அதிக வரிவிதிப்புகளுக்கு மத்தியில் தாமத கட்டணம் தொடரத்தான் வேண்டுமா? | தினகரன் வாரமஞ்சரி

அதிக வரிவிதிப்புகளுக்கு மத்தியில் தாமத கட்டணம் தொடரத்தான் வேண்டுமா?

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது வாழ்நாளில் எழுபது வருடங்கள் பிரித்தானிய மகாராணியாக அதற்குரிய பாரம்பரியங்கள் மற்றும் சம்பிரதாயங்களுடன் வாழ்ந்து முடித்து மறைந்திருக்கிறார் ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் எனப்புகழப்பட்ட பிரித்தானியாவின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெண்மணி அவர்.

ஹிட்லர்,  முசோலினி  தொடக்கம் இடி அமின், கடாபி, சதாம் உசைன் மார்க்கோஸ்,  பின்னசே என்று மிக  மோசமான ஆட்சியாளரகள் எனப் பலரை நாம் உலகமுழுவதும் இலகுவில் அடையாளம்  கண்டுவிடலாம். ஆனால் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணி பற்றிய அவ்வாறான குற்றச் சாட்டுகள் எதனையும் காணமுடியவில்லை. அங்கு வெறும் சம்பிரதாயபூர்வமான முடியாட்சி தானே நிலவுகிறது பாராளுமன்றத்திற்குத் தானே ஆட்சி அதிகாரம் உள்ளது. எனவே மகாராணி வெறும் சம்பிரதாயபூர்வமான ஆட்சியாளர்  மட்டுமே என்று கருதினாலும் ஒரு பெண்மணி ஏழு தசாப்தங்கள் மக்களின் மரியாதையையும் செல்வாக்கையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு  இலகுவான காரியமல்ல. தனது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக  மகாராணி என்ற மட்டத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள்  உருவாகிய போதெல்லாம் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடந்தராமல் அரச  சம்பிரதாயங்களை மீறாமல் அத்தகைய கடினமான முடிவுகளையும் அவர் எடுக்கத்  தயங்கவில்லை. ஒரு முழுமையான மகாராணியாக வாழ்ந்து வயது மூப்பின் காரணமாக  அன்னார் மறைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இரங்கல் வெறும்  சம்பிரதாயபூர்வமானதல்ல. பொது நலவாய நாடுகளின் இராணியாகவும் அப்பெண்மணி  கொண்டிருந்த செல்வாக்கின் அடையாளமாகவும் அதைப் பார்க்கலாம். இப்போது  வாழ்ந்துவரும் அரசு தலைவர்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரியை விட்டுச்  செல்லும் தலைவியாகவும் இரண்டாம் எலிசபெத் மகாராணியைக் கருதலாம். ஆட்சியாளர்கள் என்னதான் திமிர் பிடித்து ஆடினாலும் மரணத்தை சந்தித்தே  ஆகவேண்டும். சில நாடுகளின் ஆட்சியாளர்கள் இறந்த போது அந்நாடுகளின் மக்கள் கொடுங்கோலன் தொலைந்தான் திருடன் தொலைந்தான்; கொலைகாரன் ஒழிந்தான் என்று  மகிழ்ச்சி ஆரவாரம் செய்த சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய  ஆட்சியாளர்களும் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள், எனவே பதவியில் இருக்கும்  ஆட்சியாளர்கள் எந்த வழியில் போவதென்பதை சிந்தித்து தேர்ந்தெடுக்க  மகாராணியின் மரணம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் கடந்த வாரம் மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது.  அதே போல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் காணப்பட்ட வரிசைகள்  குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இலங்கைக்கு வந்துள்ள எரிபொருள்  கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் அவை காத்திருப்பதாகவும் செய்தி  அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் எரிபொருளுக்கு தாமதக்கட்டணத்தையும் சேர்த்து  செலுத்த வேண்டியள்ளது. இதுபோல இதற்கு முன்பும் பலதடவைகள் நிகழ்ந்துள்ளன.  நிச்சயமாக இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். தற்போது உலக சந்தையில்  எரிபொருள் விலைகள் குறைவடைந்து வரும் நிலையில் அதன் நன்மை பொது மக்களைச்  சென்றடையாத வண்ணம் எரிபொருளுக்கு அதிக விலையை செலுத்தவேண்டி ஏற்படுகிறது.  

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் பல்குழல்  பீரங்கித்தாக்குதல்கள் போல எரிபொருள், எரிவாயு, மின்சாரம், நீர், உணவு என  அத்தனைகளினதும் விலைகள் பலமடங்கு அதிகரித்து தற்போது வற் வரி அதிகரிப்பு  அத்துடன் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி என்ற புதுவரிகளின் அறிமுகம் என்பன  பலமுனைகளில் இன்னும் விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களை மேலும் கசக்கிப்  பிழியக் காத்திருக்கின்றன. இந்நிலையில் தாமதக் கட்டணம் போன்ற நிர்வாகச்  சீர்கேடுகளின் சுமைகளையும் மக்களைச் சுமக்க அனுமதிப்பது நியாயமாகாது.

உண்மையில் ஏற்கெனவே துவண்டுபோய் வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாமல்  தவிக்கும் மக்களுக்கு நிவாரணங்களே தேவைப்படுகின்றன. வர்த்தக சகடோட்டத்தின்  பொருளாதாரப் பின்னடைவுக் கட்டத்தில் உள்ள நாடுகள் தமது பொருளாதாரத்தை  மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளும். அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில்  மக்களின் நாளாந்த செலவுக்காக அந்நாட்டு அரசாங்கம் மிகப் பெருந்தொகையை  ஒதுக்கியது. அத்துடன் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகளையும்  வழங்கியது. அதன் மூலம் பொருளாதாரம் படிப்படியாக வழமைக்குத் திரும்பியது.  இலங்கையில் அத்தகைய பொதி எதனையும் வழங்கக் கூடிய நிலையில் கஜானா இல்லை.  மக்களில் பெரும் பகுதியினருக்கு உதவிகள் தேவைப்படும் நிலையில் கஜானாவை  நிரப்புவதற்காக வரிகளை அதிகரித்து அச்சுமையை மக்களே தாங்க நிர்ப்பந்திப்பது  ஜனநாயகமாகாது.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும்  போது படிப்படியாக வரி வீதங்களை நியாயமான கால இடைவெளிகளில் உரிய  மட்டங்களுக்கு அதிகரிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் வாழ்க்கைத்  தரத்தில் மிகக் குறைந்த பாதிப்பகளோடு பொருளாதார மீட்சியை அடைய முடியும்.  அவ்வாறில்லாமல் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு நிலைமைகள் குறித்த  கரிசனைகளின்றி அரச வருவாய் அதிகரிப்பை மாத்திரமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு  செயற்பட்டால் அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிக மோசமாக வீழ்ச்சியை  ஏற்படுத்துவதோடு பொருளாதாரத்தின் உற்பத்தி நடவடிக்கைகளையும் மக்களின்  வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமான வீழ்ச்சிக்கு இட்டுச்  செல்லும் ஏற்கெனவே பொருளாதாரம் 2022இல் 8.4சதவீதத்தினால் வீழ்ச்சியடையும்  என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வீழ்ச்சி மேலும் தீவிரமடையும்.  மேலே சொன்ன விலை அதிகரிப்புகளால் பொருள் விலைகள் ஏற்கெனவே வானளாவ உயர்ந்து  சென்றுள்ள நிலையில் வரி அதிகரிப்புகள் உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதால்  செலவுப்பக்கத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். உற்பத்தியாளர்களால்  அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைகளில் பொருள்களை சந்தைக்க வழங்க முடியாத நிலை  உருவாகும். எனவே தன்னிச்சையாக எடுக்கப்படும் அதிகரிப்புகள் நாட்டில்  நன்மையை ஏற்படுத்துவதற்குப் பதில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்,  மக்களுக்கு மூச்சு வாங்குவதற்குரிய கால அவகாசம் வழங்கப்படவேண்டும்.  மறுபுறம் அரச துறையின் பருமனைக் (size of government) குறைப்பதற்குரிய  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரச துறை ஊழியர்களை குறைப்பதற்கு  ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள  இராஜாங்க அமைச்சுகள் இந்த ஆலோசனைகளுக்க முற்றிலும் முரணான நடவடிக்கைகளாகவே  தோன்றுகிறது. இவற்றுக்குரிய வளங்கள் வாகனங்கள் பதவிநிலைகள் ஆளணியினர்  என்பவற்றை வழங்கத்தான் வேண்டும்! இவற்றை நடத்திச் செல்ல மிகப்பெரியளவு  நிதிவளம் தேவை. அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அரசாங்கத்தின்  அளவைக் குறைத்து அரச செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  தருணத்தில் அதே அரச ஊழியர்களைக் கொண்ட அமைச்சுகளின் எண்ணிக்கையை  அதிகரிப்பது எவ்வாறு?

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments