பொறி | தினகரன் வாரமஞ்சரி

பொறி

எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தையொட்டி (29.08.1926 - 08.12.1995) 'பொறி'  என்ற (1975தாமரை) அவரது சிறுகதை பிரசுரமாகின்றது.

தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது. 

 இவர்கள் தங்கள் படுப்பு வலைகளைக் கட்டுமரங்களில் சென்று பரவைக் கடலில்தான் விரிப்பார்கள்.  

 இனிமேல் படுப்பு வலைகளை நம்பிக் கட்டுமரங்களில் சென்று ‘சிறுதொழில்’ செய்ய முடியாதாகையால், ‘எத்தனை காலமாக வாய்வயிற்றைக் கட்டிப் பஞ்சம் பட்டினியோடு சீவிக்கிறது’ என்று தொழிலாளர்கள் வெகு நாட்களாகவே நச்சரிக்கத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இதிலிருந்து மீளவும் சரியான மார்க்கம் தெரியவில்லை. 

 ஒரே முழிசாட்டம்தான். 

 தாங்களும் தம்பிமுத்துச் சம்மாட்டியைப்போல் இயந்திரப்படகு வாங்கிப் ‘பெருந்தொழிலி’ல் இறங்கவேணுமென்று தொழிலாளர்கள் ஒருநாள் கூடித் திட்டம் போட்டும், அந்தத் திட்டம் இன்றுவரை வெறும் வாய்ப் பேச்சில்தான் கிடக்கிறது. 

 தங்களின் இந்தக் கையாலாகாத் தனத்தையும் அவர்கள் உணர்ந்துதானிருந்தனர். ஆனால், ‘திட்டமிடுவதன்படி ஏன் இயங்க முடிவதில்லை?’ என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகவேயிருந்தது. 

 தற்போதைக்கு ஊர்கூடி ஒரு இயந்திரப் படகென்றாலும் வாங்கித் தங்கள் துறைமுகத்துக்குக் கொண்டு வந்துவிட்டால் தம்பிமுத்துச் சம்மாட்டியின் கொள்ளையையும், தனியாதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி அவனைச் ‘சமன்படுத்தி’ வைத்துவிடுவதோடு, பின் எந்த அலைகடலையும் எதிர்கொண்டு சமாளித்து ஆழ்கடல் சென்று தாங்கள் தொழில் புரியலாம் என்பது அவர்கள் எண்ணம். 

 ஆனால், இந்தத் திட்டத்திற்கு வயது முதிர்ந்த சில ஊர்ப் பெரியவர்கள் குறுக்கே நின்றதால் தாங்கள் தீட்டும் திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் அவர்களால் முடியவில்லை. 

 இதனால், கிழவர்களோடு ‘சச்சரவு’ப் படுவதே இளைஞர்களுக்கு ‘முழுநேர வேலை’ யாகியும் விட்டது.  

 தம்பிமுத்துச் சம்மாட்டி ‘மிஷின் போட்’ வைத்து ஓடுவதால் கண்ணுக்கெட்டாத தூரக் கடலுக்குச் சென்று ‘பெருந் தொழில்’ செய்ய முடிகிறதென்றும், தங்கள் துண்டு துணுக்கான சிறுசிறு படுப்பு வலைகள் அந்த இயந்திரப் படகுகளால் கீலங்கீலமாகக் கிழிந்து சீரழிந்து போவதோடு, ஆழ் கடலில் கிளைகட்டிக் களம் நாடி வருகின்ற மீன்கள் பரவைக்கடல் தேடி முகம் வைப்பதில்லை யென்றும்- இப்படியே ஒவ்வொன்றாக – புண்ணும் சொல்லிப் புண்ணுக்கு மருந்தும் சொல்வது போல் இளைஞர்கள் பெரியவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். 

 கிழவர்கள் அப்பவும் இளந் தொழிலாளர்கள் கூற்றை மறுத்து விட்டனர்.  

 ‘தம்பிமுத்துச் சம்மாட்டி’ பெரும் பணக் காரன்... படகு, தோணி துரவு, தேட்டம் பாட்டம், சாதி சனம் உள்ளவன். அவன் பெரிய திமிங்கலம் விழுங்கி முதலாளி நாங்கள் அன்றன்றாடம் தேகம் மாஞ்சு கடல் அடிச்சு உழைக்கிறனாங்கள். அவனோடு மோத முடியாது’ என்று வயது வந்தவர்கள் எடுத்துக்கூற, ‘தங்கள் பலவீனத்தையும் பயத்தையும் மறைப்பதற்காகவே கிழவர்கள் இப்படி ‘நாயம்’ சொல்லி எங்கள் போராட்டத்தைத் திசை திருப்ப முனைகிறார்கள்’ என்று இளைஞர்கள் நினைத்தனர். 

 இந்தக் கோலத்தில் சருமம் ‘இழுபறி’ப்பட்டுக் கொண்டிருந்ததே தவிர. இரு பகுதியார் போட்ட திட்டங்களில் ஒன்றும் கைகூடுவதாயில்லை. 

 தங்களுக்குள் வெடித்த இந்த முரண்பாட்டைக் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளாமல், கிழவர்கள் மாத்திரமன்றி, இளந் தொழிலாளர்களுமே தம்பிமுத்துவை எதிர்த்து வழிக்குக் கொண்டுவருகிற சரியான மார்க்கம் தெரியாமல் தத்தளித்தார்கள். 

 ஒரு நாள் இளைஞர்கள் கூடி ஊருக்குள் கூட்டம்போட்டு, ’நாங்கள் தனியத் தனியப் பறைஞ்சு ஆகப்போகிது ஒன்றுமில்லை. ஆனபடியால் எல்லாரும் ஒருமிக்கச் சேந்து ஒரு சங்கம் அமைச்சு – அதுக்குக் ‘கடல் தொழிலாளர் சங்க’மெண்டு பேர் வைச்சு – அதன் மூலமாகக் கருமம் ஆற்றுவோம்’ என்று ஆலோசித்தார்கள். 

 அதுக்கும் கிழவர்கள் ஒத்து வரவில்லை. 

 ‘தொழிலாளர் சங்கமும் மண்ணாங்கட்டியும், உங்கட போக்கைப் பார்த்தால், நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்துகொண்டு வந்த கட்டுமரத்தொழிலைக் கை விட்டு, மிசினுகளோட மாரடிக்கிறதா? என்று பெரியவர்கள் மறுத்துக்கொண்டே வந்தார்கள். 

 என்றாலும், இஞைர்கள் தளரவில்லை. கடற்சாதாளையிற் தேங்கிய கணைமாதிரி தங்கள் ‘பிடி’யை விடாமல் தர்க்க வாதங்களால் கிழவர்களைத் திணறடிக்க வைத்தார்கள். 

 ‘சா பிணங்களான உங்களுக்கு ‘அறளை’ பேந்திட்டுது. எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறையும் இருக்காது. நீங்கள் எப்பவும் பழமை – மரபு பேசியே அநியாயமாகக் காலங்கழிக்கிறனீங்கள். ஆனமட்ட, நாங்கள் செய்யிறதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு கிடவுங்கோ’ என்று இளைஞர்கள் ‘நக்கல்’ பண்ண, பெரியவர்களோ, ‘டேய், முந்த நாள் பேஞ்ச மழைக்கு நேத்து முளைச்ச களான்களான உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் இளம் பொடியள், இள ரத்தம் துடிச்சுக்கொண்டு தானிருக்கும். உங்களுக்கு உலக நடப்புகள் தெரியாது. ஆனபடியால் எப்பவும் தீவிரமாகத்தான் பேசுவியள். உந்தத் தீவிரப் பேச்சுகள் நடைமுறைக்கு ஒருநாளும் ஒத்துவராது’ என்று இளைஞர்கள் மீது திருப்பித் தாக்கினார்கள்.  

 இளம் தொழிலாளர்களோ தங்கள் ‘கட்சி’யை விட்டுக் கொடுக்கவேயில்லை. நாளாவட்டத்தில் ஊருக்குள்ளே இளைஞர்களின் கரங்களே மேலோங்கி வந்தன. 

 இளஞர்கள் போட்ட திட்டத்தின் பிரகாரம் ஒருநாள் மின்னாமல் முழங்காமல் ஊருக்குள்ளே ‘கடற் தொழிலாளர் சங்கம்’ உதயமாகியே விட்டது.  

 தொழில் தோட்டுப் பாய் ஒரு பக்கமும், சங்கத்து வேலைகள் மறுபக்கமுமாக இளைஞர்களுக்கு இப்போது ஓய்வே இல்லை. போதாக் குறைக்கு ஒரு கிழமைக்கு முன் சோளக்காத்தால் கிழக்கு வாட்டாகப் பெயர்ந்த சூறைக்காற்றின் பேயடிப்பு இன்னும் விட்டபாடாகவில்லை. அதுவேறு இன்னும் கழித்து வாங்கி மூசி அடிக்கிறதால் கடற்கரையோர மெங்கும் ஒரே கண்ட சீருக்கு ‘ஓ’வென்ற விண் கூவல் அலறி இரைச்சல் போடுகிறது. கடலோ அம்மாறு கொண்டு அலையடித்துக் குமுறி எழுந்து கரை விழுங்கிபோல் பொங்கிக்கொண்டிருக்கிறது.  

 தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு மேலாகவே குடிசைகளுக்குள் அடங்கிப் போய்க் கிடந்தார்கள். கரைக்குச் சென்று கடல் பக்கம் முகங் கொடுக்கவும் அவர்களால் முடியவில்லை. சுவக்கீன் கிழவன் கெண்டைக் கால்களை உருவி விட்டு, சிக்கராகத் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, வீச்சு வலையைக் கைத்தாவாகத் தூக்கியபடி கடலை  பார்த்து நடந்தார். 

 ‘கிழவன் இவ்வளவு துணிச்சலோடு வெளிக்கிட்டிருக்கே?’ என்று ஏக்கத்தோடு பெண்களும் இளைஞர்களும் கிடுகி வேலிகளாலும், பனை இடுக்குகளாலும், சன்னஞ் சன்னமாக நின்று எட்டிப் பார்த்தார்கள். 

 அவர் கடற்கரையைத் தேடியே நெஞ்சு நிமிர்த்திப் போய்க்கொண்டிருந்தார். 

 ‘இந்தக் கிழவன் சாகப் போகுதே?’ 

 கடற்கரைக்குச் சென்ற கிழவன் நெற்றியைச் சுருக்கி குத்துக்கண் வைத்துக் கடலைப் பார்த்தார். 

 ‘சீர் வம்பு சரிப்பட்டு வரேல்ல’ என்பதுபோல் அவர் முகம் சுளித்துக்கொண்டது. அந்த வாக்கில் கோயில் முகப்புப் பக்கமாகத் திரும்பி, நெஞ்சில் ஒரு சிலுவை கீறி ‘முணுமுணுப்புச் செபஞ்’ சொல்பவராய் கரையோரமாகத் திரும்பி வந்து, கரையில் இழுத்துப்போட்ட கட்டுமரங்களில் ஒன்றிலே ஏறியிருந்த கிழவர், வீச்சு வலையை விரித்துக் கெண்டைக் கால்களில் போட்டு உலாவத் தொடங்கினார். 

 ‘வரியம் முந்நாற்றியறுபத்தைஞ்சு நாளும் கடலில் புடிச்சு மாஞ்சாலும், ஆனவாக்கில வாய் வயித்துக்கு ஊத்தக் கஞ்சியில்லை. இந்தக் கோசும் காத்தடிக்குது. இதுக்குள்ள பொடியள், ‘மிசின்போட்’ வேண்டி மேலைக் கடலுக்குப் போய் ‘பெருந்தொழில்’ செய்யத் துடிக்கிறாங்கள். ஆண்டவர் அவே அவேக்குத் தக்க மாதிரி அளந்த படியை அன்றன்று அனுபவிக்காமல் இவனுகளுக்கு இப்ப ஆவல் புடிச்சிட்டுது. ‘பணக்காரன் மோட்சம் போவதானால் ஊசியின் காதுக்க ஒட்டகம் புந்த மாதிரி’யெண்டு ஏசுநாதர் சொன்னதையும் பொடியங்கள் அசட்டை பண்ணிப்போட்டுப் பெரிசா ஆசைப்படுறாங்கள். ஆனால் ‘பேராசை பெரும் தரித்திரம்’ என்றெல்லாம் தன் பாட்டில் ‘அறளை’ கொட்டிக்கொண்ட சுவக்கீன் கிழவனுக்கு, சடுதியாக மனசில் ஒரு கிலேசம் தட்டியது. 

 பனங் கூடல்களை ஊடறுத்து ஊர்ப்பக்கம் திரும்பிப் பார்த்தார். 

 தொழிலாளர்கள், பெண் புரசுகள், சிறுவர் சிறுமிகள் - தெட்டந்தெறியனாக ஊர்த் தோப்புக்குள்ளே நின்று மிலாந்திக் கொண்டிருந்தார்கள். 

 ‘இள மட்டப் பொடியங்கள் சங்கத்தைக் கூட்டித்தான் போட்டாங்கள். தம்பிமுத்துச் சம்மாட்டியோட இனிமேல் கொழுவல்தான். அவன் பாவி காசுக்காரன். ஆளும் அழுங்குப் பிடியன். எக்கணம் ஏதன்டையில்தான் வந்து முடியும். எனக்கென்ன, ஆர் பிடிச்சும் மீனாகட்டன்’ என்று கிழவன் ஒரு சவாய்ப் ‘புறுபுறு’த்தார். என்றாலும், கிழவரிடம் எழுந்த ஏதோ ஒரு வாஞ்சை – தான் சார்ந்த வர்க்கத்தில் கொண்ட பாச உணர்வு, தனது இதயத்துள்ளே அருக்கூட்டித் துடிப்பதை அவர் உணர்ந்தாரெனினும், அது இன்னதென்று விவரிக்கத் தெரியாமல் மனசு அழுந்தித் தவித்தார்.  

 தனது சொல்லைத் தட்டிய இளைஞர்கள் மீது அவர் வசைபாடிய போதும், ‘அவர்களின் கிருத்தியங்கள் சிலவேளை சாத்தியமாகலாம்’ என்றும் கிழவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது. 

 சண்டை மாருதங்களான இயந்திரப் படகுகளைத் தனது ஊரவர்கள் கண்ணுக்கு முன்னே – சிறு சிறு கட்டுமரங்களில் அன்றாடம் மாய்ச்சல்படுகிற தனது ஊர்த் தொழிலாளர்கள் பார்த்திருக்க அவர்கள் கண்கள் எதிரே கொண்டுபோய் பெருந்தொழில் நடத்துகின்ற முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியில் இப்போது கிழவனுக்கு ஆத்திரம் பீறிட்டது. 

 தம்பிமுத்துவின் வீட்டுப் பக்கம் வெறித்துப் பார்த்து வெறுப்போடு ஒரு பாட்டம் செருமிக் காறித் துப்பினார்.  

 அப்போது மாலைத் திருந்தாதி மணி அடிக்கிற சத்தம் கேட்டது. ‘சடா’ரென்று கெண்டைக்கால்களை மடக்கிக்கொண்டு கோயில் முகப்பைப் பார்த்துவிட்டு, காற்று வீசும் கன்னையில் முகம் திருப்பிப் பெருமூச்சு விட்டார்.  

 சங்கக் கூட்டத்தாரின் அமர்க்களம்அப்பொழுது கிழவன் காதுகளில் சாடையாகக் கேட்டது. 

 ‘கடலும் கலங்கித்தானே தெளியும்? ஆனமட்ட நடக்கிற காரியம் நடந்து முடியட்டும்’ என்று தனக்குள் சமாளித்த கிழவன், ‘எழும்பிப்போய், ‘சங்கக் கூட்டத்தில் என்ன பேசுறாங்கள் என்பதைப் பாப்பம்? என்று யோசிக்கலானார்.  

 அவ்வேளை மேகம் இடிந்து முழங்குவதுபோல் தெற்கே பெருஞ் சத்தம் கேட்டது. முகம் திரும்பிப் பார்த்தார். 

 கண்ணுக் கெட்டாத தூரத்திலே தம்பிமுத்துச் சம்மாட்டியின் ஏழு எட்டு இயந்திரப் படகுகள், கடல் உறுமிபோல் இரைந்தெழுந்த வண்ணம், சமுத்திர அலைகளையும் கிழித்துக்கொண்டு வரிசையாகக் கரைநாடி வந்துகொண்டிருந்தன. 

 கிழவனின் நெஞ்சு உக்கின வலைக்கண்கள் ‘சடக்’கிட்டு அறுந்த மாதிரி ஒரு பாட்டம் குலுங்கி அம்மியது. 

 என்ன நினைத்தாரோ, ஏதோ ஒரு ஆவேசத்துடன் ‘அவக்’கென்று உன்னி எழுந்து சங்கக் கூட்டத்தைத் தேடி விரைந்தார். 

 கிழவன் போய்ச் சேர்வதற்குள் சங்கக் கூட்டம் கலைந்துவிட்டது. 

 சுவக்கீன் கிழவன் தங்களைத் தேடியே வருகிறார் என்பதைத் தெரிந்தும் அவர்கள் கிழவனுக்காகக் காத்து நிற்கவில்லையாதலால், அவர்கள் தன்னை அசட்டை பண்ணி வெறுப்புக் கொண்டிருப்பதாக யூகித்த கிழவனின் மனசு அவருள் அந்தகாரித்தபோதும், தான் காட்டிய அசமந்தமே இளைஞர்களின் வெறுப்பிற்குக் காரணம் என்று கிழவனுக்குப் புரிந்தது. இருந்தும் கிழவன் அதனைப் பொருட்படுத்ததாமல் வீச்சு வலையை ஒரு பூவரசங் கதியாலில் கொழுவி விட்டு ரோட்டுக்குச் சாய்வாக வந்து நின்று ஒரு வித உரிமை பாராட்டிப் பலமாகக் கத்தினார்.  

 ‘டேய் தம்பிமாரே, எப்பனுக்கு உதில நில்லுங்கோடா’ 

 அவர்கள் ஆங்காங்கே தெட்டத் தெறியனாக நின்றார்கள். 

 தன்னுள் கிளர்ந்த மன அசத்தையும் பாராமல், தானே அவர்களைத் தேடிப்போய், ‘சங்கத்தில கூட்டம் போட்டுப் பேசினியளே, கடைசியில அது என்னவாய் முடிஞ்சுது!’ என்று ஆவலோடு கேட்டார்.  

 ‘இப்ப ஒரு முடிவும் எடுக்கேல. நாளைக்குத்தான் பேசி ஒரு முடிவு எடுக்கப்போறம்’ 

 ‘மெத்தச் சரி, அதுதான் நல்லது. எதுக்கும் ஒரு முடிவு காணத்தான்வேணும். உருவி எடுத்த வாளைக் கீழ போடாதையுங்கோ’ என்றார். 

 அவர் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. 

 அடுத்த நாள் சங்கக் கூட்டம் ஊரின் அதே தோப்புக் கடவையில் நடந்தது. 

 சிறு படுவலைத் தொழில் காறரெல்லாம் ஒன்று முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகளை ஊர்த் துறைமுகத்துக்குப் பக்கத்தில் நங்கூரம்போட வேண்டாமெனக் கேட்பதென்றும், சம்மாட்டி இணங்காவிட்டால் ‘நேரடியாகவே எதிர்த்து’ப் போராடுவதென்றும் தீர்மானமாயிற்று. 

 சங்கம் இந்தத் தீர்மானத்துக்கு வந்த பின் பெண் புரசுகள், சிறுவர்கள், வயோதிபர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு வித பதட்டம் நிலவிய போதும், சுவக்கீன் கிழவன் வலு உஷாராகவே காணப்பட்டார். 

 ‘கலம்பகம் எந்த நேரமெண்டில்லாமல் சடுதியாக வரும்போலிருக்கே. எக்கணம் இதால பெருஞ் சில்லெடுப்புத்தான்’ என்று பெண்கள் மத்தியில் நிலவிய பயம், கடைசியாக அவர்கள் தங்கள் புத்திரர்களுக்குப் போதனை செய்யவே தூண்டியது. இருந்தும், தங்கள் தாய்மார்களுக்கு இளைஞர்கள் சரியாகவும் முறையாகவும் தர்க்க நியாயத்துடன் பதிலளித்த விதத்தைச் சுவக்கீன் கிழவன் கண்டபோது உண்மையில் வியந்தே போனார். 

 ‘அடக்கப்படும், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்கு அவர்களின் ஒற்றுமையான போராட்டமே சிறந்த வழி’ என்று கூட்டத்தில் தொழிலாளர் உறுதியாகவும், அறுதியாகவும் சொன்ன வார்த்தைகள் சுவக்கீன் கிழவனைச் சொக்க வைத்தன.  

 திட்டமிட்டால் மீண்டும் ஊர்த் தோப்புக்குள் கடல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் ஆரம்பித்தது. 

 பகல் இரண்டு மணிக்குத் தொடங்கிய கூட்டம் பொழுது உறைந்து பனைக் கூடலுக்குள் மறைந்து செக்கலாகியும் கறிச்சந்தைபோல் ‘கீச்சு மாச்சு’ப் பட்டது.  

 கடைசியில் இளைஞர்களான தொழிலாளர் பக்கத்துக்கே முடிவு வாசியாகத் தேறியது. 

 ‘முதலில் மனிதாபிமானத்தோடு, நீதியாக, நேரிற் சென்று கேட்கிறது. சம்மாட்டி இணங்காவிட்டால் நேரடிப் போராட்டம்’ என்பது தீர்மானம்.  

 ஊருக்குள் இத்தனை காலமாக நிலவிய ‘அமைதி’ அன்றைக்குப்பின் ‘இழந்து’ தான் போய்விட்டது. 

 ஓவ்வொரு இளைஞர்களும், தொழிலாளர்களும் பெண்புரசுகளும் மறுநாள் நிகழப்போகின்ற போர்க் காட்சிகளை மானசீகமாக ‘அதீத கற்பனை’ பண்ணிக்கொண்டிருந்ததால் அன்று இரவு அவர்களுக்குத் தூக்கமே வர மறுத்தது.  

 ‘சம்மாட்டியுடன் நேரடியாகப் போராடுவது’ என்று அவர்கள் எடுத்த முடிவின் எதிரொலி, யாழ்ப்பாணப் பிரதேசம் எங்கும் அடிபட்டது. காக்கைத் தீவுதொட்டு ஆனைக்கோட்டை, நாவாந்துறை, குருநகர், பாஷையூர், கொழும்புத்துறை ஈறாக எவர் வாயிலும் இதே பேச்சுத்தான். 

 பொழுது காலித்துக் கொண்டிருந்தது, வழக்கம்போல காலைத் திருந்தாதி மணி கேட்டுத் தொழிலாளர்களும், பெண்களும் குடிசைகளிலிருந்து வெளியே வந்தபோது... 

 அவர்களின் ஆசனக்கோயில் முகப்புக்கருகே, முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டி காரிலிருந்து பவ்வியமாக இறங்கி கோயில் விறாந்தையில் ஏறி நின்று, நாலா திக்குகளையும் சுழன்று பார்த்தார்.  

 ‘நேரடிப் போராட்டத்தில் குதிப்பது’ என்று நேற்றுத் தங்கள் சங்கம் எடுத்த முடிவை அறிந்த தம்பிமுத்தச் சம்மாட்டி நன்றாகப் ‘பயந்து’ போய், இப்போது தானாகவே ‘இறங்கி’வந்து தங்கள் காலடியில் சரணடைந்து விட்டார்’ என்று அவர்கள் தங்களுக்குள் அடைந்த பெருமிதமும் குதூகலமும், ‘நாங்கள் அவரைத் தேடிப்போய்க் கதைக்காமலிருக்க, அவரே எங்களை நாடி வந்து கதைக்க வேணும்’ என்ற நினைப்போடிருந்த அவர்களின் மான ரோஷமும் ஆவேஷமாகத் தூண்டியதால் அவர்கள் ஒரே நிலையாக ஆங்காங்கே ‘திடும்’ போடு நின்றார்கள்.   (தொடரும்)

எஸ் அகஸ்தியர்

Comments