கலைந்த கனவுகள் | தினகரன் வாரமஞ்சரி

கலைந்த கனவுகள்

நகுலன் தங்கமானவன், ஏன் இப்படிச்செய்தான். எல்லோரிடத்திலும் எழுந்த கேள்வி இதுதான். அமைதியானவன் அனைவரோடும் அன்பாகப் பழகும் நகுலன் ஏன் இப்படி ஒருமுடிவு எடுத்தான். எல்லோரும் அவன் மேல் இரக்கப்பட்டனர். இன்று அதிகாலை நகுலன் மேற்கோண்ட தற்கொலை முயற்சிதான். அக் கிராமத்தில் அன்று பேசுபொருள்.

நகுலனின் கிராமத்துக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இருந்து மேற்கில் பதினைந்து கி.மீ பயணத்தில் போய்ச் சேர முடியும்.  

நகுலன் பதினைந்து வயதாக இருக்கும் போது செல் வீச்சு ஒன்றில் தந்தையை கண் முன்னால் பறி கொடுத்தவன். போர் விமானம் வீசிய எறிகணை வீச்சில் அந்த கிராமத்தில் மரணம் அடைந்தவர்களில் நகுலனின் தந்தையும் ஒருவர். நகுலனும், தாய், தங்கை தம்பியுமாக நால்வரும் தவித்துப் போயினர். இவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நகுலனின் தோளில் சுமையானது. பத்தாம் வகுப்போடு அவனது பள்ளிவாழ்க்கை பாதியிலே நின்றது. 

 நகுலன் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும்,  பதினைந்து வயதிலேயே கல்முனை பலசரக்கு கடை ஒன்றில் வேலைக்குப் போய்விட்டான். தாய்க்கும், தம்பி, தங்கைக்கும்.. உதவியாக இருந்தவன் தனது பத்தொன்பதாவது  வயதில், “அம்மா.. தங்கை, தம்பியப் படிக்க வைக்க வேணும். இந்த ஓலை குடிசையில் எத்தனை நாளைக்கு அம்மா இருப்பது. ஒரு வீட்டை நல்ல படியாக கட்ட வேணும். நான் கட்டாருக்கு  போகப் போறன் என்று சொல்லிய போது வெளி நாட்டுக்கா.. என ஆச்சரியப்பட்டாள் தாய்.  

 “என்னால முடியும்.. நான் கட்டாருக்கு போகத்தான் போறன். அம்மா என் சினேகிதன் குமரன் உதவிசெய்வதாக சொல்லி இருக்கான். கொஞ்சம் காசு வேணும். சிவலிங்கம் வட்டிக்கு காசு கொடுக்கிறவன். அவனிடம் கேட்டிருக்கன். நான் கட்டார் போனபின் வட்டியோட திருப்பிக் கொடுக்கவேணும். இனி  என்னை தடுக்கவேணாம்.. அம்மா.” என்றவன் வெளி நாடு போவதில் சுறுசுறுப்பானான். கட்டார் போன நகுலன். பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்தான்.  சிவலிங்கத்தின் பணத்தை வட்டியோடு ஒரு வருடத்திலேயே கொடுத்து முடித்தான். தங்கை குமுதினியை கலைவாணி மகாவித்தியாலத்தில் ஏ.எல் வரை படிப்பித்து பல்கலைக்கழகம் அனுப்பி பட்டதாரியாக்கி அழகு பார்த்தான். விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வது போல அழகான அளவான ஒரு கல் வீட்டை  கட்டி முடித்தான். தன் தம்பி குமரனுக்கு ஏ.எல் முடித்த பின் பல்கலை அனுமதி கிடைக்காமல் போக வெளிவாரி பட்டத்தை பெற்றுக் கொள்ள வழி செய்தான். தங்கைக்கு முகாமைத்துவ அதிகாரி பதவி கிடைத்ததும் பூரித்துப் போனான். விடுமுறையில் வீடு வந்த நகுலன்.. தங்கைக்கு திருமண பேச்சு எழுந்தபோது “அம்மா மூணு மாதம் லீவு இருக்கு. நீங்க கவலைப் படாதிங்க. அதை எல்லாம் நான் பார்க்கிறன். அம்மா.” என்று கூறினான்.  மூன்று  மாதத்திற்குள் தங்கள் உறவினன் நவநீதன் ஆசிரியர் வீடு சென்று பேசி திருமணமும் செய்து வைத்தான். நகுலன் படித்தது பத்தாம் வகுப்புத்தான். என்றாலும் அவனது செயற்பாடுகள் அவனுக்கு அந்த சமூகத்தில் தனிப் பெறுமானத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது.

நகுலனின் நல்லொழுக்கம்.. அவனின்குடும்பப் பொறுப்புணர்வு  கண்டு அவருக்கு பெண் கொடுக்க பலர் முன்வந்தனர். ஆனால் நகுலன் அதைக் கண்டு கொள்ள வில்லை. திருமணத்துக்கு அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தாள் “அம்மா எனக்கு இப்ப கல்யாணம் செய்யும் எண்ணமே இல்ல. வெளிநாட்டில் உழைச்ச காசு எல்லாம் செலவாப் போயிற்று.இனி வெளிநாடு போகும் எண்ணம் எனக்கு இல்ல.இப்ப கொஞ்சம் கையில் காசு இருக்கு. அதை வைச்சுக் கொண்டு ஒரு தொழில்செய்ய வேணும்.நானும் கல்யாணம் செய்யப் போய்..கையில் இருக்கும் காசும் இல்லாமல் போய் கடைசியில் கஷ்டப்பட வேண்டி வரும்.. அம்மா. இப்ப கல்யாணக் கதையை எடுக்க வேணாம்.” என்றான் ஒரே போடாக. பின்னர் கல்முனை நகரில் வாடகைக் கட்டிடத்தில் பலசரக்கு கடையை ஆரம்பித்து நகுலன் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறான்.  

இப்போது நகுலனுக்கு நாற்பது வயது. எனினும் ஐந்து வருடமாக கடையில் கிடைத்த இலாபம் நகுலனை பெரும் முதலாளியாக மாற்றி விட வில்லை.

போட்டி நிறைந்த வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாது அவனது வியாபாரம் சுமாராக.. போய்க் கொண்டிருந்தது. அதனால் அவன் கல்யாணமும் கைகூடாமல் தள்ளிக் கொண்டே  போனது. “மச்சான் நகுலா என்னடா.. இப்படி எத்தனை நாளைக்கு ஒண்டிக் கட்டையாக இருக்கப் போறாடா.” நகுலனின் பள்ளிக்கால  நண்பன் கண்ணன் கடைக்கு வந்தபோது உரிமையோடு பேசினான். எப்போது கடைக்கு வந்தாலும் கல்யாணக்கதையைக் கதைக்காமல் போக மாட்டான் அவன். நகுலனின் வயது தான் திருமணமாகி இப்போ மூன்று பிள்ளைகளுடன் இருக்கான்.  

“அந்தக் கதைய விடுடா.. எனக்கு நாற்பது வயது இப்ப. இனி என்னடா.. கல்யாண ஆசை என்போன்றவர்களுக்கு வரக் கூடாதுடா.”

“உன்னைப் பார்த்தா இப்பதான் இருபத்தைந்துவயசு போல இருக்கு..”என்று ஆரம்பித்தவன், “மச்சான் எனக்கு தெரிஞ்ச ஒரு கல்யாணப் புறோக்கர்.. தான் கல்யாணம் விடயமாக கதைத்தவர். உனக்கு அவர் சொன்ன அத்தனை தகுதிகளும் பொருந்தி வருகுதடா. அதுதான் நான் உன்னிடம் கதைக்க வந்தன். எனக்கும் அது நல்லதாகப் பட்டது. வயதைப் பற்றியே பிரச்சினையே இல்லடா. நீ..ஓ.கே சொன்னால் கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில சுவீஸ் போகலாம்.”

“என்னடா சொல்லுறா...?” “மச்சான் நகுலா.. உன்னிடம் சர்வதேச பாஸ்போர்ட் இருக்காடா சொல்லு. இல்லாவிட்டால் நீ உடனே ‘சர்வதேச' பாஸ்போர்ட எடுக்க வேணும்.”  “என்னிடம் அதுதான் இருக்கு. அதுசரி..என்னடா நீயே கதைத்துக் கொண்டு போகிறாய். எனக்கு தலை கால் எதுவும் புரியல்ல.”

“சரிடா..இப்ப சொல்லறன் கேள்.. வடிவான பெட்டையாம். அவளுக்கு வயது 38, நீண்ட காலமாக அவள் பெற்றாரோடு வசிக்கிறாள்.

அவளது சொந்தங்கள் எல்லாருமே சுவீஸில் தானாம். கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில் நீ சுவீஸ் போகலாம். தாலி கூறை உள்ளிட்ட கல்யாணச் செலவுகளுக்கு அவர்களே பொறுப்பு. உனக்கும் கல்யாண செலவுகளுக்கு காசு தருவார்கள். இவ்வளவுதான் புறோக்கர் என்னிடம் சொன்ன விடயங்கள்.” மூச்சு விடாமல் சொன்னான் கண்ணன்.

 “மச்சான் நகுலா இப்ப புரியுதா. உனக்கு விருப்பம் எண்டால் சொல்லு. ஆனால் உன் சாதகம் வேணும். பின்னேரம்  நான் ஊரில் சந்திக்கிறன். எனக்கு அவசரமாக போக வேணும்.” கண்ணன் கிளம்பிப்போய் விட்டான்.  கல்யாணமே வேண்டாம் என்றிருந்த நகுலனுக்கு சுவீஸ் போகும் கனவு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காசுப் பிரச்சினையால் அவன் கனவு கனவாகவே இருந்தது. இப்போது அவனது சுவீஸ் கனவு கல்யாண வடிவத்தில் வர மனம் சலனப் படத் தொடங்கியது. 

மகிழ்வான எண்ணங்கள் வந்து வந்து போனது.. மாலை வீடு சென்றவனுக்கு அங்கு புறோக்கரும் கண்ணனும் அவனது தாயுடன் கதைத்த படி அவனை எதிர்பாத்துக் கொண்டிருந்தனர்.

 “இவர்தான் நான் சொன்ன சம்பந்தம்கொண்டு வந்த புறோக்கர். எல்லாமே அம்மாவிடம் சொல்லியாச்சு. உனக்கு விருப்பம் எண்டா அம்மாவுக்கும் சம்மதமாம்.. என்னடா நீ சொல்லுறா.” “தம்பி நகுலா.. நேரடியாகவே நான் சொல்லுகிறன்.” “பிள்ளையின் போட்டோ இருக்கு.. இந்தாங்க அம்மா நீங்களும் பாருங்க.” போட்டோவில் பிள்ளை நல்ல வடிவாக இருந்தாள். நகுலனும் பார்த்தான். அவனுக்கு பிடித்துப் போனது.  

“என்னடா நகுலா பிடிச்சிருக்காடா?” கண்ணன் கேட்டான். நகுலன் எதுவும் பேசல்ல. வீட்டார் கூறியதை சொல்லிப் போட்டன். தம்பி உங்க வீட்டுக்கு செலவுக்கும் இரண்டு லட்சம் தருவார்கள். தம்பி உங்க போண் நம்பரை தாங்க பிள்ளை கேட்டாள். தம்பியோடு கதைக்க வேணுமாம்.

வீடியோ மூலம் கதைப்பாள். தம்பியின் சாதகத்த தாங்க நான் சுவீஸ்க்கு மெயில் பண்ண வேணும். எல்லாம் ஓ. கே. என்றால் மற்றவற்றைப் பற்றி அவங்க சொல்லுவினம்.”

 மறு நாள் இரவு சுவீஸ்சில் இருந்துவீடியோ கோல் நகுலனுக்கு வந்தது. வீடியோவுக்குள் வந்தான் நகுலன். அழகான பெண்..தான் வீடியோவில்வந்தாள்.  

“ஹலோ.. நீங்க நகுலன் தானே.” “ஓ மோம்.. நகுலன்தான் கதைக்கிறன். நீங்கள்..?”

“ஓ.. நான் முதலில் சொல்லி இருக்கவேணும். சொரி.. நான் வனிதா.. கதைக்கிறன். என்னுடைய திருமண விடயமாகத்தான்.. நேற்று உங்கள் வீடு வந்த புறோக்கர் கந்தையா அங்கிள் உங்கள் போண் நம்பரை எனக்கு அனுப்பியவர்.” “ஓ..அப்படியா... என்னுடன் அம்மாவும் இரு தங்கைகளும் இருக்கின்றனர். அப்பா இல்ல. நான் வங்கியில் வேலை பார்க்கிறன். மற்றைய கல்யாண விடயங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு புறோக்கர் சொல்லியிருப்பார். உங்கள் சாதகம் என் சாதகத்துடன் நன்றாக பொருந்தியிருக்கு..நகுலன்.”

“ஓ.கே. வனிதா.. சொல்லுங்க.”

 “பல வரன்கள் எனக்கு பார்த்தும் சாதகம் பொருந்தி வரல்ல. உங்கசாதகம் பொருந்தி வந்தது மட்டுமல்ல உங்களை வீடியோவில் பார்த்த பின் இப்போ உங்களையும் எனக்குப் பிடிச்சிருக்கு. சரி உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா..?”

வீடியோவில் வந்த வனிதா பார்க்க நல்ல அழகியாக இருந்தாள். சற்று பருமன்தான்..எனினும் பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் அழகு.. அவளிடம் இருந்தது. அவள் அழகில் நகுலனும் மயங்கி விட்டான்.

“உங்கள யாருக்காவது பிடிக்காமல்போகுமா? நீங்கள் அழகாகவும் இருக்கிறீர்கள்.. போட்டோவில் கூட அதை விட அழகாகாக இருந்தீர்கள். நான் உங்கள் போட்டோவை முன்பே பார்த்தேன் வீடியோவில் இன்னும் அழகுதான் நீங்க.. எனக்கும் ஓகேதான்.”

“நகுலன்.. இனி கல்யாண ஒழுங்குகள் செய்வதில் பிரச்சினை ஏதும் இல்லைஎன நினைக்கிறன்.”

“ஓம் வனிதா..இனி பிரச்சினை எதுவும் இல்ல.நீங்க ஒழுங்குகள செய்யுங்க.”

கல்யாண காரியங்கள் எல்லாம் துரிதமாக நடை பெற்றன. நகுலனை அடிக்கடி புறோக்கர் வந்து சந்தித்தார். வனிதாவும் அடிக்கடி வீடியோவில் வந்து நகுலனோடு கதைத்தாள். “நாங்கள் சுவீஸ்சில் இருந்து இந்த மாதம் ஐந்தாம் திகதி சிறிலங்கா வாறம். இருபது நாட்கள் அங்கு நாங்கள் இருப்போம்..வரும் இருபதாம் திகதி தீர்மானித்த படி திருமணம் நடக்கும். புறோக்கர் மூலம் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று நகுலன் சரிதானே. புறோக்கர் உங்கள சந்திப்பார். உங்களுக்கு எல்லா உதவிகளும் ஒத்தாசைகளும் செய்வார்.நாங்கள் அங்கு வரும் போது திருமணப் பத்திரிகையையும் கொண்டு வருகிறோம். வனிதா எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

நகுலனைச் சந்தித்த புறோக்கர் கந்தையா, "கல்யாணம் கல்முனை சிவகாமி மண்டபத்தில் நடக்கும். கல்முனை பிள்ளையார் ஆலயத்தில் திருமாங்கல்யம் நிகழ்வு நடைபெறவும் ஒழுங்கு செய்தாயிற்று.

தம்பி இந்த கவரில் பணமிருக்கு. வனிதா மேடம் சொன்னபடி அனுப்பி இருந்தாங்க. இது உங்கள் செலவுக்கு” சொல்லி முடித்தார் கந்தையா.

வனிதா சொன்னது போலவே சிறிலங்கா வந்தனர் வனிதா குழுவினர். வனிதாவின் தாயும் கூடவே அவளது  இருதங்கைகளும் வந்தவர்களில் அடங்குவர். அன்று மாலை கல்முனையில் உள்ள நகுலனின் சித்தியின் இல்லத்தில் வந்தவர்கள் சந்தித்து கதைத்தனர். நகுலனின் தாய் உள்ளிட்டோரும் உறவுகளும் கலந்து கொண்டனர்.‘அத்தை..’ என உரிமையுடன் நகுலனின் தாய் பூமணியை அழைத்த வனிதா. .“தாலி,கூறைப் புடவை எல்லாமே இந்தப் பெட்டியில் இருக்குது அத்தை.முறைப்படி நீங்கள் கோயிலுக்கு கொண்டு வாருங்கள் என்றாள். திட்டமிடபடியே கோயிலில் திருமணம் நடைபெற்றதோடு.. சிவகாமி மண்டபத்தில்  விருந்துபசாரங்களும் நிறைவாக நடந்து முடிந்தன.

நகுலன் வனிதா திருமணம் முடிந்து இரு நாட்கள் கடந்தன. அவர்கள் கல் முனையில் உள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தனர். “சரி வனிதா.. கல்யாணம் முடிந்த உடனே முதலில் எங்கள் வீட்டுக்கு போய் இருக்க வேணும். நேரமும்நாளும் சரிவரல்ல.

இன்றைக்கு வீட்டுக்கு வருவதாக தகவல் சொல்லிவிட்டன். நாளும் நல்லா இருக்குவனிதா.” “இன்றைக்கு நல்ல நாள்தான் நகுலன். நாம் போவதற்கு வேன் வரும்.”

“சரி வனிதா நான் சுவீஸ் வரும்.. ஒழுங்குகள் பற்றி ஒன்றும் இன்னும் சொல்லவே யில்லையே.”

“அது ஒரு பிரச்சினையுமில்ல. நேற்றுடன் நாங்கள் வந்து பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன. 25ந் திகதி நாங்க ‘பிளைட்’. நாங்கள் சுவீஸ் போன பிற்பாடு, அடுத்த மாதம் முடிவதற்குள் நீங்களும் அங்கு வந்து விடலாம். விஸா..டிக்கட் எல்லாமே உங்களுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பி விடுவோம்.”

“ஓ.கே. வனிதா. சுவீஸ் போகும் எனது கனவும் நம்திருமணம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்.”

“நீங்கள் குடும்பதுக்காக வாழ்ந்தது பற்றி.. எல்லாமே புறோக்கர் சொன்னவர் நகுலன்.இனி உங்கள் குடும்பமும் என் குடும்பம்தான்.

நீங்க சுவீஸ் வந்த பின்னர் இன்னமும் நிறையவே குடும்பத்துக்கு செய்யலாம். இனி கவலைப்பட வேணாம்.”

நகுலனின் வீடு  சென்ற தம்பதியினர் பெரும் வரவேற்பு கண்டு மகிழ்ந்து போயினர். மதிய விருந்து முடிந்து நகுலன் உறவுகளுடன் அவர்கள்  உறவாடி பிற்பகல் ஐந்து மணிக்குப் பின்னரே கிராமத்திலிருந்து கல்முனை வீடு வந்து சேர்ந்தனர்.

வனிதா சுவிஸ் புறப்படுவதற்கான நாளும் வந்தது. “நாளைக்குநானும் உங்கள வழியனுப்ப கொழும்பு வாறன் வனிதா.” என்றதும், “நகுலன்..நீங்க வந்து திரும்புவது எல்லாம் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.நீங்கள் கொழும்பு வர வேண்டாம்." என்றாள் வனிதா. அது சரியெனப் பட்டது நகுலனுக்கு அன்று மாலை வனிதா குழுவினர்.. நகுலனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கொழும்பு போய் அன்று அதிகாலையில் சுவீஸ் பயணமாகினர். வனிதா மகிழ்வோடு காணப்பட்டாள். கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் புதுப்பெண்ணாக பயணமானாள். சுவீஸ் போனவுடன் வீடியோ கோலில் கதைத்தாள்.

“நகுலன் நீங்க சுகமா. நாங்க சுவுஸ் வந்து சேர்ந்து விட்டோம்.” “ஓ.கே..வனிதா நான் சுகமாக இருக்கன்." "சரி நகுலன் எனக்கும் வேலை அதிகமாய் இருக்கு. இரவுக்கு கோல் எடுக்கன்.”

அன்று.. இரவு வனிதாவிடமிருந்து அழைப்புசிறுகதைவரும் என நடு இரவு வரை விழித்து

இருந்தான். அழைப்புவரவில்லை. காத்திருந்தான் நகுலன்.. ஒரு வாரம் கழிந்தது. அழைப்பு வரவேயில்லை. ஒரு மாதம் உருண்டோடியது. வனிதா அழைப்பு எடுக்கவேயில்லை. நம்பிக்கை இழந்தவனாக நகுலன் வனிதாவுக்கு அழைப்புஎடுத்தான். ரிங்..போய்க் கொண்டிருந்தது. வனிதா.. எடுக்கவே இல்லை. பலதடவை முயற்சித்தான். பயனற்றுப் போனது. நண்பன் கண்ணனுடன் புறோக்கர் கந்தையாவை தேடிப் போனான் நகுலன். கந்தையனை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆறுமாதங்களாகின.. வனிதாவிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. நகுலன் இன்னும் நம்பிக்கையோடு காத்திருந்தான். நல்ல பதில் வரும் என்று. ஆனால் மாதங்கள் தான் கடந்து கொண்டிருந்தன. நகுலனின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது.

ஒரு மாதத்தில் சுவீஸ் பயணம்.. அதற்காக ஒரு திருமணம். அவன் ஏமாந்து போனான். ஊரில் பலரின் கேலிப் பேச்சுக்கள்.. தாங்க முடியல்ல.

விவாகரத்து பெற்றிருந்த வனிதா.. அவளது தேவைக்காக நகுலனை கல்யாணம் செய்து ஏமாற்றி விட்டதாக அறிந்த நகுலன்.. தன்னையே முடித்து விட உறுதி பூண்டான். அதன் விளைவுதான் அவனது தற்கொலை முயற்சி. ஆண்கள்தான் இதுமாதிரி ஏமாற்று நாடகம் ஆடுவார்கள்.. பெண்களும் இப்படியா செய்வார்கள்! உடைந்துபோனான் நகுலன். அன்று அதிகாலை தன் வீட்டு கொல்லைப் புறத்தில் இருந்த வேம்பு மரத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்க்க முனைந்த நகுலனை உறவுகள் துரிதமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதால் மயிரிழையில் காப்பாற்றப்பட்டான்.

தன்னுடைய பூட்டப்பட்டு இருக்கும் பழைய கடையை மீண்டும் திறந்து  தன் வியாபாரத்தை மேற் கொள்ளும் உறுதியுடன் கலைந்த கனவுகளோடு நகுலன் தன் மிதி வண்டியில் அங்குதான் போகிறான்.                     

வெல்லாவெளி விவேகானந்தம்

Comments