அரசாங்கத்தின் பங்காளியாக நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கத்தின் பங்காளியாக நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. அதற்கு தாமும் ஆதரவு வழங்குவோம் என்கிறார் வட மாகாணசபைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் தமது கட்சி அமைச்சரவையில் பங்கேற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் கூறுகிறார்.

கேள்வி:- நாட்டின் தற்கால அரசியல் நிலவரம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்க்கின்ற பொழுது, தேசிய திட்டம் தொடர்பாக பேசப்பட்டிருக்கின்றது. ஆனால் அதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. சர்வகட்சி இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு, தற்போது உள்ள 18அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமா? தெரிவு செய்யப்பட வேண்டியவர்களில் 18பேர் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், ஏனையோர் ஏனைய காட்சிகளில் இருந்து வந்தாலும் கூட, மொட்டு கட்சி அரசாங்கமாக இருக்கும். தெளிவற்ற நிலையில் தான் இன்று அரசு இருக்கிறது. இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சில காலங்களின் பின்னரேயே மதிப்பீடு செய்யலாம் என நினைக்கிறேன்.

கேள்வி:- ஊடக பேச்சாளர் சுமந்திரன் , சஜித் பிரேமதாச தலைமையிலான டலஸ் அழகப்பெரும அணிக்கு ஆதரவு தெவித்தமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அன்றைய காலகட்டத்தில் எதிரணிக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர், மாற்றங்கள் ஏற்பட்டன. சூழலுக்கு ஏற்றவாறு எதிரணியில் இருந்தவர்களை ஆதரிக்க வேண்டியதாக இருந்தது.

கேள்வி:- நல்லாட்சி அரசை அமைப்பதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த, கூட்டமைப்பு, இன்றைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காமல், டலஸ் அழகப்பெரும ஆதரித்ததுடன், ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- இதில் இரண்டு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். 2015முதல் 2020வரை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. மகிந்தவை பிரதமராக்கினார். நீதிமன்றம் மூலம் செயற்பட்டார். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக நான் பார்க்கவில்லை. அது நல்லாட்சி அரசாங்கத்துடனான உறவு தான். உண்மையைச் சொன்னால், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த அரசில் இருந்த ஜனாதிபதியே பின்னர் குழம்பினார். ஜனாதிபதி ஆனாலும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, முழுமையாக மொட்டு கட்சியின் ஆதரவில் ஜனாதிபதியாக வந்திருக்கிறார். ஆகவே, இது விமர்சனத்திற்குரிய விடயம் தான். அரசியல் ரீதியான கருத்துக்கள் சொல்வதற்கான தேவைப்பாடு உள்ளது. சுமந்திரன் தன்னுடைய கருத்தை திடமாகவும் ஆழமாகவும் தெரிவிக்கின்ற போது, குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் தென்னிலங்கை அரசியலில் இருக்கத்தான் செய்கின்றன.

கேள்வி: - டலஸ் அழகப்பெரும விற்கு கொடுத்த ஆதரவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் இழைக்கின்றதென்ற கருத்து நிலவிவருகின்றது? இது உண்மையா?

பதில்:- தென்னிலங்கை அரசியல் தொடர்பாக நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவதில்லை. எங்களுடைய வரலாற்று ரீதியாக, போராட்டத்தின் முன்னரான மென்போக்கு அரசியலாக இருந்தாலும் சரி, 30வருட போராட்ட வரலாறாக இருந்தாலும் சரி, தென்னிலங்கை அரசியல் விடயங்களில் தலையிட்டது மிகக் குறைேவ. டலஸ் அழகப்பெரும பொதுவாக மென்போக்கான ஒருவராக இருந்தாலும் கூட, அவரும் மொட்டுக் கட்சியில் இருந்து தான் வந்தார். சுதந்திரக்கட்சியில் இருந்து வந்த மைத்திரிபால வை 2015இல் நாங்கள் ஆதரித்தோம். அதே நிலைப்பாடு தான் இப்பொழுதும், அதே போன்று தான் இரண்டுமே சமமான விடயங்கள் தான். போராட்டம் நடந்த போது, பதில் ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரி, சரத்பொன்சேகா போராட்டத்தை நடத்தியவர்.. இருவருமே அங்கிருந்து வந்தவர்கள் தான்.

கேள்வி:- சர்வகட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கான வாய்ப்பாக அமையுமா?

பதில்:- அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி பேசுகின்றார். இந்த நாட்டின் அதிஉச்ச அதிகார பரவாக்கலில் ஜனாதிபதி தான் இருக்கின்றார். பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்ற போது, அரசியல் ரீதியான நிர்ப்பந்தம். அதற்கு கட்டாயம் போக வேண்டும். இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. தீர்க்க வேண்டும் என்று கேட்க வேண்டிய கடமை. கேட்டிருக்கின்றோம். அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் எமது விடயங்கள் பேசப்பட்டுள்ளன. அது பற்றி ஜனாதிபதியுடன் பேச வேண்டியது கட்டாயம். எந்த தலைமைத்துவமாக இருந்தாலும் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கேள்வி:- சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா?

பதில்:- இது சாத்தியமா என எனக்கு தெரியவில்லை. எத்தனை கட்சிக்கு அழைப்பு விடுவார்கள். எத்தனை கட்சி இணையும்.. எத்தனை பேர் நெல்லிக்காய் மூட்டை போன்று உருண்டு ஓடுவார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியான விடயம். நான் எதிர் மறையாகப் பார்க்கவில்லை. கட்சி ரீதியாக தெளிவான நிலைப்பாடு உண்டு. நல்லாட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, சர்வகட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, நாங்கள் அரசாங்கத்தின் பங்காளியாக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். அந்த நிலைக்கு தமிழர்கள் இன்னும் வரவில்லை. ஆட்சியில் பங்கேற்று அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் கூட்டுப் பொறுப்பேற்கின்ற நிலைக்கு இருக்கமாட்டோம். நல்லாட்சி அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயற்பட்டோமோ, அதே மாதிரியான ஒரு நிலைப்பாட்டை பேணக்கூடிய வாய்ப்பு உண்டு.

கேள்வி:-சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா?

பதில்:- வெளியே இருந்து நல்ல விடயங்கள் அனைத்திற்கும் ஆதரவு கொடுப்போம். எங்களுக்கு உடன்படாத விடயங்களில் இருந்து ஒதுங்கியிருப்போம் அல்லது விமர்சிப்போம். இது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கும். முழுமையாக எதிர்ப்பதா முழுமையாக ஆதரிப்பதா என்ற நிலைப்பாட்டில் இருக்க முடியாது. அதுசரி வராத ஒன்று. ஆனால் வெளியில் இருந்து கொண்டு ஆதரவு கொடுக்க வேண்டிய நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. மீட்டெடுக்கும் முயற்சியில் இணைந்தால் மீட்டெடுக்க முயற்சிக்கலாம். உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் எவ்வாறு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என முயற்சிக்கலாம். நிதி வசதிகளை, கட்டமைப்புக்களை யும், கடன் மறுசீரமைப்பு விடயங்களை கையாளுகின்றோம் என்பன இருக்கின்றன.

கூட்டாக செயற்படுகின்ற பொழுது, இந்த நாட்டில் இருக்க கூடிய ஸ்திரத்தன்மையை சர்வதேசம் பார்க்கும் சர்வகட்சி அரசியலமைப்பு அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமேயானால், ஸ்திரதன்மையின் தோற்றப்பாட்டை வெளியில் காட்டுகின்ற பொழுது, ஆதரவு வழங்க கூடிய நிலை ஏற்படும். அவ்வாறான வாய்ப்புக்களை கொண்டு, எமது பொருளாதாரத்தை உடனடியாக மீட்கலாம் என்று சொல்ல முடியாவிட்டாலும், படிப்படியாக மீட்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகக் கூடும்.

நேர்கண்டவர்: சுமித்தி தங்கராசா

Comments