டயஸ்போரா அல்ல; புலம்பெயர் இலங்கையர் என்பதே சரியான பதம் | தினகரன் வாரமஞ்சரி

டயஸ்போரா அல்ல; புலம்பெயர் இலங்கையர் என்பதே சரியான பதம்

  • ஐ.தே.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள்  மீண்டும் இணைந்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. அதற்காக ஏனைய கட்சியில்  உள்ளவர்களை கவர்ந்து இழுக்கப் போவதில்லை. எமது கதவுகள் திறந்தே உள்ளன.
  • இணைந்து பணியாற்றவும் ஒத்துழைக்கவும் கட்சிகள் தயாராக இருக்கும் ஒரு நல்ல சூழலை இதற்கு முன்னர் இந்நாட்டில் பார்த்தேயிருக்க முடியாது. நாம் சரியான பாதையில் பயணிப்பதாகவே தெரிகிறது
  • சில அரசு நிறுவனங்களை அரசின் கீழ் வைத்திருக்கவே வேண்டும். சில நிறுவனங்களில் அரசு பங்குகளைக் கொண்டிருக்கும். சிலவற்றை அப்படியே கொடுத்துவிடலாம் தனியார் முதலீட்டாளர்களிடம்.
  • வர்த்தகத்தில் ஈடுபடுவது ஒரு அரசின் வேலை அல்ல. நாட்டை நிர்வகிப்பதும், பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும் பொருளாதார வளர்ச்சிக்கான பொறிமுறைகளை உருவாக்குவதும் மட்டுமே அரசின் பணியாக இருக்க வேண்டும்.
  • கோட்டாபய ராஜபக்ச பொதுவாழ்வில் அல்லது அரசியலில் ஈடுபடுவாரா என்பது எனக்குத் தெரியாது. அப்படிச் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்

தெனியாயவை பிறப்பிடமாகவும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான இந்நாட்டின்  முன்னணி அரசியல்வாதியுமான சாகல கஜேந்திர ரத்னாயக்க இன்றைய உயர்மட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய பங்காற்றி வருபவர். 1999இல் அரசியலுக்கு வந்த அவர் 2015இல் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரம சிங்கவின் பிரதான  அதிகாரியாகவும் சட்ட ஒழுங்கு அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட பாதுகாப்புஆலோசகராகவும் அவரின் பிரதான அதிகாரியாகவும் பணியாற்றி வருபவர். அரசின் உயர்மட்ட தீர்மானங்களில் பங்களிப்பு செய்பவராகவும் குறிப்பாகச் சொன்னால் ஜனாதிபதியின்  இதயமாகவும் செயல்பட்டு வருபவர்.

கடந்த வாரம் அவரை ஜனாதிபதி செயலகத்தின் இரண்டாம் மாடியில் சந்தித்தோம். கொஞ்சமாக சீனி கலந்த தேனீருடன் அவரைச் சந்தித்து உரையாடியபோது மிகத் தெளிவான சொற்களைப் பயன்படுத்தி வெகு இயல்பாவும் நிதானமாகவும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதை வேண்டுமானாலும் கேளுங்கள் ஐந்தரை மணிக்குள் என்றார். ஐந்தரைக்கு அவர் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியிருந்ததால் நான்கு மணிக்கே பேச்சை ஆரம்பித்தோம். எந்தவொரு அமைச்சின் கீழும் தான் பணியாற்றவில்லை என்றும், அரசியல் மற்றும் அரசு விவகாரங்களில் தான் பணியாற்றுவதாகவும் அரசின் பொருளாதாரக் கொள்கை உருவாக்கம், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள், சமீபத்தில் வரவு செலவு திட்ட விவாதங்களில் கலந்துகொண்டமை என்பன என் பணிகளாக இருக்கின்றன என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சாகல ரத்நாயக்க.

இப் பொருளாதார நெருக்கடி அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறது அல்லவா? என்ற முதல் கேள்விக்கு, நான் அப்படி நினைக்கவில்லையே என்றார் சாகல ரத்நாயக்க.

'பாராளுமன்றத்தில் தனியொரு உறுப்பினராக தெரிவான ஒருவரால் இப்போதுதான் நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வரமுடிந்திருக்கிறது. இது ஒரு பெரிய அரசியல் மாற்றம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்கள் அமைதியாக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தருகின்றன. இணைந்து பணியாற்றவும் ஒத்துழைப்புதரவும் தயாரான நிலை இதற்கு முன்னர் இலங்கை அரசியலில் காணப்படாத ஒன்று. யாரும் நாற்காலியை இழுத்து கவிழ்க்க முயலவில்லை என்பது புது விஷயம் அல்லவா? எனவே இதுதான் மக்கள் நலன் பற்றி யோசித்து செயலாற்றுவதற்கான அற்புதமான நேரம் என்றே நான் கருதுகிறேன். இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அரசு சீர்குலைக்காது. அதற்காக எமது அமைச்சர்களும் தீவிரமாக பணியாற்றி வருவதைப் பார்க்க முடிகிறது. நாம் அனைவருமே சரியான பாதையில் இப்போது பயணித்துக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்' என்று பதிலளித்த அவர்,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் தெருக்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் காணாமற்போயின. ஆனால் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்ததாக நான் சொல்ல மாட்டேன். மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புகிறாரே அது மீண்டும் பிரச்சினைகளைக் கிளப்புவதாக அமையாதா? என்ற கேள்வியை எழுப்பினோம்.

"ஆமாம், முதலில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது எனினும் அவர் இந்நாட்டுக் குடிமகன். அந்த வகையில், அரசமைப்பு சட்டத்தின் கீழ் அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர். குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. நான் அவரது பேச்சாளர் அல்ல. எனினும் அவர் பொதுவாழ்வில் அல்லது அரசியலில் ஈடுபடுவாரா என்பது எனக்குத் தெரியாது. அப்படிச் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கிறேன்" என்றதும் அவ்வாறானால் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி, அவர் நாட்டுக்குள் இப்போது வருவது நல்லதல்ல என்பது போன்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருந்தாரே என்று உப கேள்வி ஒன்றைத்தொடுத்தோம்.

"ஆமாம் அப்படிச் சொல்ல காரணம் இருந்தது. அப்போது நாட்டில் உக்கிரநிலை காணப்பட்டது. வீதிகளில் வரிசைகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்ற சம்பவங்களால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஒரு மாதம் பிந்திப் போனது. இச் சூழல் முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்கு உகந்தகாலமாக இருக்கவில்லை. இதனால்தான் ஜனாதிபதி, கோட்டாவின் வருகைக்கு இது உகந்த காலமல்ல என்ற கருத்தை வெளியிட வேண்டியதாயிற்று" என்றொரு விளக்கத்தைத் தந்தார்.

உரையாடல் ரஞ்சன் ராமநாயக்கவின் நிபந்தனையுடனான விடுதலை தொடர்பாகத் திரும்பியது.

"நீதியரசர்களை விமர்சிப்பது போன்ற கருத்துகளை அவர் வெளியிட்டிருந்தார். அது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உட்பட்டது. எனவே அவர் எழுத்துமூல மன்னிப்பைக் கோர வேண்டியிருந்தது. அவர் நிபந்தனைகளுடனான விடுதலையை பெற்றுள்ளார். அவரது சிவில் உரிமைகள் வழங்கப்படும் வரை அவர் அரசியலில் ஈடுபட முடியாது. மன்னிப்புகள் பல ரகமானவை. புண்ணிய தினங்களில் விடுவிக்கப்படுவது ஒரு வகையான மன்னிப்பு. இது நிபந்தனைகளுடன் கூடியது"

அவ்வாறானால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் சிறைசென்ற பொதுபல சேனாவின் தலைவர் ஞானசாரதேரர் நிபந்தனைகளின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுதலை செய்யப்பட்டாரே! என்ற கேள்வியை எழுப்பினோம்.

"ஆமாம்... ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் வெவ்வேறான சிந்தனைகள் வரையறைகள் உள்ளன. அரசமைப்பு சட்டம் நீதித்துறை போன்றவற்றின் மீது வெவ்வேறான பார்வைகள் உள்ளன.

ஒரு ஜனாதிபதி பொறுப்பு கூறுபவராக இருக்க வேண்டும்" என்றார் சாகல ரத்நாயக்க பதிலுக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்படப் போவதாகக் கேள்விப்பட்டோமே!

"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்பது முப்படைகளின் ஆலோசகர் என்று பொருள்படாது. பாதுகாப்பு என்பது யுத்தத்துடன் மட்டும் தொடர்பு படாது. தேசிய ஒருமைப்பாடு, உணவு பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சக்திவளப் பாதுகாப்பு. சுகாதார பாதுகாப்பு என பாதுகாப்பு என்பது பல்வகைப்படும். இவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில். அதற்கான செயலகம் தனியாக நிறுவப்படவுள்ளது. ஏனெனில் பாதுகாப்பு தொடர்பான இன்றைய சட்ட ஏற்பாடுகள் பழைமையானவை"

டயஸ்போராவுக்கென ஒரு தனி அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக கேள்விப்படுகிறோம்...

ஆம், ஆனால் அதை டயஸ்போரா அலுவலகம் என நாம் அழைப்பதில்லை. புலம்பெயர் இலங்கையர் (Overseas Srilankan) என்பது அதன் பெயர். டயஸ்போரா என்ற ஆங்கில வார்த்தை ஒரு நாட்டு குடிமக்கள் மற்றொரு நாட்டில் வாழ்வதைக் குறிக்கிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் மேற்குலகில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன. அவர்களைக் குறிக்கும் வகையில் டயஸ்போரா என்ற பதம் உபயோகிக்கப்பட்டதால் அது 'கெட்ட' வார்த்தையானது. அதனால் தான் அப்பதத்தை நீக்கினோம். நாம் இப்போது புலம் பெயர் அமைப்புகளுடன் பேசி வருகிறோம். எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் அது பற்றி வெளிப்படையாக பேசக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன் என்று எமக்கு தகவல்களைத் தந்தார் சாகல ரத்நாயக்க.

சரி, தமிழ்க்கட்சிகளை சர்வகட்சி அரசுக்கு அழைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எவ்வாறுள்ளன?

"நாம் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம். எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் தடைகளைக் கடந்து பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியும் எனக் கருதுபவரே எமது ஜனாதிபதி. இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதை எவரும் மறந்துவிடலாகாது. இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெற்று முடிந்து அடுத்த வாரமளவில் புதிய அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் நியமனங்கள் நடைபெறலாம் என எதிர்பார்த்துள்ளேன்"

அரசாங்கம் அரச நிறுவனங்களில் காணப்படும் ஊழல், மோசடி, திறமையின்மை என்பனவற்றை ஒழிக்க வேண்டும்; வினைத்திறன் கொண்ட அரச சேவையை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கி பயணிப்பதாகவும் அதன் பொருட்டு ஒரு பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க கூறுகிறார்.

"ங்கன் விமான சேவையை எடுத்துக் கொள்ளுங்கள் . பில்லியன் கணக்கில் நஷ்டத்தைத்தான் அது சம்பாதித்துத் தந்திருக்கிறது. சில அரச நிறுவனங்களை நாம் முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சில நிறுவனங்களை முழுமையாகத் தனியார் வசம் கொடுத்து விடலாம். மேலும் சில அரச நிறுவனங்களில் அரசாங்கமும் பங்காளிகளாக விளங்க முடியும். எனவே நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மீளமைத்து செயல்திறன் கொண்ட நிறுவனங்களாக மாற்றி அமைப்பது மிக முக்கியம். இது தொடர்பான வழிகாட்டல்கள் நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரில் உருவாக்கப்பட உள்ளது. உண்மையைச் சொல்வதானால் ஒரு அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது நாட்டை நிர்வகிப்பதும் பிரச்சினைகளைத் தீர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கான பொறிமுறைகளை உருவாக்கித் தருவதே அரசின் பணியாக இருக்க வேண்டும். அதைத்தான் செய்யப் போகிறோம்" என்று அவர் விரிவாகப் பேசினார்.

நிதியறிக்கையில் 2048ம் ஆண்டில் இலங்கை முன்னேறிய நாடாகத் திகழும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாகக் கேட்டோம்.

ஆமாம், அதை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவர வேண்டும். வரிவிதிப்பை தொடர வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் சில வருடங்கள் சிரமமாகத்தான் இருக்கும். அதன் பின்னர் வளர்ச்சியை உணரக்கூடியதாக இருக்கும். சர்வதேச நாணய நிதியம் தரவுள்ள கடன் உதவிகள் அல்ல இங்கே முக்கியம். அது இந்நாட்டில் ஏற்படுத்தவுள்ள புதிய கட்டமைப்பே இங்கே முக்கியம் என்றவரிடம்,

அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு அளவுக்கு அதிகமான சேவையாளர்கள் பதவிக்கு வரும் அரசுகளினால் நியமிக்கப்பட்டதே காரணம். அது இப்போது உச்சத்துக்கு வந்துள்ளது. என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டோம். அதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதற்காகத்தான் விரும்பியவர்கள் ஐந்து வருட விடுப்பில் வெளிநாடு சென்று உழைக்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். 65வயது என்றிருந்த ஓய்வு வயதை 60எனக்குறைத்துள்ளோம். இதன் மூலம் அறுபது வயதானோர் வெளியேற, இளைஞர்களுக்கு அரச உத்தியோக வாய்ப்பு கிட்டும். நாம் தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக தொழில் வாய்பபுகளை வழங்கப்போவதில்லை.

அரச தொழிலில் இருப்பவர்களை முகாமைத்துவம் செய்து அவர்களின் உழைப்பைப் பெற முயற்சி செய்வோம். இந்த ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் மேலதிக செயலாளர்கள் கூட பஸ்சில்தான் வந்து போகிறார்கள். எனவே இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்னார் அவர்.

ஐ.தே.கவின் 76அவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஆறாம் திகதி நடக்கப்போவது பற்றியும் அது பிரிந்த ஐ.தே.கவை ஒன்றிணைக்குமா? என்றும் கேட்டோம்.

மிகுந்த புன்னகையுடன் பதிலளித்த அவர், எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் தாய்க் கட்சியுடன் இணைந்து கொள்வதில் தடையே இல்லை. ஆனால் நாங்கள் எந்தக் கட்சியில் இருந்தும் உறுப்பினர்களை கவர்ந்து இழுக்க மாட்டோம்.

விரும்பியோர் வரலாம் என்பதே எமது கொள்கை என்றவரிடம், ஏதாவது நடக்குமா? என்று கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்களேன் என்று கூறி முடித்துக் கொண்டார் தன் பளிச் புன்னகையுடன்.

உரையாடியவர்: - அருள் சத்தியநாதன்
புகைப்படங்கள் - துஷ்மந்த மாயாதுன்ன

Comments