விடுகதை விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

விடுகதை விளையாட்டு

2D, D5, A2, C4, D என்று தொடரும் குறியீடுகளின் அர்த்தம் என்னவாக இருக்கும். அது ஒன்றுமல்ல நீங்கள் போகப்போகும் அடுத்த விமான ஆசனத்தின் இருக்ைக எண் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ரசல் ஆர்னல்ட் நகைச்சுவையாகக் கூறுகிறார். இல்லை, இல்லை அது சீட்டிழுப்பு இலக்கம் என்கிறார் இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல்.

உண்மையில் இது கேளிக்குறியதல்ல. இந்த குறியீடுகளால் பங்களாதேஷ் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டார்கள். ஆசிய கிண்ணத்தில் இலங்கைக்கு எதிரான தீர்க்கமாக குழுநிலைப் போட்டியில் இந்தக் குறியீடுகளை இலங்கை அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பயன்படுத்தியதே, அந்தப் போட்டியில் தோற்ற பங்களாதேஷுக்கு கோபம் வரக் காரணம்.

இது கிரிக்கெட்டின் நியாயத் தன்மைக்கு சரியில்லை, ஒழுக்கமில்லாத வேலை... என்று பங்களாதேஷ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வேதம் ஓத ஆரம்பித்தார்கள்.

இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டியில் அனைவரும் தலையை பீய்த்துக்கொள்ளும் ஒன்றான இந்த குறியீட்டின் மூலம் தகவல் அனுப்பும் முறையே மாறிவிட்டது.

இலங்கை அணி மைதானத்தில் இருக்கும் போது அரங்கில் கணினியும் கையுமாக இருக்கும் இலங்கை அணியின் கணினி பகுப்பாய்வாளர், பிராத் நவரத்னம் வெள்ளை நிற அட்டையில் ஆங்கில எழுத்தும் இலக்கமும் கொண்ட குறியீடுகளை மைதானத்தில் இருக்கும் இலங்கை வீரர்களுக்கு தென்படுமாறு வைக்கிறார். அந்தக் குறியீட்டுக்கு அருகில் பயிற்சியாளர் சில்வர்வுட்டும் இருக்கிறார். இது சில்வர்வுட்டின் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்தக் குறியீடுகளைப் பார்க்கும் எல்லோருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அது என்ன சொல்ல வருகிறது என்பதுதான். போர்களில் என்றால் குறியீட்டு செய்திகளை அவிழ்த்து உடைத்து தெரிந்து கொள்வதற்கென்றே ஆட்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ‘கோட்பிரேக்கர்’ என்று பெயர். அப்படி கோட்பிரேக்கர்களை எதிரணிகள் பயன்படுத்தும் அளவும் கிரிக்கெட் என்பது போர் அல்ல.

உண்மையில் என்னதான் குறியீடுகள் சொல்கின்றன. அதற்கு பயிற்சியாளர் சில்வர்வுட்டே பதலளித்திருக்கிறார்.

“இது ஒன்றும் ரொக்கெட் விஞ்ஞானம் இல்லை. இது துடுப்பாட்ட வீரர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது என்ன செய்வது சிறந்தது என்று அணித் தலைவருக்கு வெறும் ஆலோசனை வழங்குகிறது. இப்போதெல்லாம் பல அணிகளும் இதனைச் செய்கின்றன. உண்மையில் இது மிக எளிமையானது. இது அணித்தலைவருக்கு பயன்படுத்த முடியுமாக ஆலோசனை வழங்குவது மாத்திரமே. அவர் எவ்வாறு தலைமை செய்ய வேண்டும் என்று கூறுவதல்ல. பக்கத்தில் இருந்து ஆலோசனை வழங்குவது மாத்திரமே” என்று சில்வர்வுட் கூறுகிறார்.

சில்வர்வுட் இந்த வேலையைச் செய்வது இது முதல் முறையல்ல. அவர் முன்னர் இங்கிலாந்து பயிற்சியாளராக இருந்தபோதும் இவ்வாறான குறியீட்டு முறைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

2020இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளராக சில்வர்வுட் மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு இவ்வாறு குறியீட்டு செய்திகளை அனுப்பியது பற்றி அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.

போட்டியின் குறிப்பிட்ட நேரத்தில் ஆடுகளத்தை எப்படி அமைப்பது, துடுப்பாட்ட வீரரை கட்டுப்படுத்துவது, பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்துவது போன்ற அலோசனைகளை வழங்குவதை தவிர உண்மையில் இந்தக் குறியீடு வேறு எதனை பெரிதாகச் சொல்லிவிடப் போகிறது.

கிரிக்கெட்டில் மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு செய்திகளை அனுப்புவது தொன்று தொட்டு நடக்கும் ஒன்று. பெரும்பாலும் தண்ணீர் போத்தலுடன் வரும் மேலதிக வீரரே அவ்வாறான செய்திகளை கொண்டு செல்பவர்களாக இருப்பார்கள். அந்த செய்திகளைப் பெறுவதற்காகவே இடை நடுவில் வீரர்களுக்கு தாகம் கூட வரும்.

ஆனால் நவீன கிரிக்கெட் அவசரமானது. அதிலும் டி20போட்டிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். எனவே மைதானத்திற்குள் அடிக்கடி தண்ணீர் போத்தல்களை கொண்டு போக முடியாது. எனவே அதற்கு மாற்றான வழிகளை கண்டறிவது பயிற்சியாளர்கள் வேலையாக மாறிவிட்டது.

“அணி களத்தடுப்பில் ஈடுபடும் போது மாத்திரமே இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை எப்படி செயற்படுகிறது என்று எனக்குத் தெரியாது. எந்த பந்துவீச்சாளர் எப்போது பந்துவீச வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பின்னர் அது பற்றி முடிவெடுப்பது அணித் தலைவரின் கைகளிலேயே இருக்கிறது” என்கிறார் சிம்பாப்வே முன்னாள் அணித்தலைவர் அன்டி பிளவர்.

தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சுல்தான் முல்தான் அணிக்கு பயிற்சியாளராக செயற்படும் பிளவர், பெளண்டரி எல்லை வழியாக அணித் தலைவருக்கு செய்தி அனுப்பும் முறை ஒன்றை பயன்படுத்தி இருந்தார்.

என்றாலும் 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அப்போதைய தென்னாபிரிக்க அணித்தலைவர் ஹான்சி குரொன்சே மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் பொப் வுல்மர் செய்த வேலை பெரும் சர்ச்சைக்குக் காரணமானது.

மைதானத்தில் இருக்கும் குரோன்சேவுடன் தொடர்புகொள்ள வுல்மர் ‘இயர்போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அதுவும் யாருக்கும் தெரியாமல் இந்தியாவுடனான முதலாவது போட்டியில் இதனை பயன்படுத்தியதை தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் அவதானிக்கும் வரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

பின்னர் இந்தியா ஆரம்பத் துடுப்பாட்ட விரர்களான சவ்ரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இதனை அவதானித்து நடுவர்களுக்கு தெரியப்படுத்த, அது போட்டி நடுவரிடம் செல்ல, போட்டி நடுவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் ஐ.சி.சியிடம் நேரடியாக விளக்கம் கேட்க பெரும் குழப்பமாகிவிட்டது.

இப்படி இயர்போன்களை பயன்படுத்துவது எந்த விதியையும் மீறவில்லை என்று அப்போது ஐ.சி.சி கூறிவிட்டது. ஆனாலும் பிரச்சினை முடியவில்லை. இந்த முறை நியாயத்தன்மை அற்றது என்று ஐ.சி.சி வெளிப்படையாகவே சொல்லிவிட்டது.

குரொன்சே இயர்போனுடன் அந்தப் போட்டி முழுவதும் மைதானத்தில் இருந்தபோதும் அதிருப்பதிகள் அங்கங்கே வெளிப்பட்டன. அரங்கில் இருந்த ரசிகர்கள் கூட கூட்டமாக கூச்சல் போட்டார்கள்.

அந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. பின்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டிலும் புதிய தொழில்நுட்பத்தை வரவேற்று பேசினார் வுல்மர். என்றாலும் பிரச்சினை முற்றியபோது இவ்வாறான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஐ.சி.சி தடை விதித்தது.

சில்வர்வுட்டின் மூலோபாயம் வுல்மர் அளவுக்கு மோசமானது அல்ல. ஐ.சி.சி விதி மீறல் எதனையும் அது செய்யவில்லை. எல்லோருக்கும் வெளிப்படையானதாகவே அது இருக்கிறது. ஒன்றே ஒன்று அந்தக் குறியீட்டில் என்ன கூறப்படுகிறது என்பது இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவைத் தவிர யாருக்கும் தெரியவில்லை. எதிரணி, போட்டி விதிகள், ஒழுக்கம், நேர்மை ஒரு பக்கமிருக்க இது ஒரு புதிரை விடுவிக்கும் அளவு ஆர்வத்தையே சராசரி ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

எஸ்.பிர்தெளஸ்

Comments