கொடுத்து வாழ்வதே பெருமை! | தினகரன் வாரமஞ்சரி

கொடுத்து வாழ்வதே பெருமை!

அந்தத் தோட்டத்தில் பயிற்றங் கொடியும், இராசவள்ளிக் கொடியும் போட்டிபோட்டு வளர்ந்தன. பயிற்றங்கொடி வளர்ந்து பூக்கத் தொடங்கவும் வண்டுகள், தேனீகள், சின்னச் சின்ன பூச்சிகளென கொடியைச் சுற்றிச்சுற்றி வட்டமிட்டு அன்புசெலுத்தத் தொடங்கின.    பூக்களில் இருந்து பிஞ்சுகள் வெளிவரத் தொடங்கவும் அணில், கிளி, குரங்குகள் என அந்தக் கொடியை நாடிவரத் தொடங்கின. கொடியும் தன்னை நாடிவரும் உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளித்து மகிழ்ந்தது.  

ஒருநாள் ஐந்தாறு கிளிகள் கூட்டமாக வந்து பயிற்றங்காய்கள் அனைத்தையும் கொத்திச் சாப்பிட்டு மனநிறைவோடு பறந்தன. இதை அவதானித்த இராசவள்ளி, “என்ன பிராணிகள் வந்து உனது அழகைச் சீர்குலைக்கின்றதே, உனக்கு வருத்தமாக இல்லையா?” என போலியான கவலையோடு கேட்க, அதற்கு பயிற்றங்கொடி ஒரு புன்னகையொன்றைப் பதிலுக்கு தவழவிட்டு அமைதியானது.  

இராசவள்ளி “நீ எப்படி இருந்தாலும் நமக்கென்ன” எனக்கூறி, அருகில் உள்ள மரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கியது. ஆனால் பயிற்றங்கொடி படருந்தன்மையை குறைத்து நன்றாக பூத்துக் காய்த்தது. தன்னை நம்பிக்கையோடு நாடிவரும் பிராணிகளுக்கு உணவளித்து மகிழ்ந்தது.  

தினமும் ஏதோ ஒரு உயிரினத்திற்கு உணவளிப்பதை அவதானித்த இராசவள்ளி, “அடுத்தவனுக்கு உதவி செய்வதால் ஏதாவது நன்மை கிடைக்கின்றதா? மாறாக உனது வனப்புதான் படிப்படியாகக் குறைகின்றது” என மீண்டும் சொன்னது.  

இப்போது பயிற்றை “நண்பா..! நாம் உயிரோடு இருக்கும்வரை மற்றவர்கட்கு எதாவது ஒருவகையில் உதவிசெய்ய வேண்டும்” இயற்கை அன்னை நமக்கு ஏற்றவகையில் உதவி செய்கின்றபடியால்தான், நானோ, நீயோ உயிர்வாழ்கிறோம். எம்மைப்போல் எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன. வந்த உயிர்கள் எல்லாம் இங்கு நிரந்தரமாகத் தங்குவதில்லை. இறந்தபின் நம்முடன் கூட வருவது நாம் செய்த தருமம் மட்டும்தான்.

எம்முடன் எந்தவொரு சொத்துச் சுகமும் வருவதில்லை. அது இயற்கையின் நியதி, சூரியன் காலையில் உதிக்கின்றது, மாலையில் மறைகின்றது. அதுபோலத்தான் நம் வாழ்வும். இருக்கும் வரை நம்மால் இயன்ற உதவிகளை அடுத்தவருக்குச் செய்வதுதான் சிறப்பு.

உன்னைப் பார், நீ எவ்வளவு அழகாய் பற்றிப் படர்ந்தாய், இப்ப உனது வேகம் குறைந்துவிட்டது, சில இலைகள் பழுக்கத் தொடங்கிவிட்டன. கஷ்டப்பட்டு தேடி மண்ணுக்குள் மறைத்து ஒளித்துவைத்த பொருள் இன்னும் சிலநாட்களில், உனக்கு தெரியாத ஒருவர் எடுத்துப் பயனடையப் போகின்றார்.

நீ எப்போ செத்துமடிவாய் என மிகுந்த ஆவலோடு உன்னைச் சூழ உள்ளவர்களில் யாரோ ஒருவர் எதிர்பார்த்து இருக்கின்றார்.

ஆனால் எனது ஒரு இலைவாடத் தொடங்கினாலே போதும் என்னைச் சூழ்ந்திருப்பவர்களின் மனமும் வாடத் தொடங்கிவிடும், எப்படியாவது என்னைக் காப்பாற்ற பாடுபடுவர்.

என் அடிப்பாகத்தை எந்தளவுக்கு ஈரலிப்பாக வைத்து இருக்கிறார்கள். காரணம், நான் இன்னும் உயிர்வாழ வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு, அதுதான் நமக்குப் பெருமை” எனக்கூறி அமைதியானது.

இராசவள்ளியும் தனது தவறை புரிந்துகொண்டு தலைகுனிந்தது.  

திருமலை தேன்மொழி   

Comments