அத்தியாவசிய தேவைகளுக்கான விநியோகம்; QR முறை தொடர்பில் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவும் | தினகரன் வாரமஞ்சரி

அத்தியாவசிய தேவைகளுக்கான விநியோகம்; QR முறை தொடர்பில் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவும்

அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காத நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க CPCக்கு அமைச்சர் கஞ்சன உத்தரவு
1,00,000 மெ.தொ. மசகு எண்ணெய் நாட்டை வந்தடைந்தது

QR முறை தொடர்பிலான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து உரிய நிர்வாக ரீதியான தீர்மானங்களை எடுக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர அறிவுறுத்தல்கள்வழங்கியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றுக் காலை பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் கொலன்னாவ முனையத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரஇந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

குறிப்பாக அத்தியாவசிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், தொழில்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்துக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறைமையூடாக பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவுப் பகுப்பாய்வு செய்யப்பட்டு இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை 1,00,000மெற்றிக் தொன் மசகு எண்ணெய்க் கப்பல் நேற்று இரவு கொழும்பை வந்தடைந்துள்ளது. இன்று மசகு எண்ணெய் தரப் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

அதேவேளை 1,20,000 மெற்றிக் தொன் கொண்ட 02ஆவது மசகு எண்ணெய்க் கப்பல் எதிர்வரும் 23-29 திகதிகளில் வரவுள்ளது. இந்த இரண்டு எண்ணெய் கப்பல்களும் ரஷ்ய யூரல் மசகு எண்ணெய்க் கப்பல்களாகும். அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதி முதல் செயல்படத் தொடங்குமென்றும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

Comments