இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரம் போக்குவது அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரம் போக்குவது அவசியம்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் பல தசாப்த காலமாக அகதிகளாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை மீண்டும் தாயகத்துக்கே திருப்பி அழைப்பதற்கான எண்ணம் இலங்கை அரசாங்க மட்டத்தில் தோன்றியிருப்பதை சமீப தினங்களாக அறிந்து கொள்ள முடிகின்றது. அரசாங்க முக்கியஸ்தர்கள் சிலர் மாத்திரமன்றி, வடமாகாண ஆளுநரான ஜீவன் தியாகராஜாவும் இவ்விடயம் தொடர்பாக அண்மையில் அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடிய இனவன்செயலுடன் வடக்குத் தமிழ்மக்கள் தமிழகத்துக்குப் புலம்பெயர்வது ஆரம்பமாகியது. அதன் பின்னர் இலங்கையில் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு யுத்தம் காரணமாக மேலும் ஏராளமான தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு படகுகளில் இடம்பெயர்ந்தனர்.   தமிழ்நாட்டுத் தகவல்களின்படி அங்கே இலங்கைத் தமிழர்கள் சுமார் 58ஆயிரம் பேர் அகதிகளாக வாழ்வதாக தெரியவருகின்றது. ஆனால் 1983இலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறையும் அங்கே உருவாகி விட்டதனால், தமிழகத்திலுள்ள மொத்த இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமென்றே நம்பப்படுகின்றது.

இவர்களில் சுமார் மூவாயிரம் பேர் இலங்கை திரும்பியிருந்தனர். ஆனால் தாயகத்தில் அவர்கள் எதிர்பார்த்தவாறு வாழ்வதற்கான சூழலும், வசதிவாய்ப்புகளும் அமையவில்லை. எனவே அவர்களில் பலர் மீண்டும் தமிழகத்துக்கே அகதிகளாகத் திரும்பி விட்டனர்.

தாயகத்தில் உரிய இருப்பிடமின்றி, வறுமையில் வாழ்வதைப் பார்க்கிலும் அகதிகளாக தமிழ்நாட்டில் வாழ்வதே உத்தமமானதென அவர்கள் கருதுகின்றனர்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன்கள் தொடர்பாக தமிழகத்தின் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண்பிக்கின்ற அக்கறையும் ஆதரவும் போற்றுதற்குரியதாகும். அகதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள், புனர்வாழ்வு, தொழில்வாய்ப்பு என்றெல்லாம் சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழகத்துக்கு நன்றி  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு உள்ளது.

ஆனாலும் அனைத்துக்கும் அப்பால் ‘அகதிகள்’ என்ற நாமத்துடன் எத்தனை காலம்தான் அவர்கள் தமிழகத்தில் வாழ்வது என்பதுதான் மனநெருடலுக்குரிய வினா ஆகும். தாயகம் மீதான ஏக்கம் அவர்களுக்கு உள்ளது. அவர்களில் பலர் மீண்டும் இலங்கை திரும்பி, உரிய வாழ்வாதாரத்துடன் நிம்மதியாக வாழவே விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வசதிவாய்ப்புகள் இல்லையென்பதே உண்மை.

அவர்களது முன்னைய இருப்பிடங்கள் அடையாளமே இல்லாமல் காடு மண்டியும், மக்கள் நடமாட்டமின்றியும் காணப்படுகின்றன. அடிப்படை வசதிகளற்ற அவ்விடத்தில் அவர்கள் எவ்வாறு மீளக்குடியேறி வாழ்வது? அன்றாட சீவனோபாயத்துக்கு அவர்கள் எங்கே செல்வர்? அம்மக்களின் பூர்வீக இருப்பிடங்கள் ஏராளமானவை அபகரிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் அவர்கள் மீளக்குடியேறுவதென்பது சாத்தியமில்லை!

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் எமது நாட்டு மக்களேயாவர். அவர்களது வேதனைகள் அதிகம். அவர்களை மீண்டும் தாயகம் வரவழைப்பதென்பது மகிழ்ச்சியான விடயம். ஆனால் அதற்கான வசதிகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும் முதலில் வழங்குவது அவசியம்.

Comments