நிலை மாறும் இலங்கை கிரிக்கெட் | தினகரன் வாரமஞ்சரி

நிலை மாறும் இலங்கை கிரிக்கெட்

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக இலங்கை அணி தோற்கும் போதெல்லாம் தேர்வுக் குழுவாகட்டும், கிரிக்கெட் நிர்வாகமாகட்டும் எப்போதும் கூறும் ஒரே வார்த்தை ‘நிலைமாற்றக் காலம்’. பஞ்சமில்லாத தோல்விகள், சோபிக்காத வீரர்கள், தடுமாறும் அணித் தலைவர்கள் என்று இலங்கை கிரிக்கெட் துவண்டு கொண்டிருக்கும்போது ஏன் என்று கேட்டால், அணி இப்போது நிலைமாற்றக் காலத்தில் இருக்கிறது என்ற ஒரே பதில் தான் பொறுப்பானவர்களிடம் இருந்து வரும்.

அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா தொட்டு குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன வரை வெற்றிகளையே பார்த்து வந்த இலங்கை ரசிகர்களுக்கு இந்த நிலைமாற்றக் காலம் என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்று.

இலங்கை உலக அரங்கில் கடைசியாக தனது பொற்காலத்தின் எச்ச சொச்சங்களை 2014இல் பங்களாதேஷில் நடந்த டி20உலகக் கிண்ணத்துடன் இழந்தது. லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றபோதும் அந்தத் தொடருடன் சங்கக்கார, மஹேல இருவரும் டி20சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

அதற்கு அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதியில் தென்னாபிரிக்காவிடம் தோற்ற பின் இந்த இருவரும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கும் டாட்டா காட்டினார்கள். 2015ஆம் ஆண்டுக்கு அப்பால் இருவரும் டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை.

 

அத்துடன் டி.எம் டில்ஷான், முத்தைய முரளிதரம், லசித் மாலிங்க போன்ற நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட்டு முடிந்துபோனபோது இலங்கை தனது பொற்கால கிரிக்கெட்டை இழந்துவிட்டது என்று ரசிகர்கள் உணர்ந்ததில் தப்பு எதுவும் இல்லை.

கடந்த அரை தசாப்தத்திற்கு மேலான இலங்கை கிரிக்கெட்டின் கசப்பான காலத்தை மறக்க முடியாது. வென்றால் அதிசயம், தோற்பது சகஜம். 2017தொடக்கம் இலங்கை மூன்று வகை கிரிக்கெட்டிலும் 12அணித் தலைவர்களை பார்த்திருக்கிறது. கிறிஸ் சில்வர்வுட் கடந்த 10ஆண்டுகளில் இலங்கை அணிக்கு 11ஆவது பயிற்சியாளராக வந்தவர்.

அதாவது அணி தோற்கத் தோற்க தலைவர்களை மாற்றினார்கள், பயிற்சியாளர்களை மாற்றினார்கள்.

இலங்கை அணி டி20உலகக் கிண்ணத்தை வென்று இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருந்தது. 2016ஆம் ஆண்டில் இலங்கை அணி விளையாடிய 16டி20போட்டிகளில் 13ஆட்டங்களில் தோல்விகள் தான் மிச்சம். அடுத்து வந்த ஆண்டுகள் இதனை விடவும் மோசமாக இருந்தது.

கொவிட் தொற்று பாதிக்கப்பட்ட 2020இல் இலங்கை தான் மோதிய எந்த ஒரு டி20போட்டியிலும் வென்றதில்லை. ஒட்டு மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்த்தால் இலங்கை அணி ஆடிய 69டி20சர்வதேச போட்டிகளில் 43இல் தோற்றிருப்பதோடு 23ஆட்டங்களிலேயே வெல்ல முடிந்திருக்கிறது.

ஏனைய வடிவ கிரிக்கெட்டிலும் இதே நிலை தான். 2017இல் சிம்பாப்வே அணி இலங்கை வந்தபோதும் முன்னர் எப்போதும் நிகழாத வகையில் சிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 3-−2என கைப்பற்றியது. இந்தியாவிடம் முழுத் தொடரையும் தோற்றது. களத்தடுப்பு, பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் எதிலும் தொழில்முறையான விளையாட்டு மருந்துக்கும் இருக்கவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை அணி ஆடிய 72ஒருநாள் போட்டிகளில் 26ஆட்டங்களிலேயே வெல்ல முடிந்ததோடு 44போட்டிகளில் தோல்வியே உரிமையானது. டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி சொல்லும்படியாக சோபிக்கவில்லை. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை.

எப்படி இருந்தாலும், இலங்கையின் நிலைமாற்றக் காலம் முடியவில்லை. அதற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது என்பது தான் தேர்வுக் குழு முதற்கொண்டு பயிற்சியாளர் வரை தோல்விக்கான ஒரே பதிலாக இருந்தது.

என்றாலும் கடந்த 18மாதங்களை பார்த்தால் ஏதோ மாற்றம் இருப்பது தெரிகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஆண்டு நடந்த டி20உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி வழக்கமான தோல்விகளை சந்தித்தது.

தேர்வுப் போட்டிகளில் வென்று முன்னேறியபோதும் ஐந்து குழுநிலைப் போட்டிகளில் 3இல் தோற்று வெளியேறியது. ஆனால் அணியில் குறிப்பிடும்படியாக மாற்றங்கள் தெரிந்தன.

அணிக்கு புதிதாக அழைக்கப்பட்டிருந்த பத்தும் நிஸ்ஸங்க மற்றும் சரித் அசலங்க ஆரம்ப வரிசையில் சிறப்பாக செயற்பட்டதோடு மத்திய வரிசையில் பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் சானக்க நம்பிக்கை அளித்தார்கள். பின்னர் சகலதுறை வீரர்கள் வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்னவின் துடுப்பாட்டம் இலங்கைக்கு போனஸ் ஓட்டங்களாக மாறியது.

பந்துவீச்சில் ஹசரங்கவுடன் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர என்று வலுவாகவே இருந்தது.

இலங்கை அணி கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் இதே அணியுடனேயே முன்னேறிச் சென்றது. பானுக்க ராஜபக்ஷவின் உடல் தகுதி பற்றி தேர்வுக் குழு அடிக்கடி குறைகூற சகிக்க முடியாமல் அவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்திய கதையும் அரங்கேறியது. எப்படியோ அவரது திறமைக்கு மத்தியில் தேர்வுக்குழுவால் தனது கொள்கையில் முழுமையாக தாக்குப்பிடிக்க முடியில்லை.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கை வந்திருந்தபோதும் கடைசி டி20போட்டியின் கடைசி 4பந்துகளுக்கும் இலங்கை அணி 15ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. அப்போது அணித்தலைவர் தசுன் ஷானக்க இரண்டு பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி அணியை வெற்றிபெறச் செய்தது பெரும் நம்பிக்கையைத் தந்தது. இந்த உத்வேகம் பிந்திய போட்டிகளில் இலங்கை அணியில் காண முடிந்தது.

ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிடம் தோற்றது அவ்வப்போது நிகழும் கோளாறு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த போட்டிகளில் இலங்கை அணியின் ஆட்டம் அதனை நிரூபிப்பதாக இருக்கிறது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய விதம் இலங்கை அணி இன்னமும் தனது கஷ்ட காலத்தில் இல்லை என்பதைச் சொல்கிறது.

இத்தனை காலம் பொறுத்ததற்கு டி20க்கு ஏற்ற கச்சிதமான அணி இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. ஆரம்ப வரிசை, மத்தியவரிசை, சகலதுறை, சுழற்பந்து, வேகப்பந்து எல்லாமே ஓரளவுக்கு முழுமை பெற்றிருக்கிறது. எந்த நேரத்திலும், நெருக்கடியிலும் யாரையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஆசிய கிண்ணம் என்பது சாதாரணமானது அல்ல. அதிலும் உலகின் வலுவான அணியான இந்தியா, பாகிஸ்தானை அநாயாசமாக வீழ்த்தி கிண்ணத்தை வெல்வதற்கு குறையுடன் இருக்கும் அணி ஒன்றால் முடியாது. அணி மாத்திரம் அன்றி தசுன் ஷானக்கவின் தலைமையும் அதற்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருப்பது அவர் அணியை வழிநடத்துவதை பார்த்தால் புரிகிறது.

இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி இலங்கை தனது நிலைமாற்றக் காலத்தை பூர்த்தி செய்து விட்டதா? இதனை அளவிட வகுக்கப்பட்ட அளவுகோல்கள் எதுவும் இல்லை.

இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளின் நிலைமாற்றக் காலம் என்பது நீண்டதாக இருக்காது, கூடினால் ஓரிரு போட்டித் தொடர்களில் அது தனது வழமையான நிலைக்குத் திரும்பி விடும். பாகிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற அணிகள் வீழ்ச்சிகளைத் சந்தித்து மீண்டெழுந்தாலும் அதலபாதாளத்துக்கு விழுந்து விடாது.

மேற்கிற்திய தீவுகள் 70கள் தொடக்கம் அடுத்த மூன்று தசாப்தங்கள் உலகில் கோலோச்சியபோதும் அடுத்து வந்த காலம் அந்தப் பொற்காலம் பற்றிய பெருமை பேசும் யுகமாக மாறிவிட்டது. மேற்கிந்திய தீவுகள் என்பது திடீரென்று உச்சம் தொட்டு பின்னர் படுகுழியில் விழும் நிச்சமற்ற அணியாகவே கிரிக்கெட் உலகம் பார்க்கிறது.

இலங்கை கிரிக்கெட் 1996உலகக் கிண்ணத்துடன் எழுச்சி பெற்று அதன் தொடர்ச்சி சங்கக்கார, மஹேல யுகம் வரை நீடித்தது. என்றாலும் அதன் பின்னர் இந்தத் தொடர்ச்சி அறுந்து மீண்டும் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது தான் இந்த நிலைமாற்றக் காலம் ஒன்றின் தேவைக்குக் காரணமானது.

இலங்கை தனது எழுச்சிக்கான ஆரம்பத்தை பெற்றிருப்பதாகவே தெரிகிறது. இப்போதிருக்கும் அணியின் சராசரி வயது 26ஐ தாண்டாது. அதாவது அடுத்த ஆறேழு ஆண்டுகளுக்கு இந்த அணியால் விளையாட முடியும். இந்தத் தர்க்கத்தில் பார்த்தால் இலங்கை தனது நிலைமாற்றக் காலத்தை பூர்த்தி செய்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

என்றாலும் அப்படி ஒரு முடிவுக்கு வர அவசரப்படாமல் இருப்பதே நல்லது.

எஸ். பிர்தெளஸ்

Comments