அபிவிருத்தியில் அநாதையாக்கப்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் | தினகரன் வாரமஞ்சரி

அபிவிருத்தியில் அநாதையாக்கப்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம்

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரில் காணப்படும் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி குறைப்பாடுகளை நிவர்த்திக்க உள்ளூராட்சி மன்றம் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 

உடப்புஸ்ஸலாவை நகரம் அபிவிருத்தியில் அனாதையாக்கப்பட்ட நகரமாக காணப்படுகிறது. இதனால் நகர வர்த்தகர்கள், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உடப்புஸ்ஸலாவை நகர வர்த்தக சங்கத் தலைவர் நிஸாந்த ஹர்ச குமார, உப தலைவர் கிட்ணன் முத்து குமார்(சசி)சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் புஸ்ப குமார ஆகியோர் ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அவர்கள் மேலும் கூறியதாவது.... 

உடப்புஸ்ஸலாவை நகரம் மிக பழைமை வாய்ந்த நகரமாகும்.இந்த நகரம் வலப்பனை பிரதேச சபைக்கு வருமான வரி செலுத்தி வருகின்ற போதிலும் வலப்பனை பிரதேச சபை ஊடாக அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்ட நகரமாகவே காணப்படுகிறது. 

நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு தாராளமான குடிநீர் கிடைப்பதில்லை.நாள் ஒன்றில் காலை நேரத்தில் அரை மணித்தியாலம் மாத்திரமே குடிநீர் வழங்கப்படுகிறது. 

இதனால் வீட்டு தேவைகள் உட்பட ஏனைய தேவைகளுக்கு நீரின்றி அசௌகரிகத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. 

அத்துடன் நகரில் பொது மலசலக்கூடம் ஒன்றில்லை இதனால் நகர வாசிகள் உள்ளிட்ட 

நகருக்கு அன்றாடம் வருகை தரும் மக்களும் பாதிக்கப்படுவதுடன் நகரில் மறைவிடத்தை தேடி தமது தேவையை நிறைவேற்றும் அவல நிலை உள்ளது. 

அதேபோல இந்த நகரின் பிரதான வீதி கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம் காபட் இட்டு செப்பனிட்ட போதிலும் உடப்புஸ்ஸலாவ நகரிலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு பஸ் தரிப்பிடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக் காலங்களில் பயணிகள் அவஸ்தைப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். 

மேலும் உடப்புஸ்ஸலாவை நகரில் நாள் சந்தை அல்லது வாராந்த சந்தை இல்லாத காரணத்தால் மரக்கறி கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். 

அத்துடன் பொதுவான நூலகம் ஒன்றும் இல்லை.  

நகரில் குறுக்கு வீதிகளுக்கு வீதி விளக்குகள் இல்லை. அதேபோல முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் பொது வாகன தரிப்பிடம் இல்லை.இது போன்று பல்வேறு குறைப்பாடுகளுடன் காணப்படும் இந் நகரம் தொடர்பில் பிரதேச சபையும் அக்கறை காட்டுவதாக இல்லை. 

எனவே தோட்ட மக்கள்,கிராம மக்கள்,வெளி பிரதேச மக்கள் என அதிகமாக வந்து செல்லும் இந் நகரம் அபிவிருத்தியில் அனாதையாக காணப்படுவதால் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அக்கறை காட்ட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Comments