுக்கான இடர்கால, இடைக்கால நிவாரணம், வேலைவாய்ப்பு, தடைப்பட்டுப் போயிருக்கும் வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள், தரிசு காணி விநியோகம் சம்பந்தமான முன்னுரிமை என்று பல அத்தியாவசியங்கள்.

இதுவரை பேரம் பேசலால் பெரிதாக எதுவும் சாதித்தப்பாடில்லை. எனவே பேச்சுவார்த்தை என்பதெல்லாம் பம்மாத்து என்கிறார்கள் மக்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கவே கூட்டு என்றால் அதை அப்படியே நம்பிவிட பெருந்தோட்ட மக்கள் தயாரில்லை.

பன். பாலா

Comments