ரஷ்யப் படைகளின் பின்வாங்கலும் உக்ரைன் போர்க்கள மாற்றமும்! | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யப் படைகளின் பின்வாங்கலும் உக்ரைன் போர்க்கள மாற்றமும்!

சர்வதேச அரசியல் போக்கில் உக்ரையின் -ரஷ்ய போர்க்களம் மீளவும் அதிர்ச்சியான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதாரத்திலும் வர்த்தகக் கட்டுமானத்திலும் உறுதியடையும் ரஷ்யா; போர்க்களத்தில் பின்வாங்கலை செய்துவருவதுடன் உக்ரைன் ரஷ்யா விட்டு வெளியேறிய நிலப்பகுதியை கைப்பற்றிவருகிறது. அதனை ரஷ்யாவுக்கான பாரிய பின்னடைவாக பிரச்சாரம் செய்யும் மேற்கு ஊடகங்களும் உக்ரைன் ஆட்சியாளர்களும் பாரிய போர் வெற்றியாக சித்தரித்து வருவதைக் காணமுடிகிறது. இரு தரப்பும் போர்க்களத்தில் நிகழ்பவைகளை முழுமையாக வெளிப்படுத்தாதவரையும் போர்க்களம் ஊடகங்களின் நலனுக்கு அமைவாக கையாளப்படும் போக்கு தவிர்க்க முடியாததாக அமையும். இக்கட்டுரையும் ரஷ்ய- உக்ரைன் களநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைத் தேடுவதாக அமையவுள்ளது.  

உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது படைகளை பின்வாங்குவதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சை ஆதாரம்காட்டி ராஸ் செய்திச் சேவை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ரஷ்ய தேசியவாதிகள் அதிக அதிருப்தி அடைந்ததுடன் வெற்றியை உறுதி செய்யுமாறு ரஷ்ய இராணுவத்தை கோரியுள்ளனர். அதனை அடுத்து ரஷ்ய இராணுவம் கார்கிவ் மற்றும் டொனெட்ஸ் பிராந்தியங்களை நோக்கி பாரிய ஏவுகணைத் தாக்குதலை ஆரம்பித்தது. அத்தாக்குதலில் அதிக நெருக்கடியை எதிர் கொண்ட உக்ரைன் மீளவும் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளத் தயாராவதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் தேசியவாதிகள் மட்டுமன்றி போரின் பிரதான ரஷ்ய ஆதரவு போராளி அமைப்புக்களும் அதிருப்தியடைந்துள்ளதை அவர்களது அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

ரஷ்யா தொடர்ந்து அப்பிராந்தியங்கள் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுவருவதாகவும் பத்திரிகையாளர்களை அந்நகரத்துக்கு அனுமதிக்கவில்லை என்பதையும் உக்ரையின் இராணுவம் அறிவித்துள்ளது.  

இதே நேரம் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் பொது மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் அரசாங்கத்தின் உட்கட்டமைப்புக்கள் அழிக்கப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக மின்சாரகட்டமைப்பு முற்றாக ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் அழிந்துள்ளதாகவும், நீர் மற்றும் அத்தியாவசிய வசதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் உக்ரையின் குற்றச்சாட்டியுள்ளது. இதே நேரம் இலியம் நகரிக்கு விஜயம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி படைகளை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அத்தோடு மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் எனவும் அதன் மூலமே ரஷ்யாவுக்கு எதிரான வெற்றிகளை அடைய முடியுமென உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் ஆயுதங்களே தமது வெற்றிக்கு அடிப்படைக் காரணம் எனவும் அதனை தொடர்ந்து மேற்குலக நாடுகள் வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இவ்வாறான சூழலில் ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னர் உக்ரைன் இராணும் கைப்பற்றிய பிரதேசங்களில் பாரிய மனிதப்  புதைகுழிகளை தாம் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.

அத்தகைய படுகொலையை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டதாகவும் அழிவுகளுக்கு ரஷ்யப் படைகளே பொறுப்பு எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 400க்கும்  மேற்பட்ட சடலங்கள் ஓரிடத்திலேயே புதைக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித உரிமையை மட்டுமன்றி மனித குலத்திற்கு எதிரான செயல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது உக்ரைன் மக்கள் மீதான படுகொலை எனவும் இத்தகைய படுகொலைகளை ரஷ்ய இராணுவம் பலதடவை நிகழ்த்தியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனவே ரஷ்யாவின் ஆறு மாதகாலப் போர் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளதாகவும் போரில் ரஷ்யப்படைகள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை ரஷ்யாவின் இராணுவத் தோல்வி என குறிப்பிட முயலும் மேற்குலக மற்றும் உக்ரைனிய ஊடகங்கள் உக்ரைனின் வெற்றியை முதன்மைப்படுத்தி வருகின்றன. அதனால் ஏற்பட்டுள்ள களநிலையையும் மாற்றத்தின் யதார்த்தத்தையும் தேடுவது அவசியமானது. 

முதலாவது, ரஷ்யப் படைகளின் பின்வாங்கலானது உக்ரைன் இராணுவ வெற்றியை கோடிட்டுக் காட்டுவதாகவே உள்ளது. அதற்கான அடிப்படை மேற்குலக நாடுகளின் ஆயுததளபாடங்களும் உக்ரைன் படைகளின் தாக்குதல் உத்தியினாலும் ஏற்பட்டதாக கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதே நேரம் ரஷ்ய இராணுவத்திற்கு எதிரான உக்ரைனின் நெருக்கடியானது தனித்து உக்ரைன் இராணுவ உபாயங்களைக் கடந்து மேற்குலகத்தின் ஆயுத தளபாடங்களிலும் தங்கியுள்ளதாகவே தெரிகிறது.

மேற்குலக நாடுகளின் படைப்பலத்துடன் தந்திரங்களும் உத்திகளும் மேற்குலக இராணுவ ஆளணிகளாலும் வல்லுனர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக மேற்குலக நாடுகளின் ஆயுத தளபாடங்களுடன் ஆலோசனைகளும் பயிற்சிகளும் உக்ரைன் படைகளுக்கு கிடைப்பதுடன் உளரீதியான வலுப்படுத்தல் உக்ரைன் இராணுவத்திற்கு மேற்குலக நாடுகளின் படைகளாலும் அரசியல் தலைவர்களாலும் வழங்கப்படுகிறது.

இவை அனைத்துமே உக்ரைன் இராணுவத்தின் நிலையான மீள்எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 

இரண்டாவது, ரஷ்யப் படைகளது பின்வாங்கலானது உக்ரைன் படைகளுக்கு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. ரஷ்யா தனது படைகளையும் ஆயுததளபாடங்களையும் பாதுகாப்பதில் கவனம் கொண்டுள்ளது. இதனால் ரஷ்யா முழுமையாக தோற்றுள்ளதோ அல்லது ரஷ்ய இராணுவம் ஜப்பானிடம் 1905இல் தோற்றது போன்றோ அளவிட முடியாது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை தற்காலிக பின்வாங்கலாகவோ அல்லது மீளமைக்கப்பட முயலுவதென்பதோ சாத்தியமாகாது எனக் குறிப்பிட முடியாது. அதற்கான வாய்ப்புக்களை கொண்டதாவே உக்ரையின் -ரஷ்யப் போர்க்களம் தென்படுகிறது. போர் என்பது சுழற்சி முறைக்குட்பட்டதாகவே உள்ளது.

இதில் இடம்மாறி அமைவது ஒன்றும் புதியதல்ல. மாறாக யதார்த்தமானது. ரஷ்யா இப்பிராந்தியத்தை மீளக் கைப்பற்றுவதென்பது அவசியமானதாகவே தெரிகிறது. தவறும் பட்சத்தில் ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளும் நேட்டோவின் கெடுபிடிக்குள் அகப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதனை ரஷ்யா ஏற்றுக் கொள்ளுமா என்பதே கேள்வியாகும். 

மூன்றாவது, மேற்குக்கு எதிரான நாடாக செயல்படும் ரஷ்யா உக்ரையின் போரில் தோற்குமாக அமைந்தால் அதற்கான வாய்ப்பு முழுமையாகவே காணாமல் போய்விடும். ஆனால் உக்ரைன் நிலம் போரின் மையமாகவே நெப்போலியன் காலப்பகுதியிலிருந்து விளங்குகிறது. போரின் தாய்நிலம் ரஷ்யாவாக அமைந்தாலும் அதனை தடுத்து கையாளும் நிலமாக உக்ரைனே காணப்பட்டுள்ளது. இதனால் உக்ரையின் -ரஷ்ய போர் நீடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமன்றி வெற்றி எந்தத் தரப்பும் பெறமுடியாத களநிலையை கொண்டதாக அமைய வாய்ப்புள்ளது.

உக்ரைன் -ரஷ்ய புவியியல் அமைவிடமானது அத்தகைய போர் வாய்ப்புக்களை கொண்டதாக அமைந்தாலும் வெற்றி பெறுவதற்கு எந்தத் தரப்புக்கும் வாய்ப்பானதாக தெரியவில்லை எனக்கூறலாம். ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கிருந்த வாய்ப்பான சூழல் தற்போது உக்ரைனுக்குரியதாகியுள்ளது.

காரணம் உக்ரைனின் இராணுவ பலமும் ஆயுததளபாட வலுவும் அதிகரித்துள்ளது. ரஷ்ய போர்த்தளபாடங்களது வலு பாரிய போர்களுக்கே வாய்ப்பானது.

மேற்குலகத்தின் ஆயுதங்களைப் பொறுத்தவரை உள்நாட்டு போர்களுக்கும் மென்போர்களுக்கும் அதிக திறன்வாய்ந்ததாக அமையக் கூடியது.  

எனவே ரஷ்ய -உக்ரைன் போர் புதிய திசையை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. தற்போதைய உக்ரைனின் நகர்வு ரஷ்யாவின் தேசியவாதத்தை தூண்டுவதாக அமையுமாயின் அதன் விளைவுகள் அபாயகரமானதாக அமைய வாய்ப்புள்ளது.

ஆனால் மேற்குலக நாடுகள் இத்தகை வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றகரமான சூழலை ஏற்படுத்தும் தந்திரம் கொண்டவை. அதனால் ரஷ்ய தரப்பு அதிக எச்சரிக்கையுடன் நகர்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் முழுமையான தோல்வி என்றோ வெற்றி என்றோ அளவிட முடியாது.

மாறாக தோல்விக்கான ஆரம்பமாகவோ அல்லது வெற்றிக்கான வாய்ப்பான சூழலையோ இரு தரப்புக்கும் ஏற்படுத்தக் கூடியதாகும். உக்ரைனுடன் மேற்குலக நாடுகள் அணிவகுப்பது போல் ரஷ்யாவுடன் கிழக்கு நாடுகள் காணப்படுகின்றன.

தற்போது கூட சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் அத்தகைய அணிகளது நிலையையே உறுதி செய்கிறது. ஆனால் உக்ரைன் போர் முடிவில்லாத போர் என்பதை காட்டுவதாகவே உள்ளது. அதன் விளைவுகள் முழு உலகத்திற்கும் உரியதாக மாறவுள்ளது. இதில் அதிக விளைவுகள் ஐரோப்பாவுக்கே உரியதாகும்.  

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments