எலிசபத் மகாராணியின் இரு கொழும்பு விஜயங்கள் | தினகரன் வாரமஞ்சரி

எலிசபத் மகாராணியின் இரு கொழும்பு விஜயங்கள்

உலக வரலாற்றில் அதிககாலம் அரசாட்சி செய்த இரண்டாவது தலைவர் எலிசபத் மகாராணி. 70ஆண்டுகள் அரியணையில் இருந்தார். இதற்கு முன் பிரான்சில் 17ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூயி மன்னன் 72ஆண்டுகள் (1643 – 1715) ஆட்சி செய்திருக்கிறார். 

இலங்கையை நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காலனித்துவ நாடுகளைச் சேர்ந்த ஒரே ஒரு அரசர் தான்  இலங்கைக்கு வந்துள்ளார். அவர் எலிசபத் மகாராணி மட்டும் தான். அதுவும் இரண்டு முறைகள். அவரின் கொழும்பு விஜயம் பல முக்கியத்துவம் மிக்க அம்சங்களைக் கொண்டது. இலங்கையின் முடிக்குரிய மகாராணியாக 1953 – 1972வரை ஆண்டவர் அவர். இலங்கைக்கு அவர் இரு தடவைகள் விஜயம் செய்தார். 1954இல் அவர் இராணியாக விஜயம் செய்தார். இலங்கை குடியரசானதும் 1981இல் அவர் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இங்கே விஜயம் செய்தார். 

1954விஜயம் 

இளவரசி எலிசபத் தனது உலகப் பயணத்தை ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பித்திருந்தார். யூலை 9ஆம் திகதி தான் இங்கிலாந்து திரும்புவதாக அந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆறு மாதப் பயணத் திட்டம் ஒரு வாரத்தைக் கூட கடக்கவில்லை. 

அந்தப் பயணத்தில் இலங்கைக்கு செல்ல நிர்ணயித்திருந்த திகதி தான் 1952பெப்ரவரி 7. ஒருவாரம் பிரயாணம் செய்து பெப்ரவரி 14அன்று இலங்கையை வந்தடைவதே திட்டமாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளான பெப்ரவரி 6ஆம் திகதியன்று மன்னர் இறந்து விடுகிறார். 7ஆம் திகதி எலிசபத் கென்யாவிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் வந்தடைகிறார். எலிசபத்தின் முடிசூட்டுவிழா யூன் 2ஆம் திகதி நடந்தது. 

அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பயணம் தான் மகாராணியாக முடிசூடியபின் முதல் வேலையாக அப்பயணத்தை மீண்டும் 1953இல் ஆரம்பித்தார். 14நவம்பர் 1953முதல் மே 1954வரையான ஆறு மாதகால பயணத்தில் இறுதி நாடாக இலங்கைக்கு விஜயம் செய்து  ஏப்ரல் மாதம் 10இலிருந்து பதினொரு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார். 

இராணியின் முதல் பயணம் 

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு (அதாவது டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டு) ஆறு ஆண்டுகளில் இந்தப் பயணம் நிகழ்ந்தது. அவரின் வருகை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த வருகை என்பதால் அதற்கு முன்னர் இருந்தே இலங்கை மகாராணியை வரவேற்க பெரும் ஏற்பாடுகளை செய்து வந்தது. “தலைநகர் திருமணக்கோலம் பூண்டது” என்றே அன்றைய பத்திரிகைகள் அந்த விழாக்கோலத்தை வர்ணித்திருந்தன. 

10.04.1954 

1954ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதியிலிருந்து பதினொரு நாட்கள் இந்த சுற்றுப்பிரயாணத்தை மேற்கொண்டார் எலிசபத். ஏப்ரல் முதலாம் திகதியன்று அவுஸ்திரேலியாவிலிருந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு “கோதிக்” என்கிற கப்பலில் கொக்கோஸ் (Cocos- Keeling Islands) தீவுகளின் வழியாக இலங்கையை வந்தடைந்தார். சுமார் 1500மைல்கள் கடல்பயணம் செய்து  10ஆம் திகதி காலை 6.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தார். பீரங்கிகள் வெடிக்கச் செய்து பிரதமர் ஜோன் கொத்தலாவல, ஆளுநர் சோல்பரி பிரபு உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் பலர் கூடி அவரை வரவேற்றார்கள். அன்றே 10.11அளவில் விக்டோரியா பூங்காவின் மூலையில் இருக்கிற முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் மரணித்த போர் வீரர்களின் நினைவாக எழுப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு பூக்கள் வைத்து மரியாதை செய்தார் இராணி. பின்னேரம் 6.30க்கு மகாராணி வானொலி மூலம் நேரடியாக நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தினார். 

11.04.1954 

அடுத்த நாள் 11ஆம் திகதியன்று காலி முகத்திடலில் மாபெரும் அணிவகுப்பு மரியாதை நிகழ்ந்தது. நாட்டு மக்கள் பலர் அங்கே பார்வையிட வந்திருந்தனர். அலரி மாளிகையில் மிகப் பெரும் விருந்தொன்றில் கலந்துகொண்டார். அதில் இரண்டாயிரத்து ஐநூறு பேரளவில் கலந்து கொண்டிருந்தார்கள். அதுவரை அலரி மாளிகையில் அந்தளவு பெரிய விருந்து வைபவம் நிகழ்ந்ததில்லை. 

இந்த விருந்துபசாரத்தின்போது அப்போது பக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த எம்.நவரத்தினசாமியை பிரதமர் ஜோன் கொத்தலாவல இராணிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  

12.04.1954 

இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை அவர் ஏப்ரல் 12அன்று சுதந்திர சதுக்கத்தில் உள்ள சுதந்திர மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்திருந்தது. அங்கே 25,000க்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தார்கள். 

சுதந்திர சதுக்கம் ஒரு புராதன அரச சபையைப் போன்று அலங்கரிக்கப்பட்டு அங்கு பாராளுமன்றம் கூடியது. எலிசபெத் மகாராணி கிரீடம் அணிந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அரியணையில் அமர்ந்திருந்தார். நாட்டின் தலைவராக இருந்த அவர், நாடாளுமன்ற அமர்வைத் தொடங்கி வைத்து அரியாசன உரையையும் நிகழ்த்தினார். ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க தன்  உரையில் இனிமேல் எலிசபெத் மகாராணி சிங்கள ராஜவம்ச கதையின் அங்கமாகத் திகழ்வார் என்றார். இறுதியில் பாராளுமன்றத் சபைத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தன நன்றி உரை நிகழ்த்தி சபையை நிறைவு செய்தார். அவர் தனது  உரையை சிங்களத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. அதன்படி 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி குடியரசு அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்படும் வரை இலங்கையை ஆட்சி செய்த இராணியான எலிசபெத் தான் இந்த நாட்டின் கடைசி இராணியாக இருந்தார். 

சுதந்திர சதுக்க நிகழ்வின் போது 1815இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் இறக்கப்பட்ட இலங்கையின் கொடி மீண்டும் எலிசபத் மகாராணியின் முன் ஏற்றப்பட்டது. 

அதே தினம் கொழும்பு ரேஸ்கோஸ் பகுதியில் குதிரைப் பந்தய ஓட்டத்தைக் காண அழைத்துச் செல்லப்பட்டார். 

13.04.1954 

இலங்கை கலைக் கழகத்தால் (Arts council of Sri lanka) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் முக்கிய சந்திப்புகளையும் ஓய்வையும் எடுத்துக் கொண்டார்கள். 

14.04.1954 

அதிகாலை 7மணிக்கு பொலன்னறுவையை நோக்கி இரயிலில்  புறப்பட்டனர். பி.ப.2மணிக்கு பொலன்னறுவைய அடைந்தனர். அங்கிருந்து காரில் பொலன்னறுவை கல் விகாரை, பராக்கிரமபாகு மாளிகை, பராக்கிரம சமுத்திரம், சரஸ்வதி மண்டபம் போன்றவற்றை பார்வையிட்டார். அதன் பின்னர், இராணி  ஏப்ரல் 15ஆம் திகதி சீகிரியாவிற்கு விஜயம் செய்தார். அங்கு தொல்பொருள் ஆணையாளர் பேராசிரியர் செனரத் பரணவிதான அதன் முக்கியத்துவத்தை அவருக்கு விளக்கினார். 

15.04.1954 

சிகிரியவுக்கு காரில்  பவனியாக சென்றனர். அங்கே சிகிரிய மலை வரை சென்று பார்வையிட்டுவிட்டு அங்கிருந்து அன்றே நுவரெலியா புறப்பட்டனர். 

நுவரெலியாவில் வரவேற்புற்சவம் அங்குள்ள மாளிகையில் ஏற்பாடாகி இருந்தது. அங்கே கூட்டத்தின் மத்தியில் உரையாற்றினார். இராணியின் நுவரெலிய பயணத்தின் போது அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் இடையில் பாதுகாப்பையும் மீறி முன்னே வந்து தான் சிங்கள அரச பரம்பரையைச் சேர்ந்தவரென்றும் தனக்கு ஒரு வீட்டை பெற்றுத் தருமாறு கோரியும் ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு முன்னே பாய்ந்தார். அவர் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட செய்தி அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. 

16.04.1954 

பெரிய வெள்ளி நாள், தம்பதியினர் தேவாலயம் சென்று வழிபட்டனர். பின்னர் ஓய்வெடுத்தனர். 

17.04.1954 

தோட்ட உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு உபசாரத்தில் கலந்துகொண்டனர் 

18.04.1954 

அங்கிருந்து வாகன பவனியில்  கண்டியை சென்றடைந்தனர். 

19.04.1954 

அடுத்த நாள் 19அன்று கண்டிக்கு இரயிலில் பயணமானார்கள். அங்கே தலதா மாளிகையில் வணங்கி, அதன் தியவடன நிலமே போன்ற தலைவர்களையும் சந்தித்தார். அவருக்கு அஸ்கிரி, மல்வத்து மகாசங்கத்தினர் பாளியில் எழுதப்பட்ட ஒரு வரவேற்பு பேழையை வழங்கி கௌரவித்தார்கள்.  

கண்டியில் அரச தம்பதிகள் மகுல்மடுவ என்கிற பிரசித்தி பெற்ற மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார்கள். அங்கே தான் இலங்கைக்கும்  பிரித்தானியாவுக்குமிடையிலான  கண்டி ஒப்பந்தம்  1815ஆம் ஆண்டு  செய்துகொள்ளப்பட்டது நினைவுகொள்ளப்பட்டது. 

இதே நாள் பேராதனைப் பூங்காவையும் சுற்றிப் பார்த்தார்கள்.  

20.04.1954 

கண்டியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தை 1952இல் எலிசபத்தின் கணவர்  பிலிப் தான் திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இளவரசி எலிசபத்தின் விஜயம் அரசரின் மரணத்தால் தள்ளிப்போனதால் இரண்டாண்டுகளின் பின்னர் தான் அது திறக்கப்பட்டது. எலிசபத் மகாராணியாக ஆகி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மகாராணி எலிசபத்தின் வருகையின் நினைவாக பிலிப் கோமகனால் பல்கலைக்கழகமாக பிரகடனப்படுத்தி திறக்கும் வைபவம் ஏப்ரல் 20அன்று நிகழ்ந்தது. அந்தக் கல்வெட்டில்.  “H.R.H. the Duke of Edinburgh, G.G. To be “MORE OPEN THAN USUAL” என்று பொறிக்கப்பட்டது. 

கண்டி, நுவரெலியா, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற இடங்களுக்கு இரயிலில் தான் பயணம் செய்தார். இரயில் நிலையத்தில் இருந்து அவருக்கான சிறப்பு கார் வண்டியில் ஏனைய  இடங்களை அடைந்தார். பயணத்தின் போது அவர் தலதா மாளிகை பெரஹெராவிலும் கலந்துகொண்டார்.

மகாராணியின் வருகையையொட்டி வளமையையும் விட வெகு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த பெரஹர ஊர்வலத்தில் 140யானைகள் அணிவகுத்துச் சென்றன. 

மகாராணியின் அவ்வருகையின் நினைவாக புதிய பத்து சத முத்திரையும் வெளியிடப்பட்டது. இந்த முத்திரையில் இராணி ஒரு புறமும், கண்டி தலதா பெரஹரவை நினைவு கொள்ளும்வகையில் யானைகளின் அலங்கார ஊர்வலமும் கொண்டாத நீல நிறத்தில் அந்த முத்திரை அமைந்திருந்தது

20.04.1954 

ஏப்ரல் 21ஆம் திகதி அவர் புறப்படும் நாளன்று மகாராணியின் 28வது பிறந்தநாள். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி விமரிசையாக கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. அன்றைய நாள் மழையிலும் நனைந்தபடி படைத்துருப்புக்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தி “ஹாப்பி பெர்த்டே டூ யூ” பாடியதை மறக்கமுடியாது என்று சேர் ஜோன் கொத்தலாவல தனது “An Asian Prime minister’s Story” என்கிற நூலில் தனியான ஒரு அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். 

அதே நாள் இராணி தனது சுற்றுப்பிரயாணத்தில் பணியாற்றிய இருபது பிரமுகர்களுக்கு றோயல் விக்டோரியன் ஓடர் பட்டங்களை வழங்கினார்.   21ஆம் திகதி பி.ப.12.45க்கு இராணி மாளிகையில் பிறிவிக் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு இந்த பட்டமளிப்பு செய்யப்பட்டது. 

முக்கிய இரண்டு பதவிப் பிரமாணங்களை அவர் செய்து வைத்தார். ஒன்று பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலையை பிரித்தானிய உச்ச நீதிமன்றமான பிரிவிக் கவுன்சிலின் உறுப்பினராக பிரகடனப்படுத்தப்பட்டது. அடுத்தது சேர் ஒலிவர் குணதிலக்கவை புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். யூலை 17அன்றிலிருந்து இராணி மாளிகை சுதேசிய தலைவரின் வாசஸ்தலமானது. அதாவது பிரித்தானிய முடியின் நேரடி காலனித்துவ முகவராக அதுவரை ஆங்கிலேயர்களே இருந்தார்கள். அதை எலிசபத் மகாராணி முடிவுக்குக் கொண்டு வந்தார்.  

இதே நாள் இராணியின் பிறந்த நாள் நினைவாக கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதிக்கு “இராணி எலிசபத் ஜெட்டி” (Queen Elizabeth Jetty) என்று பெயரிடப்பட்டது. 

மகாராணியின் மொத்த உலகப் பயணங்களிலேயே இலங்கையைப் போல வரவேற்பும் உபசாரமும் வேறெங்கும் அளிக்கப்பட்டதில்லை என்று லண்டன் பத்திரிகைகள் புகழ்ந்தன. 

1981விஜயம் 

27ஆண்டுகளுக்கும் பின்னர் 1981ஆம் ஆண்டு ஒக்டோபர் 21இலிருந்து 25வரை இலங்கை விஜயம் செய்திருந்தார். சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட பொன்விழா ஆண்டாக அந்த வருடம் அமைந்திருந்தது. இலங்கைக்கு பிரித்தானிய ஆட்சியின் போது 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதும் பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலேயே இலங்கைக்குத் தான் அவ்வாறு முதற் தடவை சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதையும் அறிவோம். அதைக் கொண்டாடுமுகமாக ஜே.ஆர். செய்திருந்த ஏற்பாடுகளுக்கு பிரதம அதிதியாக இராணியை அழைத்திருந்தார்.  

ஒக்டோபர் 22ஆம் திகதி சர்வஜனவாக்குரிமையின் பொன் விழாவை முன்னிட்டு காலிமுகத்திடலில் அணிவகுப்புகள் உட்பட பல நிகழ்ச்சிகள் மகாராணியின் முன்னால் நிகழ்த்தப்பட்டன. ஜனாதிபதி ஜே.ஆர். தனது உரையை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் ஆற்றினார். இராணியின் ஆங்கில உரை உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. 50,000க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட சிறார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இலட்சக்கணக்கான மக்களும் குழுமினார்கள். அன்றைய தினத்தை விடுமுறையாகவும் அரசு அறிவித்திருந்தது.  இதே நாள் நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு வைபவத்திலும், கொழும்பு மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்கள் அரச தம்பதிகள். 

அங்கிருந்து அவர்களுக்கான விசேட இரயிலில் புறப்பட்டு அடுத்த நாள் 23ஆம் திகதி அனுராதபுரத்தை அடைந்தார்கள். இவர்களுடன் ஜே.ஆரும் சில அமைச்சர்களும் ஒன்றாகப் பயணித்தார்கள். ஆயிரக்கணக்கான சிறார்களும் மக்களும் பிரித்தானிய, இலங்கை கொடிகளை உயர்த்தி அசைத்தபடி அவர்களை பாதை எங்கிலும் வரவேற்றார்கள். 

ஸ்ரீ மகாபோதி விகாரைக்கும் சென்று வணங்கினார். அனுராதபுரத்தின் பழைமையான தொல்லியல் இடங்களைப் பற்றி வழிகாட்டுவதற்காக அன்றைய தொல்லியல் ஆணையாளர் மங்கள கருணாரத்ன, அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகியோரும் இணைந்திருந்தனர். 

கண்டி, பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களுக்குப் பயணித்தார். புத்தரின் சமாதி சிலை, ருவன்வெளி சாய, ஜேதவனாராமய, சந்தகடபஹான, குட்டம் குளம், அவுகன புத்தர் சிலை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டனர். 

அங்கிருந்து மகாவலி எச் வலயத்தில் எலிசபத் மகாராணி வீதியையும் திறந்து வைத்தார். போகும் வழியில் சில குளங்களையும் பார்வையிட்டுக் கொண்டே காரில் பவனியாக மாத்தளை வழியாக கண்டியை சென்றடைந்தார்கள்.  

அன்று இரவு கண்டி தலதா பெரஹெரா இடம்பெற்ற போது கண்டி மத்துமபண்டார ஏரியை பார்த்தபடி நிர்மாணிக்கப்பட்டிருந்த பத்திருப்புவவில் இருந்தபடி அரச தமபதிகள் பெரஹரவைப் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அரச தம்பதியினர் கண்டி ஜனாதிபதி மாளிகையில் அன்றைய இரவைக் கழித்தனர். 

பிரித்தானிய நிதி உதவியுடன் தனது கொள்ளுப் பாட்டியின் பெயரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பார்வையிட்டது அந்தப் பயணத்தின் மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகும். 

இலங்கையின் மாபெரும் நீர் இயக்கவியல் திட்டம் அது. ஆனால் அந்த அணைக்கட்டை 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி இராணியின் சார்பாக அன்றைய பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். 

1981ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி படையினரின் மரியாதைக்கு மத்தியில் அரச வாகன அணிவகுப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து இங்கிலாந்துக்கு பயணமானார். 

அது தான் இராணியின் இறுதி இலங்கை விஜயம். பின்னர் 2013ஆம் ஆண்டு நவம்ர் மாதம் இலங்கையில் நிகழ்ந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை ஆரபித்து வைப்பதற்கு இராணி வரக்கூடும் என்று எதிர்பார்க்ப்பட்டபோதும் உடல்நலக் குறைவின் காரணமாக அவரால் வரமுடியவில்லை. அதற்கு பதிலாக இளவரசர் சார்லஸ் இங்கு வந்தார்.  

இராணியின் கணவர் அரசர் பிலிப் கடந்த ஆண்டு மறைந்தார். எலிசபத் மகாராணி இரு தடவைகள் மாத்திரமே வந்திருந்தபோதும் அரசர் பிலிப் இலங்கைக்கு மேலும் சில தடவைகள் வந்து தங்கிச் சென்றார். அவருக்கு இலங்கை புதிய நாடல்ல. குறிப்பாக இரண்டாம் உலக யுத்த காலத்தில் திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதற்காக அங்கே இருந்த கடற்படையை வழிநடத்திக் கொண்டிருந்தவர் அவர். அங்கே இருந்த காலத்தில் அவர் ஒரு கார் ஒன்றையும் அவருக்கென 12பவுண்கள் கொடுத்து வாங்கி வைத்திருந்தார். அது தான் அவரின் முதல் காரும். அதில் தான் அவர் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கும் 260கிலோமீட்டர்கள் ஒட்டி வருவார். அந்தக் கார் இப்போதும் கோல்பேஸ் ஓட்டல் உரிமையாளரால் வாங்கப்பட்டு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருகிறது. 

இலங்கை 1948ஆம் ஆண்டு 4ஆம் திகதி பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டபோதும் அது பூரண சுதந்திரமாக இருக்கவில்லை என்பதும், டொமினியன் அந்தஸ்து மட்டும் தான் என்பதையும் அறிவோம். 1972ஆம் ஆண்டு தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அமைந்த ஆட்சியில்  பாராளுமன்றத்தின் மூலம் டொமினியன் அந்தஸ்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்ட்டது.  புதிய அரசியலமைப்பின் மூலம் இலங்கை அப்போது குடியரசாக ஆனது. 

என். சரவணன்

Comments