எப்போதும் மாற்றங்களை எதிர்பார்க்கும் இலங்கை மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

எப்போதும் மாற்றங்களை எதிர்பார்க்கும் இலங்கை மக்கள்

தீராத பிரச்சினைகளின் மையக் களமாகியுள்ளது இலங்கை. இனப்பிரச்சினை, சமூக முரண்பாடுகள், மோதல்கள், போர், படைத்துறைக்கான அதிகரித்த செலவீனமும் ஆளணிப் பெருக்கமும், பொருளாதார நெருக்கடி, அரசியலமைப்புக் குழப்பங்கள் – இழுபறிகள், ஆட்சித்தடுமாற்றங்கள் என ஏராளம் தொடர் பிரச்சினைகளில் சிக்கி மீளமுடியாமல் கிடக்கிறது நாடு.

போர் முடிந்த பிறகு நாடு உருப்படும் என்ற கனவு, மிகப் பெரிய படுகுழியில் வீழ்ந்து நாறுகிறது. இது போதாதென்று வெளியுறவுச் சிக்கல்கள் வேறு வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதிலொன்றாக இப்பொழுது சீன உளவுக் கப்பல் விவகாரம் தலையெடுத்திருக்கிறது.

“சீனக் கப்பலை உள்ளே எடுக்கக் கூடாது. அது தன்னுடைய பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்கிறது இந்தியா.

“ஆமாம், ஆமாம்” என்று இதை ஆமோதிக்கிறது அமெரிக்கா. (கூட்டாளிகள் அப்படித்தானே சொல்வார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது).

“இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அது சுயாதீனமாகச் சிந்திப்பதற்கு இடமளிக்க வேண்டும்” என்று சொல்கிறது சீனா.

இந்தச் சிக்கலுக்குள் என்ன தீர்மானத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறது இலங்கை. எந்தத் தரப்பின் சொற்படி நடந்தாலும் இலங்கைக்குப் பாதிப்பு என்பதே இன்றைய நிலை.

இதற்குக் காரணம், நம்முடைய கடந்த காலத் தவறுகளேயாகும்.

எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல், அவற்றை வேறு வழிகளில் அடக்கிச் சமாளித்துக் கடந்து விடலாம் என்ற தந்திரோபாயத்தைக் கையாண்டதன் விளைவே இன்றைய அத்தனை நெருக்கடிகளுமாகும். பொருளாதாரப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்ற மையப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான – நீதியான – தீர்வைக் காணாமல், படையாதிக்கத்தின் மூலம் அவற்றை அடக்கி விடலாம் என்று ஆட்சியாளர்கள் சிந்தித்ததன் விளைவே இன்றைய நிலை.

1970களிலும் 1980களிலும் ஜே.வி.பியின் போராட்டங்களை வெற்றிகரமாக அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதைப்போல தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை – புலிகளைத் - தோற்கடித்து 2009இல் வெற்றி கண்டது. இதனையடுத்து இனி எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடு வளர்ச்சியை நோக்கி றொக்கட் வேகத்தில் பயணிக்கும் என்றே பலரும் நம்பினார்கள். அந்த உற்சாகத்தோடுதான் 2009க்குப் பின்னர் நாடு முழுவதும் சுற்றுலாவில் உலாத்திக் கொண்டிருந்தனர் பலரும்.

ஆனாலும் அந்தப் பிரச்சினைகள் அப்படியேதான் இன்னும் உள்ளன. மட்டுமல்ல அவை இன்னும் பல பிரச்சினைகளை உண்டாக்கி விட்டுள்ளன.

அவற்றிற் சிலவே ஜனநாயக நெருக்கடி, போர்க்குற்ற விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, பொறுப்புக்கூறல், பொருளாதார நெருக்கடி மற்றும் வெளியுறவுப் பிணக்குகள் வரையாக நீண்டுள்ளன. உண்மையில் அத்தனை நெருக்கடிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்றிலிருந்து ஒன்றாக விளைந்தவை. இதில் முக்கியமானது இனப்பிரச்சினை. 70ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருப்பது. இந்தப் பிரச்சினை லட்சம் வரையான உயிர்களைக் காவு கொண்டுள்ளது. நான்கு தலைமுறையினரின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. பல கோடி சொத்துகளை அழித்துள்ளது. இயற்கை வளங்களைச் சிதைத்துள்ளது. நாட்டின் வருவாயை மீறிய படைத்துறைச் செலவைச் செய்ய வைத்துள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக – சமாளித்துக் கொள்வதற்காக – உலகம் முழுவதிலும் கடன்படும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்தக் கடனால் இன்று அனைவரிடத்திலும் அடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதைப்போலவே நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரக் கொள்கையை மேற்கொள்ளாமல், சீரழிவுப் பொருளாதாரக் கொள்கையை மேற்கொள்ளப்பட்டது.

பெற்ற கடனில் கூட சரியான பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் அவற்றைத் தாராளமாகச் செலவு செய்ததும் அதில் ஊழலை மேற்கொண்டதுமாகும்.

ஆகவே தொடக்கத்திலேயே இந்தப் பிரச்சினைகளை நேர்மையான முறையில் தீர்த்திருந்தால் நாடு இன்று முழுமையான அமைதிக்குத் திரும்பியிருக்கும். பொருளாதார வளர்ச்சியையும் கண்டிருக்கும். யாரிடமும் கையேந்தி, யாருக்கும் கட்டுப்பட்டு, யாவருக்கும் அடிமையாக இருந்திருக்க வேண்டி வந்திராது. நம்முடைய இறைமை பாதிக்கப்பட்டே இருக்காது.

நாட்டின் இறைமை என்பது சொந்தக் காலில் நிற்கும்போதே சாத்தியமாகும். தனி நபருக்கென்றாலும் சரி, குடும்பத்துக்கென்றாலும் சரி, நாட்டுக்கானாலும் சரி இதுதான் உண்மை.

இன்று இலங்கை உலகம் முழுவதிலும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறது. நாட்டை அந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் கடந்த கால ஆட்சியாளர்கள். அப்படி விட்டதைப்பற்றிய எந்தக் குற்றவுணர்ச்சியும் வெட்கமும் இல்லாமல் இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே இன்னும் உள்ளனர். மட்டுமல்ல இன்னும் – இந்த நிலைக்கு நாட்டை கடனில் மூழ்கடித்த பிறகும் அரசியல் அதிகாரப் போட்டியில் எந்தக் கூச்சமும் வெட்கமும் இல்லாமல் தாராளமாக ஈடுபடுகின்றனர்.

இது எதனைக் காட்டுகிறது? இன்னும் இந்த நாடு முன்னேற்றத்தை எட்ட முடியாது என்பதைத்தானே!

ஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு பிரச்சினைகளையும் தீர்த்திருக்க முடியுமா? முடியாதா என்று. இவ்வளவு பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்துண்டா? இவ்வளவு பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்றுதானே நம்பிக்கையோடு நீங்கள் கடந்த காலங்களில் உங்களுடைய வாக்குகளை அளித்திருந்தீர்கள். அந்த நம்பிக்கையை இந்தத் தலைவர்கள் காப்பாற்றியிருக்கிறார்களா? அதற்குக் கண்ணியம் செலுத்தியிருக்கிறார்களா? இதற்கான பொறுப்பை இன்றாவது ஏற்றுக் கொள்வார்களா?

இங்கேதான் நாம் ஆழமாகச் சிந்திக்கவும் நிதானமடையவும் வேண்டியுள்ளது. நிச்சயமாகத் தெளிவடைய வேண்டியுள்ளது.

இப்பொழுது இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண்பதற்கென்று தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்கின்றார். இதைப்பற்றி அவர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரையிலும் குறிப்பிட்டிருந்தார். உண்மையாகவே இதெல்லாம் நடந்தால் நல்லதே. எதையும் எதிர்மறையாகப் பார்க்காமல் நேர்நிலையாகப் பார்ப்பது சிறப்பே.

அப்படியென்றால் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் தன்மையைப் பற்றியும் அதன் கடப்பாடுகள், அது மேற்கொள்ளவுள்ள வேலைகள், அதற்கான கால எல்லை போன்றனவற்றையும் வெளிப்படுத்துவது நல்லது. முக்கியமாக கட்சி நலன், தனி நபர் நலன் போன்றவற்றுக்கு அப்பால் நாட்டின் தேசிய நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு இந்த ஆட்சியில் அனைவரும் இணைய வேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்புக்கு இது அடிப்படையாகவும் அர்த்தமாகவும் அமையும்.

இனியும் எதையும் ஒழித்து மறைத்து விளையாடுவதோ, தந்திரோபாயமாகக் காலத்தைக் கடத்துவதோ, சூழ்ச்சிகரமாகக் காய்நகர்த்துவதோ சரிப்பட்டு வராது. அதிலும் மக்களை ஏமாற்றும் விதமாக தந்திரோபயங்களை மேற்கொள்வது இனிச் சாத்தியப்படாது. அந்தக் காலம் முடிந்து விட்டது. இனி எதற்குமே அவகாசமில்லை. அப்படி மக்களை ஏமாற்ற முற்பட்டால் இப்போதுள்ளதையும் விட மிக மோசமான நிலையையே நாடு சந்திக்க வேண்டியிருக்கும். நாடு மட்டுமல்ல, ஆட்சியாளரும்தான். இதற்கு அண்மைய நாட்கள் சான்று.

நாடு சுயாதீனத் தன்மையை எட்டு வேண்டும் என்றால் அது பிரச்சினைகளின் ஆழ்குழியிலிருந்து மீள வேண்டும். பொருளாதார எழுச்சியையோ வளர்ச்சியையோ எட்ட வேண்டும் என்றாலும் அதற்கு முன்னுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆகவே முதற்கட்ட வேலை என்பது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்டுவதேயாகும். இதற்குத் துணிச்சல் வேண்டும். எளிய ஒரு உதாரணம், யுத்தம் முடிந்த பிறகு புலம்பெயர்ந்த தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் பல தடவை அழைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாருமே வரவில்லை. காரணம், அரசாங்கத்தின் இனப்பாகுபாட்டுத் தன்மையில் மாற்றம் நிகழவில்லை என்பதே. இதைப் புலம்பெயர் தமிழர்கள் பல தடவை தெளிவு படுத்திய பின்பும் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமல் அரசாங்கம் – ஆட்சியாளர்கள் இருந்தனர். இன்னொரு உதாரணம், வடக்கில் உள்ள பலாலி விமான நிலையத்தை இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடிப்புகளைச் செய்து வருவதாகும். பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்டு சேவைகள் நடக்குமானால் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரித்திருக்கும். வணிக நடவடிக்கைகளும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கும். இப்படிப் பல விடயங்கள் எளிதில் நிறைவேற்றக் கூடிய நிலையில் இருந்தும் அவை செயற்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன.

ஆகவே இந்த மாதிரிப் பல பிரச்சினைகளைத் தீர்த்தால் – செய்ய வேண்டிய வேலைகளை துரிதகதியில் துணிச்சலோடு செய்தால் நாட்டை விரைவாக மீட்டெடுத்து விட முடியும். இலங்கை மக்கள் எப்போதும் மாற்றங்களை விரும்புவோர். அதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயற்படும் பாரம்பரியத்தைக் கொண்டோர் என்பதால் இன்றைய நெருக்கடிகள், பிரச்சினைகள், சிக்கல்களிலிருந்தும் அவர்களால் இலகுவாக – விரைவில் மீண்டெழ முடியும்.

அதற்கான வாசல்களைத் திறக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. ஆட்சியாளருக்கு, ஜனாதிபதிக்குண்டு. காலம் இதற்காகக் காத்திருக்கிறது. ஆமாம், மிகப் பெறுமதியான ஒரு காலப்பணிக்காக.

கருணாகரன்

Comments