உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியான அறுகம்பே | தினகரன் வாரமஞ்சரி

உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியான அறுகம்பே

கடல் நீரலைச்சறுக்கலுக்கு (சேர்பிங்) கிழக்கு ஆசியாவிலே மிகவும் பிரசித்திபெற்ற தளமாக வர்ணிக்கப்படும் அறுகம்பே உல்லே சுற்றுலா பிரதேசத்துக்கு தற்போது வெளிநாட்டு உல்லாச பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.  

கடந்த சில வருடங்களாக கொரோனா, சஹ்ரான் தாக்குதல், மற்றும் அரசியல், பொருளாதார பிரச்சினை போன்றவைகளால் முற்றாகவே அறுகம்பே முடங்கிக் கிடந்தது. இதனால் சுற்றுலா தொழிலை தமது ஜீவனோபாயமாக நம்பி இருந்த பெருவாரியானோர் முற்றாகவே பாதிக்கப்பட்டிருந்தனர்.  

தற்போது படிப்படியாக நிலை மை சீரடைந்து வருவதால் உலகின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் உல்லாசப் பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னோடியாக இங்கு கடமையிலுள்ள முப்படையினர் “கிளீன் ஸ்ரீ லங்கா”, பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் சமூக சேவை அமைப்புகள் போன்றனவற்றின் ஒத்துழைப்புடன் கடற்கரைப் பிரதேசத்தை குறிப்பாக “சேர்ப்பிங்” பிரதேசங்களை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு கழிவுகளற்ற பிரதேசமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

உல்லாசப் பயணிகளாக வருகை தந்த அநேக வெளிநாட்டுப் பயணிகள் கூட அசுத்தமாக இருந்த கடற்கரைப் பிரதேசங்ககளை மிக உற்சாகமாக துப்புறவு செய்யும் பணிகளில் உதவியும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றனர்.  

சில வெளிநாட்டவர்கள் “சேர்பிங்” கிற்கான ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் அறுகம்பே பிரதேசம் உயிரோட்டமுள்ள பிரதேசமாக மாறிவருகின்றது. இங்கு வரும் உல்லாசப்பயணிகள் எழில்மிகு பறவைகளையும், மிருகங்களையும் நேரடியாகவே பார்த்து ரசிக்கும் கூமுனை வனவிலங்குகள் சரணாலயத்துக்கு குழுவினராக “சபாரி” வாகனங்களிலும் மோட்டார் மற்றும் துவிச்சக்கர வண்டிகளிலும் செல்கின்றனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முகுது மகா விகாரை, மகுல் மகா விகாரை, குடும்பிகல, எலிபன்ட் ராக், விஸ்கி பாயிண்ட், போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்வது அவர்களது நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவையாகும்.  

இதேவேளை, கடல்நீரலைச் சறுக்கலில் (சேர்பிங்) பெருந்தொகையான வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் சேர்பிங் ‘பகுதியில்’ கடல் அலையோடு சங்கமித்து தம்மை மறப்பதை தற்போது இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது. இதேவேளை நீண்டகாலம் முடங்கிப்போயிருந்த “சேர்பிங்” போட்ஸ் வியாபாரிகளும் தமது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அவர்கள் தமக்குப் பிடித்தமான சேர்பிங்க் போட் களை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளனர். இங்குள்ள “சேர்பிங்க்” பயிற்றுனர்கள் ‘சேர்பின்க்’ கில் ஆர்வம் காட்டுவோருக்கு பயிற்சிகளியும் நுட்பங்களையும் கற்றுக்கொடுக்கின்றனர். வெளிநாட்டு சிறுவர்கள் இளைஞர்கள் கூட “சேர்பிங்க்’ கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.  

இதேவேளை, இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உலக சுற்றுலா தினத்தை எதிர்வரும் 29ம் திகதி அறுகம்பேயில் மிக விமரிசையாக கொண்டாடவுள்ளனர். இது தொடர்பான எல்லா ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பொத்துவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் அரசாங்க அதிபர் ஜே.எம்.எஸ்.டக்ளஸ் தலைமையில் அண்மையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.  

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம் ஜவ்பர், பொத்துவில் பிரதேச தலைவர் எம்.எச்.எ.ரகீம் உட்பட பல்வேறு திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் அறுகம்பேயில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை மிக விமரிசையாக நடாத் துவதற்கான எல்லா ஒழுங்குகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக ஜவ்பர் கூறினர். தற்போது கடற்கரையை துப்புரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முப்படையினராலும் பல்வேறு அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.  

அன்றைய தினம் (29) ந்திகதி கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் கடற்கரைப் பிரதேச்தை காலை 7.30மணிக்கு துப்புரவு செய்யும் பணியோடு உலக சுற்றுலா தின நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. இதனையடுத்து அறுகம்பே களப்பில் மரநடுகையும் கரையோரங்களில் குப்பை தொட்டிகள் வைக்கும் நிகழ்வும் நடைபெறும்.  

இதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எ.எம் ஜவ்பர், தலைமையில் பிரதான நிகழ்வுகள் நடைபெறும். சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். முஷாரப் கௌரவ அதிதியாக வும் கலந்துகொள்கின்றார்.  

காலை நிகழ்வாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சுற்றுலா அதிகார சபை அடையாள அட்டை வழக்குதல், இருநூறு குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல், இருபத்துஐந்து நெற்காணி உரிமையாளர்களுக்கு விதைநெல் வழங்கல், வயது குறைந்த போசாகின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பால்மா வழங்கல், வீட்டுத்தோட்ட ம் மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு மரக்கறி விதைப் பைக்கற்றுகள் வழங்கல், வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கல் என்பன நடைபெறும்.  

மாலை நிகழ்வாக இங்குள்ள உல்லாசப் பயணிகளுக்கு உதவும் வகையில் பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் “தகவல் மையம்” ஒன்றும் பிரதம அதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையடு த்து ஊறணி களப்பில் மரநடுகையும் அதனைத் தொடர்ந்து விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட படகு சவாரியில் சர்வதேச ஊடகவியலாளர்களும் பிரதம விருந்தினர்களும் கலந்துகொள்வர்.  

இறுதி நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெளி நாட்டவர் உள்ளூர் வீரர்களுக்கிடையிலான கண்காட்சி கரப்பந்தாட்ட ப் போட்டியிலும் இசைக் கச்சேரியைப் பார்த்து ரசிப்பதிலும் பெருவாரியான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது 

எம்.ஏ. பகுர்தீன்- அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

Comments