ஈழத்தமிழர் நாடகக்கலை பற்றி விரிவாக எழுதிய சொக்கன் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்தமிழர் நாடகக்கலை பற்றி விரிவாக எழுதிய சொக்கன்

சொக்கன் என எழுத்துலகில் பிரபலம் பெற்ற க.சொக்கலிங்கத்தின் ஈழத்து நாடக வளர்ச்சி என்ற நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்  

“ஈழத்து தமிழர் கலைகளுள் ஒன்றாகிய நாடகக்கலை பற்றி விரிவாகவும் ஆராய்ச்சி நெறியுடனும் இதுவரை எவரும் நூலாக எழுதவில்லை. அக்குறையை நீக்குமுகமாக க. சொக்கலிங்கத்தின் இந்நூல் வெளிவருகிறது. அந்த வகையிலே இந்நூலக்கு ஒரு சிறப்புண்டு. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முது கலைமாணிப்பட்டத்திற்காக தாய்மொழிமூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் இதுவே முதன் முறையாக நூல்வடிவம் பெறுகிறது.  

சொக்கலிங்கம் முறையான ஆய்வு நெறியிலே நின்று இந்நூலைப் படைத்துள்ளார் என்பதனை இவ்வாய்வுக்கட்டுரையினை அவர் எழுதிக் கொண்டிருக்கும் காலத்திலேயே நான் உணர்ந்துள்ளேன. நாடகம் பற்றிப் பொதுவாகவும் ஈழத்துத் தமிழ்நாடகம் பற்றிச் சிறப்பாகவும் தொடர்பான பல நூல்களை அவர் படித்தது மட்டுமன்றி அவற்றுடன் தொடர்புள்ள விற்பன்னர்களை நேரடியாகச் சந்தித்தும் தம் கருத்துக்களை வளர்த்துள்ளார். அவர் ஒவ்வொரு இயலின் முடிவிலும் கொடுக்கும் அடிக்குறிப்புகளைக் கூர்ந்து நோக்குமிடத்து இவ்வுண்மை புலனாகும்”  

சொக்கன்; ஆவரங்காலில் 02.06.1930அன்று பிறந்தவர். இவரது தந்தை பெயர் கந்தசாமிச்செட்டி. தாயார் பெயர் மீனாட்சி. சொக்கனுக்கு ஒரு வயதானபோது தந்தையை இழந்த நிலையில் கல்வி பயிலுவதற்காக தாயாரால் யாழ்ப்பாணம் நீராவியடிக்கு அழைத்து வரப்பட்டார்.  

யாழ். இந்துக்கல்லூரி ஆரம்பப் பாடசாலை, நாவலர் பாடசாலை, ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப்; பல்கலைக்கழகம் ஆகியவை சொக்கனைக் கல்வி, பட்டதாரி, முதுகலைமாணி, கலாநிதி என அவர் தனது கல்விப் புலமையை விரிவாக்கிக் கொண்டார்.  

நவீன தமிழிலக்கியத்தில் சொக்கன் அவர்களின் பேனை தடம்பதிக்காத துறைகள் எதுவுமே இல்லை. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, விமர்சனம் சமயம் வானொலிச் சித்திரங்கள் பாடநூல்கள், பாடநூல் வழிகாட்டிகள், மொழி பெயர்ப்புகள் எனப் பல்துறைகளிலும் அவர் ஆழமாகவும் அகலமாகவும் தடம்பதித்தார்.   இவர் 14ஆவது வயதில் எழுதிய முதற் சிறுகதை 'தியாகம்" 1944இல் வீரகேசரியில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து இவர் எழுதிய 'வேதாந்தி" என்ற விவரணச் சித்திரம் ஈழகேசரியில் பிரசுரமாகியது. அடுத்து மறுமலர்ச்சி சஞ்சிகையில் குப்பையிலே மாணிக்கம்இ பொன்பூச்சு ஆகிய சிறுகதைகள் வெளியாகின.  

இக்காலகட்டத்தில் நாடகம் எழுதும் முயற்சியிலும் சொக்கன் ஈடுபட்டார். முதலில் ஷேக்ஸ்பியர் எழுதிய வெனிஸ் வர்த்தகன் என்ற கதையைத் தழுவி நாடகமாக்கினார். அந்த நாடகத்தின் மூலம் சொக்கன் நாடகாசிரியரானார்.  

சொக்கன் தனது வாழ்நாளில் 200சிறுகதைகள்வரை எழுதியுள்ளார். அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான கடல் 1972ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. 1998 -முதல் 2004காலப்பகுதியில் ஆக்கப்பட்ட 10சிறுகதைகள் அடங்கிய தொகுதி கிழவரும் கிழவியும் என்பதாகும்.  

1987இல் நடைபெற்ற இந்திய அமைதிப்படையின் இராணுவத் தாக்குதல்களின் நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்டு முதன்முதலில் சிறுகதை புனைந்தவர் சொக்கனே. (ஆலயமணி ஆனி 1988இதழில், அழைப்பு என்ற மகுடத்தில் இக்கதை பிரசுரமானது.)  

சொக்கனின் கவிதைகள் மரபுவழிக் கவித்துவ ஆற்றலும் ஓசைச்சிறப்பும் கற்பனையும் நிறைந்தவை. வீரத்தாய், நசிகேதன், முன்னீச்சர வடிவாம்பிகை அந்தாதி, நல்லூர் நான்மணிமாலை அப்பரின் அன்புள்ளம் நெடுப்பா நல்லூர்க் கந்தன் திருப்புகழ் சைவப் பெரியாரின் சால்பை உரைத்திடுவோம் என்பன இவரது கவிதை நூல்களாகும். தமிழும் சைவமும் சொக்கனின் கவிதைகளின் உள்ளடங்கல்களாக அமைந்தன.  

சொக்கனின் நாடக நூல்களாக சிலப்பு பிறந்தது, சிங்க கிரிக்காவலன், தெய்வப்பாவை மாருதப்புரவிகவல்லி, மானத் தமிழ்மறவன் ஆகியவை வெளிவந்துள்ளன. இந்த நாடகங்கள் நடிப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்றவை. 20க்கும் மேற்பட்ட நாடகங்களை சொக்கன் எழுதியுள்ளார். இவருடைய நாடகங்களில் பல இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப் பட்டன.  

1960இல் சிலம்பு பிறந்தது என்ற நாடகப் பிரதியும் 1961இல் சிங்ககிரிக் காவலன் என்ற நாடகப் பிரதியும் இலங்கை கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் பரிசினைப் பெற்றன.  

ஈழத்து நவீன நாவல் இலக்கிய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியத்தினைக் கருவாகக் கொண்டு முதன் முதலாக நாவல் படைத்த பெருமை சொக்கனுக்கு உரியது. அவர் எழுதிய சீதா அத்தகைய சிறப்பினைப் பெற்ற நாவலாகும். இவர் எழுதிய முதலாவது நாவல் மலர்ப்பலி 1949இல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. செல்லும்வழி இருட்டு, ஞானக் கவிஞன், சலதி என்பன சொக்கன் படைத்தளித்த ஏனைய நாவல்களாகும். 'சலதி" இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினை 1987இல் பெற்றுக்கொண்டது.  

வங்க நாவலான சத்தியஜித்ரேயின் பத்திக்சந்த் சொக்கனால் தமிழாக்கப்பட்டது. 'சொக்கனது மொழிபெயர்ப்பு முயற்சியாக அமையும் பத்திக்சந்த் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்துக்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார் கலாநிதி நா. சுப்பிரமணியன்.  

சொக்கன் எழுதிய கட்டுரைகள் ஏராளமானவை. அவரது கட்டுரைத் தொகுப்புக்களாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்துள்ளன. அவை, பொதுவிடயங்கள், ஆய்வுகள், பாடநூல் வழிகாட்டிகள்,சமயக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் எனப் பலவகைப்பட்டன. ஈழத்து எழுத்தாளர்களில் அதிக நூல்களை எழுதியவர்களுள் ஒருவராக சொக்கன் கணிக்கப் படுகிறார்.  

இவர் எழுதிய இலக்கணத் தெளிவு மாணவர்கள் தமிழ் இலக்கண விதிகளை இலகுவான முறையிலே கற்பதற்கு உதவக்கூடிய நூல் எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.  

சொக்கன் தொழில் முறையில் ஆசிரியராக (1952 - 1972) அதிபராக (1973 - 1982) இலங்கை கல்வி நிர்வாக சேவையாளராக, கொத்தணி அதிபராக (1982 - 1990) விளங்கியுள்ளார்.  

அரசினர் பாடநூல் வெளியீட்டு ஆலோசனைக்குழு உறுப்பினராகக் கடமையாற்றி தமிழ், சைவநெறி ஆகிய துறைகளுக்கு அளப்பரிய பங்காற்றியவர். சைவநெறி பத்தாம் பதினோராம் பாடநூல்களின் எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.   இடையாற்று விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை (1976-_1979) பலாலி ஆசிரிய கலாசாலை (1982-_1983) என்பவற்றிலும் இடைவரவு விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் (1992_-1993) பணிபுரிந்துள்ளார்.  

பொதுச் சேவைகளில் 1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் யாழ்.தமிழ் எழுத்தாளர் சங்கம் என்னும் இலக்கிய நிறுவனத்துடனும், 1964ஆம் ஆண்டில் இலங்கை கம்பன் கழகத்துடனும், 1965_-1974காலப்பகுதியில் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத்துடனும் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்துடனும், அகில இலங்கைத் திருக்குறள் மன்றத்துடனும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையுடனும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும், நாயன்மார்கட்டு சைவசமய அபிவிருத்திக் கழகத்துடனும், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்துடனும் அகில இலங்கைத் திருமுறை மன்றத்துடனும் இதுபோன்ற பல நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டு சொக்கன் பணியாற்றியுள்ளார்.  

'சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த சொக்கன் இலங்கையில் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறும் சமய இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிடுவார். காலையில் முற்போக்கு இலக்கியக் கூட்டத்தில்பேசும் சொக்கன் மாலையில் சமயச் சொற்பொழிவாற்றுவார்" எனக்குறிப்பிட்டுள்ளார் முதுபெரும் எழுத்தாளரான முல்லைமணி.  

சொக்கன் மாதம் ஒரு நூல் அல்லது வாரம் ஒரு நூல் எழுதும் ஆற்றலும் அமைதியும் வாய்க்கப்பெற்றவர். அவர் இரவிலே வானத்தைப்பார்த்து சமயக்கட்டுரைகள் எழுதிவிட்டு காலையில் பூமியைப்பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர்" எனக் குறிபிட்டுள்ளார் பேராசிரியர் நந்தி. (மல்லிகை மார்ச் 1980- அட்டைப்படக்கட்டுரை)  

சொக்கன்,ஆராவமுதன், அடியவன், வேனிலான், தேனீ, சுடலையூர் சுந்தரன் பொய்யாமொழியார், சோனா, திரிபுராந்தகன், கன்றுக்குட்டி, ஈழத்துப் பேய்ச்சாத்தன், குறளன், ஞானம், ஜனனி, சாம்பவன், சட்டம்பியார், எதார்த்தன் பாலன் ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார்.  

சொக்கனது இலக்கியப் பணிகளை பல்வேறு நிறுவனங்கள் விருதுவழங்கிக் கௌரவித்துள்ளன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை தமிழ்மாமணி என்ற பட்டத்தையும் இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தினையும் நல்லூர் தமிழிசைச் சபை குகஸ்ரீ என்ற பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி என்ற பட்டத்தையும் இலங்கை அரசு சாஹித்தியரத்னா விருதையும் வழங்கிக் கௌரவித்தன.  

மரபும் நவீனமும் இணைந்த இலக்கிய ஆளுமைமிக்க சொக்கன் 02-.10-.2004 அன்று அமரரானார்.  

Comments