மின்சார அதிர்ச்சியில் மக்கள்! வினைத்திறனின்மையின் பாதிப்புகளை மக்கள் மேல் சுமத்தலாமா? | தினகரன் வாரமஞ்சரி

மின்சார அதிர்ச்சியில் மக்கள்! வினைத்திறனின்மையின் பாதிப்புகளை மக்கள் மேல் சுமத்தலாமா?

எரிபொருள் மற்றும் எரிவாயு அதிர்ச்சி. உணவுப்பொருள் அதிர்ச்சி. மருந்துப் பொருள் அதிர்ச்சி என இலங்கைக் குடிமக்கள் ஏக காலத்தில் ஏராளமான அதிர்ச்சிகள்! அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அனுபவித்து அதிர்ந்து போய் நிற்கும் நிலையில்,  நீண்டகாலமாக வருது வருது என எதிர்பார்க்கப்பட்ட மின் அதிர்ச்சி கடந்த பத்தாம் திகதி இலங்கை பொதுமக்களுக்கு தாராள மனதுடன் தரப்பட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை காலமும் மிகக்

குறைந்தளவு மின்சாரப் பாவனையாளருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை விலையில் ஒரு வெட்டு விழுந்து மிகப்பெரிய ஒரு அடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

மாதாந்தம் 30அலகுகளுக்குக் குறைவான மின்நுகர்வைச் செய்யும் பாவனையாளர்களின் நிரந்தர மின் கட்டணம் 30ரூபாவிலிருந்து 120ரூபாவாகவும் மின்நுகர்வு அலகொன்றிற்கான கட்டணம் 2ரூபா 50சதத்திலிருந்து 8.00ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது 264சதவீத அதிகரிப்பாகும். உண்மையில் இவர்களே சமூகத்தின் மிக வறிய மக்களாக இருப்பார்கள்.  

இந்த கட்டண அதிகரிப்பை இவர்களால் தாங்க முடியுமா என்ற கேள்வியை கேட்டால் இன்றைய நிலையில் 120ரூபாவோ 8ரூபாவோ பெரிய காசில்லைத்தானே என்கிறார்கள். அதேபோல 31−60அலகு பாவனையாளர்களுக்கு நிரந்தரக் கட்டணம் 60ரூபாவிலிருந்து 240ரூபாவாகவும் அலகொன்றிற்கான கட்டணம் 4ரூபா 85சதத்திலிருந்து 10ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 211சதவீத அதிகரிப்பாகும். அதற்கடுத்த கட்டத்தில் 61அலகு தொடக்கம் 90அலகுப் பாவனையாளருக்கு நிரந்தரக்கட்டணம் 90ரூபாவிலிருந்து 360ரூபாவாகவும் அலகொன்றிற்கான கட்டணம் 10ரூபாவிலிருந்து 16ரூபாவாகவும் 125சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு குறைந்த அலகுப் பாவனையாளரின் மின் கட்டணங்கள் மிகப் பெரிய சதவீதங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்த மின் நுகர்வாளர்களில் 75சதவீதத்தினர் இந்தப் பிரிவினராகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இம் மின் கட்டண அதிகரிப்பு குறைந்த மின் நுகர்வோருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் கட்டண அதிகரிப்பும் உற்பத்திச் செலவை ஈடுசெய்யப் போதாது என்கிறது மின்சார சபை.  

இப்போது ஓரலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 32ரூபா ஆவதாகவும் இந்த கட்டண அதிகரிப்பின் பின்னர் 30அலகுகளுக்கு குறைந்த பாவனையாளர்களுக்கு மொத்தச் செலவின் 25சதவீதம் மாத்திரமே கட்டணமாக அறவிடப்படுவதாகவும் 75சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அது கூறுகிறது. அத்துடன் 31−60அலகு பாவனையாளர்களுக்கு 60சதவீத மானியமும் 61-−90அலகு பாவனையாளருக்கு 50சதவீத மானியமும் வழங்கப்படுவதாகக் கூறுகிறது.  

எனவே மின் பாவனையாளர்களில் 75சதவீதமானோர் அரச மானியங்களைப் பெறுவதாகவும் கூறி மின் கட்டண அதிகரிப்பு நியாயப்படுத்தப்படுகிறது. அத்துடன் மிக நீண்டகாலமாக கட்டணத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி 91அலகுகளுக்கு மேல் நுகர்வோரின் கட்டணங்களும் அலகொன்றுக்கு 45ரூபாவிலிருந்து 75ரூபாவாகவும் நிரந்தரக்கட்டணம் 540ரூபாவிலிருந்து 1500ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

இவ்வாறு அதிக அலகுகளை நுகர்கிறார்கள் என அரசு கருதும் மக்களிடமிருந்து இரு மடங்கு கட்டணத்தை உறிஞ்சிக் கொள்கிறார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்க்குமிடத்து மின் கட்டணங்கள் சராசரியாக 75சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிவாயு விலை அதிகரிப்பு, மூலப்பொருள் விலை அதிகரிப்பு என பல்வேறு காரணங்களைக் காட்டி பொருட்கள் மற்றும் சேவைகளின் நியாயமற்ற விதத்தில் பலமடங்கு இலாபம் பார்த்தவர்கள் இப்போது மின்சார விலையதிகரிப்பையும் காரணம் காட்டி விலைகளை மேலும் அதிகரித்த இலாபம் பார்ப்பர்.  

கைத்தொழில் தேவைகளின் பொருட்டு விநியோகிக்கப்படும் மின்சாரம் மானிய விலையிலேயே வழங்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தக் கட்டண அதிகரிப்பின் பின்னரும் மின்சார சபை நட்டத்திலேயே இயங்கும். ஏனெனில் அது நட்டத்தில் இயங்க அதன் வாடிக்கையாளர்கள் காரணமல்ல. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செலவுகளும் விநியோகிக்கும் செலவுகளும் குறிப்பாக அதன் நிர்வாக செலவுகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. அங்கு வினைத்திறனின்மையும் நிருவாக சீர்கேடுகளும் மலிந்து காணப்படுவதாக கோப் குழுவின் விசாரணைகளின்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. அது தொடர்பான காணொளிகளை இணையத்திலே எவரும் பார்வையிட முடியும்.  

இலங்கையிலே நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் தொடக்கம் கடைநிலை ஊழியர்கள் வரை போனஸ் கொடுப்பனவுகளை பெறுவதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமன்றி மின்மாணி வாசிப்பாளர்கள் வாசிப்பதற்கு ஒரு கொடுப்பனவும் சரியாக வாசிப்பதற்கு இன்னொரு கொடுப்பனவும் சரியாகப்பதிவு செய்வதற்கு மற்றொரு கொடுப்பனவும் பெறுவதாக கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டது. 

மின் உற்பத்திக்கான பல்வேறு மூலங்களிலும் ஊழல்கள் இடம் பெறுவதாக கண்டறியப்பட்டது. இவை வெளியில் இருந்து எழும் குற்றச்சாட்டுகள் அல்ல. அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆராய அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட கோப் குழுவின் முன் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்.

மின்சார சபை எந்திரிகளும் அதன் தொழிற்சங்கங்களும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் இத்துறையில் மீள் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  

அத்துடன் அரசுதுறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் மின்சாரப் பட்டியல்கள் கட்டணங்கள் முறையாகச் செலுத்தப்படாமையும் நட்டங்கள் அதிகரிக்கக் காரணமாகும். மின்னுற்பத்திக்கான மாற்று மூலாதாரங்களைக் கண்டறிவதும் ஊக்குவிப்பதும் அவசியமாகும்.  

இலங்கையில் சூரியவலு மின்னுற்பத்தியை மேற்கொள்வது கடினமான விடயமல்ல. ஆனால் ஒரு சராசரி மத்திய வகுப்பு குடும்பத்திற்கு தேவைப்படும் 3.5 KW வலுக்கொண்ட சூரிய கலத்தொகுதியை அமைப்பதற்கு பத்து இலட்சம் ரூவாவுக்கு மேல் செலவாகும். இதனை சாதாரண குடும்பங்கள் ஈடுசெய்வது கடினம். வங்கிக் கடன்கள் கூட அது தொடர்பில் கவர்ச்சிகரமானதாக இல்லை.  

நகர்ப்புறங்களில் அடுக்குமாடித் தொடர் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் இம் மின் கட்டண அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அங்கெல்லாம் மின்சாரமின்றி வாழ்க்கை நடத்த முடியாது. மரமேறிவிழுந்தவனை மாடேறி மிதித்தது போல மின்சார அதிர்ச்சியும் வந்து விழுந்திருக்கிறது. இதையும் இவர்கள் தாங்குவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அரசாங்கத்திற்கு.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments