கிழக்கிலங்கைப் பிரதேசத்தைக் களமாக கொண்ட வ. அ. இராசரத்தினம் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கிலங்கைப் பிரதேசத்தைக் களமாக கொண்ட வ. அ. இராசரத்தினம்

“ஆரம்ப காலந்தொட்டே ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ள பொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் 1955வரை எழுந்ததாகத் தெரியவில்லை. மூதூரைச் சார்ந்த வ. அ. இராசரத்தினம் 1955இல் ஈழகேசரியில் எழுதிய கொழுகொம்பு நாவலே இவ்வகையில் முதலாவதாகக் கிடைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஆய்வு நூலை எழுதிய கலாநிதி நா. சுப்பிரமணியம் (பக்கம் : 154) கொழுகொம்பு நாவலின் கதையம்சம் பின்வருமாறு அமைந்துள்ளது: 

மூதூர் அம்பலவாணரின் மகனான நடராஜன் என்னும் கொழுகொம்பும் முறைப் பெண்ணான கனகம் என்னும் இளங்கொடியும் தூய அன்புகொண்டு ஒன்றையொன்று தழுவத் துடித்த போது, ஒரு சிறு சம்பவத்தினால் இரு குடும்பத் தலைவர்களது நான்| முளைத்தெழுந்து, அந்தஸ்துப் போராட்டத்தை உண்டாக்கிப் பிளவை ஏற்படுத்துகிறது. பிளவைப் பெரிதாக்கும் திருப்பணி|யில் ஈடுபட்ட கிராமத் தொண்டர் சிலரால் அது பெரும் பிளவாகிக் காதலர்களைப் பிரித்து விடுகிறது. நடராஜன் தன் சமூகக் கண்காணாத இடத்திலே காதல்வாழ்வு வாழக் கனகத்தை அழைத்தபோது தமிழ்க்குலப் பெண்மை அவளைத் தடுக்கிறது. சந்தர்ப்பமும் அவன் மனதிற் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஆதனால் தன்னையும் ஊரையும் உறவையும் வெறுத்துவிட்ட அவன் மலைநாட்டுத் தோட்டமொன்றில் புகலடைந்து அங்கே துணையற்று வாடுங் கொடியாகக் கிடந்த பிலோமினாவுக்குக் கொழுகொம்பு ஆகிறான். அத்தளர்கொடி தான்படரும் அக் கொழுகொம்பு காலாகாலமாகப் பிறிதொரு இளங்கொடிக்குச் சொந்தமானது என அறிகிறது. கொழுகொம்பை உரிய இளங்கொடிக்கே சேர்த்துவிட எண்ணிய பிலோமினா மனநிறைவுடன் தியாகத்தீயிற் குதிக்கிறாள் - இதுவே விளக்கமான கதைக்கரு 

கதை மகாவலியின் அரவணைப்பிலே வளங்கொழிக்கும் மூதூரிலே பிறந்து, கல்முனையையும் கொழும்பையுந் தொட்டு மலைநாடு சென்று முடிகிறது. இப்பகைப்புலங்கள் கதையைச் சுவை குன்றாமல் நடத்திச் செல்கின்றன. இப்பகைப்புலங்களிலே அடக்கமும் அதனோடு அறிவை வென்று மேலோங்கும் உணர்ச்சித்துடிப்பும் காதலும் அதனோடு பிறர் துயர்கண்டு இரங்கும் பண்பும் ஆகிய இவைகள் கொண்டு உருவான நடராஜன், அவன்மீது காதல் கொண்டு வாடித்தளர்ந்த போதும் பண்பு தவறாத கனகம், அந்தஸ்து ஆசையும் பிள்ளைப் பாசமும் போட்டியிட, சிலசமயம் நிமிர்ந்தும் சிலசமயம் தளர்ந்தும் நடக்கும் அம்பலவாணர் அவரோடு போட்டியிடும் கனகத்தின் தந்தை கந்தையாபிள்ளை, இருவருக்கும் பகைமையூட்டி வேடிக்கை பார்க்கும் பெருந்தொண்டர்| சண்முகம்பிள்ளை தியாகச்சுடரான பிலோமினா, இன்னும் பலர் உலாவிக் கதையை வளர்க்கினறனர். அவர்களது பார்வையிலே, பேச்சிலே செயலிலே நடத்தையிலே உணர்ச்சி இழையோடிக் கதைக்கு உயிர்க்களை ஊட்டுகின்றது (அணிந்துரையில் சு.வே.) 

05.-06.-1925இல் வஸ்தியாம்பிள்ளை அந்தோனியா தம்பதிக்கு மகனாகப் பிறந்த வ.அ., தாமரைவில் உள்ள றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்விகற்றவர். 1946இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர். 1952இல் மேரிலில்லி திரேசா என்பவரைத் திருமணம் புரிந்தார். 

 இவர், சிறுகதை கவிதை, நாவல் மொழிபெயர்ப்பு, விமர்சனம், கட்டுரை ஆகிய துறைகளில் தடம் பதித்தவர். 

“நான் மூதூர் மண்ணின் மகன் என்ற உணர்வே என் எழுத்துக்களின் அடிநாதம் இம்மண்ணின் வனப்பையும் வளத்தையும் நேசிப்பதே என் யோகம். இம்மண்ணின் மக்களது வாழ்வை இலக்கியமாக்குவதே என் நோன்பு நான் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்தே இத்தத்துவத்தை இயற்றிவருகிறேன் என்று குறிபிடும் வ. அ இராசரத்தினத்தின் முதலாவது சிறுகதை மழையால் இழந்த காதல்| 1948ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இருப்பினும் இவரது அனேகமான படைப்புகள் ஈழகேசரியிலேயே வெளியாகின. 

ஈழநாட்டுச் சிறுகதைத் தொகுதியொன்று வெளியிடும் யாவரும் எந்தச் சிறுகதையை விட்டுவிட்டாலும் இவரது தோணி சிறுகதையை விட்டுவிட்டால் அது பூரணமாகாது என்று குறிப்பிடுள்ளார் பிரபல விமர்சகர் கனக செந்நிநாதன்.  

மேலும் ஈழத்துச் சிறுகதையின் மூலவர் என்றும் வானா ஆனாவால் என் இலக்கியக் குருநாதர் என்றும் போற்றப்படும் இலங்கையர்கோன் தோணி சிறுகதையை வாசித்துவிட்டு “ராசா நீர் என்னை வென்று விட்டீர்” என வெகுவாகப் பாரராட்டியது, தோணி சிறுகதைத் தொகுப்பக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததைவிட தமிழ்ஒளி என்று பட்டமளித்த கௌரவித்ததைவிட மிக மேலான மகிழ்ச்சியைத்தந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் வ. அ. 

இவரது பவளவிழா மூதூரில் 5-.08.-2000அன்று இடம்பெற்றது. ஈழத்து நவீன இலக்கியவாதியொருவருக்கு எடுக்கப்பட்ட முதலாவது பவளவிழா என்ற சிறப்பினை அவ்விழா பெற்றுக்கொண்டது. அதற்கு முன்னர் பவளவிழா வயதினை எய்திய எவரும் விழாக்கொண்டாடியதாக வரலாறில்லை.  

வ.அ.வின் பவளவிழாவில் சிறப்பு அதிதியாக கலந்து உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரிடம் ஒரு விரிவான நேர்காணலைப் பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணமே எனது மனதில் மேலோங்கியிருந்தது. 

விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ‘இலக்கியப் பூந்துணர்| என்ற சிறப்புமலரும் வெளியிடப்பட்டது. மக்கள் கூட்டம் கலைந்து மதியத்தின்பின் வ.அ.வுடன் சாவதானமாக அமர்ந்து நான்கு மணிநேரம் கலந்துரையாடினேன்.  

‘ஈழத்துச் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர்கோனை நீங்கள் குருவாக வரித்துக்கொண்டீர்கள். எப்படி அது சாத்தியமானது” என உரையாடலைத் தொடங்கினேன்.  

'இலங்கையர்கோன் மூதூரில் டி.ஆர்.ஓ.வாக இருந்த காலத்தில் தினமும் இரவு நேரங்களில் அவரிடம் சென்று உரையாடுவேன். அவர் ஒரு பாலபண்டிதர். அவர் எனக்குச் சொன்ன முக்கியமான அறிவுரை, 'ஆனந்தவிகடன், கல்கியை மட்டும் படித்துவிட்டு சிறுகதை எழுதக்கூடாது. பழந்தமிழ் இலக்கியங்களைக் கட்டாயம் படிக்கவேண்டும். படித்துவிட்டுத்தான் புது இலக்கியம் சிருஷ்டிக்கவேண்டும். ஐங்குறுநூறில் உள்ள ஐந்நூறு பாடல்களும் ஐந்நூறு சிறுகதைகள். இலங்கையர்கோன் அவர்களின் முதற் குரு உபதேசமே இதுதான்!" என்றார். 

உலகத்தரமான புகழ்பெற்ற அவரது தோணி சிறுகதை தோன்றிய பின்னணி பற்றிக் கேட்டபொழுது, 'நான் கடலோரத்தில் பிறந்தவன். எனது முன்னோர் திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையில் வத்தை ஓடியவர்கள். சிறுவயதில் மத்தியானம் பாடசாலை முடிந்தபின் நானும் எனது மைத்துனனும் கடற்கரைக்கு வந்துவிடுவோம் மூன்று மணிபோல திருகோணமலையிலிருந்து மூதூரை நோக்கி வத்தைகள் வரும் அவைகளில் ஒரு சாண் அளவில் பாய்மரம் தெரியும்போதே நானும் எனது மைத்துனன் செல்லனும் அது எங்களடைய அப்பாவின் வத்தை, இது மாமாவின் வத்தை என்றெல்லாம் கண்டு பிடித்துவிடுவோம். வத்தைகள் வரும். அதிகமான நேரங்களில் நாங்கள் கடற்கரையிலேதான் தங்குவோம். கடற்கரையில் பிறந்த நான், கடற்கரையை அனுபவித்த நான் கடலோரக்கதைகளை எழுதும்போது அதிக கலைத்துவம் மிளிர்கிறது. மூதூரை பற்றிக் கதைகள் வந்த அளவுக்கு இலங்கையில் வேறெந்த ஊரைப்பற்றியும் அத்தனை கதைகள் வெளிவரவில்லை." என்றார் 

வ.அ. மொறட்டுவாவில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் பிரெஞ்சு, ஆங்கில, ரஷ்ய மொழிகளிலான முப்பது மொழிபெயர்ப்புக் கதைகளை எழுதியுள்ளார். அதுபற்றிக் கேட்டபோது, 'இந்த மொழிபெயர்ப்புகள் என்னை வாசிக்கத் தூண்டின. உலக இலக்கியங்களை எனக்குத் தெரியப்படுத்தின. இப்படித்தான் நானும் எழுதவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தின" என்றார். 

 இவரது நூல்களாக, துறைக்காரன் (நாவல்) கொழுகொம்பு (நாவல்) கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்) ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (குறுநாவல்) ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது(நாவல்) தோணி (சிறுகதைத் தொகுதி) பூவரசம்பூ (மொழிபெயர்ப்புக் கவிதை) மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்), திருக்கரசைப்புராணம் இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்,) என்பன வெளிவந்துள்ளன.  

இவர் ஈழநாகன், கீழைக்கரை தேநேயப்பாவாணன், வியாகேச தேசிகர் ஆகிய புனை பெயர்களில் எழுதியுள்ளார்  

இவரது தோணி (சிறுகதைத் தொகுதி), மண்ணிற் சமைந்த மனிதர்கள் (நாவல்) ஆகியன இலங்கை தேசிய சாகித்திய விருதுபெற்றவை.  

தோணி சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் வ.அ. பின்வருமாறு எழுதியுள்ளார். “தேசிய இலக்கியம், மண்வளம், யதார்த்தம். என்ற கோஷங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் எழுப்புவதற்கு முன்னரே அக்கோஷங்களுக்கு இலக்கணமான கதைகளை நான் எழுதினேன். எந்தக் கோஷத்தினரோடும் ‘எடுபட நான் விரும்பவில்லை. ஏனென்றால் என்னை ஈழத்துப் பூதந்தேவனாரின் தம்பி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்| 

வ.அ. இராசரத்தினம் 22-.02-.2001 அன்று அமரரானார். 

Comments