துன்பப்படுவோருக்கு உதவும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

துன்பப்படுவோருக்கு உதவும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம்

சமூகப் பணியென்பது தொழில்வாண்மைசார்ந்தது. சமூகமாற்றத்தினை மேன்மைப்படுத்துவது. மக்களின்நலன்களைமேன்மைப்படுத்துவது. சமூகநீதிமற்றும்மனிதஉரிமைகள் என்பனவற்றைப்  பேணுவது போன்ற விடயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

நமது நாட்டைப்பொறுத்தவரை சமூக சேவை அமைச்சும். அதன் கீழ்  செயற்பட்டுவரும் சமூக சேவைத் திணைக்களமும். மேற்கூறிய கருத்துக்களை அளவு  கோலாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. நலிவுற்ற  மக்களை சமூகத்திற்கு  பாரமற்றவர்களாகவும், தேசிய ரீதியில் இவ்வாறானவர்களின் துன்பங்களை  குறைக்கும் நோக்கிலும் செயற் திட்டங்களை வடிவமைத்து செயற்பட்டு வருகின்றன.    

கிழக்கு மாகாண சபையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை  ஆகிய மாவட்டங்கள்  உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 15மில் மக்கள் வாழ்கிறார்கள்.  கிழக்கு மாகாண சபையின்கீழ் மாகாண சமூகத் திணைக்களமும் மாவட்ட மட்டத்தில்  மாவட்ட சமூக சேவைத் திணைக்களமும் செயற்பட்டு வருகின்றன.  இத்திணைக்களத்திற்கு பணிப்பாளராக ஏ.ஜி.தெய்வேந்திரன் பணியாற்றி வருகிறார்.    

கிழக்கு மாகாண சபை தமது மாகாணத்தில் நலிவுற்ற, இயலாமை கொண்ட, தங்கி வாழும் நபர்களுக்கு மாதாமாதம் நிதியுதவிகளை செய்து வருகிறது  

இது பொது சன மாதாந்தக் கொடுப்பனவு என்று அழைக்கப்படுகிறது.  இதற்குள் நோயாளர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும், சிரேஷ்ட பிரஜைகளும்  அவர்களில் தங்கி வாழ்வோரும், மாற்றுத் திறனாளிகளும் அவர்களில் தங்கி  வாழ்வோரும். விதவைப் பெண்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும், கணவர்களினால்  கைவிடப்பட்ட பெண்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும், பெற்றோர்களின்  பராமரிப்பை இழந்த 18வயதுக் கீழப்பட்ட பெண்களும் என வகைப்படுத்தப்பட்டுள்ள   இவ்வாறானவர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 73559என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் உச்சக்கட்ட தொகை நபரொருவருக்கு ரூபா. 500ஆகும்.  

அடுத்ததாக அதிக பாதிப்பையும் உடல் உபாதைகளையும்  அனுபவிக்கும்  நோயாளர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. அது  புற்று நோய், தொழுநோய், தலிசீமியா, சிறுநீரக நோய், காச நோய் போன்ற நோயால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது. இது 1624பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதுவும் உச்சக்கட்ட தொகை ரூபா 500என வரையறை செய்யப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாண சபை சுய தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கும்,  சுய தொழில் முயற்சியிவ் இறங்கி சம்பாதிக்க ஆர்வம் காட்டுவோருக்கும். உதவி  வழங்கி வருகின்றது.

அது எவ்வாறெனில், புதியவர்களுக்கு அத்தொழிலை  ஆரம்பிக்கவும், ஏற்கனவே அத்தொழிலை ஸ்தாபித்திருப்பவர்களுக்கு அதே தொழிலை  மேலும் விரிவு படுத்தவும் நிதியுதவி வழங்கி வருகின்றது.  

இது ஒரு வரவேற்கத் தக்க செயற்பாடு, பிரயோசனம் நிறைந்தது.  ஒருவர் சுய சம்பாத்தியத்தை தேடிக் கொண்டால் இன்னருவரில் தங்கியிருக்கவோ,  தயவை நாடவோ தேவையில்லை. இதனையே, அறிஞர் ”ஸ்ரோப்” (Stroup) சமூகப்பணி ”மக்கள்தங்கள்தேவைகளைத்தாங்களேநிறைவுசெய்துகொள்வதுஅல்லதுசிக்கல்களைத்தாங்களேஎவ்வாறுவென்றுமுன்னேறுவதுஎன்பதற்குவழிகாட்டுவது” என்று கூறுகிறார்.  இதனை கவனத்தில் எடுத்து எமது மாகாண சபை செயற்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. இதனடிப்படையில் 347  பேர் இவ் உதவு தொகையைப் பெற்றுள்ளனர். இத் தொகை 30ஆயிரம் என வரையறை  செய்யப்பட்டுள்ளது. இதனை பகுதிபகுதியாகவோ அல்லது முழுமையாகவே நன்மை பெறுநர்  பெற்றுக்கொள்ள முடியும்  

இப்போதைய பொருட்களின் விலையை கருத்திற் கொண்டால் இத்தொகை  போதுமானதாயிருக்கப்போவதில்லை. இத்தொகையை உயர்த்த சமூகசேவைத் திணைக்களத்தின்  பணிப்பாளரும், செயலாளரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் . அல்லது பொருத்தமான  முயற்சியாளர்கள் வங்கிகளிலிருந்து கடனைப் பெறுவதற்கு வழிவகைகளை செய்ய  வேண்டும்  

அடுத்ததாக தற்செயலாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு கிழக்கு மாகாண  சபை நிவாரணம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இயற்கை சில வேளைகளில்  சீற்றம் கொண்டுவிடலாம் அது பலமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் நலனே  மகத்தானது என அரச அமைப்புக்கள் செயற்படும்போது இவ்வாறான விடயங்களில்  தங்கள் கவனத்தைச் செலுத்தியே ஆகவேண்டும்  

இவ்வாறான அனர்த்தங்களை் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ன.  இயற்கையாலும், காட்டு யானைகள் ஏனைய விலங்குகளாலும் ஏற்படும் பயிர்ச் சேதம்,  திடீரென ஏற்படும் தீ விபத்தினால் வீட்டுக்கு ஏற்படும் சேதம், இதைத்தவிர  சூறாவளியால் வீட்டுக்கு, அல்லது குடிமனைக்கு ஏற்படும் சேதம், அதே மாதிரியாக  தொடர் மழையால் அல்லது வெள்ளத்தினால் குடிமனைக்கு அல்லது வீட்டுக்கு  ஏற்படும் சேதம், இடி மற்றும் மின்னலினால் வீட்டுக்கு ஏற்படும் சேதம்,  இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் சேதம், மரணச் சடங்கிற்கான செலவு, சில  சந்தர்ப்பங்களில், பெற்றோர்களுக்கோ அல்லது பாதுகாவலர்களுக்கோ போதிய  வருமாமின்மை ஏற்பட்டால் அவர்கள் தங்களது பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில்  சேர்க்க முற்படுவர் ஏலவே கூறப்பட்ட சேதங்கள் ஏற்படும்போது அதற்கு உடனடி  நிவாரணம் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் எடுத்து இதற்கான நிவாரணத் தொகையை  கிழக்கு மாகாண சபையின் சமூக சேவைத் திணைக்களம் வழங்கி வருகிறது. அதில்  பயிர் அழிவுக்கு ரூபா 10,000மும் மரணச்சடங்கிற்காக ரூபா15,000மும்,  வீட்டுச் சேதத்திற்காக ரூபா 20,000மும் வழங்கப்படுகிறது. அனேக  சந்தர்ப்பங்களில் இத்தொகை போதாமல் இருக்கலாம். அத்தொகை கூட்டப்பட வேண்டும்  என்ற எண்ணம் திணைக்களத்திற்கு இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய போதிய  நிதி ஒதக்கீடு இல்லாதிருப்பதாகவும் அறிய முடிகிறது. காலப்போக்கில் இது  சாத்தியமாகலாம். இந்த 2022ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறான கொடுப்பனவுகள் 35பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந் நிதியுதவியினால் அவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்  

நிரந்தர அல்லது பாரிய நோயினால்  பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பொருத்தமான வைத்திய சேவையைப் பெறுவதற்காக  தங்கள் இருப்பிடங்களை கடந்து பல மைல்தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது  அவ்வகையான நோய்களையும் அதற்கான வைத்திய வசதிகளையும்பெற தூர இடங்களுக்கு  செல்ல வேண்டியிருப்பதையும் இங்கு உதாரணத்திற்கு எடுப்பது பொருத்தமானதாக  இருக்கும். நீரிழிவு காரணமாக அவயவங்களை இழந்தோர். மூளை முடக்குவாத நோயினால்  பாதிக்கப்பட்டவர்கள். தங்களது நோய்க்கான வைத்திய சேவையைப் பெறுவதற்கு  அல்லது வைத்திய சேவையைப் பெற்று குணமடைந்த பின்னர் மாதாமாதம்  கிளினிக்குக்கு சமூகம் கொடுப்பதற்கு போக்குவரத்துச் செலவு தேவையாக  இருக்கிறது. கிளினிக்குக்கு போகாவிட்டால் உரிய வைத்தியவசதியை பெறமுடியாது.  அதனால், அவர்களது நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும், சில  வேளைகளில் அது மரணத்தைக்கூட தந்து விடலாம். இவைகளை தவிர்ப்பதற்காகவே.  இக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மாதாமாதம் வழங்கப்படும் இத்தொகையின் உச்ச  எல்லை ரூபா 1500ஆகும்.  இவ்வாறு கொடுப்பனவை பெறுவோர்களின் எண்ணிக்கை 3145ஆக இருக்கிறது. இவ்வாறு கிழக்கின் சமூக சேவைத்திணைக்களம் வழங்குவதால் அனேக உயிர்கள் காவு கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது.  

மேலே கூறப்பட்ட பாதிப்புகளைவிட, மூளைவளர்ச்சியற்ற, கடுமையான  நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு  இரண்டுவகையில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வைத்திய வசதிக்கு மாதாமாதம்  ரூபா 1000மும், போசாக்கான உணவைப் பெறுவதற்கு ரூபா 3000மும்  வழங்கப்படுகிறது. இவ்வாறான கொடுப்பனவுகள் 720பேருக்கு வழங்கப்படுவதாக திணைக்களத்தின் அறிக்கைகள் காட்டுகின்றன. 

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை கிழக்கு சமூக சேவைத்  திணைக்களம் வழங்கிருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது நாளாந்த வாழ்க்கையை  துன்பங்களை சுமந்துகொண்டே வாழ்ந்து வருகிறார்கள். அவர்ளுக்கு வழங்கப்படும்  உபகரணங்களால் அவர்களது நாளாந்த துன்பங்கள் குறைத்து வருகிறன. இது மூக்குக்  கண்ணாடி, சக்கர நாற்காலி, கொமட் என 12வகைகளை உள்ளடக்கியிருக்கின்றன. 209பேருக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  

மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் அணுகும் வசதியை  அமைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.  இது மாற்றுத் திறனாளியின் சொந்த வீடாகவோ அல்லது பெற்றோரின் வீடாகவோ இருக்க  வேண்டும். வாடகை வீடாயின் 5வருடங்களக்கு அந்த வீட்டில்  குடியிருப்பதற்குரிய ஒப்பந்தத்தை மாற்றுத்திறனாளி செய்திருப்பது அவசியம்.  வென்ளைப்பிரம்பு. சக்கர நாற்காலி, முச்சக்கர வண்டி பயன்படுத்துவோர்  இவ்வசதிகளைப் பெறுவர். இதற்கான கொடுப்பனவாக ரூபா 15000வழங்கப்படும். இதனை  இரண்டு கட்டங்களாக பெறலாம். இவ்வாறான வசதிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 45ஆகும்  

தனி நபர்களினாலும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும்  நடாத்தப்படும் முதியோர் இல்லங்கள், அங்கு தங்கியிருக்கும் முதியோர்கள்,  மாற்றுத் திறனாளிகள் தங்கியிருக்கும் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுடைய  குழந்தைகள், பகல் பாடசாலைகளுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்  என்போரை பராமரிப்பதற்கான கொடுப்பனவு, வழங்கப்படுகிறது. இதில்  குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு ரூபா 50ம் மாற்றத்திறனாளிகளுக்கு ரூபா 100ம்,  முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியோருக்கு மாதமொன்றுக்கு 500ம்  உணவுக்காக வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இவ்வாறானவர்களின் எண்ணிக்கை 476ஆகும்.  இவர்களுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்படும்போது அவை முழுமையான, செறிவான  உதவியாக இல்லாவிட்டாலும் ஒரு ஆதரவாகவேனும் இருக்கிறதே என எண்ணத்  தோன்றுகிறது  

இவ்வாறு பராமரிக்கப்படும் இல்லங்களின் எண்ணிக்கை கிழக்கு  மாகாணத்தில் 5இருக்கிறது. இற்றைவரை     இதுபோன்ற இல்லங்கள் அம்பாறை  மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. அனால், அங்கு இவ்வாறான இல்லங்களுக்கு  தேவைகள் இருப்பதாக தெரிகிறது.  

சமூக சேவைத்திணைக்களம் சுகாதா அமைசின் ஒரு அங்கம் அதன்  பணிப்பாளர் திருமதி முரளீதரன் சமூக சேவையில் ஆர்வம் நிறைந்தவர். இதனை  அனேகர் அறிந்துள்ளனர். அதேபோன்று பணிப்பாளருக்கும் இத் தன்மைகள்  பொருந்தும். இதைவிட எமது ஆளுநர் நலிவுற்ற, இயலாமைகொண்ட மகளின்மேல் இரக்கம்  உடையவர். ஆகையால் இவர்கள் கொடுப்பனவுத் தொகைகளை உயர்த்த அக்கறை காட்ட  வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.  

எஸ்.எஸ்.தவபாலன் 
புளியந்தீவு குறூப் நிருபர்

Comments