பசுபிக் பிரச்சினைகள் இந்து சமுத்திரத்துக்குள் நுழைவதை நாம் ஒருபோதும் அனுமதியோம் | தினகரன் வாரமஞ்சரி

பசுபிக் பிரச்சினைகள் இந்து சமுத்திரத்துக்குள் நுழைவதை நாம் ஒருபோதும் அனுமதியோம்

முதலாவது குழு இன்று பட்டம் பெற்று வெளியேறுகிறது. இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது குழுவாக அரசாங்க சேவையைச் சேர்ந்த சிவிலியன்களும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களும் இங்கு பயிற்சிகளைப் பெறவிருப்பதாக முப்படைகளின் தளபதி என்னிடம் கூறினார். நாம் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்ள தயாரென்றால், ஏன் நாம் வெளிநாட்டு விரிவுரையாளர்களின் சேவையையும் பெற்றுக்கொள்ளக் கூடாது. எதிர்காலத்தில் அதுதொடர்பில் முடிவு எடுக்கலாம். பயிற்சிபெற்று வெளியேறுவோரின் நடத்தை மற்றும் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பே இக்கல்வி நிறுவனத்தின் தரத்தை உயர்த்துகிறது.  

தேசிய பாதுகாப்புக் கல்லூரியை அமைப்பதற்காக இடமொன்று தேடப்பட்டு வந்தபோது, மும்தாஜ் மஹால் எனும் இக்கட்டடத்தை ஒருவர் சிபாரிசு செய்தார். இது எட்மிரல் ஜொப்ரி என்பவருக்குச் சொந்தமானது. அவரே அப்போது தலைமை தளபதியாக இருந்தார். அவர் 1942ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு வந்தார். இக்காலப்பகுதியிலேயே பிரிட்டிஷ் மற்றும் அதன் நேச நாடுகளின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. 1944இலேயே எட்மிரல் லோட் லுயிஸ் மவுன்ட்பெட்டன் இலங்கைக்கு வருகை தந்தார்.  

நாளேடுகளை எடுத்துப் பார்த்தால் பிரபு ஆலன் ப்ரூக் மற்றும் அக்காலத்தின் சில தளபதிகள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அப்படியானால் எட்மிரல் லேட்டனின் பங்கு அங்கு என்னவாக இருந்தது? அவை இறுதிவரை மதிப்பிடப்படவில்லை. சிலர் அவரைக் குறை கூறினாலும் பலரும் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவே கூறுகின்றனர். இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய இடத்தை வகிப்பதனை வைத்துப்பார்க்கும் போது அவர் எவ்வாறான பாத்திரத்தை வகித்திருப்பார் என்பதை எம்மால் மதிப்பிட முடிகிறது. இதே வளாகத்தில் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டாலும் அவர் மீதான முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக அதனை நாம் பாராட்டவே செய்கின்றோம்.  

இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியல் துரதிர்ஷ்டவசமாக எமது நாட்டை குத்துச்சண்டை மேடையாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தால். உண்மையில் இந்து சமுத்திரத்தில் சீனாவால் இயக்கப்படும் 17துறைமுகங்கள் உள்ளன. அவை வெவ்வேறு கம்பனிகளுக்கு உரியவை. டுபாயால் இயக்கப்படும் மேலும் சில துறைமுகங்களும் அங்கு உள்ளன. அவை யாவுமே, வணிக துறைமுகங்களாகும். ஹம்பாந்தோட்டையும் அதே போன்றதே. அது ஒரு இராணுவ துறைமுகம் அல்ல.  

ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள டார்வின் துறைமுகம் தான் பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாம் இங்கே வந்து பயிற்சி பெற எவருக்கும் அனுமதியளிக்கவில்லை. எனினும் எமது கடற்படையின் தெற்கு கொமாண்டோ பிரிவை நாம் அங்கு அமைத்துள்ளோம். இராணுவத்தின் பிராந்திய தலைமையகம் மற்றும் விமானப் படையின் ஒரு பிரிவும் அங்கு உள்ளது. எனினும் அவர்களில் எவரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் சம்பந்தப்படவில்லை. இது ஒரு வணிக துறைமுகம் என்பதை மாத்திரம் அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.  

வணிக துறைமுகமாக இருந்தாலும் துறைமுகம் தொடர்பில் தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிப்பது இதன் மூலோபாய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மேலும் சீனாவுடன் நாம் செய்துகொள்ளும் அடுத்த ஒப்பந்தம் அத்தகைய ஊகங்களை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். அது இலங்கைக்கான கடன் குறைப்பு பற்றியது மட்டுமே.  

இந்தோ- பசுபிக் என்பதற்கான பல வரைவிலக்கணங்கள் உள்ளன. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்து இந்தோ பசிபிக், விரிவடைந்து செல்கிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், இரண்டு வெவ்வேறு சமுத்திரங்கள் இணையும் ‘ஆசியான்’ என்று இதனை அடையாளப்படுத்துகிறோம்.  

ஒரு தடவை லோக் சபாவில் உரையாற்றிய பிரதமர் சின்சோ அபே இரண்டு சமுத்திரங்களின் சங்கமமாக இதனை குறிப்பிட்டிருந்தார். இது முக்கியத்துவமானது என்றபோதும் பசுபிக்கிலும் பார்க்க இங்கே நிலவும் பாதுகாப்பு நிலவரம் வித்தியாசமானது என்பதனால் எம்மைப் பொறுத்தளவில் இது மிகவும் முக்கியமாகும்.  

பசுபிக்கை மையமாகக் கொண்டு அப்பகுதிகளில் எப்போதும் ஒரு பதற்ற நிலை இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்து சமுத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. முதலாவதாக சமுத்திரங்களால் இங்கு பதற்ற நிலை உருவாவதில்லை. அது இமாலயத்திலிருந்தே வருகின்றது.  

கிழக்கு ஆபிரிக்க பிராந்தியம் மற்றும் செங்கடலில் இராணுவமயமாக்கல் நடந்து வருகின்றது. உண்மையில், கிழக்கு ஆபிரிக்க பிராந்தியம் இராணுவமயமாக்கலை முன்னெடுத்து வருகின்றபோதும் நாமே அதை செய்வதாக சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றார்கள். நாம் ஒரு சிறிய தேசமாக இருப்பதனால் இவ்வாறான நிலையை சந்திக்க நேரிட்டுள்ளது.  

எவ்வாறாயினும் பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலை இங்கே தொடர்வதை நாம் மட்டுமல்ல ஆசியானும் விரும்பவில்லை. இப்பிரச்சினைகள் தென் சீனக்கடலைத் தாண்டிச் செல்வதனை அவர்கள் விரும்பவில்லை. நாமும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்.  

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் இராணுவக் கூட்டணிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், பசிபிக் பிரச்சினைகள் இந்து சமுத்திரத்திற்குள் வருவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இந்து சமுத்திரம் ஒரு ஸ்திர நிலையில் தொடர்ந்து இருக்கும் அதேநேரம் இது அனைவராலும் அணுகக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். இதற்காகவே இங்கு பயணிக்க விண்ணப்பிக்கும் கப்பல்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் கடலுக்கடியில் அமைக்கப்படும் கேபிள்களுக்கு இடமளிக்கவும் ஏதுவாக இந்து சமுத்திரத்துக்கென ஒரு ஒழுக்கக் கோவையை கேட்டிருந்தோம்.  

வணிகச் செயற்பாடுகள் இங்கு சுமுகமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகம் முழுவதற்கும் தேவையான பெற்றோலியம் மற்றும் எரிசக்தி விநியோகம் இந்த சமுத்திரத்திற்கு ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையான கப்பல்கள் இந்த வழியாகச் செல்கின்றன. எனவே இப்பகுதி யுத்தம் மற்றும் முரண்பாடுகளுக்குரிய இடமாக மாறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது.  

தேவையற்ற விதத்தில் போர்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூரின் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். அக்கூற்றை நானும் ஏற்றுக்கொள்வதனால் அது எனக்கு கவலையளிக்கிறது.  

மேலும், இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டியை நாம் பார்க்க விரும்பவில்லை.  

காரணம் அது பின்னர் எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கும். இந்து சமுத்திரத்தை பிறர் அணுக முடியாத வகையில் மூடிவிட வேண்டும் என்று நாம் கூறவில்லை.  

1977இல் இந்த சமுத்திரத்தில் சமாதான வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அங்கு அமெரிக்க கடற்படையினரின் வருகை தடைசெய்யப்படவில்லை.  

பிரதி வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் அப்போது அந்த செய்தியை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இதுகுறித்து எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சமாளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.  

ஜப்பானிய கடல் பாதுகாப்பு படைகளை இங்கு பார்த்தோம். நிச்சயமாக நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அவர்களை இங்கு காண விரும்புகிறோம். ஐரோப்பிய கடற்படைகள் கூட இங்கு வருகின்றன. இதுவே வளர்ச்சியாகும்.  

கடற்படையினருக்கு இங்கு வரவேண்டுமென்றால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் கடற் கொள்ளைக்கு எதிராக செயற்பட உதவுகின்றனர். எனினும் எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது என அணிசேரா நாடுகளின் மாநாட்டில் டி.எஸ். சேனநாயக்க முன்வைத்த கொள்கையை நாம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றோம். எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும் நாம் ஒரு அணியில் சேர மாட்டோம். அதிலிருந்து விலகியே இருப்போம். எனவேதான் அதிகாரம் கூடிய நாடுகளுக்கிடையிலான முறுகல்கள் இந்து சமுத்திரத்தில் எவ்வாறான தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.  

என்றாலும், இராணுவம் அல்லாத பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதை எம்மால் இன்னமும் தவிர்க்க முடியாமல் உள்ளது. பல நாடுகளில் உள்ளதைப் போன்றே நாமும் உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சியில் தடை, உலகளாவிய காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.  

நாம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எமது கவனம் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இலங்கையின் பாதுகாப்பை நாம் உறுதி செய்யும் அதேநேரம், எந்தவொரு பாதகமான விளைவும் இந்தியாவுக்கு ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம்.  

இந்தியாவைப் போன்றே எமக்கு மாலைதீவும் மிக முக்கியமானது. எமது கடல் எல்லைகள் இந்தியாவுடனும், மாலைத்தீவுடனும் இருக்கின்றது. அவர்களின் பாதுகாப்புப் பிரிவினருக்கு சிறந்த பயிற்சியைக் கொடுப்பதற்கே எம்மால் உதவ முடியும். இலங்கையில் தற்போது பயிற்சி பெற்று வரும் மாலைதீவு பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் பிரதானியிடம் கேட்டுள்ளேன். எனவே, இவைதான் எமது கொள்கை. இந்த உள்ளடக்கத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்படுவோம்.அடுத்த கட்டமாக நாம் இலங்கையின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் 2030ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை நாங்கள் பெற விரும்புகிறோம்.  

யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் நாம் வெற்றிகண்டோம். தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவர வேண்டும். அதைதான் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.  

வடக்கு, கிழக்கு  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் தற்போது பேச்சு நடத்தி வருகிறேன். என்றாலும் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.  

தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம், முன்னர் எதிர்கொண்ட பயங்கரவாதத்தை போன்றதல்ல. நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர்கொள்ள மாட்டோம் என நம்புகின்றேன். என்றாலும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் தரப்பினரைத் தாக்குவதற்காக பயங்கரவாதிகள் இலங்கையை பயன்படுத்தக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.  

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் குறித்தும் நாம் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்துறையுடன் தொடர்புடைய ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் நாம் இதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.  

Comments