தவித்துக் கிடக்கும் மக்கள் மீது மின் கட்டண உயர்வு என்ற சுமையை ஏற்றலாமா? | தினகரன் வாரமஞ்சரி

தவித்துக் கிடக்கும் மக்கள் மீது மின் கட்டண உயர்வு என்ற சுமையை ஏற்றலாமா?

மின் கட்டண உயர்வு தொடர்பாக மக்கள் கருத்து

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் மக்கள் ஒரு நாளைத் தள்ளுவதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். இச் சந்தர்ப்பத்தில் 75சதவீத மின்கட்டண அதிகரிப்பு என்பது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகி விட்டிருக்கிறது.

சாதாரணமாக 3000ரூபா மாதாந்த கட்டணமாகச் செலுத்திவந்தவர்கள், புதிய கட்டணத்தின்படி ரூபா 5250அளவில் செலுத்த வேண்டிவரும். இத்தொகை கிட்டத்தட்ட இருமடங்கை நெருங்கிவிட்டது. இது ஒரு வகையில் தாங்கிக் கொள்ள முடியாத சுமைதான். இவ்வாறான திடுதிப்பென்ற மின்சார கட்டண அதிகரிப்பை மக்கள் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறார்கள் என்பதுபற்றி அவர்களிடமே வினவினோம்.

என் சிவலிங்கம் (ஒய்வுபெற்ற பாடசாலை அதிபர்),

எனது கோட்டைமுனைப் பிரதேசத்தில் வசதிபடைத்தவர்களும், வசதியற்றவர்களும் வசிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் தங்களுக்கான ”வாழ்க்கைச் செலவை” வானத்தைத் தொட்டாலும் தாங்கிக்கொள்வார்கள். ஆனால், வசதி குறைந்தவர்களின் நிலை கவலை தோய்ந்தது.

தரமான ஒரு கிலோ கடல்மீன் 2000ரூபாவுக்கு போகிறது. தக்காளிப்பழம் ஒரு கிலோ 600முதல் ஆயிரம் வரை விற்பனையாகிறது இந்த நிலையில் 3அல்லத நாலுபேர் கொண்ட குடும்பத்தின் செலலை எண்ணிப்பார்த்தால் மாதமொன்றக்கு ரூபா 60அல்லது 70அயிரம் தேவைப்படும். பாடசாலைப் பிள்ளைகளின் செலவு கணித பாடத்திற்கு ஒன்றரை மணித்தியாலம் ரியூசன் கொடுக்க ஒருவருக்கு 200ரூபா அறவிடப்படுகிறது. அப்படி படித்தால்தான் பல்கலைக்கழக புகுமுக பரீட்சையை தாண்ட முடியம். இந்த நிலையில் பிள்ளைகளுக்கு நல்ல காற்றோட்டம் அவசியம். மின்சார விசிறியின்றி படிக்க முடியாது.

முன்னர் காரியாலயங்களில் பணியாளர்கள் குறைவு, குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் இருந்தாலும். அதிகமான வேலைகளைச் செய்தார்கள். இப்போது அரசியல் வாதிகளின் செல்வாக்கில் காரியாலம் நிறைய ஊழியர்களாக இருக்கிறார்கள். ஆனால் வேலைகள் மந்த சதியில்தான். அரசு காலத்திந்குக் காலம் நாட்டில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை தோற்றுவிக்கவில்லை. இக்குறைபாடுகளுக்கு மாற்றாக மின்சாரக்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறத. இதனால் பாதிக்கப்படுவது. அன்றாடம் உழைத்து அன்றாடம் காலம்தைக் கடத்துபவர்களே! மின் சாரத்தின் துணை கொண்டு உற்பத்தியாகும் அனைத்துப்பொருட்களும், அல்லது சேவைகளும் விலை உயர்வை அல்லது சேவைக்கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளப் போகின்றன. அவர்களது பகத்தில் இருந்து பார்க்கும்போது விலை அதிகரிப்பு, அல்லது சேவைக்கட்டண அதிகரிப்பு நியாயமானதே. மக்களுக்கோ மத்தளத்துக்கு இரு பக்கத்திலும் இடி என்பதாகவே அமையப் போகிறது. மின்சார உற்பத்திக்கான செலவு கூடும்போது மின்சாரக்கட்டணத்தை அதிகரித்தேயாக வேண்டும் என்பது உண்மையானாலும் மின்சார சபையின் அனாவசிய செலவுகளையும் ஊழல், முறைகேடு, தவறான நிர்வாகம் என்பனவற்றையும் தடுக்க என்ன செய்யப் போகிறது என்பது முக்கியம். இவற்றைக் களையாமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது தவறு.

மட்டக்களப்பு உப்போடைப்பகுதியில் வசிக்கும் சுமதி என்ற குடும்பப் பெண்;

என்னதான் இருந்தாலும் அரசாங்கம் மின்சாரக்கட்டணத்தை இவ்வளவு தூரத்திற்கு உயர்த்தியிருக்கக் கூடாது. பதவிக்கு வரும்வரை மக்கள் நலம்தான் என்று கூறும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு கதிரையில் அமரந்துவிட்டால் மக்களின் வறுமையையும். அவர்களின் பிரச்சினைகளையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இது இந்த நாட்டில் காலம்காலமாக நடந்து வரும் ஒன்று தான்.

அமைச்சர்கள் நாட்டுக்குத் தேவையான நல்லதிட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றினார்கள். அதனால் நாட்டின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. உதாரணத்திற்கு மஹாபொல நிதியத்தைச் சொல்லலாம். அதேபோல மகாவலி திசை திருப்புத் திட்டத்தை கூறலாம். இத்தகைய திட்டங்களை இப்போது காணக் கிடைப்பதில்லை.

பால்பக்கற் வாங்க பணம் போதாது. மீனும், இறைச்சியும், மரக்கறிவகைகளும் வாங்குவதற்கு பணம் போதாதிருக்கும்போது. எப்படி வீடுகட்டுவது? எப்படி வீட்டுக்கத் தேவையான தளபாடப் பொருட்களை வாங்குவது? என்று எண்ணிப்பார்க்கிறேன், ஒரு சன்லைற் சோப்பின் விலை 145ரூபா இப்படியிருக்கும்போது பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் உடைகளை எப்படி சலவை செய்வது? ஒரு குடும்பத்தின் செலவு எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.. இந்த நிலையில் அரசாங்கம் மின்சாரக்கட்டணத்தை 75விகிதத்தால் அதிகரித்திருப்பது நியாயமான செயலாகப்படவில்லை. இதனை குறைக்க வேண்டும்.

எனது கணவர் கொழும்பில் ஒரு சாதாரண வியாபாரத்தில் ஈடபட்டு வருகிறார். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்பதால் அவரது வியாபாரமும் களைகட்டவில்லை. ஆதலால் தனக்கு பொதிய வருமானமில்லை என்று கூறுகிறார். இந்த நிலையில் நான் மட்டக்களப்பில் இருக்கிறேன். கொழும்பில் அவருக்கொரு செலவு, எனக்கும் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் இங்கே மற்றொரு செலவு. இந்த நிலையில் அவர் உழைக்கும் பணம் எமது குடும்பச் செலவுக்கு போதாமலிருக்கிறது. சாப்பிடாமல் இருப்பதா அல்லது பிள்ளைகள் இருவரையும் ரியூசனுக்கு அனுப்பாமல் வீட்டில் இருத்தி வைப்பதா? கஷ்டம் புரிகிறது அல்லவா?

யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார நெருக்கடி இருக்கத்தான் செய்யும். எனவே பொருளாதார விமோசனத்திற்கான வழியைத் தேட வேண்டும்.

ஸ்ரீமாவின் ஆட்சியின் காலத்தில் உணவு உற்பத்தியின் அவசியம் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. அப்படியான நல்ல சட்டங்களையம், திட்டங்களையும் ஆளும் அரசுகள் தொடர்ச்சியாக முன்வைத்து செயற்படுத்தியிருக்க வேண்டும். இது நாட்டை முன்னேற்றுவதோடு மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கும் உதவியிருக்கும்.

நான் சிறியதொரு மரக்கறித் தோட்டம் செய்கிறேன். எனது குடும்பத்திற்கு தேவையான மரக்கறிகளை அதிலிருந்து அறுவடை செய்கிறேன். இந்தத் தோட்டம் எனது குடும்பச் செலவை குறைத்திருக்கிறது. இதேபோல எல்லோரும் வீட்டுத் தோட்டச் செய்கையில் இறங்க வேண்டும் அப்படிச் செய்யும்போது நாடும் முன்னேறும் நாமும் முன்னேறலாம் என்றார்

முச்சக்கரவண்டி சாரதி தர்மேந்திரா

ஒவ்வொரு மனிதனின் வசதியான வாழ்க்கைக்கு தேவைப்படுவது பணம். இது எனது சொந்த வாகனம். காலையில் பாடசாலைப்பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றிச் செல்வதிலிருந்து எனது தொழில் தொடங்கும். இரவில் எத்தனை மணிக்கு வேலை முடியும் எனக் கூற முடியாது.

இப்போதெல்லாம் ஓட்டோவை அழைப்பவர்கள் குறைவு. ஹயர கூலி கொடுக்கும் அளவுக்கு அவர்கள் கையில் பணம் இல்லை என்பதே உண்மை.

என்னைப் போலத்தான் மக்கள் கஷ்டத்தை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்த நிலையில்தான் மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது பொன்றது.

பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் அரசியலுக்கு வராததும் கண்டவர்களை எல்லாம் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்ததும் இக் கஷ்டங்களுக்கு காரணமாகி விட்டன. முறையான திட்டமிடலும் மேற்பார்வையம் இருந்திருந்தால் பில்லியன் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல்களில் மாட்டியிருக்காது.

இவ்வளவு மோசமான நிலையில் மக்கள் இருக்கும்போது மின்சார கட்டணத்தை 75சத வீதமான அதிகரிப்பது கிணற்றில் விழுந்தவன் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போன்றது. எல்லா கட்டணங்களையும் வரைமுறையின்றி ஏற்றிக் கொண்டே போனால் அவர்கள் எப்படித்தான் தாங்குவார்கள்? இதை யோசித்து பார்க்க வேண்டாமா?

எஸ்.எஸ். தவபாலன்

Comments