சிகிரியாவின் அழகை இனி கொழும்பில் இருந்தே அனுபவிக்கலாம் | தினகரன் வாரமஞ்சரி

சிகிரியாவின் அழகை இனி கொழும்பில் இருந்தே அனுபவிக்கலாம்

வாழ்க்கையின் இனிமையான கனவை நிஜத்தில் காண்கின்றேன். உலகின் புதுமைகளை கண்டு பஞ்சு போன்ற மேகங்களுக்கு ஊடே உப்பரிகையில் இருந்து தேவதைகளுடன் பயணிப்பதாக கண்ட கனவு இதுவல்லவா என எண்ணுகிறேன். உலகின் அழகான நகரம் எனது காலடியில். பறவை போன்று அந்த உணர்வை பற்றிப் பிடித்து அதனை ஒரு கணமும் நழுவ விடாமல் என்னுடனேயே வைத்திருக்க விரும்புகிறேன்.  

நான் தற்போது கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியில் அதன் நுழைவாயிலில் இருக்கின்றேன். அதில் 'கொழும்பு வானத்தின் கீழ் ' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனது காலடியின் கீழ் பரந்துள்ள கொழும்பு நகரை ஒரு தாம்பளத்தில் எடுத்துக் கொள்ள முடியும். பேரை வாவி கொழும்பை அலங்கரிக்கும் பசுமை போர்வையாக தெரிகிறது. உலக வர்த்தக மையம் என அறியப்படும் பாரிய கட்டடம் எனது காலடியில் எறும்பு போல் தோற்றமளிக்கின்றது. தொடர்ச்சியாக பயணிக்கும் வாகனங்கள் வண்டுகள் போல் தோற்றமளிக்கின்றன. தூரத்தில் தெரியும் கோட்டை புகையிரத நிலையம், கட்டடங்களுக்கு அப்பால் ஒருபுறம் கொழும்புத் துறைமுகம், அதற்கப்பால் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் நீல நிற கடல் பின்னணியில் எல்லை வரை பரந்து விரிந்துள்ளது. மறுபுறம் நாட்டின் மத்தியில் அமைந்துள்ள மலைமுகடுகள் மெல்லிய முகில்களுக்கிடையே நீல பச்சை சாம்பல் கலந்த நிறங்களில் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.  

மழை முகில்கள் சூழ்ந்தததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. ஆனால் மேகங்களற்ற தெளிவான வானத்தைக் கொண்ட நாட்களில் சீகிரியா, சிவனொளிபாதமலையின் உச்சி, நக்கல்ஸ் மலைத்தொடர் போன்றவற்றை இந்த இடத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன். அவற்றை அவதானிப்பதற்காக தொலைநோக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  

காணும் காட்சிகளில் இருந்து விடுபட மனம் விரும்புவதில்லை. நான் அனுபவிக்கும் இந்த அனுபவத்தை எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் நீங்களும் அனுபவிக்க முடியும். அதற்காகவே இந்த குறிப்பை எழுதி வைக்கின்றேன். இந்த சிறிய நாட்டில் அழகை வரிசையையாக அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது புதுவிதமான வாழ்க்கை அனுபவமாகும்.  

தாமரை மொட்டின் வடிவத்தில் இந்த பாரிய நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தம் 2012ஜனவரி 3ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. அவ்வேளையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவால் 2012ஜனவரி 22ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  

தடைகளுடன் பயணித்து 10வருட காலம் கடந்துள்ளது. இதுவரை 115மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்ட தாமரை கோபுரம் தெற்காசியாவிலேயே உயரமான கட்டடம் என கருதப்படுகின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் நீங்கள் பிரவேசிப்பது 350மீற்றர் உயரமான தெற்காசியாவின் உயரமான கட்டடத்திற்காகும். தாமரைக் கோபுர வளாகம் 10.5ஏக்கரில் பரந்துள்ளது. 'கொழும்பு 'தாமரைக் கோபுர தனியார் நிறுவனம் 'கூறுவது போன்று தற்போது உள்ளூர் முதலீட்டாளர்கள் நூற்றுக்கு 80வீதமானோரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நூற்றுக்கு 20வீதமானோரும் தாமரைக் கோபுரத்திற்காக முதலீடுகளை செய்துள்ளார்கள். 22முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இவ்வருட டிசம்பர் மாதமளவில் பதினைந்து விழாக்களுக்கான கேள்விகள் கிடைத்துள்ளன. எதிர்காலமும் வெற்றிகரமாக அமையும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  

தாமரை கோபுரத்திற்குள் பிரவேசிப்பதற்கு 500மற்றும் 2000ரூபாய் கட்டணம் அறவிடப்படும். 500ரூபா அனுமதி பத்திரத்துடன் உள் நுழையும் நபர் ஒரு குழுவாகவே தாமரைக் கோபுர உச்சிக்கு அனுப்பப்படுவார். 

ஆனால் 2000ரூபாய் அனுமதி பத்திரமுடைய ஒருவருக்கு வரிசையில் நிறகாமல் கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களிலும் அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதி பத்திரத்தின் விலை 20டொலராகும்.  

வங்கிகள், சிற்றூண்டி சாலைகள் உள்ளிட்ட விழா மண்டபங்களுடன் கூடிய சேவைகள் வழங்கும் பகுதிகள் திறக்கப்படவுள்ளன. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தரும் நபர்களின் அனுமதிக் கட்டணம் அந்த சேவையை வழங்கும் இடங்களில் நிறைவு செய்யப்படும். எதிர்வரும் மாதங்களில் அனுமதி பத்திரத்துக்கு பதிலாக QR குறியீட்டையும் அறிமுகப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

'கொழும்பு வானத்துக்கு கீழ்'என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அழகான இடம் கொழும்பு வானத்துக்கு மேலே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் . 

தாமரை கோபுரம் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. கோபுரத்தின் அடிப்பாகம் கோபுரத்தின் நடுப்பாகம் கோபுர குகை மற்றும் அண்டனா உடன் கூடிய கோபுர தூண் அமைக்கப்பட்டுள்ள பகுதி. கோபுரத்தூணின் மொட்டாக காட்சியளிக்கும் பகுதி நில மட்டத்திலிருந்து 244மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனடனாவுடன் கூடிய தூண் 103மீட்டர் உயரமாகும். மொத்தமாக தூணின் உயரம் 351மீட்டராகும். முக்கிய சமையலறை மற்றும் சேவைப் பிரிவுகள் மூன்று மாடிகளை கொண்டதாக அமைந்துள்ளன. மூன்று மாடிகளுக்கு மேல் உள்ள திறந்த பிரதேசத்தில் மத்திய பகுதியாகக் கொண்ட கோபுரத்தின் தாமரை தண்டு பகுதி பச்சை நிறத்தால் ஆனது . கோபுரத்தின் நடுப்பகுதி ஏழு அடுக்குகளால் ஆனது.  

முதலாவது இரண்டாவது மாடிகள் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணை குழுவின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பகுதியாகும். முதல் மாடியில் எதிர்காலத்தில் புதிய உற்பத்திகளுக்கான மத்திய நிலையம், நவீன தொழில்நுட்ப அனுபவத்தை பெற்றுத் தரும் 9D திரையரங்குகள், டிஜிட்டல் கலை அருங்காட்சியகம், டிஜிட்டல் வங்கி சேவை தொகுதி, சிற்றுண்டிச் சாலை என்பவற்றைக் கொண்டிருக்கும். அந்தப் பிரதேசத்தின் அளவு 1760கன மீட்டர் ஆகும். இரண்டாவது மாடியில் கண்காட்சி கூடம் ,இரண்டு விழா மண்டபங்கள், விழாக்களுக்கான ஒத்திகை பகுதி, காரியாலய பிரதேசம் , இரண்டு சிறிய சந்திப்பு அறைகள் மற்றும் கருத்தரங்கு மண்டபங்களும் காணப்படும்அதன் விஸ்தீரணம் 2485கன மீட்டர் ஆகும். மூன்றாவது மாடியில் ஓய்வு அறையுடன் கூடிய மண்டபம் அமைந்துள்ளது.  

நாலாவது மாடியில் தாமரை மொட்டுக்களின் வடிவத்திலான மின்சார குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழா மண்டபத்துக்கான தனியான பாதை உண்டு. அங்கு நடைபெறும் விழாக்களில் பங்கு பெறுபவர்களுக்காக அனுமதி பத்திரம் தேவை இல்லை.

வங்கி, விழா மண்டபங்கள் ,சிற்றுண்டிச் சாலை, காரியாலயங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்ள கொழும்பு தாமரைத்தடாக தனியார் நிறுவனம் எதிர்பார்க்கின்றது .​ெ வருமானம் ஈட்டவெதற்கான தொலைத்தொடர்பு வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அன்டனாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்தின் பச்சைநிற தண்டுப் பகுதியை விளம்பரங்களுக்காக பெற்றுக் கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

ஐந்தாவது மாடியில் தாமரைக் கோபுரத்துக்கே உரிய சுழலும் சிற்றூண்டிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அது இதுவரை காலமும் எமக்கு கனவாக இருந்த அனுபவமாகும். ஒன்றரை மணித்தியாலத்தில் 360பாகையில் மொத்த காட்சிகளையும் சுற்றிய படியே பார்க்க முடியும்.  

ஆறாவது மாடியில் முற்றிலுமாக சொகுசு வீடுகள் உள்ளன அவற்றில் ஆறு வீடுகள் அதிசொகுசு வீடுகளாகும்.  

ஏழாவது மாடியில் கொழும்பு வானத்தின் கீழ் திறந்த கண்காணிப்பு மண்டப தூணில் பிரவேசிக்கும் வசதிகளை வழங்கும் எட்டு மின்தூக்கிகள் செயல்படுகின்றன. அவை உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிவேக மின் தூக்கிகள் ஆகும் மின்சாரம் துண்டிக்கப்படும் போது தானியங்கி மூலம் செயல்படுவதற்காக சக்தி வாய்ந்த மின் பிறப்பாக்கிகள் மின் தூக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் களியாட்டங்களுக்காக இடங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அதன் மூலம் வருமானத்தை பெறுவதற்கும் தேவையான நடடிக்கை எடுக்கப்படுகின்றது. இப்பூமியில் வாழ்வது இலகுவான விடயம் அல்ல இந்த பாரிய கோபுரம் இந்த பூமிக்கு பாரமில்லாமல் பூமியில் வாழும் உயிர்களுக்கு நிழல் தரும் நல்ல சகுனத்தை காண்கின்றேன்.

பிரச்சினையின் பங்குதாரர்கள் அல்லாமல் தீர்வு காண பிரார்த்திக்கும் எண்ணமே முக்கியமானது. எவ்வேளையிலும் உலகை உன்னத இடத்துக்கு கொண்டு வந்தது நல்ல பிரார்த்தனைகள் தான்.

டானியா மோசஸ் 
தமிழில்: வீ.ஆர்.வயலட்  

Comments