தமிழ் இலக்கிய உலகில் மாத்தளையின் பெயரை அழுத்தமாக பதியவைத்த மாத்தளை பெ. வடிவேலன் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் இலக்கிய உலகில் மாத்தளையின் பெயரை அழுத்தமாக பதியவைத்த மாத்தளை பெ. வடிவேலன்

மலையக சிறுகதைத் துறையில் தன் ஆளுமைமிக்க முத்திரையினைப் பதித்து எழுத்தின் வளத்தால் கடல் கடந்த நாடுகளிலும் கௌரவம் பெற்ற மாத்தளை பெ.வடிவேலன் தனது 75வது அகவையை நிறைவுசெய்திருக்கின்றார். 

மலையக இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவர் இலக்கியத்தை ஒரு சமுதாயப்பணியாக சிரமேற்கொண்டு எழுத்துத்துறைக்கு தன்னை அர்ப்பணித்தவர். காலாதிகாலமாக பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உட்பட்டு துன்பத்தை நித்தியமானதாகக் கொண்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் அவலம் தோய்ந்த துயரவாழ்வையும் அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற சொல்லொணா பிரச்சினைகளையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டதே அவரின் அரைநூற்றாண்டு கால எழுத்துப்பணி. 

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் (1969) ஆம் ஆண்டு மாணவர் ஆசிரியர் பரீட்சையில் சித்திபெற்று மாணவஆசிரியராக பணியாற்ற தொடங்கியவர்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், வீரகேசரி பத்திரிகையுடன் இணைந்து நான்காவது மலையக சிறுகதை போட்டியில் ‘பிஞ்சு உலகம்’ என்ற சிறுகதையை எழுதி முதல் பரிசை பெற்று எழுத்துத் துறைக்குள் பிரவேசித்து இன்று வரை எழுதி வருகின்றார். 

இந்திய வம்சாவளி மலையக மக்கள் தனித்துவமான ஒரு இனக்குழுமமாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு ஏனைய இனக்குழுமங்களுடன் சமத்துவமான அந்தஸ்தை பெறுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என்ற நியாயபூர்வமான கோரிக்கையை வலியுறுத்துவதில் மாத்தளை வடிவேலனின் கலை இலக்கியப் பணிகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன. 

மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை பெருந்தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேலனின் படைப்புக்களின் முக்கிய நோக்கம் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளான பெருந்தோட்ட மலையக மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்துவிட வேண்டும் என்பதேயாகும். 

பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டதாரி, ஆசிரியர், அதிபர், இந்து சமய பண்பாட்டு காலாசார அதிகாரி, மலையக கலை இலக்கிய, சமய மரபுகளின் ஆய்வாளர், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபை உறுப்பினர், ஆன்மீக சொற்பொலிவாளர் என பன்முக பரிமாணங்களைக் கொண்ட பல புலமை வாய்ந்த ஒரு ஆளுமையாக இன்றும் விளங்குபவர் மாத்தளை வடிவேலன். 

மலையகத்தில் இடம்பெற்ற பல்வேறு சாகித்ய விழாக்களிலும், அருள்நெறி விழாக்களிலும், ஆலய மகோற்சவங்களிலும், பாராட்டிக் கௌரவிக்கப்பட்ட அவரை கலாசார அமைச்சு ‘இலக்கியச்செம்மல்’ மற்றும் ‘கலாபூ~ணம்’ என்ற விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.  

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், வீரகேசரியும் இணைந்து நடத்திய 4வது மலையக சிறுகதைப்போட்டியில் அவரது 'பிஞ்சு உள்ளம்” என்ற சிறுகதைக்கு முதலாம் பரிசை வழங்கி கௌரவித்தது. என். எஸ். எம் ராமையா, தெளிவத்தை ஜோசப், இரா.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன் இச்சிறுகதையை தெரிவுசெய்தனர். 

அது மாத்திரமல்ல, பதுளை பத்திரிக்கை முன்னோடி கலையொளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்தமாக மு.நித்தியானந்தன், எச்.எச் விக்கிரமசிங்க இணைந்து நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைக்கு இரண்டாவது பரிசும், துரைவி பதிப்பக உரிமையாளர் அமரர் துரை விசுவநாதன், தினகரன் பத்திரிகை நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியிலும், உதயன் பத்திரிகை தனது வெள்ளி விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியிலும் இவர் பரிசும் பாரட்டையும் பெற்றார். 

மலையக சிறுகதை தொகுப்புக்கள் பலவற்றில் வடிவேலனின் சிறுகதைகள் தாராளமாக இடம்பெற்றிருந்தாலும் 2012ஆம் ஆண்டில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வந்த 20சிறுகதைகள் அடங்கிய 'அட்சய வடம்” என்பதே அவரது முதலாவது தனிச் சிறுகதைத் தொகுப்பாகும். 

மலையக பெருந்தோட்ட மக்கள் தமிழர்கள் என்ற வகையிலும் அவர்களில் அதிகப்பெரும்பாலானவர்கள் உழைக்கும் மக்கள் என்ற வகையிலும் அனுபவித்த இழப்புக்களை பொருளாகக் கொண்ட இந்த தொகுப்பு தமிழ் இலக்கிய உலகினால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இலங்கையில் வெளிவரும் வார இதழ்கள் மற்றும் சஞ்சிகைகளில் பரவலாக வெளிவந்த மாத்தளை மாவட்டச் சூழலை மையமாகக் கொண்ட வடிவேலனின் பல கதைகள் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பண்ணாமத்துக் கவிராயர், கே.எஸ்.சிவகுமாரன், மற்றும் ஏ.வி.பி. கோமஸ் ஆகியோரினால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. விமல் சுவாமிநாதன் இவரது சிறுகதைகளை சிங்கள மொழி பெயர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆய்வுப்பணியைப் பொறுத்தவரை, மலையக கலைகள், சமய மரபுகள் போன்ற துறைகளில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்த மாத்தளை வடிவேலன் 30ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிய 'மலையக பாரம்பரிய கலைகள்” (1992) என்ற நூலை வெளியிட்டார்.

தமிழத்திலிருந்து தமிழக மக்கள் புலம்பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் தங்களுடன் கூட்டிச்சென்ற ஒரு திராவிட தெய்வமான மாரியம்மன் குறித்து வடிவேலன் எழுதிய 'மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்” என்ற ஆய்வுநூல் (1997டிசம்பர்) கலையொளி முத்தையா பிள்ளை ஞாபகர்த்தமாக மு.நித்தியானந்தன், எச். எச் விக்கிரமசிங்க ஆகியோரால் இரா. சிவலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.  மலையக நாட்டார் வழக்காற்றியல் பற்றிய தேடலையும் தனது பணிகளில் ஒன்றாக கொண்டு இயங்கியவர் மாத்தளை வடிவேலன்.

தமிழகத்தில் இருந்து இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு புலம்பெயர்ந்து வந்தபோது தங்களது நாட்டாரியல் பண்பாடுகளையும் கொண்டு வந்தனர்.                 

மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க, சமூக, பொருளாதார வரலாறு பற்றிய நூல்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ஆயினும், அந்த மக்களின் நாட்டாரியல் பண்பாடு, அதன் தனித்துவம் பற்றிய நூல்கள் குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. வடிவேலன் மலையக நாட்டார் வழக்கியல் பற்றிய தேடலை முன்னெடுத்து அந்த மக்களின் பாரம்பரிய கலைச்செல்வங்களான கூத்துக்கள், இலக்கியங்கள், பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய முதலாவது நூலை வெளியிட்டு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாத்தளையின் ஜீவநதியான கார்த்திகேசு தனது குறிஞ்சி பதிப்பகம் ஊடாக வெளியிட்ட அவருடைய அந்து நூலே 'மலையக பாரம்பரிய கலைகள்” என்பதாகும்.

“இரு நூறு ஆண்டு கால சமூக வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் எதிர்நீச்சல் போட்டு தனிமனிதன் அடைந்த கல்வி முன்னேற்றம், சமூகத்தில் சில பிரிவினர் பெற்ற பொருளாதார உயர்ச்சியும் மலையகத்தில் உண்டென்பது உண்மையெனினும், முழு சமூகத்தினதும் ஒட்டு மொத்த வாழ்வை நோக்குமிடத்து மனசாட்சியுடைய எவராலும் மனநிறைவு கொள்ளமுடியாது. இலங்கையில் மாதச்சம்பளம் இன்றி ஆகக்குறைந்த தினக்கூலியைப் பெறுபவர்கள் மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஆகும்.

மலையக சமூகத்தில் முடிவின்றி தொடரும் அவலங்களையே எனது படைப்புக்கள் பிரதிபலிக்கின்றன.

இவற்றில் இருந்து ஒதுங்கி இலக்கியம் படைக்கமுடியாது" என்று அட்சய வடம் என்ற தனது சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு எழுதிய என்னுரையில் மாத்தளை வடிவேலன் குறிப்பிட்டிருக்கிறார். இது அவர் தனது சமூகத்தின் நல்வாழ்வில் கொண்டிருக்கும் பற்றையும், அவர்களின் விமோசனத்துக்காக உழைக்க வேண்டும் என்ற அவரின் இலட்சியத்தையும் பறைசாற்றி நிற்கிறது. தெளிவத்தை ஜோசப் தனது அறுபது ஆண்டு காலத்திற்கும் அதிகமான கால இலக்கியப் பணியின் மூலமாக பதுளை தெளிவத்தை தோட்டத்தை இலக்கிய உலகில் எவ்வாறு அழுத்தமாக பதியவைத்தாரோ அதேபோன்று மாத்தளையின் பெயரை கடந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக பதியவைத்து பெருமை சேர்த்திருப்பவர் மாத்தளை வடிவேலன். அவருடைய சமூக பிரக்ஞையுடனான இலக்கியப் பணி தொடரவும் மாத்தளை அன்னை முத்துமாரி அம்பிகையின் அருட்கடாட்சத்தோடு அன்னையின் திருவருளால் பூரண சுகத்தோடு நீடுழி வாழவும் எமது வாழ்த்துக்கள்.

எச். எச் விக்கிரமசிங்க

 

 

Comments