மக்கள் தற்போது புரிந்து கொண்ட யதார்த்தம்! | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் தற்போது புரிந்து கொண்ட யதார்த்தம்!

கொழும்பு, காலிமுகத்திடலில் மாத்திரமன்றி, நாடெங்கும் இப்போது போராட்டங்கள் பெருமளவில் தணிந்து விட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் குழுமி நின்றிருந்த காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இப்போது ஐம்பது பேரைக் கூட காண்பது அரிதாக இருக்கின்றது.

அங்கே முன்னர் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சிகளை இப்போது காண முடியாதிருக்கிறது. ஒன்றிரண்டு பேர் மாத்திரமே சலிப்பான சுபாவத்தில் அமர்ந்திருந்ததை இரண்டு தினங்களுக்கு முன்பாக அவ்விடத்தில் காண முடிந்தது. இன்று வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றது காலிமுகத்திடல் போராட்டக்களம்!

ஆர்ப்பாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தவர்களும் இப்பொழுது சலிப்படைந்து போய் விட்டனர். அவ்விடத்தில் முன்னர் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இரவுபகலாக உணவு விநியோகம் செய்தவர்களும் தங்களது குறிக்கோளில் நம்பிக்கையிழந்து பின்வாங்கி விட்டனர். அவர்களெல்லாம் போராட்டக்காரர்களை இப்போது மறந்து விட்டார்களா? இல்லையேல் மக்களால் பொருட்படுத்தப்படாத போராட்டத்துக்கு ஆதரவளிப்பதால் பயனில்லையென்று சலித்துப் போய் விட்டார்களா? எதுவுமே புரியாதிருக்கின்றது. போராட்டத்தை முன்னெடுப்பதற்காக ஊக்கத்துடன் இயங்குவதற்கு தற்போது ஆட்களைக் காணவில்லை. போராட்டக்காரர்களை நம்பி அவ்விடத்தில் கடை விரித்திருந்தவர்களுக்கும் இப்போது வியாபாரமில்லாமல் போய் விட்டது.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர், மக்கள் காலிமுகத்திடல் வழியாக பேருந்துகளில் பயணம் செய்கின்ற வேளையில், அவ்விடத்தில் எழுச்சியும் பரபரப்பும் தென்பட்டதுண்டு. மேடையில் ஆக்ரோஷமான பேச்சுகள், கலைநிகழ்வுகள், எழுச்சி நாடகங்கள் என்றெல்லாம் அந்தப் பிரதேசமே களைகட்டியிருந்ததுண்டு. ஆனால் இப்போது பார்க்கையில் காலிமுகத்திடலில் நடந்ததெல்லாம் வெறும் கனவுக் காட்சிகள் போல இருக்கின்றன.

எல்லாமே ஓய்ந்து விட்டதென்று சொல்லாமல் சொல்கின்றது காலிமுகத்திடல் போராட்டக்களம்! அங்கு மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இதே நிலைமைதான். அரசுக்கு எதிராக நாடெங்கும் உருவெடுத்த போராட்டங்கள் ஒட்டுமொத்தமாக ஓய்ந்து விட்டன என்றுதான் கருத வேண்டியிருக்கின்றது. போராட்டத்தின் அடையாளக்குறியாகக் காட்சியளித்த காலிமுகத்திடலே வெறிச்சோடி விட்டதென்றால், முழுநாட்டையும் பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.

நாடெங்கும் அன்று ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமான வேளையில், அதனை ஆதரித்தவர்கள் அநேகம். கற்றறிந்தோர் மாத்திரமன்றி பாமர மக்களும் ஆதரித்தனர். அவர்களின் கோரிக்கைகளில் நியாயங்களும் தென்பட்டன. மக்களின் கோரிக்கைகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில், அரசை இனிமேலும் எதிர்ப்பதில் அர்த்தம்தான் என்ன என்று இப்போது வினவுகிறார்கள் போராட்டத்தின் முன்னாள் ஆதரவாளர்கள்.

அவர்களது கூற்றில் நியாயம் இல்லாமலில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டையும், பாவனைப் பொருட்களின் விலையுயர்வையும் கண்டித்தே ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின. எரிபொருளுக்கு இப்போது கியூவரிசைகள் கிடையாது. ஓரிரு உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் விலைகள் மேலும் குறைந்து விடுமென்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

அதலபாதாளத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை ஓரிரு நாட்களில் மீட்டுவிட முடியாதென்ற யதார்த்தம் பலருக்கும் புரிந்திருக்கின்றது. நாட்டின் புதிய தலைமைத்துவத்துக்கு அதற்கான காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அதேவேளை எதிரணி அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வீதியில் இறங்க முடியாதென்ற புரிதலும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டதென்பதே உண்மை!

Comments