உய்கூர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் | தினகரன் வாரமஞ்சரி

உய்கூர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்

தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான முறையில் காவலில் உள்ள உய்குர் முஸ்லீம் மற்றும் ஜின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள பிற முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் சீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சந்தர்ப்பத்தில் சீனா தொடர்பான அறிக்கையை பச்சலெட் அம்மையார் வெளியிட்டுள்ளார். அதேநேரம் அவரது சீன விஜயம் மேற்குலக அரசியல் தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகியதுடன் அவரது இரண்டாவது பதவிக் காலத்தை சாத்தியமற்ற நிலைக்குள் தள்ளியுள்ளதாக தெரியவருகிறது. மேலும் அவரது தற்போதைய அறிக்கைகூட சீனா மீது ஒரு மென்மையான போக்கினையே வெளிப்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த மே மாதம் சீனாவுக்கு விஜயம் செய்த போது பெற்றுக் கொண்ட ஆய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான உத்தி என்ற அடிப்படையில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் உய்குர் மற்றும் முஸ்லிம்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்கள் மீதான குற்றங்கள் மனித இனத்திற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் அலுவலகம் அறிக்கையிட்டுள்ளது. சிறைச்சாலைகளில் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உய்குர் மற்றும் முஸ்லிம்களை விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.மனித உரிமைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்பிராந்தியத்தில் 2017முதல் உய்குர் முஸ்லிம்கள் மீது குடும்ப கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக சீன அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாக நம்பகமான அறிக்கை உள்ளதாக மனித உரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது.  

இவ்வாறு பச்சலெட் அம்மையாரின் அறிக்கை அமைந்திருந்தாலும் சீனா மீதான குற்றச்சாட்டை முழுமைப்படுத்த போதிய ஆதாரங்களை மனித உரிமைப் பேரவை கொண்டிருக்கவில்லை என்பது அதன் அறிக்கையில் தெளிவாகிறது. குற்றச்சாட்டையும் பலமாக வைக்காத நிலையைக் காணமுடிகிறது. மறுபக்கத்தில் மேற்குலக நாடுகளின் மனித உரிமை மீறல்கள் எவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் கைவிடப்பட்டுள்ளது என்பதும் முதன்மைப்படுத்த வேண்டிய கேள்வியாகும். அமெரிக்கா கறுப்பர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் தென் அமெரிக்க கண்டத்திலும் நிகழ்த்திவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களின் பலவீனங்களும் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பிரதான விடயமாகும். அவ்வாறே இலங்கை போன்று உலகில் சிறுபான்மைத் தேசியங்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் மனித உரிமைப் பேரவையால் கண்டு கொள்ளப்படாமலும் நாடுகளில் தங்கியிருப்பதுவும் பாரிய அரசியலாக்குவதையும் அவதானிக்க முடிகிறது. சீனா மீதான மனித உரிமைப் பேரவையின் கவனம் முதன்மையடைவதற்கான காரணங்களை தேடுவது அவசியமானது. 

முதலாவது, மனித உரிமை என்பது கோட்பாட்டுத் தளத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளதே அன்றி நடைமுறைசார் பெறுமானத்தை கொண்டதாக அமையவில்லை. சீனா மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து வல்லரசுகளாலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதிலும் இஸ்லாமியர் மீதான மேற்குலகத்தின் மனித உரிமை மீறல்கள் அளவிட முடியாதது. அதனை பயங்கரவாதமாக வடிவமைத்து அதன் மீது அரசியல் செய்யும் உலகத்தைக் கொண்ட நாடுகளாக வல்லரசுகள் காணப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையும் வல்லரசுகளது பிடிக்குள்ளேயே இயங்குகின்றன. வல்லரசு நாடுகளது நலன்களை நிறைவு செய்வதற்கான அமைப்பாகவே மனித உரிமைப் பேரவை காணப்படுகிறது. போர்களை தூண்டும் நாடுகளே பின்னர் மனித உரிமைகளின் பெயரால் அந்த நாடுகள் மீது தலையீடுகளை செய்கின்றன.  

இரண்டாவது, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை புரியும் நாடுள் அனைத்துமே உலக அரசியலை ஆதிக்கம் செய்கின்றன. அதில் ஏற்பட்ட போட்டித் தன்மைக்குள்ளேயே மேற்கும் சீனாவும் மோதுகின்றன. திமென் சதுக்கத்தில் சீனா மேற்கொண்ட நடவடிக்கையை கண்டும்காணாது இருந்த மேற்கு தற்போது உய்குர் முஸ்லிம்களைப் பற்றிய கரிசனையை அதிகம் முதன்மைப்படுத்துவது தனது நலனுக்கானதே அன்றி உய்குர் முஸ்லிம்களுக்கானதல்ல. உலகம் முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை பிரயோகித்துவிட்டு சீனாவிலுள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் பாதுகாப்பளிக்க மேற்கு முயலுகிறது என்பதை  நியாயமாகக் கொள்ள முடியாதுள்ளது. அதில் அமெரிக்க, -மேற்கு எதிர் சீனப் போட்டியே அடிப்படையானதாக அமைந்துள்ளது. மேற்கு தனது போட்டியில் சீனாவிடம் தோற்றுவிடக் கூடாது என்பதற்கான அணுகுமுறைகளாகவே தெரிகிறது.  

மூன்றாவது, சீனா-, தைவான் மோதல் தீவிரத் தன்மையை எட்டியுள்ளதுடன் அதில் அமெரிக்காவின் தலையீடு அதீதமாக மாறியுள்ளது. சீனாவை மனித உரிமை சார்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் தைவான் மீதான போரை மட்டுப்படுத்தவும் அதனை ஒரு எல்லை மீறலாக காண்பிக்கவும் மேற்கு முனைகிறது. அதற்கான நகர்வுகளையே மனித உரிமைப் பேரவை மூலம் சாத்தியப்படுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது. இதன் மூலம் சீனா ஒரு உரிமை மீறலைக் கொண்ட நாடாகவும் ஆக்கிரமிப்பு நாடாகவும் உலகளாவிய தளத்தில் கட்டமைக்க விரும்புகிறது.  

நான்காவது, இவ்வாறு மனித உரிமை மீறலை மேற்கொள்ளும் சீனாவை வடிவமைப்பதன் மூலம் உலகத் தளத்தில் பலவீனப்படுத்துவதுடன் உலகத்திற்கு தலைமை தாங்கும் திறனற்ற நாடு என்பதை ஏனைய நாடுகளுக்கு தெரியப்படுத்த மேற்கு முனைகிறது. மேற்கினால் கட்டமைக்கப்பட்ட மனித உரிமைகளும் மனிதாபிமானச் சட்டங்களும் சர்வதேச மட்டத்திலான சமவாயங்களும் வாய்ப்பானவை என்பதை காட்டுவதன் மூலம் மேற்குலகத்தின் ஆளுகை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதனை தொடரவும் அதற்கு மாறான சக்திகளது எழுச்சியை முடிவுக்கு கொண்டுவரவும் அமெரிக்கா சார்ந்த மேற்குலகம் முனைகிறது. 

ஐந்தாவது, சீனாவின் மனித உரிமை மீறலுக்கான அடிப்படையை கொடுத்ததில் மேற்குலகத்திற்கு அதிக பங்குண்டு என்பது மறுக்க முடியாதது. மேற்குலகத்தின முஸ்லிம்கள் மீதான அணுகுமுறையையே சீனா நிகழ்த்துகிறது. ஏறக்குறைய முஸ்லிம்கள் மீதான மேற்கின் அணுகுமுறைக்கும் சீனாவின் அணுகுமுறையும் அதிக வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு எதிரான உலகத்திற்கு தலைமைதாங்குவதற்கு போட்டி நிலவுவதாகவே தெரிகிறது. சீனாவுக்கும் மேற்குலகத்திற்குமான போட்டியின் பிரதிபலிப்பே உய்குர் முஸ்லிம்களது மனித உரிமை மீறல் பற்றிய உரையாடலாகும். 

எனவே உலக நாடுகளின் பொருளாதார தேவைக்கு முன்னால் மனித உரிமை சாத்தியமற்றதாகவே தெரிகிறது. அதிலும் சீனா பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்குகிறதே அன்றி மனித உரிமைகளுக்கல்ல என்பதும் மேற்கு மனித உரிமையை முன்னிறுத்திக் கொண்டு பொருளாதாரத் தேவையை அடைகிறது என்பதும் இயல்பான அரசியலாகவே உள்ளது. அவற்றுக்காக சீனாவின் மனித உரிமை மீறல்களையோ அல்லது மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையோ நியாயப்படுத்த முடியாது. சீன அரசாங்கத்தின் ஆணுகுமுறைகள் எதுவும் உலத்திற்கோ சீனாவுக்கோ புதியதல்ல. சிறுபான்மைத் தேசியங்களின் இருப்புக்கே ஆபத்தான அரசியலாக உள்ளது. தீபெத்திய வரலாறும் உய்குர் இனத்தின் வரலாறும் ஒரே இயல்பைக் கொண்'டதாகவே தெரிகிறது. சீனாவில் வாழும் உய்குர் முஸ்லீம்களது நிலையும் தீபெத்தியர் போன்று அமைவதற்கு வாய்ப்பு அதிகமானதாகும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments