செப்டெம்பர் 15இல் மறைந்த கே.எஸ்.சுக்கு தினகரனின் அஞ்சலி | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

செப்டெம்பர் 15இல் மறைந்த கே.எஸ்.சுக்கு தினகரனின் அஞ்சலி

இரகசியமாக செய்யப்பட்ட    ஏற்பாடுதான் அது. பதினைந்து வருடங்களும் முன்னர் கே.எஸ். சிவகுமாரனுக்கு எழுபது வயது. தனக்கு எழுபதை எட்டும் தருணத்தில் கொழும்பு இலக்கிய அன்பர்கள் இணைந்து ஒரு பிறந்த தின விழாவை நடத்துவார்களானால் அது தனக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று என்னிடம் தன் ஆதங்கத்தை இரண்டு மூன்று தடவைகள் வெளிப்படுத்தியிருந்தார்.

கொழும்பு இலக்கிய அன்பர்கள் தன்மீது அக்கறை கொள்வதில்லை; தான் ஆற்றியிருக்கும் இலக்கிய பணிகளை இவர்கள் பொருட்டாகக் கொள்வதில்லை என்ற மனக்குறையின் வெளிப்பாடு தான் இது. உண்மை அது அல்ல என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொரு சனிக்கிழமை பகல் பொழுதிலும் ஆனந்தவிகடன், தீராநதி, உயிர்மை போன்ற சஞ்சிகைகளை வாங்கவும், புதிய புத்தகங்கள் வந்துள்ளவா என்று நோட்டம் பார்க்கவும் செட்டியார்த்தெரு பூபால சிங்கத்துக்கு போய்வருவது என் வழக்கம். சந்தர்ப்பம் கிடைத்தால் அதிபர் ஸ்ரீதர்சிங்குடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு வருவேன். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கே.எஸ். சின் பிறந்த தினம் வரவிருப்பதையும் அவரது ஆதங்கத்தையும் அவர் காதில் போட்டு வைத்தேன். எந்த முகக்குறிப்பும் காட்டாமல் கேட்டுக் கொண்டார். நானும் அதை மறந்து போனேன். அக்டோபர் விடிவதற்கு ஒரு சில தினங்கள் இருக்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலை மேல் மாடியில் ஒரு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் சமூகமளிக்கும்படியும் அழைப்பு வந்தது. அப்போது இலங்கையில் இருந்த இளைய அப்துல்லாவிடமும் இதைச் சொன்னேன். ஆனால் என்ன வைபவம் என்பது எனக்குத் தெரியாது.

பூபாலசிங்கம் மேல்மாடி இலக்கிய அன்பர்களால் நிறைந்திருந்தது. கே.எஸ். சிவகுமாரனின் 70வது பிறந்ததின விழா என்றும் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சொன்னார்கள். தெளிவத்தை ஜோசப், மேமன் கவி, மல்லிகை ஜீவா, அந்தனி ஜீவா, கலைச்செல்வன், லண்டன் இளைய அப்துல்லா, பொன்னுத்துரை உட்பட பலர் வருகை தந்திருந்ததாக ஞாபகம். கே.எஸ்.சின் இலக்கிய பணிகள் பற்றி அங்கே உயர்த்திப் பேசினார்கள். பாராட்டி பொன்னாடை, மாலை அணிவித்தார்கள். விளம்பரப் பிரியரான கே.எஸ். அப்படியே குளிர்ந்து போனார். பல்லில் போட்டு அரைப்பதற்கும் தந்தார்கள். தான் எதிர்பார்த்தது அப்படியே நடந்ததில் கே.எஸ்.சுக்கு பரம திருப்தி.

மனிதர்களில் காணப்படக்கூடிய பல இனிய பக்கங்களை கே.எஸ்.சில் காணமுடியும். அவர் கோபப்பட்டு எவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தவறு எனப்படுவதையும், நாசுக்காக சொல்வார். தமிழில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசக் கூடியவர். ஆங்கிலமும் அப்படித்தான். அவரது ஆங்கில பேச்சு சங்கீதம் போன்றிருக்கும் அவர் மொழிகளை நேசித்ததே இதற்குக் காரணம். அவர் நேர்மையானவராகவும் தனது பணிகளை தன்பாணியில் செய்பவராகவும், அழுத்தங்களுக்கு அடிபணியாதவராகவும் இருந்தார். முயற்சி செய்திருந்தால் ஆங்கில இலக்கிய ஆசிரியராகவோ விரிவுரையாளராகவோ பணியாற்றிருக்கலாம். ஆனால் இயல்பிலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவரை இதழியல்துறை தொடர்ச்சியாக ஈர்த்து வந்திருக்கிறது.

இஸ்லாமிய வாசகர்களை மனதில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நவமணியின் முதலாவது ஆசிரியர் கே.எஸ். சிவகுமாரனே. வீரகேசரியில் இணையாசிரியராக பதவி வகித்த போதிலும் ஒரு ஆலோசகர் அளவில் செயல்பட்டதாகவும் அதனால் அப்பத்திரிகையின் ஓரிரு முக்கிய புள்ளிகளுடன் அவர் முரண்பட வேண்டியிருந்தது என்பதும் அக் காலத்தில் பணியாற்றிய ஒருவர் என்னிடம் கூறிய தகவல். 'த ஐலண்ட்' பத்திரிகையில் துணையாசிரியராக பணியாற்றியதோடு சில வருடங்களுக்கு முன் டெய்லி நியூஸ் நாளேட்டில் துணையாசிரியராகவும் கடமையாற்றினார்.

இவ்வாறு பத்திரிகையுலகின் மாபெரும் சபைகளில் பீடு நடை போட்டிருந்தாலும் அங்கெல்லாம் தான் பெற்ற அனுபவங்களை அவர் வெளியாருடன் பகிர்ந்து கொண்டதில்லை. ஓரிடத்திலும் அவரால் நிலைக்க முடியாமல் போனதற்கு அவரது நேர்மையும் வளைந்து கொடாத்தன்மையுமே காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பத்திரிகைகளில் அவர் தொடர்ச்சியாக எழுதிவந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்தில் எப்போதும் வார்த்தை சிக்கனமும் சிறிய வசனங்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். திரைப்படங்களை அதுவும் உலகத்திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பர். வருடா வருடம் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தன் சொந்தச் செலவில்  கலந்து கொள்வது அவரது பிரியமான பொழுதுபோக்கு. அப்படி ஒரு உலகத் திரைப்பித்து அவரில் இருந்தது. அவரது திரை விமர்சனம் உயர் தரத்தில் இருக்கும். திரைப் பித்துக்கு அப்பால் அவர் மிக நேசித்த விஷயம் வானொலி. இலங்கை வானொலி ஆங்கில சேவையில் நிகழ்ச்சி நடத்துபவராகவும், செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பவராகவும் நீண்டகாலம் பகுதிநேர சேவையாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

ஒரு உயர் உத்தியோகத்தில் நிலைத்திருப்பதற்கு பதிலாக கலை இலக்கிய உலகில் சஞ்சரிப்பதையே அவர் விரும்பினார். அதில் அவருக்கு ஒரு திருப்தி கிடைத்தது. மூப்பின் காரணமாக தன் நடமாட்டங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்வரை தமிழ்ச் சங்கத்தின் வார இறுதி வைபவங்களில் அவரை நிச்சயம் பார்க்க முடிந்தது. முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கவனிப்பது அவர் வழக்கம்.

இலங்கையின் மிகச் சிறந்த தமிழ் திறனாய்வாளர்களில் இவரும் ஒருவர். ஒரு திரைப்படமோ, உரையோ அல்லது நூலோ, அவரது பார்வை கச்சிதமாக இருக்கும். தமிழர்களைப் போலவே அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எவரையும் குறை சொல்லி பேசும் வழக்கம் அற்றவர். நாம் எவரைப் பற்றியாவது குறையாகச் சொல்லி, அது உண்மை என அவர் நம்பினாலும், "மனுஷர்கள் அப்படித்தான்... அதை விடுங்கோ... இப்போ எல்லாம் எப்படிப் போகுது" என்று பேச்சை மாற்றி விடுவார். அவர் அப்பழுக்கற்ற  ஒரு ஜென்டில்மேன் என்றால் யாருமே ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஓமானில், மாலைத் தீவில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியது, சிலகாலம் அமெரிக்கா சின்சினாட்டியில் குழந்தைகளுக்கு கற்பித்தது போன்ற தகவல்கள் எல்லாம் எப்போதாவது பேச்சு வாக்கில் வரும். இணையத்தில் சஞ்சரிப்பதையும் முகநூல் உரையாடல்களிலும் அலாதி விருப்பம் கொண்டவர்.

அவரது வாழும் பாணி அலாதியானது. அதனால் அவரை பலரும் புரிந்து கொள்ள தவறிவிட்டார். அது அவரைச் சுற்றி ஒரு வெறுமையை உருவாக்கியிருக்க வேண்டும். அங்கே தான் இணைய வழி உரையாடல்கள் அவருக்குக் கைகொடுத்தன.

"நான் வெகுநேரம் இணையத்தில் இருப்பதை என் மனைவி விரும்புவதில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் விளக்கை அணைத்து போய்ப் படுங்கள் என்பார். நானும் நல்ல பிள்ளை மாதிரி படுத்துக் கொண்டு இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து கொள்வேன். அப்புறம் விடிய ஐந்து மணிவரை இணையத்தில் உட்கார்ந்திருப்பேன்" என்று புன்னகையுடன் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். பலருக்கும் தெரியாத இன்னொரு விஷயம், அவர் விதவிதமாக உண்ணவிரும்பும் சாப்பாட்டுப் பிரியர் என்பது. சில தடவைகள் அவருடன் பிரியாணி சாப்பிடச் சென்றிருக்கிறேன். லேக்ஹவுஸுக்கு வந்து எங்கே போகலாம் என்று கேட்பார். அசைவமாகத்தான் சாப்பிட விரும்புவார். ஆறுதலாக பேசிப் பேசி சாப்பிடுவார். அவர் அடிப்படையில் கலை உள்ளம் கொண்ட ரசிகர். சிருங்காரத்தில் விருப்பம் கொண்டவர். எல்லா கலாரசனை கொண்டவர்களும் ரசிகர்களாகவும், அனுபவிக்க விரும்புபவர்களாகவும் ரசித்து சாப்பிட விரும்புபவர்களாவும் இருப்பது இயல்பு.

ரசிகராக இருந்ததால்தான் அவரால் விமர்சனப் பார்வையையும் திறனாய்வையும் சிறப்பாக முன்வைக்க முடிந்தது. 2013ம் ஆண்டில் 'ஞாபக வீதியில்' என்ற தலைப்பில் அறுபது வயதைத் தாண்டிய இலங்கைப் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களின் கடந்து போன நினைவுகளை மீட்டும் ஒரு பகுதியை வாரமஞ்சரியில் ஆரம்பித்தோம். பத்திரிகையாளர் மணி ஸ்ரீகாந்தன்தான் ஒவ்வொருவரையும் பேட்டி எடுத்தார். பெப்ரவரி 24ம் திகதி வாரமஞ்சரியில் கே.எஸ். சிவகுமாரனின் சுவையான பேட்டி வெளியானது. அதில் வெகு இயல்பாகவும் நகைச்சுவையாகவும் தன் வாழ்க்கை அனுபவங்களை அவர் கூறியிருந்தார். திருட்டுத்தனமாக பவளக்கொடி படம் பார்த்து அப்பாவிடம் அடிவாங்கியது; ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணைக் காதலித்தது; தன் திருமணம், தன் சிறுவயது குறும்புகள் என எல்லாவற்றையும் பகிர்ந்திருந்தார். மட்டக்களப்பு புளியந்தீவுக்கு அருகே அமைந்திருக்கும் சிங்களவாடிதான் தான் பிறந்த இடமென்றும் தன் பாட்டியாரின் கேரளத் தொடர்பு பற்றியும் அவர் கூறியிருந்தார். தான் வெளியே சொல்ல விரும்பிய ஆனால் அதற்கான வாய்ப்பில்லாத நிலையில் அதற்கு வடிகாலாக ஞாபக வீதி அமைந்ததில் அவருக்கு பரம திருப்தி.

அவர் சுமார் 27நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று ஈழத்து உளவியல் சிறுகதைகள் என்பதாகும். 1959−1965காலப்பகுதியில் அவர் எழுதிய உளவியல் சிறுகதைகளின் தொகுப்பு அது. தமிழில் உளவியல் ரீதியான படைப்புகள் மிகவும் குறைவு. அதாவது இலங்கைத் தமிழ் எழுத்துலகில். உளவியல் ரீதியாக எழுதக் கூடிய சகல தகுதிகள் இவருக்கு இருந்ததால் அவரைக் கண்டபோதெல்லாம் உளவியல் சார்ந்த சிறுகதைகள் அல்லது கட்டுரைகள் தரும்படி கேட்டு நச்சரிப்பேன்.

ஒரு கதை தருவதாகச் சொன்னார். ஆனால் தரவே இல்லை.

தினகரனுக்கும் அவருக்குமான தொடர்பு கைலாசபதி காலத்தில் இருந்து தொடர்வது. அதில் தொய்வு ஏற்பட்டதில்லை. 2019வரை தினகரனில் பத்திகளை எழுதி வந்தார். அரைக் காட்சட்டை, டீ ஷேர்ட், கால்களில் ஸ்போர்ட்ஷூ என வாரமஞ்சரி ஆசிரிய பீடத்துக்குள் வந்து கையெழுத்து பிரதிகளை சக ஊடகவியலாளர் வாசுகியிடம் தந்து சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருப்பது கண்களில் நிழலாடுகிறது. போய்வாருங்கள், ஜென்டில்மேன் கே.எஸ்...

அருள் சத்தியநாதன்

Comments