ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் உணர்வுக்கு கிடைத்த அங்கீகாரம்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் உணர்வுக்கு கிடைத்த அங்கீகாரம்!

இந்தியா என்பது பெருந்தேசம்.பல்வேறு மாநிலங்களின் ஒன்றிய அரசாக இந்திய தேசம் உள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒரே தேசத்தின் பிரஜைகள் என்ற நாட்டுப்பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர்.

இந்தியாவுக்கு எந்தவொரு வகையிலேனும் அச்சுறுத்தல் வருகின்ற போது, அத்தேசத்தின் மக்கள் தங்களது மாநிலத்தின் பாதுகாப்பை மாத்திரம் சிந்திப்பதில்லை. ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் பாதுகாப்புப் பற்றியே சிந்திக்கின்றனர். அக்கறையும் கொள்கின்றனர்.

அதுதான் இந்தியக் குடிமக்களின் சிறப்பான அம்சம். 'நான் இந்தியக் குடிமகன்' என்ற நாட்டுப்பற்று அவர்களிடம் அதிகமாகவே குடிகொண்டிருக்கின்றது. இந்தியாவின் நலனே அம்மக்களுக்குப் பெரியதாகும். இந்திய நலனுக்குக் குந்தகம் எதிர்கொள்ளப்படுகின்ற வேளையில் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றாகக் கிளர்ந்தெழுவதற்குத் தவறுவதில்லை.

இதற்கான ஒரு உதாரணமாக சீன உளவுக்கப்பல் விவகாரத்தைக் குறிப்பிடலாம். சீனாவின் உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரப் போகின்றதென்ற செய்தி வெளியானதுமே இந்தியக் குடிமகள் ஒவ்வொருவனும் தனது தேசத்தின் நலன் குறித்து வெளிப்படுத்திய கரிசனைக்குக் குறைவில்லை.

சீன உளவுக் கப்பலின் வருகையினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்து விடுமென்ற அச்சம் ஒவ்வொரு இந்தியப் பிரஜையினதும் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. இந்தியாவின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்த இந்திய மக்களின் தேசஉணர்வை நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இராஜதந்திர நகர்வினாலேயே சீன உளவுக் கப்பலின் வருகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் அதனை இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீன உளவுக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டுக் கொண்டுள்ள நிலையில், அக்கப்பலின் வருகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த சில காலமாக சீனாவின் நடவடிக்கைகள் தென்கிழக்கு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அடுத்தடுத்து சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் உலகின் பல நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.

முதலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதை எதிர்த்த சீனா, தாய்வான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததுடன் மிகப் பெரிய அளவில் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டது.

அந்தப் பதற்றம் தணிவதற்கிடையில்தான் சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் 5என்ற கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. சீனா இதனை ஆய்வுக் கப்பல் என்று கூறினாலும், இந்தக் கப்பலால் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். கொழும்பில் இருந்து கொண்டு இந்தியாவைச் சீனா கண்காணிக்க முயல்வதாக இந்தியா எங்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியா இலங்கையிடம் தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தியாவின் கவலை நியாயமானது. இலங்கை மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் சிக்கி இருந்த போது, இந்தியா மட்டுமே நிதி கொடுத்து உதவியது. இந்தியாவின் அதிருப்தியை உணர்ந்த இலங்கை, சீனக் கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதப்படுத்துமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டது. இலங்கையின் இந்தக் கோரிக்கை சீன அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரை சீனாவின் அதிருப்தியைப் பார்க்கிலும், இந்தியாவின் கவலைகளே இங்கு பிரதானம் என்பது உண்மை.

சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற கப்பல் ஓகஸ்ட் 11முதல் 17வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்று வருகை தந்து தரித்திருப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அக்கப்பல் குறித்த திகதியில் அம்பாந்தோட்டைக்கு வருகை தருவது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பில் எப்போதும் தீவிர கரிசனையுடனேயே இருந்து வருகின்றது. இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன இராணுவக் கப்பல்களின் நடமாட்டத்தை இந்தியா எப்போதும் கூர்ந்து கவனித்தே வருகிறது. கடந்த காலங்களில் கூட இலங்கையில் சீன இராணுவ கப்பல் நிறுத்தி வைக்கப்பட்ட போது, இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014இல் அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை தனது துறைமுகம் ஒன்றில் நிறுத்த இலங்கை அனுமதி வழங்கிய போது, இந்தியா_ இலங்கை இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மிகப் பெரிய அளவில் உட்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. இதனால் சீனாவிடம் இலங்கை பெரியளவில் கடன்பட்டுள்ளது. அதேநேரம் மறுபுறம், சுதந்திரத்திற்குப் பின்னர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா மாத்திரமே பிரதிபலன் பாராமல் இலங்கைக்கு உதவி வருகிறது.

இதேவேளை சீனக் கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கு இந்திய அரசியல் தரப்பிலிருந்து பலத்த வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவே சீனாவின் யுவான் வாங் - 5உளவுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசியல்வாதிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

1987ஆம் ஆண்டு இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தப்படக் கூடாது.

 

அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேணடும் என்று இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தருமானால் இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும் என்று இந்திய தரப்பில் எச்சரிக்ைக தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

750கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. அதாவது இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பலால் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும்.

அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீனக் கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் இந்திய அதிகாரிகள்.

சீனக் கப்பலின் வருகை இடைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய மத்திய அரசின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றியாகவே இந்திய தரப்பினால் கருதப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் இந்திய மத்திய அரசு எடுத்துள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் இராஜதந்திர நடவடிக்கைகளால்தான் சீனக்கப்பலின் வருகை இடைநிறுத்தப்பட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாய்வான் ஜலசந்தியில் தீவைக் கைப்பற்றும் பயிற்சிகளை சீன இராணுவம் கடுமையாக மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிநவீன போர் விமானங்கள் உட்பட இராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சி எப்போது முடியும் என்பது குறித்த விவரங்கள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.

சீனா இவ்வாறு கடுமையாக போர் பயிற்சி மேற்கொள்வது இதுவே முதன்முறை என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 'ஜனநாயக தாய்வானை ஆதரிப்பீர்' என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எங்கள் அரசாங்கமும் இராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன, எங்கள் இராணுவம் தேவையான பதிலடிக்கு தயாராக உள்ளது என்று சாய் இங் தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த சர்ச்சைகள் சீன_-அமெரிக்க போருக்கு வழிவகுக்கும் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.சாரங்கன்

Comments