நான்கு நூற்றாண்டுகால அடிமைத்தளையிலிருந்து இலங்கையை விடுவித்த ஐக்கிய தேசிய கட்சி | தினகரன் வாரமஞ்சரி

நான்கு நூற்றாண்டுகால அடிமைத்தளையிலிருந்து இலங்கையை விடுவித்த ஐக்கிய தேசிய கட்சி

1993ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட அனுரபண்டார நாயக்க 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி கூட்டத்தில் நிகழ்த்திய விசேட உரையொன்று உண்டு. அது பின்வருமாறு "எனது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஏதேனும் எஞ்சியிருந்தால் அது ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே. இன்று நான் அந்த இடத்திலேயே இருக்கின்றேன். "ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய கடந்த கால முன்னோடிகளின் இரண்டாவது பரம்பரையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலேயே அனுர அவ்வாறு கூறினார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னோடிகள் அனைவரும் இவ்வுலகை விட்டு விடை பெற்றுள்ளார்கள். இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே உள்ளது. அவர் கட்சியின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை மூன்றாவது பரம்பரையினரிடம் ஒப்படைப்பதற்காக தனது கோட்பாடுகளை செயல்படுத்தி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பிக்க அன்றிருந்த கட்சிகள் மற்றும் அதற்கு சமனான அனைத்து அரசியல், மற்றும் தேசிய அமைப்புகள் தங்களுடைய சர்ச்சைகளை புறத்தள்ளியே ஒன்றாக இணைந்தன.  

அதற்காக அரசியலில் ஈடுபடாத அன்று இந்நாட்டில் காணப்பட்ட முக்கியமான பௌத்த அமைப்பான பரம வித்யார்த்த பௌத்த சங்கம், கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம், அகில இலங்கை பௌத்த பொது சம்மேளனம் ஆகியவற்றின் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியமை விசேட அம்சமாகும். அவ்வாறு இணைந்த தலைவர்கள் நானூறு வருடங்களாக ஏகாதிபத்தியவாதிகளின் அடிமைத்தனத்தில் இருந்த நம் தாய் நாட்டை அடிமை தளையில் இருந்து விடுவித்து சுதந்திர நாடாக உருவாக்குவதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள். கடந்த நூற்றாண்டுகளில் இருந்த தேசியத் தலைவர்களின் முன்னிலைப்படுத்தலால் உருவான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று 76ஆண்டுகள் நிறைவடைவது நாட்டிற்கும் இனத்திற்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.  

ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்வைத்த கொள்கையின் தொனிப்பொருள் ' குளமும் தாது கோபுரமும் கிராமமும் விஹாரையும்' என்பதாகும். அக் கொள்கைக்கு அமைய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்,பறங்கியர், மலேயர் என அனைத்து மக்களும் தாங்கள் கொண்டிருந்த அபிப்பிராய பேதங்களை மறந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார்கள்.  

1931ஆம் ஆண்டு முதலாவது அரச சபையின் உறுப்பினராக போட்டியின்றி தெரிவான டி.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த புதிய விவசாயக் குடியேற்றத் திட்டம் தோட்டப் பயிர்ச்செய்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு புத்துயிர்ப்பை ஏற்படுத்தியது. அதன் மூலம் மின்னேரிய, காகம, பக்கமூன, கட்டியாவ போன்ற புதிய விவசாயக் குடியேற்றங்கள் உருவானதோடு 1935தொடக்கம் 1985வரையான 50ஆண்டுகளில் இந்நாட்டில் நெற் பயிர்ச் செய்கை மேற்கொண்ட காணிகளின் அளவு 15லட்சமாகும். அதன் மூலம் 40லட்சத்துக்கு அதிகமானோர் பெற்ற பலன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம், மூன்றாவதாக ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டம் என்பன இந்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் நன்மையை பெற்றுக் கொடுத்தன. இவ்வாறான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் இந்நாட்டை பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி பாரிய முயற்சிகளை எடுத்தது. இந்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு பெரும் சக்தியாக அமைந்தது ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பம் மற்றும் விரிவாக்கமாகும்.  

1946ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் திகதி கொழும்பு பார்ம் கோர்ட் மாளிகையில் ஒன்று கூடிய இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட சிங்கள பொது சபை, இலங்கை சோனகர் சங்கம், மலேயர் தேசிய சங்கம், பறங்கியர் முன்னணி, தமிழ் சங்கம், முஸ்லிம் முன்னணி, ஐரோப்பிய சங்கம், ஹெல கூட்டமைப்பின் சில பிரிவுகள் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை பல தேசிய இலக்குகளை முன்வைத்து உருவாக்கின.  

இலங்கைக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதே அதன் முதலாவது இலக்காகும். இங்கு கட்சியின் தலைவராக டி. எஸ் சேனநாயக்கவும் செயலாளராக எச்.டபிள்யூ. அமரசூரியவும், இணைப்பொருளாளர்களாக ஸ்ரீமத் ராசிக் பரீத் மற்றும் ஜே ஆர் ஜெயவர்தனவும் தெரிவு செய்யப்பட்டார்கள். கட்சியின் நிறமாக பச்சை நிறத்தையும மிகப்பெரிய விலங்கான யானையை சின்னமாகவும் டி. எஸ். சேனநாயக்கவின் விருப்பத்தின்படி தெரிவு செய்தார்கள்.  

1947இல் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பாரிய பணியை மேற்கொண்ட தேரரான வணக்கத்திற்குரிய ராஜகீய பண்டித்த ஹேன்பிடகெதர தேரர் பல சந்தர்ப்பங்களில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.  

ஆனால் டி எஸ், ஹேன்பிடகேதர தேரரின் கோரிக்கைக்கு உடன்படாததால் அவர் டி எஸ் உடன் மனஸ்தாபம் அடைந்தார். இவ் வேளையில் உடகென்தாவல ஸ்ரீ சரணங்கர தேரர் இடதுசாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட மார்க்சியவாத நடவடிக்கைகளையும் அனுமதிக்காத டி எஸ் சேனநாயக்க எதிர்கால பிக்குகள் மார்க்சியவாத ,கமயூனிஸ்ட் வாதத்தின் ஊடே பயணித்து புத்தசாசனத்தை அழிவுக்கு இட்டுச் செல்வார்கள் என கூறினார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அனைத்து சிங்களத் தலைவர்களும் பௌத்த கொள்கையை மதிக்கும் பௌத்தர்கள் ஆவார். அனைத்து இனங்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எவ்வித விவாதமும் இன்றி நிழலை அளிக்கும் பாரிய விருட்சமாக ஐக்கிய தேசியக் கட்சியை சர்வதேசம் ஏற்றுக்கொண்டது. புதிய உலகை காணும் தேசியத்தை மதிக்கும் கட்சியை சில காலத்துக்குப் பின்னர் கட்சியில் இருந்தவர்களே புரிந்து கொள்ளாததது நாட்டிற்கு பெரும் துரதிர்ஷ்டமாகும். 

சிங்கள மொழியை அரச கரும மொழியாக்கியதன் மூலம் இந்நாட்டில் ஏற்பட்ட தேசிய பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். அன்று ஆங்கில மொழிக்கு இருந்த இடம் மேலும் அதிகரித்து ஆங்கிலம் தெரியாத சிங்களவர்கள் சர்வதேசத்திலும் நாட்டிலும் ஒதுக்கப்படும் நிலைமைக்கு மாறியுள்ளார்கள். கடந்த நூற்றாண்டில் 50களில் சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்ற பிள்ளைகள் ஆங்கில மொழியை பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருந்தார்கள். அது 60களின் பின்னர் சிங்களம் மாத்திரம் என்னும் தேசிய கொள்கையால் அழிந்து போனது.  

நாட்டில் தோன்றிய இடதுசாரி கட்சிகளைத் தவிர ஏனைய அனைத்து கட்சிகளின் பலவீனமான புள்ளியாக ஐக்கிய தேசியக் கட்சி இருந்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் முதலாவது தேர்தலை 1947ஆம் ஆண்டு நடத்த முடிவானது. அதன்படி கட்சியின் ஆரம்பத் தலைவர் டி.எஸ் சேனாநாயக்க, எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல, எச். டபிள்யூ அமரசூரிய, ஸ்ரீமத் ராசிக் பரீத், டி.பி. ஜாயா, டட்லி சேனாநாயக்க, டி.ஏ.ராஜபக்ச, ஏ ரத்னாநாயக்க, ஈ.ஏ.நுகவெல, எம்.டி பண்டா, ஜே.ஆர். ஐயவர்தன, ஆர்.ஜி. சேனாநாயக்க, ஆகியோர் இலங்கையின் பல மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்து பல தொகுதிகளில் போட்டியிட்டார்கள். 

எச்.டபிள்யூ. அமரசூரிய, கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கர ஆகியோரைத் தவிர ஏனையோர் அமைச்சரவைக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். உறுப்பினர்கள் போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் புதிய அரசில் மந்திரிகளாகவும் அமைச்சர்களாகவும் பதவி பிரமாணம் செய்து புதிய பணிகளில் நாட்டுக்காக தமது கடமையை பெரும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினார்கள். அரசு அமைக்கப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் ஆங்கிலேய அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்க உடன்பட்டதால் 1948பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை சுதந்திர இறைமைமையான நாடாகியது. இலங்கை முழுவதையும் பெரும் பொறுப்புடன் ஆட்சி செய்ய ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்தது. 

ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்ப காலம் தொட்டே தேசிய,மத ஒற்றுமையை எதிர்பார்த்த கட்சியாகும். சுதந்திரத்துக்கு பின்னர் தற்போது வரை நாட்டை ஆண்டது ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது அமைச்சரவை சபையை பிரதிநிதித்துவம் செய்தவர்களோ அவர்களின் பிள்ளைகளோ ஆவார்கள். சிலர் அந்த அரசின் அமைச்சர்களின் பிள்ளைகள் ஆவார்கள்.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காபண்டாரநாயக்கவின் தந்தையார் மாத்திரமல்ல தாயார் சிறிமாவோ அம்மையாரும் 1947பொது தேர்தலில் தங்களது வாக்குகளை பாவித்தது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக ஆகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தந்தையார் 1947ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெலியத்த தேர்தல் பிரிவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அது எமது கட்சிக்கு கிடைத்த கடந்த கால கௌரவமாகும்.

இன்று எமது நாட்டில் காணப்படுவதும் 1948இல் ஐக்கிய தேசியக் கட்சி உருவாகிய போது காணப்பட்ட அரசியல் சூழ்நிலையின் மற்றுமொரு பக்கமாகும். அன்று ஜனநாயக அரசியல் சுதந்திரத்தை வெற்றி பெறுவதற்கு அனைவரும் இணைய வேண்டியிருந்தது. இன்றும் நிலைமை அவ்வாறேயுள்ளது. 

இன்று நாட்டில் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும் போராட்டமே காணப்படுகிறது. அதற்காக இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமை வகிக்கின்றது. பிரதான பங்காளி கட்சியான பொதுஜன எக்சத் பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில தலைவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சிலரும் சிங்கள, தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அரசுடன் முன்னணியில் இருப்பது புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்காகும். அதற்கு ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். அது நாட்டுக்காக செய்யும் பெரும் பணியாகும். இந்நாட்டில் உண்மையான சரித்திரம் பற்றிய அறிவில்லாத வெற்று மனிதர்கள் இந்நாட்டில் 75வருட காலத்தில் இடம்பெற்ற அழிவு பற்றி புலம்புகின்றார்கள். இது தற்போதைய நிலைமையை மூடி மறைக்கும் செயலாகும்.   சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் நாட்டிற்கு சாபக்கேடு என்றால் 74ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஏகாதிபத்திய ஆட்சி செழிப்பான காலம் போன்றது என்ற அர்த்தமாகும். ஆனால் சுதந்திரத்துக்கு முன் சுமார் 400வருடங்கள் இந்நாட்டில் இடம் பெற்ற காலனித்துவ செயல்பாடுகளினால் தான் ஒரு தேசமாக எனது நாட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது என்பதை மறைக்கின்றனர். அத்துடன் அது பற்றி கருதுவதுமில்லை.ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் தேசிய தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்தல், சொத்துக்களை அரசுடமையாக்கல், சிறையில் அடைத்தல், நாடு கடத்தல் என்பன போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. சில நாட்களிலேயே 1948மாத்தளை புரட்சியின் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேரர்களின் விகாரைகளில் காணப்பட்ட புனித பேழைகளையும் வெள்ளையர்கள் ஏலமிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டதாக இந்த 74வருட சாபக்கேட்டை எழுதுபவர்கள், கதைப்பவர்கள் அறியாதிருக்கிறார்கள் என்பது எமக்கு புரிகின்றது.  

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவசாயிகளை பலப்படுத்தல், புத்த மதத்தை மற்றும் புத்தசாசனத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தியது உண்மையாகும். இன்று எமது கட்சி 76ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டை நடத்துவது நாடு பெரும் பொருளாதார பிரச்சினையில் மூழ்கியுள்ள சந்தர்ப்பத்திலாகும். அதிலிருந்து நாட்டையும் இனத்தையும் மீட்பது காலத்தின் அவசியமாகும். அதனை நாம் நன்றாக புரிந்து கொண்டுள்ளோம். யாரும் எம்மை வெறுப்பவர்களாக, கோபம் கொள்பவர்களாக, எம்மை தோல்வியடைய செய்ப நடவடிக்கை எடுப்பவர்களாக எண்ணாமல் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் பேதமின்றி மீண்டும் இணைவோம். புதிய இலங்கையை உருவாக்குவோம். 

1994ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது கட்சிக்கு இந்த நாட்டை ஆள்வதற்கான பூரணமான அதிகாரம் கிடைக்கவில்லை. அரசியலமைப்பு அதிகாரம் பல சந்தர்ப்பங்களில் கிடைத்தாலும் நிறைவேற்று அதிகாரம் எமக்கு எதிரானவர்களுக்கோ 

எமக்கு துரோகம் செய்தவர்களுக்கோ தான் கிடைத்தது. 28வருட காலமாக நிறைவேற்று அதிகாரம் அற்ற நாம் ஒரு கட்சியாக நடவடிக்கையில் ஈடுபட்டோம். இன்று எமது கட்சியின் தலைவருக்கு நிறைவேற்று அதிகாரம் கிடைத்துள்ளது. இந்நாட்டில் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் கிடைக்காத நிறைவேற்று அரச அதிகாரம், அதிகார பரிமாற்றத்தில் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள பொறுப்பு என்னவென்றால் ,கட்சியைப் பற்றி இல்லாமல் தமது தாய் நாட்டை மக்களைப் பற்றி எண்ணுவதாகும். அவ்வாறில்லாவிட்டால் எம் அனைவருக்கும் மீண்டும் ஏழ்மையின் பிடியில் சிக்கி அழிந்துள்ள நாட்டிலேயே வாழ நேரிடும். அதிலிருந்து நாட்டை மீட்கும் பாரிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இரவின் இருட்டான வேளை இரவு 11மணி தொடக்கம் 12மணி வரையான காலமாகும். அக்காலம் கடந்து போனவுடன் மெல்ல மெல்ல அதிகாலை வேலை உதயமாகும். அதன் பின்னர் பூரணமான சூரிய ஒளியால் உலகம் மிளிரும். இன்று நாம் ஒரு நாடாக இருண்ட யுகத்தை கடக்கின்றோம். இதனை பொறுமையுடன் மற்றும் பொறுப்புடனும் திட்டமிட்டும் கடந்து சென்றால் ஒளி நிறைந்த அதிகாலையை அடையாலாம். அதற்காக அனைவரும் இணைய வேண்டும். அதனை நிறைவேற்ற ஐக்கிய தேசிய கட்சி என்னும் சூரிய ஒளியால் முடியும். 

தமிழில் வீ.ஆர்.வயலட்  

Comments