இரதோற்சவம் காணும் நல்லூர் முருகன் | தினகரன் வாரமஞ்சரி

இரதோற்சவம் காணும் நல்லூர் முருகன்

முருகன் என்றாலே அழகும் அறிவும் சேர்ந்த உருவம் நமது கண்முன் வந்து நிற்கும். முருகப்பெருமானின் தோற்றமும், அவரது திருவிளையாடலும் மனிதர்கள் வாழ்வில் பலவித தத்துவங்களை உணர்த்தி நிற்கிறது. இந்தியாவில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகள் தனித்துவ சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதுபோலவே எமது ஈழத்திருநாட்டிலும் முருகனின் படைவீடுகளுள் ஒன்றாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இம்மாதம் 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கடந்த இரு வருடங்களாக நாட்டில் நிலவிய கொரோனா கிருமித்தொற்று சூழ்நிலை காரணமாக வருடாந்த மகோற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் நடத்தப்பட்டது. இம்முறை வழமைபோல ஆலய உற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் மகோற்சவத்தின் இருபதாவது நாளாகிய இன்று (21.08.2022) மாலை கைலாசவாகன உற்சவம் இடம்பெறுகிறது. 23ஆவது நாளாகிய எதிர்வரும் 24ஆம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும், 24ஆவது நாளாகிய 25ஆம் திகதி இரதோற்சவமும், 25ஆவது நாளாகிய 26ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் பூங்காவன உற்சவத்துடன் இவ்வருட மகோற்சவப் பெருவிழா நிறைவுபெறுகிறது.

யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர் பிரதேசத்தில் பல ஆலயங்கள் இருந்தாலும், ஒவ்வொரு ஆலயமும் அங்கு எழுந்தருளியிருக்கும் மூலமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் நல்லூர் முருகப்பெருமானை மட்டும் ‘நல்லூரான்’ என்று குறிப்பிட்டால் போதுமானது. மேலதிக விளக்கம் எதுவுமே தேவையில்லை. யாழ்ப்பாணத்து சித்தர் என போற்றப்படும் சிவயோக சுவாமிகள் முதலாக பல புலவர்கள் நல்லூர் முருகப்பெருமானை நல்லூரான் என்று குறிப்பிட்டு பாமாலைகள் சூட்டியிருக்கிறார்கள்.

நல்லூர் முருகன் ஆலயம் யாழ்ப்பாணத்து தமிழ் மன்னர் காலத்தில் தோற்றம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆரம்பத்தில் நல்லூர் முத்திரைச் சந்தியை அண்மித்த பகுதியில் ஆலயம் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக ஆலயம் சேதமடைந்ததாகவும், அந்தப் போரின்போது வெற்றிபெற்று யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றிய மற்றுமொரு தமிழ் மன்னன் பிராயச்சித்தமாக ஆலயத்தை புனரமைப்பு செய்தான் என்றும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1505ஆம் ஆண்டு இலங்கையை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆட்சி செலுத்துவதற்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதற்கு இடமுண்டு. ஏனெனில், இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியின்போது இந்த ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு மத வழிபாட்டுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது என்ற தகவலை வரலாற்று நூல்களிலிருந்து அறியமுடிகிறது.

போர்த்துக்கேயருக்குப் பின் இலங்கையில் ஏற்பட்ட ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப் பகுதியில், இந்துமத வழிபாட்டு செயற்பாடுகளில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இவ்வேளையிலேயே இப்போதுள்ள இடத்திலிருக்கும் முருகப்பெருமான் ஆலயம், 1734ஆம் ஆண்டில் இரகுநாத மாப்பாண முதலியாரால் சிறிய கோவிலாக ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இவரே அந்நாளில் ஆலய பரிபாலனத்தையும் மேற்கொண்டு வந்தார். இவரது வழிவந்த சந்ததியினரே அன்று தொடக்கம் இன்று வரை ஆலயத்தை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். இப்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு முன், இதற்கு அண்மையிலுள்ள வெவ்வேறு இரு இடங்களில் ஏற்கனவே ஆலயம் அமைந்திருந்து பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்ததாக வரலாற்றுத் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.

நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்துக் கோவில்களில் காலத்துக்குக் காலம் மகோற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், முருகப்பெருமானின் மகோற்சவம் ஆரம்பித்துவிட்டால் வடபகுதியிலுள்ள அடியார்கள் மட்டுமல்ல, நாடளாவிய ரீதியிலும், அதற்கு மேலாக வெளிநாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து மக்கள் விரதமிருந்து முருகப்பெருமானை மனதாரப் போற்றி வழிபாடு செய்வது வழக்கமாகும். வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த நம்மவர்களும், தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பிரமுகர்கள் உட்பட சிங்கள மக்களும் மகோற்சவ காலத்தின்போதும் ஏனைய நாட்களிலும் ஆலயத்திற்கு வருகைதந்து முருகப்பெருமானை தரிசித்து செல்வதும் வழமையான ஒரு நிகழ்வாக இடம்பெற்று வருகிறது.

அலங்காரக் கந்தனாகப் போற்றப்படும் சிறப்பு நல்லூர் முருகப்பெருமானுக்கு உண்டு. மகோற்சவ காலங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக வெவ்வேறு அலங்காரங்களுடன் வீதியுலா வரும் காட்சி பக்திபூர்வமானது. முருகப்பெருமானுக்குரிய சாத்துப்படியும், வீதியுலா வரும் வாகனமும் விதம்விதமான சோடனையுடனான அலங்கரிப்பில் அமைந்திருக்கும். இதற்கும் மேலாக ஆலயமும் அலங்காரச் சிறப்பினையும், ஓர் அழகுப் பாரம்பரியத்தையும் கொண்டு விளங்குகிறது. ஆலயத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நிலவுகின்ற தூய்மை, ஆலய நித்திய நைமித்திய பூசை ஆராதனைகளில் பின்பற்றப்படும் நேர முகாமைத்துவம், ஒரு ரூபாய் அர்ச்சனை நடைமுறை, ஆலய பரிபாலனச் சிறப்பு, குருமார்கள் தொண்டர்கள் வழிபடுவோர் ஆகியோரின் ஒத்துழைப்பு, ஒழுங்கு முறைகள் என்பன ஆலய எழுச்சிக்கு பெரிதும் துணை நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இங்கு காலத்துக்குக் காலம் புனருத்தாரண வேலைகளும், திருத்தப் பணிகளும், புதிய வடிவமைப்பிலான செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அந்தவகையில் இவ்வருடமும் மற்றுமொரு செயற்பாடாக ஆலய வடக்கு வீதியிலுள்ள குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக உட்பிரகாரத்தில் புதிய பரிமாணத்துடன் பஞ்சதள குமாரகோபுரம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. கார்த்திகை உற்சவ தினமான நேற்று முன்தினம் (19.08.2022) குமாரகோபுர கலச அபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

“வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே” என்று சிவயோக சுவாமிகள் சொல்லியிருப்பதுபோல, நல்லூர் முருகப்பெருமானின் ஆலயத்தை வலம்வந்து வணங்கி அவனருள் பெறுவோமாக!

அ. கனகசூரியர் 

Comments