மகளிர் யூரோ கோப்பை; ஒற்றைப்படம் பல தடைகளை உடைத்தெறிந்துள்ளது | தினகரன் வாரமஞ்சரி

மகளிர் யூரோ கோப்பை; ஒற்றைப்படம் பல தடைகளை உடைத்தெறிந்துள்ளது

விளையாட்டில் பெண்களுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடு, கால்பந்தில் மகளிருக்கான பிரதிநிதித்துவம், அவர்கள் உடல் மீதான அவர்களது உரிமைகள் போன்றவை ஒரு புகைப்படத்தின் ஊடாக உடைந்தெறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற மகளிர் யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இந்தப் போட்டியில் அணிக்காக இரண்டாவது கோலை தான் பதிவு செய்ததை கொண்டாடும் விதமாக தனது டி-ஷர்ட்டை கழற்றி சுழற்றியபடி மைதானம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தார் இங்கிலாந்து வீராங்கனை க்ளூய் கெலி (Chloe Kelly). அவரது அந்த படம்தான் இப்போது மகளிருக்கான அதிகாரத்தின் அடையாளம் என கருதி உலக அளவில் பெண்கள் பலரும் போற்றி வருகின்றனர்.  

அவர் ஸ்போர்ட்ஸ் பிரா (மேலங்கி) அணிந்தபடி மைதானத்தை வலம் வந்த காட்சிதான் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. 'தசாப்தத்தின் சிறந்த பெண்ணியப் பிம்பம்' என இந்தப் படம் போற்றப்படுகிறது. அதோடு, இந்த ஒற்றைப்படம் பல தடைகளை உடைத்தெறியும் வகையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  

'ஒரு விளையாட்டு வீராங்கனையின் ஐகானிக் புகைப்படம் இது' என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கெலியின் படத்தை போற்றியுள்ளது. கிட்டத்தட்ட 56ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அரங்கில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இது. அதனால்தான் இப்படி ஓர் ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளார் கெலி. 

கடந்த 1999மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அமெரிக்க அணியின் முன்னாள் வீராங்கனை ப்ராண்டி செஸ்டைன் (Brandi Chastain) இதேபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இப்போது பலரும் அதனை கெலியின் படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். 

அதே நேரத்தில் கெலியின் படத்தை பலரும் டுவிட்டரில் பகிர்ந்து, அது குறித்து தங்கள் கருத்தை பகிர்ந்திருந்தனர். அந்த போட்டோ வளர்ந்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களிடத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை குறித்த கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.   

Comments