மலையக கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுபடும் சாத்தியக்கூறு | தினகரன் வாரமஞ்சரி

மலையக கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுபடும் சாத்தியக்கூறு

கடந்த வார இறுதியில் காற்று வாக்கில் ஓர் குளிர்ச்சியான செய்தி காதுகளை வந்தடைந்தது. மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் கூடிப் பேசினார்கள் என்பது தான் அந்தச் செய்தி. இதனால் பெருந்தோட்டக் கம்பனி தரப்பு ஆடிப் போய்விடும் என்றோ பேரம் பேசும் அரசியல் வாய்ப்பு நாடி வருமென்றோ எண்ணினால் அது சப்பைக் கொட்டுத்தான்.

ஏனெனில் மலையக தலைமைகளிடம் வாய்பலம் மிக மிக அதிகமாகவே இருக்கின்றது. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதை விட அதிகமாக எதிர்தரப்பிடம் பணபலம் இருக்கின்றது. கூடவே பக்க பலமும் இருக்கின்றது. அதனால் தான் அத்தரப்பு ஆட்டிப்படைப்பவையாகவே இற்றைவரை இருந்து வருகின்றது. தவிர எதிரணியிடம் ஒற்றுமை ஓங்கி நிற்கின்றது. இங்கே வேற்றுமை தான் தேங்கி கிடக்கின்றது.

அதனால் தான் கூடி பேசியிருப்பது ஒரு வகையில் குளிர்ச்சியான சங்கதியாக தெரிகின்றது. ஏலவே இப்படி ஒன்று கூடல் இடம்பெறவே செய்திருக்கின்றது. ஆயினும் விளைவு என்னவோ புஸ்வாணம் தான். இப்பொழுது புத்திஜீவிகளையும் இணைத்துக் கொண்டிருப்பதால் நல்ல செய்தி வரலாமென பலரும் நம்புகிறார்கள். முதலில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவர் யார் என்று பாருங்கள். பேராசிரியர் எஸ். விஜயசந்திரன். சமூக ஆய்வாளர்.

இப்பேச்சுவார்த்தை கடந்த 8ஆம் திகதி 'கெப்ரி' தனியார் விடுதியில் நடந்தேறியது. மனோ கணேசன் (ஜனநாயக மக்கள் முன்னணி), ஜீவன் தொண்டமான் (இ.தொ.கா), பழனி திகாம்பரம் (தொழிலாளர் தேசிய முன்னணி), வே. இராதாகிருஷ்ணன் (மலையக மக்கள் முன்னணி), வடிவேல் சுரேஷ், எஸ். வேலுகுமார், எம். உதயகுமார் இவர்கள் அனைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் பேராசிரியர் சந்திரபோஸ் (சமூக ஆய்வாளர்), சிவலிங்கம் சதீஸ் குமார் (ஆய்வாளர், மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர்), பெ.முத்துலிங்கம் (சிவில் செயற்பாட்டாளர்), செந்தில் தொண்டமான் (இ.தொ.கா தலைவர்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சம். ஆக இது ஒரு அரசியல் பின்புலம் கொண்ட ஒருங்கிணைப்பு என்று எவராவது கருதினால் அது தவறு. ஆனால் அரசியல் வகிபாகம் இன்றி எதனையும் சாதித்து கொள்ள முடியாது என்பதும் உறுதி.

சரி இப்பேச்சுவார்த்தையில் என்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னும் தொனிப் பொருளில் ஒரு மீளாய்வாகவே இதனை பலரும் பார்க்கின்றார்கள். சமகால அரசியல் நெருக்கடியின் பின்புலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம், சமூக நலன்கள் குறித்ததான ஓர் அலசல் இடம் பெற்றுள்ளது. இவ்விரு அம்சங்களின் அடிப்படையில் ஏகப்பட்ட பதிவுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. புதிதாக எதனையும் தேடிப்பிடிக்க வேண்டிய தேவையேதும் இருப்பதாகப் படவில்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன சொல்கிறதாம். இம்மக்களின் பிரச்சினைகளை இனம்காண அந்தந்த துறைசார் நிபுணர்கள் கொண்ட குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அறிக்கைப் பெறுவதன் மூலம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருதல். மக்கள் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அவலங்களுக்கு ஆளாகி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது புதிய தகவல் அல்ல. இது பற்றி தினகரன் மலையகப் பகுதி அக்குவேறு ஆணி வேராக தொடர்ச்சியாகவே வெளிப்படுத்தித் தான் வருகின்றது. அப்படிப் பார்க்கப் போனால் மீண்டும் ஆய்வு நடாத்தி அறிக்கை சமர்ப்பித்த பின் அடுத்தக் கட்ட ஏற்பாடு என்பது ஒரு ஊர்தல் முயற்சியாகவே அமைந்து விடுமோ என்னும் ஏமாற்றம் புத்திஜீவிகளிடம் காணப்படவே செய்கின்றது.

ஏனெனில் துறைசார் ஆய்வுகளை மேற்கொள்ள எடுக்கும் காலவிரயம் வரை மக்கள் நெருக்கடியை தாங்கிக் கொள்வார்களா என்பது ஒரு கேள்வி. இனி என்ன தான் செய்வது? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் பற்றி பலரும் அறிவார்கள். பன்முக ஆய்வாளர். எழுத்தாளர். ஆளுமை நிறைந்த பேச்சாளர். இவர் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் பல ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பதை நாமே பல முறை இந்தப் பகுதியில் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். மலையக சமூகத்தின் கடந்தக் கால, நிகழ்கால வாழ்வியலை ஆய்வு செய்து புள்ளி விபரங்களுடன் சத்தியமான பதிவுகளை வெளிக் கொணர்ந்தவர். இந்த விடயத்தில் புள்ளி விபரங்களைத் திரட்டுவதில் இவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல. திலகராஜ் தமது தரவுகளுடன் கூடிய திரட்டுக்களை பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்து உரைகளை நகழ்த்தி இருக்கிறார். பொது வெளியிலும் எடுத்துச் சென்றுள்ளார்.

நாமறிந்தவரை திலகராஜ் வசமிருக்கும் ஆய்வுத் தகவல்களே அடுத்தக் கட்ட நகர்வுக்குப் போதுமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் தேடியவரை திலகராஜ் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அப்படியானால் அது ஒரு இழப்பாகவே இருக்கும். தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைமைகளுக்கும் திலகராஜூக்கும் இடையில் அரசியல் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் மலையக மக்களின் பொது நலன் நாடும் இவ்வாறான அமர்வுகளுக்கு அவரது பிரசன்னமும் பங்களிப்பை தரலாம்.

அதே வேளை திலகராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் இந்த வாய்ப்பைப் புறக்கணித்திருக்கும் பட்சத்தில் அது வரவேற்புக்கு உரியதாக மட்டும் இருக்கப் போவதில்லை. மலையக தலைமைகள் சில ஒன்று கூடி தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஆரம்பித்த வேளை பெரும்பான்மையின ஊடகங்கள் இனவாத ரீதியில் சல சலப்பை ஏற்படுத்தியமை ஞாபகம் இருக்கலாம். ஆனால் அதை விட பெறுமதியான ஒரு காரியம் ஒட்டுமொத்த மலையக தலைமைகளும் ஒரே மேடையில் அமர்ந்து அரசியலுக்கு அப்பால் நின்று மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி பேசியிருப்பது என்பதே பலரதும் அபிப்பிராயம். எனினும் இதுபற்றி எந்த பெரும்பான்மை இன ஊடகமும் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிடவோ இல்லை. ஏன், தமிழ் ஊடகங்கள் கூட அப்படியொன்றும் பிரபல்யமாக தகவல் எதனையும் தரவில்லையே! ஆனால் தினகரன் வாரமஞ்சரி முதல் பக்கத்தில் முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தது. மலையக தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் சிலவேளை நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்குமோ தெரியவில்லை. பொதுவாக மலையக அரசியல் தற்போது மந்தமடைந்தே காணப்படுகின்றது. இ.தொ.கா. ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பது பரம இரகசியம் அல்ல. குறைந்த பட்சம் ஒரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பாவது ஜீவன் தொண்டமான் கையில் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இது எழுதப்படும் வரை ஈடேறவில்லை. புதிய இராஜாங்க அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியொரு வாய்ப்பை தனக்குரித்தாக்கிக் கொண்டு விட்டார் அ. அரவிந்தகுமார். ஏற்கனவே இராதா கிருஷ்ணன் நல்லாட்சிக் காலத்தில் வகித்தப் பொறுப்பு. அதிகாரம் எதுவுமில்லாத ஒரு டம்மி பதவி என்று இராதாகிருஷ்ணன் இதனை அப்போது ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அதே கல்வி இராஜாங்க அமைச்சு. இதை வைத்துக் கொண்டு கல்விமானான அரவிந்த குமார் பெருந்தோட்ட சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது பாராளுமன்ற அரசியல் இனரீதியிலான அங்கத்துவங்களால் நிரப்பப்பட்ட நிலைமையே காணப்படுகிறது. இதனால் சிறுபான்மை கட்சிகள் தமது பேரம் பேசும் சக்தியினை இழந்து வருகின்றன. இப்படி ஓரங்கட்டப்படும் அரசியல் நியாயப்பத்திரத்தின் படி வெற்றிலைப் பாக்கு வைத்து ஆதரவு தாருங்கள் என கெஞ்ச வேண்டிய நிலைமை இன்று இல்லை. இதனால் மலையக கட்சிகளும் வரட்சியாகவே காணப்படுகின்றன. அவைகள் இன்னும் தெம்புடன் இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்வது எதிர்கால தேர்தலுக்கு அவசியமானது. இதை தவறென்று சொல்ல வரவில்லை. மலையக கட்சிகள் வெறும் வீராப்புடன் சோரம் போய்விடக்கூடாது என்பதே மலையக மக்களின் ஆதங்கம். இதனால் வேற்றுமைக்கிடையே ஒற்றுமை காண்பது மிக மிக அவசியமாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அமரர் ஆறுமுக தொண்டமான் கூட இதனை வலியுறுத்திருந்தார்.

எப்படியோ அரசியலுக்கு அப்பால் நின்று ஒரு வேலைத்திட்டத்தின் படி மலையக தலைமைகளும் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் ஒன்று சேர்ந்து இயங்குவது வரவேற்க கூடிய விடயமாகும்.

அந்த வாய்ப்பை பலப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பட்சத்தில் அரசியல் மட்டத்திலும் ஒரு கவன ஈர்ப்புக்கு இடமிருக்கவே செய்யும். ஆனால் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் கூடி நிற்பது போல திலகராஜ் போன்ற புத்திஜீவிகளும் கௌரவப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பங்களிப்பு தர முன்வரும் போது அவர்களுக்கான அங்கீகாரங்களும் கௌரவங்களும் தானே வந்து சேரும். அந்த வகையில் இந்த ஒருங்கிணைப்பை உறுதியுடன் மேற்கொண்ட பேராசிரியர் எஸ். விஜயசந்திரன் பாராட்டப்பட வேண்டியவரே ஆவார்.

பன். பாலா

Comments