பெருந்தோட்ட சமூகத்தையும் மீனவர்களையும் பாதித்திருக்கும் மண்ணெண்ணெய் கிடுகிடு விலையேற்றம்! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சமூகத்தையும் மீனவர்களையும் பாதித்திருக்கும் மண்ணெண்ணெய் கிடுகிடு விலையேற்றம்!

இலங்கையில் 21.08.2022 நள்ளிரவிலிருந்து மண்ணெண்ணெய் விலை வரலாறு காணாத பெரும் அளவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெ

யின் விலை ஒரே இரவில் 253ரூபாவினால் உயர்த்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். இதன்படி 87ரூபாவிலிருந்த லீற்றர் ஒன்றின் விற்பனை விலை 340ரூபாவாக 291சதவீதத்தினால் கிட்டத்தட்ட மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் பெற்றோலியப் பொருட்களின் விலைகளை மிகப்பெரிய சதவீதங்களில் அதிகரித்து பொருளாதாரத்தில் உள்ளக அதிர்ச்சிகளை (internal shocks) ஏற்படுத்தி வந்துள்ள போதிலும் மண்ணெண்ணெய் விலையில் பெரிதாகக் கைவைத்திருக்கவில்லை. குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் எரிபொருள் என்றவகையில் அதற்கு மானிய விலை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மானியம் முற்றாக நீக்கப்பட்டு முழுச்சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.  

சந்தை விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும், மானியங்களை முற்றாக அகற்ற வேண்டும் என்ற விலைக் கொள்கையின் ஓர் அங்கமாகவோ இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. விலையதிகரிப்பின் பின்னர் துறைசார்ந்த அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விளிம்பு நிலை மக்களுக்கு நேரடி பணரீதியான மானிய உதவிகள் (direct cash subsidy) வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.  

ஆனால் அத்தகைய ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் விலை அதிகரிப்பை மேற்கொண்டிருப்பின் அம்மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும். ஆனால் விலையதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வர மக்கள் அடுத்த கணமே பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அதற்கான தீர்வை விலையதிகரிப்பின் பின்னர் யோசிப்பது என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே அமையும். 

மண்ணெண்ணெய் விலையதிகரிப்பினால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மூன்று பிரதான குழுக்களாக பெருந்தோட்டத் துறை சார்ந்த மக்களும்,  மீனவ சமூகமும்,  நகர்ப்புற வறியவர்களும் உள்ளனர். இப்போது மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குவது பற்றி பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். மற்றைய இரு குழுக்களுக்கும் எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படப் போகின்றன என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.  

இலங்கையின் வறியவர்களுக்குள்ளும் மிகவறிய சமூகமாக உத்தியோகபூர்வத் தரவுகளுக்கமைய அடையாளங்காட்டப்பட்டுள்ள பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் இந்த விலை அதிகரிப்பினால் படு மோசமாகப் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே அம்மக்கள் அதிகம் நுகரும் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மாவு, டின்மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.  

அண்மையில் ஏற்பட்ட 267சதவீத மின்கட்டண அதிகரிப்பும் இம்மக்களையே அதிகம் பாதித்துள்ளது. ஏற்கெனவே மரத்தில் இருந்து விழுந்து எலும்புகள் முறிந்து துடித்துக்கொண்டிருப்பவரை மாடு சீறிக் கொண்டு வந்து ஏறி மிதித்ததுபோல மண்ணெண்ணெய் விலை மும்மடங்கு அதிகரித்து அம்மக்களை தமது வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பிலே தலையிட்டு உரிய நிவாரணங்கள் தகுதியானவர்களைச் சென்றடைய உதவவேண்டும். 

இலங்கை வாழ் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களைப் பொறுத்தமட்டில் மண்ணெண்ணெய் அவர்களுடைய நாளாந்த வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. பிரித்தானியர்கள் பெருந்தோட்டத்துறைக்கு அறிமுகப்படுத்திய பொருட்களில் கோதுமை மா, மண்ணெண்ணெய் மற்றும் அரிக்கேன் லாம்பு (hurricane lamp) எனப்படும் லந்தர் விளக்குக்கும் முக்கிய இடமுண்டு. காலையில் ஐந்தரை மணிக்கு வேலைக்குச் செல்லு முன்பு தொழிலாளி சமையலை முடிக்க வேண்டும். விறகுகள் மழை அல்லது பனி காரணமாக நனைந்திருக்கும். இலகுவில் அடுப்புப் பற்றாது. அதனால் மண்ணெண்ணெய் அடுப்பேற்ற உறுதுணையாக இருந்தது. கோதுமை மா உடனடியாக சில ரொட்டிகளைச் சுட்டெடுக்க உதவியது. லாந்தர் விளக்கு பாதுகாப்பாக வெளிச்சத்தைப் பெறவும் அதை இடத்திற்கிடம் கொண்டு செல்லவும் பயன்பட்டது. விறகுளைச் சேகரித்து வைக்க லைன் வீடுகளில் பரண்கள் இருந்தன.  

பிற்காலங்களில் மின்சாரம், எரிவாயு என்பன பெருந்தோட்டத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மண்ணெண்ணெயின் முக்கியத்துவம் குறையவில்லை. குறிப்பாக எரிவாயு விலை பலமடங்கு அதிகரித்த பின்னர் பலர் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறினார்கள். முன்பு போல பெருந்தோட்டத்துறையில் விறகுகளைப் பெற்றுக் கொள்வதும் இப்போது இலகுவான காரியமல்ல. எனவே தான் மானிய விலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மண்ணெண்ணெயைப் பெற்றுத்தருவது அவர்களது உயிர்வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.  

இலங்கை மானியங்களால் நிறைந்த தேசம் என்றும் அரசாங்கம் மானியங்களை வழங்குவதாலேயே வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்ற பொதுவான ஒரு அபிப்பிராயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  

எனவே, மானியங்களை நீக்குவது அரசாங்கத்தின் முன்னுரிமைப்பட்டியலில் உள்ளது. ஆனால் அந்த நடவடிக்கை படிப்படியாக கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஓரிரவில் அவற்றை நீக்குவது மிகப்பெரிய சமூக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை ஒரு சத்திரசிகிச்சை நிபுணரின் கையில் உள்ள கத்தியைப்போல கவனமாகப் பிரயோகிக்கப்பட வேண்டியவையாகும்.  

இப்போது செய்யப்படுவதைப் போல எல்லாப் பக்கங்களிலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் நிலையில் செய்வதறியாது குரங்கின் கையில் கிடைத்த வாளைப் போல எல்லாப் பக்கமும் வெட்டிச் சாய்த்துக்கொண்டு செல்வது ஒரு விவேகபூர்வமான நடவடிக்கையல்ல. ஒருபுறம் வறுமை தணிப்பு சமூக ஒப்புரவு என்பன தொடர்பில் இலங்கை இதுவரை கொண்டிருந்த எல்லாச் சாதனைகளையும் இந்த நடவடிக்கைகள் முழுமையாகச் சிதறடித்துவிடும். மறுபுறம் எல்லாச் சுமைகளையும் மக்கள் மீது நேரடியாகச் சுமத்துவதென்றால் ஒரு அரசாங்கம் எதற்கு என்று மக்கள் நேரடியாகவே கேட்கிறார்கள்.  

உண்மையில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு பொதுமக்களா காரணம்? என்ற கேள்வி எழுகிறது. ஓரு பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றவர்களை பொருளாதாரக் கொலையாளிகள் (economic assassins) என்று கூறுவார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பொதுமக்களல்ல. வேறு யாரோ செய்த பாவங்களுக்காக பொதுமக்களைப் பலிக்கடாக்களாக்கித் தண்டிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.     பெருந்தோட்ட சமூகத்தையும் மீனவர்களையும் பாதித்திருக்கும்

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments