திரைகடலோடியும் திரவியம் தேடு; அரசின் அறிவிப்பின் பலாபலன்கள் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

திரைகடலோடியும் திரவியம் தேடு; அரசின் அறிவிப்பின் பலாபலன்கள் என்ன?

“அரச ஊடகத்துறை, பெற்றோலியம் கூட்டுத்தாபனம், மின்சார சபை, ஏயார் லங்கா, துறைமுக அதிகாரசபை, புகையிரதத்திணைக்களம், தபால் திணைக்களம் என அரச நிறுவனங்கள் பலவும் நட்டத்தில் இயங்குகின்றன  – தொடர்ந்தும் இப்படியே இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தினமும் அரசாங்கத்திரப்பிலிருந்து அறிவிக்கப்படுகிறது. அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன இதைப்பற்றிய புள்ளி விவரப் பட்டியலை தினமும் ஊடகவியலாளர்களிடம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். 

 இதேவேளை அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கூடி விட்டது. ஆட்குறைப்பைச் செய்வதைப்பற்றி அரசாங்கம் ஆராய்கிறது. விரும்பியவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணி செய்யலாம். அவர்களுக்கான சேவைக்கால விடுமுறையை அரசாங்கம் வழங்கத் தயார். அல்லது விருப்ப ஓய்விலும் செல்ல முடியும் என்றும் அரசினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது பற்றிச் சில நாட்களுக்கு அனுராதபுரத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தார். ஒழுங்காக வேலை செய்ய முடியாத அரச உத்தியோகத்தர்கள் வீட்டுக்குப் போகலாம். அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று அந்நியச் செலாவணியை ஈட்டித் தரலாம் என்று சற்றுச் சீற்றமாகவே சொன்னார் ஜனாதிபதி.

இந்த அறிவிப்பும் சலுகையும் எந்தளவுக்கு வேலை செய்யும்? என்று தெரியவில்லை. ஆனால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. அப்படி பலரும் வெளியேறினால் உடனடியாக அரசாங்கத்துக்கு அந்நியச் செலாவணி கிடைக்கக் கூடும். இது இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொருளாதார ரீதியிலான ஆறுதலைத் தரக்கூடும். சிறிய பயனைத் தரக் கூடும்.

நாடோ வீடோ நெருக்கடிச் சூழலில் இருக்கும்போது அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக விரைந்து செயற்பட வேண்டியது மக்களுடைய கடமை. அதிலும் அறிவாளிகள், ஆற்றலர்களுக்கு இதில் கூடுதல் பொறுப்புண்டு. திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதைப்போல இலங்கையை மீட்பதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லோரும் செய்ய வேண்டும். எங்கும் செல்வதற்குத் தயாராக வேண்டும். இதில் மறு கருத்தில்லை. 

ஆனால், நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு நட்டமே இதனால் ஏற்படும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இப்படி வெளியேறுவோர் பெரும்பாலும் அறிவாளிகள், பணி அனுபவமுடையோராக உள்ளனர். இவர்களுடைய இந்த வெளியேற்றமானது, இவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் அனுபவத்தையும் இழக்க வைக்கும். இது நாட்டுக்குப் பேரிழப்பாகும். பதிலாக இதை விட இன்னொரு தரப்பினராக மிக இளையோரில் ஒரு தொகுதியினரை அனுப்புவதற்கு முயற்சிக்கலாம். அவர்கள் அங்கே பெற்றுக் கொண்டு வரும் அனுபவமும் அறிவும் பின்னர் எங்கள் நாட்டுக்குப் பயன்படக் கூடியதாக இருக்கும். அதை இங்கே செலவழிக்கக்கூடிய – பயன்படுத்தக் கூடிய வயது – கால எல்லையும் அவர்களுக்கிருக்கும்.

ஒரு நாடு தனக்குரிய அறிவாளிகளையும் ஆற்றலாளர்களையும் உருவாக்குவதற்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தக் கால அளவு மட்டுமல்ல, இதற்காக – இவர்களுக்காக - கல்வி (இலவசக் கல்வி - உயர்கல்வி வரை) மருத்துவம் மற்றும் இதர சேவைகளைச் செய்திருக்கிறது. அவ்வளவும் மக்களுடைய வரிப்பணத்தில்தான்.

அப்படிச் செலவுகளைச் செய்து அறிவு ஆற்றலர்களை உருவாக்கி விட்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் குறித்த நாடுகள் மிகச் சுலபமாக இந்த அறிவையும் ஆற்றலையும் எடுத்துக் கொள்கின்றன. இது அந்த நாடுகளுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கொடையாகும். அதாவது நமக்கு இழப்பு. அவர்களுக்குக் கொடை. இதுதான் நம்முடைய நிலை.

இதேவேளை இந்த மாதிரி அறிவாற்றலுடைய அடுத்த அணியை நம்முடைய  நாட்டுக்காக உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட செலவும் கால அவகாசமும் தேவைப்படுகிறது. இதற்காக மக்கள் தொடர்ந்தும் தமது வரிப்பணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், அப்படிச் செலுத்தப்பட்ட வரிப்பணத்திற்காக இவர்களின் சேவையைப் பெற முடியாது ஆக்கப்படுகின்றனர். இவர்களுடைய ஆற்றலை இங்கே பெற முடியாது. மட்டுமல்ல, இந்த மக்களின் வரிப்பணத்தில்  இந்த நாட்டிலேயே படித்து, இந்த நாட்டிலேயே வேலை செய்யவும் வாழவும் முடியாது என்ற நிலையும் வந்து விடுகிறது.

உண்மையில் ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமான ஒன்று அந்த நாட்டிலுள்ள ஆளணி வளமாகும்.  அதிலும் அறிவாற்றலும் தொழிலனுபவமும் உள்ளவர்களுடைய வளம் என்பது இன்னும் முக்கியமானது. இதை எப்படி இழக்க முடியும்? இவ்வாறு இங்கே குறிப்பிடுவதன் மூலம் இதை தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் சிந்தனைக்கும் மாறான நிலைப்பாடு என்று  கருதத் தேவையில்லை. இன்றைய நெருக்கடி நிலையை மனதிற் கொண்டே இந்த விசயங்கள் பேசப்படுகின்றன. எவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்? எது நன்மையானது,  எது சரியானது? என்ற புரிதலுக்காகவே இவை இங்கே கவனப்படுத்தப்படுகின்றன.

வாழ்க்கையிலோ ஆட்சியிலோ அவ்வப்போது நமக்கு ஒவ்வொரு விதமான நெருக்கடிகள் தோன்றும். அதற்காக அந்த நெருக்கடிகளை உடனடியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பொறுப்பற்றுச் செயற்படக் கூடாது. உதாரணமாக, அன்று வேலையற்றோருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது உண்மை. படித்த பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பைக் கோரி பல போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப்  போராட்டத்தை தொடர்ந்து பொறுத்துக் கொள்ள முடியாது என்பதற்காக, அதைச் சமாளித்துக்கொள்வதற்காக அதிகரித்த அளவில் பணி நியமனம் செய்யப்பட்டது.

இது தவறான ஒரு நடவடிக்கை என்று பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். வேண்டுமானால் அந்தப் பட்டதாரிகளுக்கு இலகு கடனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர்களைச் சுய முயற்சியில் ஈடுபட வையுங்கள். அதற்கான பொருளாதாரக் கொள்கையை உருவாக்குங்கள். பயிற்சிகளை அளியுங்கள். இந்த மாதிரி அரசாங்கக் கதிரைகளை நோக்கி அவர்களை இழுக்க வேண்டாம் என்று.

ஆனால், அதை யாருமே பொருட்படுத்தவில்லை. அதுவே இன்று சுமையாகி நிற்கிறது. ஆகவே அப்படிச் செயற்பட்டவற்றின் பாதகமான விளைவையே நாம் இன்று  சந்தித்திருக்கிறோம், அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு – அந்தத் தவறுகளுக்குப் பரிகாரம் காண விளைகிறோம்.

அன்றைய நெருக்கடிக்கு அவசப்பட்டு தவறான முறையில் செயற்பட்டதைப்போல இன்றைய நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று இன்னொரு பொறிக்குள் நாம் சிக்குண்டு விட முடியாது. அதாவது. சட்டிக்குள்ளிருந்து தப்புவதற்காக அடுப்புக்குள் வீழ முடியாது. அல்லது இருமலை விட்டுத் தும்மலை வாங்கக் கூடாது.

எந்தத் திட்டமும்  நடைவடிக்கைகளும் நீண்ட கால நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையாக நாட்டுக்குத் தேவையான உத்தியோகத்தர்கள் 10லட்சம் மட்டுமே என்று கூறப்படுகிறது. இப்பொழுது இதை விட மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.

இந்த மேலதிக உத்தியோகத்தர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்? அதற்கான அமைச்சரவை – திறைசேரி அனுமதி எப்படி வழங்கப்பட்டது. இதையெல்லாம் செய்தது யார்?

இப்போதுதான் இது உங்களுக்குப் பிரச்சினையாகத் தெரிகிறதா? இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பைச் செய்வது - நியமனங்களை வழங்குவது - தவறு என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோது அதை ஏற்காமல், பாராமுகமாக இருந்தது ஏன்?

படித்தவர்களுக்கு - பட்டதாரிகளுக்கு கட்டாயமாக அரச உத்தியோகம்தான் வழங்கப்பட வேண்டும் என்று எந்த நாட்டில் நடைமுறை உண்டு ? என்று கேட்டிருந்தோம்.

அந்தக் கேள்வி பொருட்படுத்தப்படவேயில்லை.

படித்தவர்கள் சுயாதீனமாக வேலைகளை உருவாக்கக் கூடிய பொருளாதாரப் பொறிமுறை - பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதெல்லாம் அன்று இலகுவாகப் புறக்கணிக்கப்பட்டன.

இங்கேதான் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. அது தேர்தற்கால வாக்குறுதிகளைக் கோரி நிபந்தனை விதிக்கும்போது அதற்கு அரசியற் கட்சிகள் அடிபணிந்தன. - அரசு பணிந்தது.

தேர்தல் வெற்றிகளுக்காக வேலை வாய்ப்பு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நியமனங்கள் வழங்கப்பட்டது. இப்படித் தவறுகளைச் செய்தது யார்?

இது தவறென்று உரைத்தபோது நம்மைப் பலரும் கோவித்தனர்.

இப்பொழுது பிற தரப்புகள் சொல்லும்போதுதான் இதையெல்லாம் புரியக் கூடியதாக உள்ளதா?

அப்படியென்றால் அரசாங்கத்தை விட சக்தி வாய்ந்த நிலையில்தானே குறித்த தரப்புகள் உள்ளன?

என்றாலும் நம்முடைய கேள்வி எழுந்தே தீரும்.

எந்த அடிப்படையில் - என்ன நியாயத்தின்படி- தேவைக்கு அதிகமாக இந்த நியமனங்கள் செய்யப்பட்டன?

இதைக் கண்டறிந்து, இதற்கான பொறுப்பை உரியவர்கள் மீது சுமத்துவதற்கு ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை? அதாவது இதற்கும் இந்த மாதிரி இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளுக்கும் பொறுப்புச் சொல்லப்பட வேண்டும். ஆம், முதலில் செய்யப்பட வேண்டியது பொறுப்பேற்றலும் பொறுப்புக் கூறுதலுமாகும்.

இதையே கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச சமூகமும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதைக் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாரில்லை. என்றால் இதன் பொருள் என்ன? தவறுகளுக்கு யாரும் நாம் பொறுப்பாளிகள் இல்லை என்றுதானே அர்த்தமாகும். அப்படியானால் இந்தத் தவறுகளைச் செய்தவர்கள்  யார்?

அவர்கள் அனைவரும் இன்னும் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும்தான் உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சிப்பொறுப்பிலிருந்த அனைவரும் உள்ளேதானே இருக்கிறார்கள்.

அவர்கள் மீது ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை? அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் நியமனங்கள் மட்டுமல்ல, மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள், நிறுவனத்தலைவர்களின் மாற்றம், அமைச்சுச் செயலாளர் நியமனம் என அனைத்தின் தவறுகளும் இன்று மக்களுக்கான சுமையாக மாறியுள்ளது.

இந்த உத்தியோகத்தர்கள் என்ன தாமாகவே வந்து அந்தக் கதிரைகளில் (பதவிகளில்) குந்தினார்களா?

உத்தியோகத்தர்களிடத்தில் காணப்படும் பொறுப்பின்மைகள், வினைத்திறன் போதாமைகள், மக்கள் நலன் பேணாமை போன்ற பல குறைபாடுகள் உள்ளன என்பது உண்மையே.

அது வேறு. அதற்கான வழிகாட்டல்கள் செய்யப்பட வேண்டும். அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். எடுக்க வேண்டும்.

அவர்களைக் கையாள்வதற்கான பொறிமுறைகள் பலதுண்டு. அதற்கான சட்டவரைபு, அதற்கான விதிமுறைகள் போன்றவற்றை உருவாக்கலாம். அதன்படி பணிப்பரப்பை அறிவித்து, அந்த இலக்கை எட்டுவோர், பூர்த்தி செய்வோருக்கு பதவி உயர்வு, சலுகைகள் போன்றவற்றை வழங்கலாம். அதைப்போல திறனாளராக இயங்கி மேம்பாடுகளை உருவாக்குபவர்களுக்கும் சிறப்பு வாய்ப்புகள் வழக்கப்படலாம். இப்படி ஊக்குவிப்புச் சாத்தியங்களை உருவாக்கினால் நாடு முன்னேற்றத்தை நோக்கி நகரும். அதுவேளை புதிய நியமனங்களில் வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  மாற்ற ஒழுங்குகளைப் பற்றி – புதிய முதலீடுகளுக்கான ஊக்குவிப்பு, தொழில் வாய்ப்புகளைப்பற்றிய சிந்தனைக்குச் செல்ல வேண்டும்.

இதேவேளை நாம் ஒரு சரியான கேள்வியைக் கேட்கவும் வேண்டும். அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதைப்போலத்தான் படையினரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது .

யுத்தம் முடிந்து 13ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தச் செலவு - படைத்துறைக்கான செலவு - குறைக்கப்படவில்லை. அதைப்போல படையாட்குறைப்பும் செய்யப்படவில்லை. இப்பொழுது உருவாகியுள்ள தேசியப் பொருளாதார நெருக்கடிக்கு படையினரின் பங்களிப்பையும் கோர வேண்டும். அவர்களையும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே இதைச் சிறிய அளவில் அவர்கள் செய்து வருகின்றார்கள்தான். ஆனால் இதை முழு மேலும் வலுப்படுத்தும் வகையில் விரிவாகத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். பொருத்தமான வெளிநாட்டுப் பணிகளிலும் படையிரை ஈடுபடுத்த முடியும். அதேவேளை சுமையாக இருக்கின்ற தொகையைக் குறைக்கவும் வேண்டும்.

தவறுகளைக் களைய வேண்டுமே தவிர, அவற்றை பூசி மெழுகிச் சமாளித்துக் கொண்டிருக்க முடியாது. அரசாங்கம் இன்னும் வெளிப்படைத்தன்மையாகச் செயற்படத் தயாராகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுவதற்கு இடமளிக்கக் கூடாது.  அப்படி இருக்குமானால் அது இன்னும் சரியாகச் சிந்திக்க அதனால் முடியவில்லை என்றே அர்த்தமாகும். இது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பின்னடைவையே தரும். இப்படியே இந்த இழுபறிகள் சீராக்கப்படாமல் நீடிக்குமாக  இருந்தால் இப்போதைக்குப் பிரச்சினைகள் எதுவும் தீராது.

கருணாகரன்

Comments