சுதந்திரத்தின் பின்னர் இந்திய பொருளாதாரத்தை உச்சத்துக்கு உயர்த்திய தலைவர் நரேந்திர மோடி | தினகரன் வாரமஞ்சரி

சுதந்திரத்தின் பின்னர் இந்திய பொருளாதாரத்தை உச்சத்துக்கு உயர்த்திய தலைவர் நரேந்திர மோடி

இந்தியாவில் 1977ஆம் ஆண்டு சுமார் 63%மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், 2011-ஆம் ஆண்டு அது 20%என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1990- ஆம் ஆண்டிலிருந்து 2013ஆ-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டார்கள்.

மனித வரலாற்றில் மிகப் பெரிய செல்வமிக்க தேசமாக இருந்த இந்திய நாடு 1947ஆ-ம் ஆண்டு காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட போது, ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டதால் மிகவும் ஏழ்மையான நாடாக மாறியிருந்தது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து இன்று வரையிலான 75ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அடைந்திருக்கும் வளர்ச்சி மகத்தானதாகும்.

கடந்த 75ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார, சமூக வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

காலனியாதிக்கம் இந்தியாவுக்கு ஒரு பேரழிவாக இருந்தது. ஏனெனில், காலனியாதிக்கத்துக்கு முன்பு நன்கு வளர்ச்சியுற்றிருந்த இந்திய தொழில்களான ஆடை உற்பத்தி, கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி போன்ற பல தொழில்கள் ஆங்கிலேயர்களின் வருகையால் சீரழிந்தன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடன் அவர்களுடைய பொருட்ளுக்கான சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் பிரபலமாக இருந்த தொழில்களுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும் வண்ணம் அனைத்து மூலப்பொருள்களையும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நாடாக இந்தியா தள்ளப்பட்டது. இந்த மூலப்பொருட்களைக் கொண்டு அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா மாறியது.

அதற்குப் பிறகு கடந்த 75ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கொவிட் என்கிற பெருந்தொற்றுக்கு காரணமாக வளர்ச்சி வீதம் சற்றுக் குறைந்தது. கொவிட் தணிந்துள்ளதால் இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ந்து வருகின்றது. இனிவரும் ஆண்டுகளிலும் இந்தியாவின் வளர்ச்சிப் போக்கு தொடரும் என நம்பப்படுகிறது.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தரவரிசை 2010- ஆம் ஆண்டுக்கும் 2019ஆ-ம் ஆண்டுக்குமிடையே நன்றாக வளர்ச்சி அடைந்து உலக அளவில் 9- ஆம் இடத்திலிருந்து 2019- ஆம் ஆண்டு 5- ஆம் இடத்துக்கு வந்திருக்கிறது.

இன்னொரு பெரிய சாதனை என்னவெனில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்த மக்களை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்ததாகும். கடந்த 75ஆண்டுகளில் சுமார் 50கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இருப்பினும், கடந்த 18மாத பெருந்தொற்றுக் காலத்தில் பல இலட்சக்கணக்கான பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், வறுமைக் கோட்டின் விளிம்பில் இருந்தவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது ஒரு தற்காலிகப் பின்னடைவாக இருக்கும்.

மனிதவள மேம்பாட்டைப் பொறுத்தவரையில், ஆரோக்கியத் திலும் கல்வியிலும் இந்தியா தொடர்ந்து மேம்பாடு அடைந்து வருகிறது. 1981- ஆம் ஆண்டு வயது வந்தவர்களின் படிப்பறிவு சதவீம் 40- ஆக இருந்தது. ஆனால், 2011ஆ-ம் ஆண்டு இது சுமார் 75சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இது போல, இந்தியர்களின் ஆயுட்காலமும் 40ஆண்டுகளிலிருந்து 70ஆண்டுகள் என்கிற அளவுக்கு கடந்த 59ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இது போல, குழந்தை இறப்பு, தாய்மார்கள் இறப்பு சதவீதமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

உள்கட்டமைப்பிலும், நிதி சார்ந்த துறையிலும் இந்தியா நன்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மின்சாரம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது. 1995- ஆம் ஆண்டு இந்தியாவில் 50%மக்கள் மட்டுமே மின்சாரத்தை உபயோகிப்பவர்களாக இருந்து வந்தார்கள். இது 2010- ஆம் ஆண்டு 76சதவீதமாகவும், இப்போது 97சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் 'ஜன் தன்’ திட்டத்தின்கீழ் சுமார் 40கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.

உலக அளவில் பல துறைகளில் இந்தியா தலைமைத்துவ நிலையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, மென்பொருள் மற்றும் வணிகச் செயல்முறை அயலாக்கம் (Business Process Outsourcing) ஆகிய தொழில் துறைகளில் இந்தியா நன்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, இன்றைக்கு உலக அளவில் பெரும் நிறுவனங்களாக இருக்கும் மைக்ரோ சொப்ட், ட்விட்டர் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருந்து வருகிறார்கள்.

அனைவராலும் வாங்கக் கூடிய அளவுக்கு பிராண்ட் எதுவும் இல்லாத பொது மருந்துகள் (generic pharmaceuticals) தயாரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. கொவிட் பெருந்தொற்றின்போது தடுப்பூசித் தயாரிப்பிலும் இந்திய தனது தலைமைத்துவத்தை நிரூபித்ததோடு உலகெங்கிலும் தேவைப்பட்ட தடுப்பூசிகளில் சுமார் 50சதவீதத்தை விநியோகித்து இலட்சக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியிக்கிறது.

இது மட்டுமல்லாமல் அடக்கமான கார்கள் (compact cars), இருசக்கர வாகனங்கள் தயாரிப்பிலும் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடமும், அரிசி, கோதுமை, கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள். பழங்கள், பருத்தி உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் இந்தியா இருக்கிறது. ஆக, கடந்த 75ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. குறிப்பாக, 1991- ஆம் ஆண்டு தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்கிற பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு வளர்ச்சியானது வேகமெடுத்தது.

1947ஆம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கலாம். ஆனால் நரேந்திர மோடி  பிரதமரான பிறகுதான் 2014ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைந்தது. மேலும் நவீன இந்திய வரலாறு 'மோடிக்கு முந்திய மற்றும் பிந்திய காலம் என்று பிரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடி ஆட்சிக்கு பிறகுதான் இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்திய தேசத்தின் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, பெருமளவானோர் பா.ஜ.க அரசு பொருளாதாரத்தை திறம்படக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில் இந்தியப் பொருட்களுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா தயாரிக்கும் பொருட்களின் தரம் அதற்கு ஒரு காரணம் என்றாலும், ஏற்றுமதியில் இதுவரை சிறந்து விளங்கிய சீனப் பொருள்களின் மீது வெளிநாட்டு மக்களுக்கு எற்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால், சீனாவுக்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்புகளில் பெரும்பாலான ஓர்டர்கள் இந்தியாவுக்குக் கிடைத்து வருகின்றன. 'மேட் இன் சீனா' என்று இருக்கும் பொருளை வாங்குவதை விட, 'மேட் இன் இந்தியா' என்று இருக்கும் பொருளைத்தான் உலக மக்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள்.

எஸ்.சாரங்கன்

Comments