காணாமல் போன கியூ வரிசைகள்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

காணாமல் போன கியூ வரிசைகள்!

நெருக்கடிக்குமுற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கஞ்சன விஜேசேகரஇலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் முகங்கொடுக்க வேண்டிய பாரிய பிரச்சினையாக எரிபொருள்தட்டுப்பாடு காணப்படுகிறது. அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சிகண்டமை மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக  போதியளவு எரிபொருளைஇறக்குமதி செய்ய முயாத நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் நிதி நிலைமை மோசமடைந்திருப்பதாக தரப்படுத்தல் நிறுவனங்கள் குறிப்பிட்டமையால், இலங்கையிலுள்ள வங்கிகளால் வழங்கப்படும் கடனுறுதிக் கடிதங்களை எரிபொருள் வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியிருந்தன. இதனால் இறக்குமதி செய்யும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை நேரடியாக டொலர்களிலேயே செலுத்த வேண்டிய நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டது.

எனவேதான் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்குத் தேவையான டொலர்களை சேகரித்து வழங்குவதற்குத் தாமதங்கள் ஏற்பட்டன. இவ்வாறு எரிபொருளைக் கொண்டு வருவதற்கு காலமாதம் ஏற்படுவதால் நாட்டில் தேவை அதிகரித்து தட்டுப்பாடு நிலவியது.

மறுபக்கத்தில் மசகு எண்ணெய் இறக்குமதிக்குப் பதிலாக நேரடியாக பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதற்கும் கடந்த காலத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமையால், மண்ணெண்ணெய் உற்பத்தி பூரணமாகத் தடைப்பட்டது. இதனால் பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

கடந்த  சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னர் வரை இவ்வாறுதான் நிலைமை நெருக்கடியாக இருந்தது. மாதக்கணக்கில் இந்த நெருக்கடி நீடித்தது.   பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது.

இந்த நெருக்கடி சூழ்நிலையை பலர் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியமையால் எரிபொருள் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்தது. குறிப்பாக பெரும்பாலான முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் எரிபொருள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டு அதனை சட்டவிரோதமாக சேகரித்து வைத்து அதிக விலையில் விற்பனை செய்வதைத் தமது தொழிலாக மாற்றிக் கொண்டனர். அன்றாடம் முச்சக்கர வண்டி ஓட்டி பணம் உழைப்பதைப் பார்க்கிலும் பெற்றோலை கறுப்புச் சந்தையில் விற்பதனால் அவர்கள் அதிக பணம் உழைத்தனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மாத்திரமன்றி வேறு சிலரும் இதனை வியாபாரமாக மாற்றிக் கொண்டனர். இதுவே நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் பெற்றோல் இரண்டாயிரம் ரூபாவிலிருந்து மூவாயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தன. அவசரத் தேவையின் நிமித்தம் எத்தனை ரூபா கொடுத்தும் பெற்றோலை வாங்குவதற்குத் தயாராக இருப்போருக்கு வேறு வழியே இருக்கவில்லை. அவ்வாறானவர்களை இலக்கு வைத்தே பெற்றோல் வியாபாரம் களைகட்டியிருந்தது. பெற்றோல் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட வகை வாகனங்களை வைத்திருப்பவர்களாவர் என்று தகவல்கள் வெளிவந்தன. பெற்றோல் பதுக்கலும், கறுப்புச் சந்தை வியாபாரமும் ஒழிக்கப்படும்வரை பெற்றோல் தட்டுப்பாடும் நின்றுவிடப் போவதில்லை என்று மக்கள் புகாரிட்டதையும் காண முடிந்தது.

கறுப்புச் சந்தை வியாபாரம் முடிவுக்கு வருவது எப்போது? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அமைச்சு, ஐ.சி.ரி.ஏ நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பொறிமுறையொன்றைத் திட்டமிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. விசேடமாக QR CODE முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறைமையின் ஊடாக ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்டளவு எரிபொருளை வாகனமொன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இதுவரை நாடு முழுவதிலுமுள்ள 1135எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை 8.1மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் எரிபொருளுக்கான உண்மையான தேவை குறித்த சரியான தகவல்களையும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ள முடிகிறது. இந்த நடைமுறை செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வாகன வரிசைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன.

அது மாத்திரமன்றி வாடகைக்கு அழைத்தாலும் கூட அதற்குத் தயாராக இல்லாதிருந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் பலர் மீண்டும் பழையபடி தங்களது செல்வதையும் காணமுடிகிறது.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள இந்த நடைமுறையின் ஊடாக ஒவ்வொரு வாகனத்துக்கும் வழங்கப்படும் எரிபொருளுக்கான வரையறை காணப்படுகின்றமை தொடர்பில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதாவது வாகனத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரத்தை உடையவர்கள் குறிப்பாக முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள், பாடசாலை வான் சேவை, பயணிகள் போக்குவரத்து சேவை, லொறி சேவை நடத்துவோர் போன்றவர்களுக்கான எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.

உண்மையில் முச்சக்கரவண்டியொன்றுக்கு வாரமொன்றுக்கு 5லீற்றர் பெற்றோலே வழங்கப்படுகிறது. இருந்தபோதும் நாள் முழுவதும் சவாரிக்கு இது போதுமானதாக இருக்காது. எனவே குறைந்தது வாரமொன்றுக்கு 20லீற்றராவது வழங்கப்பட வேண்டும் என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அது மாத்திரமன்றி பஸ் உரிமையாளர்கள் மற்றும் லொறி உரிமையாளர்களும் தமக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது விடயத்தை அரசாங்கம் குறிப்பாக அமைச்சு சாதகமாகப் பரிசீலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கறுப்புச் சந்தை எரிபொருள் விற்பனை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது வெற்றிகரமாக அமையும். இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்பொழுது நடைமுறைப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் உள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு, வழக்கப்படும் எரிபொருள் கோட்டாவின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரது கோரிக்கையாகும். இது இவ்விதமிருக்க, நாட்டில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக இரண்டு மூன்று வாகனங்களைக் கொண்ட வீடுகளில் உள்ளவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு வாகனத்தையும் பயன்படுத்தும் நிலைமை இன்னமும் காணப்படுகிறது. எனவே, பொதுப்போக்குவரத்து சேவையை குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் சேவையை விஸ்தரித்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் தனிநபர்களின் வாகனப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும். இதன் மூலம் எரிபொருளுக்கான செலவினங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

பி.ஹர்ஷன்

Comments