சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நாவல் வெளியீடும் நினைவேந்தலும் | தினகரன் வாரமஞ்சரி

சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நாவல் வெளியீடும் நினைவேந்தலும்

நாட்டின் நோய்த் தொற்று நிலவரம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனுட்டிக்கப்படாத சாரல்நாடன் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் சிறப்பாக கடந்த ஜூலை 31அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தில் நடத்தப்பட்டது.

இந்த எட்டாவது நினைவு தின நிகழ்வில் முக்கிய அம்சமாக  மு. நித்தியானந்தன் எழுதிய காத்திரமான முன்னுரையுடன் மலையக பதிப்பாளர் எச். எச். விக்ரமசிங்கவின் முனைப்பில் தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்ட சாரல் நாடன் எழுதிய ‘வானம் சிவந்த நாட்கள்' எனும் நாவல் இலங்கையில் முதன் முதலாக வெளியீடு செய்யப்பட்டது. 

மங்களவிளக்கேற்றல் மற்றும் மலரஞ்சலியின் பின் தினேஸ் எழுதிய கவிதை வழி கவிதாஞ்சலி அவரின் தாயாரல் வாசிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.

தலைமை வகித்த கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளரும் இலக்கியவாதியுமான சு.முரளிதரன் இந்த நாவல் ஒரு வரலாற்று நாவலாக அமைவதோடு இந்த நாவல் வெளியீடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

மேலும் உரையாற்றும் போது லண்டனில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் இந்த நாவல் வெளியிடப்பட்டதோடு, சாரல்நாடன் என்ற பெயரில் ஓர் அரங்கம் நடத்தப்பெற்றது அவருக்கு கிடைத்த மிக உயர்ந்த கௌரவமாகும் என்றார். இந்த மாபெரும் கௌரவத்தை வழங்கிய மலையக இலக்கிய செயற்பாட்டாளர்களான  மு. நித்தியானந்தன் மற்றும்  எச். எச். விக்ரமசிங்க ஆகியோருக்கு மலையக இலக்கிய உலகு வாழ்த்துக்களையும் பாரட்டுக்களையும் தெரிவிக்கின்றது.

நாவல் பற்றிய பார்வையினை பதிவு செய்த சு. தவச்செல்வம் இந்த நாவல் மூலம் சாரல்நாடன் எவ்வாறு தொழிலாளர்களை நேசிக்கும் ஒருவராகவும் விளங்குவதோடு உண்மையாக தொழிலாளர் விடுதலைக்கு போராடும் ஆளுமைகளை முன்னிருத்தி போராட்டங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றது எனக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து இடம்பெற்ற ‘சாரல்நாடன் மலையகத்தின் ஒரு சகாப்தம்’ எனும் தலைப்பிலான நினைவேந்தல் உரைகளில் முதலாவதாக அவருடைய பள்ளி சகபாடி சாகித்யரத்னா மு.சிவலிங்கம் ஹைலண்டஸ் கல்லூரியில் கல்வி கற்கும்போது ஜொலித்த  மாணவர்கள் சிலரிடையே சாரல்நாடன் எவ்வாறு கலை இலக்கிய செயற்பாடுகளில் அக்கறை கொண்டிருந்தார் என விபரித்ததோடு 24நூல்களை படைத்த சாரல்நாடனின் வெற்றிக்கு அவரின் துணைவியாரின் பங்களிப்பை போற்றினார். அவரை அடுத்து பேசிய கலாபூசணம் மொழிவரதன், சாரல்நாடன் எவ்வாறு மலையக இலக்கியத்துக்கு பங்களித்ததோடு தனது நூல்களும் வெளிவருவதற்கு  ஒத்துழைத்தார் எனக்கூறியிருந்தார்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் முன்னாள் துணைப் பீடாதிபதி வ. செல்வராசா, சி.வி.வேலுப்பிள்ளையை வெகுஜனப்படுத்தவதில் சாரல்நாடன் ஆற்றிய பணியை பாராட்டினார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஜெ.சற்குருநாதன் சாரல்நாடனின் பதிப்பு முயற்சிகள் குறித்தும் அதன் முக்கியத்துவும் குறித்தும் எடுத்துரைத்தார்.

மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி முன்னைநாள் பீடாதிபதி சிவ ராஜேந்திரன் சாரல்நாடனோடு பழகிய காலத்தில் அவருக்கு அறிமுகப்படுத்திய மலேசிய நாட்டின் மக்கள் செயற்பாட்டாளர் தோழர் வரதராஜனோடு அவர் உரையாடிய வேளையில் சாரல்நாடன் பங்களித்த விதத்தை எடுத்துரைத்து சிலாகித்தார்.

இல நாகலிங்கம் தன்னை எவ்வாறு ஒரு சிறுகதை எழுதத்தூண்டி அவுஸ்ரேலிய நாட்டில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெறச்செய்தார் எனக்குறிப்பிட்டார்.

சிவனு மனோகரன், எவ்வாறு தனது ஆரம்ப கால சிறுகதைகள் வெளிவந்த போது அதனை வாசித்து தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதி கதைகளை குறித்து மதிப்பீடு செய்து ஊக்குவித்தார் என்றும் இனி சாரல்நாடனை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுப்பது குறித்து கருத்துக்கள் கூறினார். கொட்டகலை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் அகிலன் தமிழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவர் பெருமாள் சரவணக்குமார் நடேசய்யர் 1915ஆம் ஆண்டு எழுதிய 'ஒற்றன்’ நாவலை பதிப்பித்து அதனை சாரல்நாடனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை பதிவு செய்தார்.

பத்தனை டேவிட் நூல்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு சாரல்நாடனின் நூல்கள் எப்போதும் உசாத்துணைகளாக பயன்படுத்த வல்லன என்றார். சுதர்மமகாராஜன் பேசுகையில் தமது பெருவிரல் இயக்கம் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் நல்ல வாசிப்பு பழக்கத்தை முன்னெடுக்க பணி செய்த போது அதில் சாரல்நாடனின் புலமைத்துவ வழிகாட்டல் பங்களிப்பு செய்தது பற்றிக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய கணேசலிங்கம் சாரல்நாடன் தன்னை எப்படி ஒரு ஆய்வாளனாக நிலைமாற்றம் செய்ய அனுசரணை செய்தார் என்பதை கூறி அவரின் நூல்கள் மலையக ஆய்வுகளுக்கு     துணைக்கரமாகுமென்றார். ஆசிரியர் யுகேஸ்வரி பேசும் போது தான் பணியாற்றும் பாடசாலையில் சாரல்நாடனின் மகள் ஜீவகுமாரியும் பணியாற்றுவதால் சாரல்நாடன்  பற்றி பேசும் போது ஒரு பெருந்தந்தையோடு நமக்கும் உறவிருக்கும் உணர்வு தோன்றுகின்றது என்றார்.

ஜீவகுமாரியின் நன்றியுரையோடு முடிவடைந்த நிகழ்சின் பின்னர் மு.சிவலிங்கம் மற்றும் சு.முரளிதரன் ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சாரல்நாடன் கீர்த்தியை அர்த்தபுஷ்டியாக முன்னெடுக்க செயற் குழு அமைக்கப்பட்டது. 

அ.கனகசூரியர்  

Comments