65 இலட்சம் பேருக்கான இடைக்கால நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்குமா? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

65 இலட்சம் பேருக்கான இடைக்கால நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்குமா?

தமிழக அரசு வழங்கிய இலவச மனிதாபிமான உணவுப்பொருள் நிவாரணங்கள் விநியோகத்தில் சில தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. இதற்கு தோட்ட நிர்வாகங்களின் அசிரத்தையும் ஒரு காரணம்.வீட்டு வசதி இல்லாமையால் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒரே லயத்துக் காம்பிராவில் வாழக்கூடிய அவல நிலையே இருந்து வருகின்றது. இக்குடும்பங்கள் சம்பந்தமான தனித்தனி விபரங்கள் இதுவரை சேகரிக்கப்படவில்லை 

 நாட்டின் தற்போதைய நிலையில்  சுமார் 100இலட்சம் பேர்வரை பட்டினி அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல். இதில் 65இலட்சம் பேர் உடனடி நிவாரணங்களுக்கு உட்படுத்த வேண்டிய அவசரத் தேவையை கொண்டிருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

இவர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களை வரையறையாகக் கொண்டு மாதாந்தம் 15ஆயிரம் ரூபாய் நிதி உதவி, நிவாரணப் பொதி, இடைக்கால நிவாரண முத்திரை வழங்கப்பட வேண்டும் என்னும் விதந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க உலக வங்கி போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. உண்மையில் இவ்வாறான உதவிகள் மிக அவசியம்.  

இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்குக் கிடைக்குமா என்பதுதான் கேள்வி. ஏனெனில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு உட்பட்டோர் பட்டியலில் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த மக்கள் உள்வாங்கப்படவில்லை.

அதாவது குறைந்த வருமானம் பெறுவோராக இச்சமூகம் கணிக்கப்படவில்லை. அதனால் தேசிய ரீதியிலான நிவாரண ஒதுக்கீடுகள் இவர்களை சென்றடைவது கிடையாது. குறிப்பாக, குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமூர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளாக சிலர் மட்டுமே பெருந்தோட்டப் பிரதேசங்களில் தொிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

கொவிட் பெருந்தொற்று காலத்தில் இடைக்கால நிவாரணத் தொகை பல்வேறு கட்டங்களாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை பெறக்கூடிய அருகதையற்றவர்களாக தோட்ட மக்கள் இருந்தனர். இதேபோலவே தமிழக அரசு வழங்கிய இலவச மனிதாபிமான உணவுப்பொருள் நிவாரணங்கள் விநியோகங்களிலும் கூட சில தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.

இதற்கு தோட்ட நிர்வாகங்களின் அசிரத்தையும் ஒரு காரணம். வீட்டு வசதி இல்லாமையால் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒரே லயத்துக் காம்பிராவில் வாழக்கூடிய அவல நிலைமையே இருந்து வருகின்றது. இக்குடும்பங்கள் சம்பந்தமான தனித்தனி விபரங்கள் சேகரிக்கப்படவில்லை. எனவே பெருந்தோட்டங்களில் தற்போது எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பது பற்றிய சரியான தகவல்கள் பெறமுடியாதுள்ளது. 

தற்போதைய நிலையில் லயங்கள், தற்காலிக குடியிருப்புகள் என்ற வகையில் 301491வீட்டு அலகுகள் இருப்பதாக தெரியவருகின்றது. இதன் அடிப்படையில் குடும்பங்களின் எண்ணிக்கையை கணிப்பது சரியான விடயமாக இருக்க முடியாது.

வீட்டு அலகுகளின் எண்ணிக்கையை விட அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. லயக் காம்பிராக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுவது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல.  

சமீபத்தில் பெய்த பெருமழை, காற்றில் பழைய லயன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அனர்த்த நிவாரணங்கள் கிடைப்பதற்கான சமிக்ஞைகளும் இதுவரை தெரிவதாக இல்லை. இவ்வாறு பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் நுவரெலியா மாவட்ட தோட்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா? மண்சரிவு அபாயமுள்ள லயக் காம்பிரக்களுக்குப் பதிலாக தனி வீடுகள் பாதுகாப்பான இடங்களில் நிர்மாணித்துத் தரப்படும் என்று அரசியல் வாதிகள் உறுதியளித்திருந்தார்கள். தவிர இந்த லயக்காம்பிராக்கள் இடித்துத் தள்ளப்படும் என்றும் முழக்கமிட்டதை நாம் மறக்கவில்லை.  

தற்போதைய நிலையில் இயற்கையே இடித்துத் தள்ளும் கைங்கரியத்தைச் செய்துவடும் போலிருக்கின்றது. ஆனால் மாற்று குடி யிருப்புகளுக்குத்தான் வழியில்லை. அரசாங்கத்தின் பொதுச்சேவை செயற்பாடுகளின் அடிப்படையில் அனர்த்தங்களுக்கான நிவாரண ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன.

பெருந்தோட்ட பிரதேசங்களைத் தவிர்த்து பிற இடங்களில் பாதிக்கப்படுவோருக்கு உணவுப் பொதிகள், சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகள், பாதுகாப்பான வீடமைப்புக்கான இடங்கள் என்று உதவிகள் கிடைக்கின்றன. இந்த வரப்பிரசாதங்கள் பெருந்தோட்ட சமூகத்துக்கும் கிடைப்பதில் நிர்வாக ரீதியிலான தடைகள் இன்னும் இருக்கின்றன. 

முழுமையாக சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் என இழப்பீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. பெருந்தோட்ட மக்கள் இதனால் பயனடைய வாய்ப்புக் கிடைக்காது. ஏனெனில் அவர்கள் தமது சொந்த வீடுகளில், சொந்த காணிகளில் வாழ வழியில்லாதவர்களாக இருக்கின்றார்கள். முன்பு காலத்துக்குக் காலம் தோட்டக் குடியிருப்புகளின் கூரைகள் தோட்ட நிர்வாகங்களால் குறைந்தபட்சம் வருடம் ஒருமுறையாவது பழுதுபார்க்கும் நடைமுறை இருந்தது. கூரைக ளைத் திருத்திக்கொள்ள தகரங்கள் வழங்கப்பட்டன. திருத்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தோட்டங்களை கம்பனி நிர்வாகம் கையேற்ற பின் இவ்வாறான நலன்புரி நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு விட்டன.  

இந்த யதார்த்தங்களைப் புரிந்துக்கொள்ளாத நிலையிலேயே நாடு இருக்கின்து. இதற்கு ஏற்றாப்போல பெருந்தோட்டப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தம் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றார்கள். காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற விடயங்களைப் போட்டு மிதித்து விடுகின்றார்கள். இன்னும் முழுமையாக கைக்குக் கிடைக்காத 1000ரூபா சம்பள நிர்ணயத்துக்காக எத்தனை ஆண்டுகள் வீணடிக்கப்பட்டன. இது சம்பந்தமாக 20தோட்டக் கம்பனிகள் தொடுத்திருந்த வழக்கின் முடிவு கடந்த 09.08.2022அன்று அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு சாதகமான வகையிலேயே வழக்கின் தீர்ப்பு வந்திருப்பது ஆறுதலான சங்கதிதான்.  

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படும் நிலையில் பிற சமூகத்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் இலகுவாக திரும்பி வீடுவார்கள். ஆனால் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் தொடர்ந்தும் போராட்ட மயமாகவே இருக்கப்போகிறது.! தற்போது அரசாங்கத்திடம் முன் மொழிந்திருக்கும் 65இலட்சம் பேருக்கான நிவாரணம் பிற சமூகங்களை ஆசுவாசப்படுத்த உதவும். எனவேதான் இது பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இடைக்கால ஏற்பாடு ஏதாவது செய்தாக வேண்டியுள்ளது.

நிர்வாக ரீதியிலான தடைகளைக் காரணம் காட்டி எதனையும் தட்டிக் கழித்து விடக்கூடாது. மாவட்ட அரச செயலகங்களுக்கூடாக இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படுவது நல்லது. அதேநேரம் இதற்கான ஒத்துழைப்பை தோட்ட நிர்வாகங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது உசிதமானது. குறிப்பாக ஓரே குடியிருப்பில் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழும் நிலையில்   இவ்வாறான குடும்பங்கள் சம்பந்தமான தனித்தனி தரவுகள் சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானது.  

சில பிரதேசங்களில் பெருந்தோட்ட மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்த அரசு அதிகாரிகளின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. ஏனோ தானோ போக்கு. எனவே அரசு அதிகாாிகளின் பொறுப்பில் விடப்படும் நிலையில் அதனை கண்காணிப்பது அவசியமாகின்றது.

ஏனெனில் இது வாழ்க்கைச் சுமை சமாச்சாரம். இனவாதத்துக்கு அப்பாற்பட்ட சங்கதி. இதேநேரம் உதவி பெறத் தகுதியானவா்கள் என்று இனம் காணப்பட்டுள்ள 65இலட்சம் பேரில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டியது மலையகப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.   

பன். பாலா

Comments