மனிதனின் பேராசைக்கு பலியாகும் அப்பாவி சிறுத்தைகள்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

மனிதனின் பேராசைக்கு பலியாகும் அப்பாவி சிறுத்தைகள்!

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கே போராடி வருகின்றன. அதில் விலங்குகள் மாத்திரம் விதிவிலக்கல்ல. மனிதனைப் போன்றே காட்டு விலங்குகளும் இன்று வாழ்வதற்காக பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. உலகில் வாழும் மனிதர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனாலும் அபிவிருத்தி என்ற போர்வையில் காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளன. இந்நிலையில் இந்நாட்டில் பொறி மற்றும் வலைகள் விரித்து மிருகங்களை வேட்டையாடுவது அதிகமாக காணக்கூடிய ஒரு செயப்பாடாகவே காணப்படுகின்றன. 

குறிப்பாக இந்த செயற்பாடு மலையகப்பகுதிகளிலேயே அதிகமாக காணப்படுவதாக அண்மைக்கால புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.  

அண்மையில் மனதை உலுக்கிய சம்பவமாக கடந்த ஆறாம் திகதி ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா பழையகாடு சமர்வில் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சிறுத்தை 'வேட்டை'யைச் சொல்லலாம். இலங்கைக்கே உரிதான நான்கு அடி நீள ஆண் சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்குண்டு தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மரத்தில் ஏறியபோது அது மரத்தில் சிக்கிக்கொண்டது. ஆனால் இந்த சிறுத்தையை மிகவும் பாதுகாப்பான முறையில் காப்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்காது மரத்தினை வெட்டி சாய்த்ததன் காரணமாக சிறுத்தை உயிரிழந்து விட்டது.  

இதே போன்று கடந்த 2020ஆண்டு மே 26ம் திகதி நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைமலை தோட்டத்தில் மரக்கறி தோட்டம் ஒன்றில் பொறியில் சிக்குண்டு இந்த நாட்டுக்கே உரித்தான அபூர்வமான கறுஞ்சிறுத்தை மாட்டிக்கொண்டது. அப் புலி தப்பிப்பதற்காக முயற்சி செய்தபோது கம்பி இறுகி பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதனை காப்பாற்றுவதற்காக ரந்தனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அது பலனின்றிஇந்த அபூர்வமான கறுஞ்சிறுத்தை உயிரிழந்தது. 

இச் சிறுத்தையை நீண்ட தூரம் கொண்டு சென்றதால்தான் அது உயிரிழந்திருக்கலாம் எனப் பலரும் சுட்டிக்காட்டியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  

கடந்த 2020ஏப்ரல் மாதம் 18திகதி மஸ்கெலியா காட்மோர் பகுதியில் இதே போன்று கம்பி வலையில் சிக்குண்டு நான்கு வயது நிரம்பிய ஐந்தடி நீளமான சிறுத்தையொன்று மரத்தில் ஏறிக்கொண்டது. ரந்தனிகல மற்றும் நுவரெலியா வன பாதுகாப்பு அதிகாரிகள் அதனை ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அந்த புலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

இதுபோன்று அக்கரப்பத்தனை, கம்பளை, நாவலப்பிட்டி, பொகவந்தலாவை, நுவரெலியா உள்ளிட்ட பல பகுதியிலும் பல மலையக சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. 

கடந்த 04ம் திகதி தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் நாய் ஒன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தை வீட்டின் கூரையை உடைத்து கொண்டு வீட்டினுள் வீழ்ந்துள்ளது. இதனை நுவரெலியா வனத்துறை அதிகாரிகள் வந்து நீண்ட பிரயத்தனத்துக்கு மத்தியில் சிறுத்தையைக் காப்பாற்றி கொண்டு சென்றனர.; ஒருவர் காயமடைந்தாலும் கூட சிறுத்தைக்கு பொதுமக்கள் எவ்வித தீங்கும் ஏற்படுத்த முயற்சிக்காததன் காரணமாக அதன் உயிர் காப்பாற்றப்பட்டது. 

எது எவ்வாறான போதிலும் மிக அண்மையில் வனராஜ பகுதியில் மரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து வன திணைக்கள அதிகாரிகளின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் ஊடகங்களிலும் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து இச்சம்பவத்தை ஆராய்ந்து அறிக்ைக தயாரிக்கவும் வன பாதுகாப்பு அதிகாரிகளின் தவறுதலால் உயிரிழந்திருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.  

எது எவ்வாறிருப்பினும் இதன் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து நல்லதண்ணீர் வன பாதுகாப்பு பொறுப்பதிகாரி பிரபாத் கருணாதிலகவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அன்றைய தினத்தில் 7.45மணியளவில் வனபாதுகாப்பு தொலைபேசி (1992) இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய எனது தனிப்பட்ட தொலைபேசிக்கு இவ்விடயம் தொடர்பான தகவல் கிடைத்தது. 

நாங்கள் அங்கே செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டோம். அப்போது இப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவியது. இப்பகுதி பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இதனால் எமது வாகனம் செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. இந்நிலையில் எமது திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குண்டும் குழியுமான வீதியில் தமது மோட்டார் சைக்கிள்களில் அவ்விடத்தை அடைந்திருந்தார்கள். அப்போது சுமார் 11மணி ஆகியிருக்கும். சிறுத்தையை ஏழு மணியளவிலேயே தான் கண்டதாக ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.  

நாங்கள் அங்கே சென்றபோது கேபிள் கம்பியில் இறுகி மிகவும் மோசமான நிலையில் தான் சிறுத்தை காணப்பட்டது. பொறியிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்தமையினால் இந்த கேபிள் அதன் உடலை மென்மேலும் இறுக்கியதில் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதினோம்.   

மிருகங்களை மீட்கும்போது மயக்க மருந்து உபயோகிக்கப்படுவதே வழமை. ஆனால் இதற்கான உத்தரவு எமது வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு வனப்பாதுகாப்பு திணக்களத்தில் உள்ள மிருக வைத்தியர் ஒருவர் வந்துதான் மயக்க மருந்தை செலுத்த வேண்டும்.  

எமது பிரதேசத்திற்கு பொறுப்பான மிருக வைத்தியர் ரந்தனிகல பகுதியில் தான் இருக்கிறார். சுமார் 120கிலோ மீற்றர் கடந்து வரவேண்டும் அவ்வாறு வரும்போது குறித்த புலி மரத்திலேயே இறந்துவிடும். நாம் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மரத்தை வெட்டி சிறுத்தையை காப்பாற்றுங்கள் என்றார். அப்போது சிறுத்தையின் மூக்கில் இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் மரத்தை வெட்டி சிறுத்தையை காப்பாற்றுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. மரத்திற்கு பாதுகாப்பு கயிறு கட்டியே மரம் வீழ்த்தப்பட்டது. 

இந்த மரத்தில் அகப்பட்டு சிறுத்தை இறந்தது என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. காரணம் மரத்தின் பாரிய இரண்டு கிளைகள் முதலில் பூமியைத் தொடும் அளவிலேயே மரம் வெட்டப்பட்டது. இதில் சிறிய கிளையிலேயே சிறுத்தை சிக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இதில் எவ்வித தவறும் இடம்பெறவில்லை.  

இதனை பார்ப்பவர்கள் எம்மீது பல்வேறு குற்றங்களை சுமத்தலாம். நாம் எப்போதும் உயிரினங்களை காப்பாற்றுவதற்கே முயற்சி செய்கிறோம். எமக்கென்று போதியளவு வசதிகள் கிடையாது. போக்குவரத்துக்கு போதியளவு வாகனங்கள், உபகரணங்கள், ஆளணிகள் என்பன கிடையாது. நவீன தொழிநுட்ப சாதனங்கள் எவையும் அற்ற நிலையிலேயே சேவையாற்றி வருகிறோம். எனவே இது குறித்த வைத்திய பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் நீதிமன்றில் முழு விபரங்களையும் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.   எமது பிரதேசத்தில் உள்ள அரிய உயிரினங்களான சிறுத்தை, புலி, மான், மரை உள்ளிட்ட அனைத்தும் எமக்கே உரிய சொத்துகள். அவற்றின் மூலம் தான் இந்த பூமியின் சமநிலை பேணப்படுகின்றது, அவற்றுக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கான சகல உரிமைகளும் உண்டு. அவற்றுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. எம்மில் ஒருவர் பிரிந்தால் எவ்வாறு நாம் வருந்துகிறோமோ? அதேபோன்று தான் அவையும் வருந்தும் என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மிருகங்களும் வாழ ஆசைப்படுகின்றன என்பதனை உணர்ந்து செயப்படுவதன் மூலம் தான் இவ்வாறு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க முடியுமே தவிர வெறுமனே சட்டத்தால் மாத்திரம் இதனை செய்ய முடியாது என்பது பிரபாத் கருணாதிலக தரும் விளக்கமாகும்.  

இது போன்ற எத்தனையோ சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனினும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே நடக்கின்ற இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தான் முயற்சிகள் போதவில்லை..  

இன்று உலகில் எட்டு வகையான சிறுத்தையினங்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு சதவீதமே இலங்கையில் உள்ளன. அதிலும் எமது நாட்டுக்கே உரித்தான விஞ்ஞான பெயரான பந்தரா பாதூஸ் என்ற சிறுத்தையினம் மிகவும் அரியவகையானது. இது எமது நாட்டுக்கே உரித்தான ஒன்று. இவற்றுக்கு மேலாக எமது நாட்டில் மூன்று வகையான சிறுத்தை இனங்கள் காணப்படுகின்றன. அவை ஆங்கிலத்தில் குiளாiபெஉரவஇ தரபெடநஉரவளஇளுஉழவநனஉயவ என அழைக்கப்படுகின்றன. 

இவற்றினை பாதுகாப்பது குறித்து உரிய திட்டங்கள் அமுல்படுத்துவது காலத்தின் தேவை. அருகிவரும் உயிரினங்களில் இவையும் ஒன்றாகவே சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் இவற்றினை பாதுகாப்பது பற்றிய முறையான தெளிவூட்டல்கள் தோட்டப்புறங்களில் மேற்கொள்வது மிகவும் குறைவு. 

நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான அரியவகை உயிரினங்கள் காணப்பட்ட போதிலும் இங்கு உள்ள வனத்துறை அலுவலகங்களில் போதிய அளவு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இல்லாமையும் மிருக வைத்தியர்கள் குறைவாக காணப்படுகின்றமையும், போதியளவு உபகரணங்கள் இல்லாமையும் பெரும்பாலான உயிரினங்கள் இறப்பதற்கு காரணமாகின்றன. 

எங்காவது ஒரு சிறுத்தையொன்று வலையினுள் சிக்குண்டால் எம்பிலிப்பிட்டி அல்லது ரந்தனிகலயிலிருந்தே வனத்துறையினர் வந்தாக வேண்டும். இவர்களின் வருகை தாமதமாவதனால் பல உயிர்கள் வீணே மடியும் நிலை உருவாகியுள்ளது.  

கடந்த காலங்களில் இவ்வாறு வலையில் சிக்குண்டு உயிரிழக்கும் சிறுத்தைகளை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தெளிவூட்டல் செய்யப்பட்டன. எனினும் அவை போதுமானதாக இல்லை. குறிப்பாக தமிழ் மொழியில் இவ்வாறான தெளிவூட்டல் செய்வதற்குரிய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இல்லாமையும் இவ்வாறு சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன. 

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பொறிகள் அகற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது சோகம் தோட்டத்தில் மட்டும் ஒரு நாளில் சுமார் 50பொறிகள் அகற்றப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மிருக வேட்டை என்பது மிகவும் கொடூரமான செயல் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் சுய நலத்திற்காகவும் இலவச மாமிச உணவிற்காகவும் ஒரு உயிரினை அழிப்பது மிகவும் பாவம் என்பதனை உணர வேண்டும். தன்னுயிரைப் போல் மண்ணுயிரை நேசி என்பதற்கிணங்க பொது அமைப்புக்கள், சூழல் ஆர்வலர்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மலைப்பாங்கான பகுதிகள் அழகு பெறுவதற்கு இரம்மியமான சூழலாக இருப்பதற்கும் மிருகங்களும் மரங்களும் தாவரங்களும் தான் காரணமாகின்றன. எனவே இதனை பாதுகாக்க முன்வரவேண்டும் 

இதேநேரம் இன்று சிறுத்தை, மான், மரை போன்றவை அழிவதற்கு மனிதனின் பேராசையே காரணம். எமது தேவைக்காக நாம் அவற்றின் வாழ்விடங்களை அழித்துள்ளோம். அதனால்தான் அவை வாழ்விடங்களை மாற்றிக்கொண்டுள்ளன. மனிதர்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி படையெடுத்துள்ளன. மலையகப்பகுதியில் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு பிரதான காரணமாக இருப்பது தேயிலை மலைகள் காடுகளாகி இருப்பதுதான்.    மக்கள் குடியிருப்பு அருகாமையில் சிறிய பற்றைக்காடுகள் காணப்படுவதனாலும் காட்டு விலங்குகளுக்கு இலகுவாக உணவு கிடைப்பதனாலும் இவை வாழ்விடங்களை மாற்றிக்கொண்டுள்ளன.   இதனால் அச்சமடையும் பொது மக்கள் ஏதோ ஒரு வகையில் இவற்றினை அழிக்க முயற்சி செய்கின்றனர். இதே நேரம் விவசாய காணிகளை பாதுகாப்பதற்காகவும் வேட்டையாடும் நோக்கிலும் தான் இவ்வாறான கம்பிப் பொறிகள் வைக்கப்படுகின்றன. ஆகவே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மிருகங்களை பாதுகாக்க தூண்ட வேண்டும் என்பது முக்கியம். மலையகத்தில் உள்ள வனப் பாதுகாப்பு அலுவலகங்களுக்கு போதுமான மலையக இளைஞர்களை நியமனம் செய்வதன் மூலமும் இவ்வாறான வனவிலங்குகளை பாதுகாக்க முயடியும் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.    

 மலைவாஞ்ஞன் 
(படங்கள் : ஹட்டன் விசேட நிருபர்) 

Comments