இந்திய-சீன முறுகலுக்கு மத்தியில் இலங்கை வந்தடைந்த 'யுவான் வாங் 5' | தினகரன் வாரமஞ்சரி

இந்திய-சீன முறுகலுக்கு மத்தியில் இலங்கை வந்தடைந்த 'யுவான் வாங் 5'

இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக இங்குஇடம்பெறுகின்ற நிகழ்வுகள் பிராந்திய நாடுகளின்கவனத்துக்கு உள்ளாகின்றன. இலங்கையில்ஏற்படக் கூடிய மாற்றங்கள் இப்பிராந்தியத்தில் தாக்கத்தைஏற்படுத்தக் கூடும் என்ற கரிசனை எப்பொழுதும் அயல்நாடுகளுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது.

எமது நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளையும் பிராந்திய நாடுகள் இந்த அடிப்படையிலேயே நோக்குகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை வருகை குறித்த விடயம் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசின் 'யுவான் வாங் 5' என்ற விஞ்ஞான ஆய்வுக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது. ஏழு நாட்களைக் கொண்ட இந்த விஜயத்தில் கப்பலுக்குத் தேவையான நிரப்புதல்களைப் பொற்றுக் கொள்வது பிரதான நோக்கமாக அமைந்திருப்பதாக சீனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பது மற்றும் அவை தொடர்பான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் விஞ்ஞான ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவின் 'பெல்ட் அன் ரூட்' திட்டத்தின் கீழ், சீனாவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவையும், இறப்பர்-_அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் தருணத்தில் இந்தக் கப்பலின் வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பாரம்பரிய நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அதன் சுதந்திரமான அபிவிருத்தித் திறனை மேம்படுத்துவதற்கு இது உந்து சக்தியாக அமையும் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இக்கப்பலுக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு இந்திய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்தே சீனக் கப்பல் விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு நாளை புறப்படவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத் தொடக்கத்தில், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு, மேலும் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, கப்பலின் துறைமுக வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

எனினும், சில நாடுகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக பாதுகாப்புக் குறித்த அக்கறை எனக் கூறுவதில் முற்றிலும் நியாயமற்றது என சீனா இதற்குப் பதிலளித்திருந்தது. இதன் பின்னரே கப்பல் வருகை தருவதற்கு இலங்கை அனுமதி வழங்கியிருந்தது.

"யுவான் வாங் 5என்பது அமைதி மற்றும் நட்பை நோக்கமாகக் கொண்ட கப்பல். பன்னாட்டு கப்பல்களை கையாளும் சர்வதேச துறைமுகம் என்ற வகையில், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப எங்களுக்கு தேவையான கப்பல் பொருட்களை வழங்கும். ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கப்பலின் அழைப்பு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றத்தை ஆழப்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் விண்வெளித் துறையின் பொதுவான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பை மேலும் ஆழப்படுத்துவதுடன் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்க்கும்" என யுவான் வாங் 5கப்பலின் கப்டன் ஜாங் ஹாங்வாங் தெரிவித்தார்.

அதேநேரம், இந்தக் கப்பலின் விஜயம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் குறிப்பிடுகையில், இவ்வாறான கப்பல் இலங்கைக்கு வருவது முதல் தடவை அல்ல என்றும், 2014ஆம் ஆண்டு சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வந்திருந்ததாகவும் கூறினார்.

யுவான் வாங்- 5கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும். அவை எந்த நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்காது" என்றும் "இது எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் தடுக்கப்படக் கூடாது" எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, "இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது. இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக் கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது" என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுபட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் இலங்கையைப் பொறுத்த வரையில் அயல்நாடான இந்தியாவும், நீண்டகால நண்பரான சீனாவும் அவசியமானவை. எனவே இரு நாடுகளுடனும் முரண்பட்டுக் கொள்ளாமல் உறவுகளைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலத்துக்கு சாதகமானதாக அமையும் என்பதே பொதுவான கருத்தாகும்.

பி.ஹர்ஷன்

Comments