நம்பிக்கை தருகின்ற மூன்று சமிக்ஞைகள்! | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கை தருகின்ற மூன்று சமிக்ஞைகள்!

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பெரும் பிரயத்தனங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இவ்வேளையில், கடந்த ஒரு வார காலத்தில் நம்பிக்கை தருகின்ற பல விடயங்கள் கூர்ந்து நோக்கத்தக்கவையாக உள்ளன. எமது நாடு பொருளாதார சரிவிலிருந்து மீண்டெழுவது உறுதியென்ற நம்பிக்கையை அவ்விடயங்கள் மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

இலங்கையை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கைதூக்கி விடும் வகையில், சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கு கடனுதவி வழங்குவதற்கு இணங்கியிருப்பதை இங்கு பிரதானமான விடயமாகக் குறிப்பிடலாம். நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதாயின் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியினால் மாத்திரமே முடியுமென்று பொருளாதார நிபுணர்கள் பலரும் அண்மைக் காலமாக கருத்து வெளியிட்டு வந்தனர்.

ஆனால் அக்கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைச் சாத்தியமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்குக் கிடைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கான பிரகாசமான சமிக்ஞையாகவே இக்கடனுதவியைக் கொள்ள வேண்டியுள்ளது.

நம்பிக்கை தரும் விடயங்களில் மற்றொன்று பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் வருடத்துக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் ஆகும்.

அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வரி அதிகரிப்பு உட்பட பல்வேறு முன்னேற்றகரமான விடயங்களை இடைக்கால வரவுசெலவுத் திட்டம் கொண்டிருப்பதாக பலதரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதுடன், உள்நாட்டு வருமானத்தையும் அதிகரித்துக் கொள்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை இடைக்கால வரவுசெலவுத் திட்டம் கொண்டுள்ளதாக பலரும் பாராட்டுகின்றனர்.

நம்பிக்கை தரும் அறிகுறிகளில் மூன்றாவது விடயமாகத் தென்படுவது புலம்பெயர் தமிழர்களுடனான நல்லிணக்கப்பாடு ஆகும். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காண்பிப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

மேற்கு நாடுகளில் பொருளாதாரத்திலும், அந்நாடுகளின் அரசியலிலும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை இலங்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் விடயமானது நீண்ட காலமாகவே பேசுபொருளாக இருந்து வருகின்றது. ஆனால் தென்னிலங்கையின் இனவாத சக்திகள் சிலவற்றின் விமர்சனங்கள் காரணமாக புலம்பெயர் தமிழர்களுடனான நல்லிணக்கம் சாத்தியப்படவில்லை. இன்று இனவாத விமர்சனங்களை அலட்சியம் செய்யும் வகையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் அரவணைத்துச் செல்வதில் அரசு அக்கறை காட்டுவது முன்னேற்றமான செயலாகும்.

புலம்பெயர் தமிழர்கள் எனப்படுபவர்கள் வேற்றுநாட்டவர்கள் அல்லர். அவர்களும் இலங்கையை தாயகமாகக் கொண்டவர்கள்தான். அன்றைய கால இனக்கலவரங்கள் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர்ப்பாதுகாப்புக்காக புலம்பெயர்ந்து சென்ற எமது தாயக மக்களே அவர்களாவர்.

புலம்பெயர் தமிழர்களை அரவணைத்துச் செல்வதென்பது நாட்டுக்கு விரோதமான செயலென்று எவராவது வாதிடுவார்களானால், அது அறியாமை ஆகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விடயங்களும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கான சிறப்பான திட்டங்களாகவே உள்ளன. வீண்விமர்சனங்களும், இனவாத சிந்தனைகளும், அரசஎதிர்ப்பு அரசியலும் எக்காலமும் நன்மைகள் தரப் போவதில்லை. மீட்சிக்கான இலட்சியத்தை நோக்கி புத்திசாலித்தனமான திட்டங்களுடன் நாம் முன்னோக்கிச் செல்வதே இன்று அத்தியாவசியம்.

Comments