பல்வேறு வடிவங்களில் நெருக்குதலை சந்திக்கும் மலையக சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

பல்வேறு வடிவங்களில் நெருக்குதலை சந்திக்கும் மலையக சமூகம்

நாட்டின் சமகால பொருளாதார தன்மை மலையக மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பிந்திய நிகழ்வுகளாக மண்ணெண்ணெய், மா விலை அதிகரிப்பு மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இம்மக்களைப் போட்டு வதைக்கின்றது. மண்ணெண்ணெய் விலை ஏற்றத்தை சமாளிக்க நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைகக்கால வரவு செலவுத் திட்ட உரையின் போது குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. 

பொருளாதார ரீதியிலான அழுத்தம் மனோ ரீதியிலான முரண்களை உருவாக்கவே செய்யும். இதனைத் தான் அமரார் ஆசிய ஜோதி நேரு 'பொருளாதாரம் சிறப்புற்றால் தான் தன் மானத்துடன் வாழலாம்' என்று கூறிச் சென்றார். தனிமனித இயல்பு வாழ்க்கை எப்படி பாதிப்புக்கு உள்ளாகின்றதோ அதே போல அரசியல் மட்டத்திலும் தளம்பல் நிலையைத் தோற்றுவிக்க பொருளாதார வீழ்ச்சி சூழ்ச்சி செய்வது தவிர்க்க இயலாத சமாச்சாரமே ஆகும். 

இதனை நேருஜீ எளிமையாக சொல்லி வைத்திருக்கின்றார். 'வறுமை வாசல் வழியாக பிரவேசித்தால் ஜனநாயகம் யன்னல் வழியாக வெளியேறி விடும்! என்கிறார் அவர். என்ன பொருத்தமான கூற்று. ஜனநாயகத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று சகிப்புத் தன்மை. அது இல்லாமல் போகும் பட்சத்தில் பாதிப்பு பல்வேறு வடிவங்களில் பாடாய்ப்படுத்தும். அப்படியொரு இக்கட்டான நிலைக்கு மலையக சமூகம் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வரையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களாக இருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் 15இலட்சமாக இருந்தது இத்தொகை. இன்று நிலைமை தலைக்கீழாக மாறி வருகின்றது. இதற்கான காரணிகள் பல இருக்கின்றன. இருந்தும் அடிப்படை உந்துதலாக இருப்பது வறுமை தான். 

உழைக்க மறுப்பவர்களைத் தான் வறுமை வதை செய்யும் என்பார்கள். கார்ல் மார்க்ஸின் சித்தாந்தமும் இது தான். ஆனால் பெருந்தோட்டச் சமூகம் உழைக்க சோம்பலாளர்கள் அல்லவே. அவர்கள் வாழப்பிறந்தவர்கள் என்று சொல்வதை விட உழைக்கப் பிறந்தவர்கள் என்று மகுடம் சூட்டினாலும் தகும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற உபகாரம் எதனையும் இதுவரை பெறாமலே இருக்கும் பரிதாபத்துக்கு உரியவர்கள். 

இந்த ஓரங்கட்டல் தான் இன்றுவரை இவர்களை பின்னடைவிற்கு தள்ளிவிட்டுள்ளது. இதற்கு இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், இவர்களை வழிப்படுத்திய தலைமைகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் அனைத்துமே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. கூடவே புத்திஜீவிகளும் அடக்கம்.  

இம்மக்களின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய பின்புலம் நாட்டில் இல்லை. இதனால் வாக்களிக்கும் அங்கீகாரம் பெற்றிருந்தும் தேசிய ரீதியல் பேரம் பேசக் கூடிய பலத்தை இச்சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனால் தமது தேவைகளுக்கான அழுத்தத்தை பிரயோகிக்க கூடிய வாய்ப்பின்றி அரசியல்வாதிகளின் பின்னால் அலையாய் அலைய வேண்டிய அவலம். 

மலையக அரசியல்தளம் ஸ்திரமாக இருப்பதாக படவில்லை. எங்கும் சுயநல தேவைகளுக்கான நிகழ்ச்சி நிரலுடன் ஓடியாடித்திரியும் அரசியல்வாதிகள் ஏராளம். தொழிற்சங்கங்களும் பலவீனமடைந்து போயுள்ளன. இதனால் ஓர் அசமந்த சூழல் அரசோச்சுகின்றது. அதிரடியான சமூக மாற்றத்துக்குத் தான் உடனடியாக எதனையும் சாதிக்க முடியாது என்றால் கல்வி சார் சமூகம் ஒன்றின் எதிர்கால முன்னேற்றத்திற்காக எதையாவது செய்ய வேண்டாமா?. 

நடைமுறை சிக்கல்களால் மாணவர் கல்வி நிலை பின்னடைவு கண்டு வருகின்றது. பாடசாலை வரவில் குறைபாடு, பாடசாலை இடைவிலகல், ஆர்வமில்லாத கற்றல் போக்கு, தேடலில் ஆர்வமின்மை என்று ஒரு தேக்க நிலை மலையக கல்விச் சூழலைக் கவ்விக் கொண்டு இருப்பதாக கல்வியியலாளர்கள் கருத்திடுகிறார்கள். இதனால் மந்த போஷணத்துக்கு மாற்று ஏற்பாடு எத்தனை அவசியமோ அந்தளவுக்கு மந்தமான கற்றல் போக்குக்கும் மாற்று ஊட்டம் தேவைப்படுகிறது. 

குறிப்பாக தொழிற்சங்கங்கள் தமது முழுமையான கவனத்தை மலையக கல்வி அபிவிருத்தியின் பால் செலுத்துவது முக்கியமானது. இந்த தொழிற்சங்கங்களுக்கு மாதாந்த சந்தா பணம் மூலம் புலமை பரிசில், தொழிற் பயிற்சி என்பவற்றுக்குச் செலவிட முடியும். ஏற்கனவே இதற்கான கட்டமைப்புகளை சில தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கின்றன. இருந்தும் முழுமையான பயன்பாடுகளைத் தான் பெற முடிவதில்லை என்று முணு முணுப்பு எழாமல் இல்லை.  

பல தொழிற்சங்கங்கள் பல் தேசிய தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவைகள் மூலம் வருடாந்தம் நிதி ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்த உதவிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தியே கிடைக்கின்றன. பாடசாலை அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, தொழில்சார் பயிற்சி நெறிகளை வழங்குவதற்கென பெருந்தொகையான நிதி கிடைக்கின்றது. அதே நேரம் இங்கு இயங்கும் பல அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், சிவில் அமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளைப் பெற்று வருகின்றன. இந்த நிதிகள் செலவு செய்யப்படும் விதம் பற்றி யாருக்கும் தெரியாது. சில அமைப்புகள் செயலமர்வுகளை நடத்துவதற்கு மட்டுமே நிதியினைச் செலவிடுகின்றன. வேறு சில நிறுவனங்கள் ஆய்வுகளுக்கும் அறிக்கைகளுக்கும் மாத்திரமே பணத்தை இறைக்கின்றன. வெளிநாட்டு நிதி மூலம் நிர்வாக முகாமைத்துவ வசதிக்காக கட்டட வசதிகளும் சில அமைப்புகளுக்கு உண்டு. 

கடந்த காலங்களில் இவ்வாறு கிடைக்கப்பெற்ற பெருந்தொகையான நிதிக்கு நடந்த கதி பற்றி மலையக புத்திஜீவிகள் கேள்வி எழுப்பவே செய்கின்றனர். பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு, தொழில் பயிற்சிக்கென வழங்கப்பட்ட வாகனங்கள், கட்டடங்கள், இயந்திர உபகரணங்கள் தன்னிச்சையாக விற்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெறவே செய்கின்றன. குறிப்பாக மக்கள் பயணத்துக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 50மினிரக பஸ் வண்டிகள் விற்பனையில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்பட்டது.  

இது போலவே கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கணனி மற்றும் தொழிற் பயிற்சி உபகரணங்களும் காணாமற் போன திருவிளையாடல்களும் நடந்துள்ளன. விற்கப்பட்டதாக அல்லது காணாமற் போய் விட்டதாக கூறப்படும் சாதனங்கள் பற்றி பொறுப்புக் கூறலை முறையாக எவருமே ஏற்கவில்லை. எல்லாமே மூடி மறைக்கப்பட்ட சங்கதியாகிப் போனது. 

இவ்வாறான கையாடல், மோசடிகளால் ஒரு சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு துரோகம் இழைப்பது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் இனியாவது யோசிக்க வேண்டும். நாட்டின் கல்வி போதனை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் பிற சமூக மாணவர்களிடம் காணப்படும் ஆர்வமும் அக்கறையும் இன்னும் மலையக மாணவர்களிடம் வந்து சேரவில்லை என்றே ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

இதற்கான காரணங்களும் இனம் காணப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது மூவேளை உணவு சம்பந்தமானது. குறிப்பாக காலை உணவு விவகாரம். பல பெருந்தோட்டப் பிள்ளைகள் முழு பட்டினியாகவோ, பாதி வயிற்றோடோதான் பாடசாலைக்கு சமுகம் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வினால் முழுமையான சத்துணவை பிள்ளைகளுக்கு வழங்க பல பெற்றோரால் இயலாதுள்ளது. போக்குவரத்து செலவினங்கள், பாடசாலை உபகரணங்கள் விலை பன்மடங்கு உயர்ந்து போயிருப்பது பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

இதனால் முழுமையான கல்வியைப் பெறுவதில் தடங்கல் நிலைமையே ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பெருந்தோட்டப் பிள்ளைகள் மீள்வதற்கு உடனடி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றது. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க தரப்பு, அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், வசதிபடைத்தோர் இம்மாணவர்களுக்கு கை கொடுக்கும் கைங்கரியங்களில் இறங்குவது நல்லது. இது பெற்றோர்களது சிரமங்களைக் குறைக்க பெரிதும் உதவும். மாணவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இதே போல இம்மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் அரசியல் மட்டத்தில் ஆக்கப்பூர்வமாக செயற்பட்டு காரியமாற்றுவது அவசியமானது.

இது அவர்களின் கடப்பாடு. அவர் என்ன செய்யப் போகிறார், இவர் என்ன செய்யப் போகிறார் என்று வேவு பார்த்துக் கொண்டிராமல் தத்தமது கடமையைச் சரியாக நிறைவேற்ற இந்த அரசியல் தலைமைகள் முன்வர வேண்டியது மிக மிக முக்கியமானது. இது உடனடி தேவையுமாகும்.

பன். பாலா 

Comments