நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய GMOA வினால் மூவரடங்கிய குழு | தினகரன் வாரமஞ்சரி

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய GMOA வினால் மூவரடங்கிய குழு

நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதாக சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் நேற்று தெரிவித்தார்.

வைத்தியர் அஜந்த ராஜகருணா, வைத்தியர் பிரசாத் கொலம்பகே, வைத்தியர் ருவன் ஜயசூரிய ஆகியோரே இத் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   இந்த தொழில்நுட்பக் குழுவினூடாக, மருந்து வகைகளின் தட்டுப்பாடு பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான உதவியை சுகாதார அமைச்சுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதுமுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 130கிளை சங்கங்களினூடாக வைத்தியசாலைகளிலுள்ள மருந்து தட்டுப்பாடு தொடர்பில் தகவல்கள் திரட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்படும் பட்சத்தில் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழு வைத்தியசாலைகளுக்கு கள விஜயம் செய்யவும் உத்தேசித்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் சுகாதார அமைச்சுக்கு தனது முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும் எமது தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளதாகவும் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்தார்.

மருந்து வகைகளின் தட்டுப்பாடு இல்லையென சுகாதார அமைச்சு கூறினாலும் நாடு முழுவதுமுள்ள ஆஸ்பத்திரிகளில் சில மருந்துகளின் தட்டுப்பாடு நிலவுகிறது. குறை கூறிக்கொண்டிருக்காமல் சுகாதார அமைச்சுக்கு உதவி புரியும் நோக்குடனேயே இந்த தொழில்நுட்பக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக உற்பத்தி, விலைமனுக் கோரல், விநியோகம் என்பவற்றில் ஒருங்கிணைந்த செயற்பாடு இன்மையே இதற்கு பிரதான காரணமாக அமைகிறது.

இந்த தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் எமது சங்கம் சுகாதார அமைச்சுக்கும் சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கே.அசோக்குமார்

Comments