எதிரி நாடுகளை அச்சுறுத்தும் இந்தியாவின் விக்ராந்த் கப்பல்! | தினகரன் வாரமஞ்சரி

எதிரி நாடுகளை அச்சுறுத்தும் இந்தியாவின் விக்ராந்த் கப்பல்!

சக்தி வாய்ந்த பிரமாண்டமான போர்க்கப்பல் ஒன்றை நிர்மாணித்துள்ள இந்தியா, அக்கப்பலை கடந்த வாரம் தனது நாட்டின் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது.

வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் பல்வேறான நவீன பாதுகாப்பு வசதிகளை இக்கப்பல் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் 'விக்ராந்த்' கப்பலின் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்த விக்ராந்த் கப்பல் விமானம் தாங்கிய இந்தியாவின் 2ஆவது போர் கப்பலாக செயல்படுகின்றது.

கப்பல் படையைப் பொறுத்தவரை இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரபிக் பெருங்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதியில் இந்திய இராணுவ கப்பல்கள் ஆதிக்கம் செலுத்தி, இந்தியாவிற்கு வரும் ஆபத்தைத் தடுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா தனக்கான விமானம் தாங்கிய போர்க் கப்பலை எந்த நாடுகளின் துணையும் இல்லாமல் இந்தியாவிலேயே தயாரித்து நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளது. கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் அக்கப்பல் நிர்மாணிக்கப்பட்டது.

உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் வேறு நாடுகளின் துணையில்லாமல் போர் கப்பல்களை உருவாக்கியிருந்தன. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்தியா உருவாக்கிய இந்தக் கப்பலுக்கு 'விக்ராந்த்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முதன் முதலாகப் பயன்படுத்திய விமானம் தாங்கிய போர்க் கப்பலின் பெயர் 'விக்ராந்த்' என்பதாகும். இந்தக் கப்பல் தற்போது தனது பணியை முடித்து விட்டது.

தற்போது பழைய விக்ராந்த் கப்பலை முழுவதுமாக பிரித்து விட்டனர். இந்நிலையில்தான் புதிதாகத் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிய போர்க் கப்பலுக்கு 'விக்ராந்த்' என மீண்டும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிய போர்க் கப்பலாகும். ஏற்கனவே 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா'என்ற கப்பல் தற்போது செயற்பாட்டில் உள்ளது.

புதிய விக்ராந்த் கப்பல் மொத்தம் 262மீற்றர் நீளம், 62மீற்றர் அகலம் கொண்டது. இது சுமார் 2கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும். இந்தக் கப்பல் மொத்தம் 18தளங்களைக் கொண்டது. இதில் 1600பேர் பயணிக்க முடியும். 30விமானங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 1600பேர் பயணித்தாலும், அவர்கள் அனைவருக்கும் கப்பலிலேயே உணவு தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளன. இந்தக் கப்பலில் உள்ள சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தினால் ஒரு மணிநேரத்திற்கு 3000சப்பாத்திகளைத் தயாரிக்க முடியும்..

இந்தக் கப்பலில் மொத்தம் 250தாங்கிகள் அளவிலான எரிபொருள் சேமித்து வைக்க முடியும். இந்தக் கப்பலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நங்கூரம் ஒலிம்பிக்கில் இருக்கும் நீச்சல் குளத்தைப் போல 2மடங்கு பெரிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் மொத்த எடை 42,800தொன் கொண்டது.இந்தக் கப்பலில் எ.ம்.ஐ.ஜி ரக ஜெற் யுத்த விமானங்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் மொத்தம் 28நோட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இந்தக் கப்பலின் பாதுகாப்பிற்காக நவீன அம்சங்கள் இருக்கின்றன. இது கப்பலைக் கடலில் விபத்தில் சிக்க வைக்காமல் தடுக்கும். இதனால் இந்தக் கப்பல் நடுக்கடலில் சேதமாகி மூழ்கும்அபாயம் இருக்காது.

மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்களாக Barak-8 SAM, AK-630 Close in Weapon System, Stabilised Remote Controlled Guns உட்பட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களின் செயல் திறன் என்ன? இது கப்பலின் எந்த இடத்தில் இருக்கிறது? எத்தனை எண்ணிக்கையில் இருக்கிறது என்ற தகவல்கள் எல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. பல ஆயுதங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.இந்தக் கப்பலின் கட்டுமானம் முதன் முதலாக 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பொழுதே இந்தக் கப்பலுக்குத் தேவையான இரும்புகள் எல்லாம் வெட்டத் தொடங்கப்பட்டது. அடுத்தாக கப்பல்களின் முதுகெலும்பு என அழைக்கப்படும் கீல் என்ற பகுதி கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கீல் பாகத்தை உருவாக்குவதுதான் கப்பலின் உண்மையான கட்டுமானத்தின் முதல் வேலையாகும்.

2012ஆம்ஆண்டு இந்தக் கப்பலின் அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்தன. 2013ஆம் ஆண்டு இந்தக் கப்பல் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கப்பலாக உருவாக்கப்படத் தொடங்கியது. அதன் பின்னர் கப்பலின் உள் கட்டுமான வேலைகள், பெயின்ற் பூசுவது உள்ளிட்ட பல வேலைகள் நடந்தன.

2020ஆம் ஆண்டு இந்தக் கப்பலுக்கான என்ஜின் உள்ளிட்ட பாகங்கள் பொருத்தப்பட்டு கப்பல் கடலில் இறக்கத் தயார் ஆனது. 2020நவம்பர் 30ஆம் திகதி கப்பல் கடலில் இறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஓகஸ்ட் 2021முதல் ஜூலை 2022வரை பல்வேறு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. இப்போது அக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கப்பல் இருப்பதால் எதிரி நாடுகள் இந்தியாவின் கடல் எல்லையில் வாலாட்ட முடியாது என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமான சீனா இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பதைத் தடுக்க முடியும்.

இராணுவத் துறையில் இந்தியாவின் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக இக்கப்பல் தயாரிப்பைக் குறிப்பிட முடியும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் இக்கப்பல் நிர்மாணிக்கப்பட்டது.

இந்திய கடல்சார் வரலாற்றில் பிரமாண்டமான போர்க் கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

1971- ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்தப் போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் ஏற்கெனவே ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961முதல் 1997ஆ-ம் ஆண்டு வரை பணியாற்றியது. 1971-ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரில் இந்தக் கப்பல் முக்கிய பங்காற்றியது. ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், 2002முதல் 2012- ஆம் ஆண்டு வரை அருங்காட்சியகமாக இருந்தது. அதன்பிறகு பயனற்ற நிலைக்குச் சென்றதால், கடந்த 2014-_ 15- இல் இந்தக் கப்பல் உடைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையில் அதே பெயரில் புதிய விமானம் தாங்கிக் கப்பலை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, உள்நாட்டிலேயே அத்தகைய கப்பல் தயாரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அக்கப்பல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் பயன்படுத்தப்பட்ட இரும்பு மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானது. கப்பலில் பயன்படுத்தப்படும் மின்சாரம் கொச்சி நகரின் பாதியை ஒளிரச் செய்யும்.

சமஸ்கிருத வார்த்தையான விக்ராந்தில் உள்ள 'வி' தனித்துவமான அல்லது அசாதாரணமான ஒன்றைக் குறிக்கிறது. 'க்ராந்த்' ஒரு திசையில் முன்னேறுவதைக் குறிக்கிறது. சுதந்திரப் போர் மற்றும் 1971போரில் முக்கிய பங்கு வகித்த நாட்டின் வீரர்களின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

INS விக்ராந்த், 'ஜயேம சம் யுதி ஸ்ப்ருதா' எனும் ரிக்வேத வரிகளை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது "எனக்கு எதிராகப் போரிடுபவர்களை நான் வெல்கிறேன்" என்று பொருள்படும்.

மேம்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி கப்பலின் விரிவான பொறியியலை மேற்கொண்டு, விமானம் தாங்கிக் கப்பலின் அளவுள்ள ஒரு கப்பலை முழுமையாக 3D மாதிரியாக வடிவமைத்து, 3Dெமாடலில் இருந்து உற்பத்தி வரைபடங்கள் எடுத்து கப்பல் கட்டப்பட்டது. இப்படி 3Dெமாடல் வைத்து தயாரிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை ஆகும்.

இந்த கப்பல் கட்டுமானத்தின் மொத்த செலவு இந்திய நாணயத்தில் சுமார் 23,000கோடி ஆகும்.

விக்ராந்தில் தரையிலிருந்து வான்வழி நடுத்தர தூரம் தாக்கும் ஏவுகணைகள் (MRSAM) பொருத்தப்பட்டுள்ளன. பெண் அதிகாரிகளுக்கான பிரத்தியேக அறைகளை கப்பல் உள்ளடக்கியது.

கப்பலில் உள்ள அனைத்து கேபிள்களும் மொத்தம் 2,600கி.மீ நீளம் கொண்டது என்று வடிவமைப்பாளர் கட்டடக் கலைஞர் மேஜர் மனோஜ் குமார் தெரிவித்தார். கப்பலின் உள்ளே இரண்டு சத்திரசிகிச்சை தியேட்டர்கள் கொண்ட முழு செயல்பாட்டு மருத்துவ வளாகம் உள்ளது. குறைந்தது 2,000ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சமையலறை உள்ளது.

இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட MiG-29K போர் விமானம் மற்றும் Kamov-31முன்னெச்சரிக்கை ஹெலிெகாப்டர்களையும் சுமந்து செல்லும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அட்வான்ஸ்ட் லைட் ஹெலிெகாப்டர்கள் (ALH) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த MH-60R மல்டிரோல் ஹெலிகொப்டர்களையும் சுமக்கும் தன்மை கொண்டது.

சமஸ்கிருத வார்த்தையான விக்ராந்த், என்பதற்கு தைரியமானவர் என்பது பொருள். அதன் தோற்றத்தை பகவத் கீதை உட்பட பல்வேறு நூல்களில் காணலாம். இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) ஐஎன்எஸ் விக்ராந்தாக கடற்படையில் சேர்க்கப்பட்டது ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.

எஸ்.சாரங்கன்

Comments