சுண்ணாம்பு உற்பத்தி செய்வதென்பது இலகுவானதல்ல | தினகரன் வாரமஞ்சரி

சுண்ணாம்பு உற்பத்தி செய்வதென்பது இலகுவானதல்ல

எனது கணவரிடம் பழகிய சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலே, தற்போது அவர் இல்லாதபோதிலும், எனது குடும்பத்தைக் காப்பாற்றக் கைகொடுத்து உதவுகின்றது என்கிறார் சுண்ணாம்பு உற்பத்தியாளர் தர்மராணி ரவீந்திரன்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, கோவில்குளம் நான்காம் கட்டையைச் சேர்ந்த 54வயதான  தர்மராணி, கடந்த 27வருடங்களாக சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றார்.  

தனது சுண்ணாம்பு உற்பத்தித் தொழில் பற்றியும் அத்தொழிலின் உதவியுடன் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வது பற்றியும் தினகரன் வாரமஞ்சரி வாசர்களோடு அவர் பகிர்ந்து கொள்கின்றார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலை வாழ்வாதாரத் தொழிலாக செய்துவந்த ஒருவரையே நான் திருமணம் செய்துகொண்டேன். இந்நிலையில், சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலானது ஒரு கடினமான தொழிலாக இருந்தபோதிலும், அந்நாளில் எமது தொழிலை விருத்தி செய்ய வேண்டுமென்பதற்காகவும், எமது வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகவும், சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலை கணவரிடமிருந்து நான் பழகியதோடு, கணவருடன் இணைந்து அத்தொழிலை செய்யவும் தொடங்கினேன்.  

இவ்வாறு கணவரும் நானும் இணைந்து சுண்ணாம்பு உற்பத்தியைச் செய்து வருகையில், திடீரென எனது கணவர் ஆஸ்துமா நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது இறப்பைத் தொடர்ந்து, எனது பிள்ளைகளை பரிதவிக்கவிடாது, காப்பாற்ற வேண்டிய குடும்பச்சுமையை நான் பொறுப்பேற்க வேண்டி வந்தது. அவ்வேளையில் கணவரின் இழப்பு என்னை கவலையடையச் செய்தபோதிலும், அவரிடம் நான் பழகிய சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலானது, எனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமென்ற மன நம்பிக்கையை கொடுத்தது.  

இந்நிலையில் கணவரின் இறப்பைத் தொடர்ந்து, கடந்த 13வருடங்களாக நான் தனித்துநின்று சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலை செய்து, அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்றேன் என்கின்றார் அவர்.  

ஆறுகளில் மட்டி பிடிக்கும் தொழிலைச் செய்வோர், மட்டிகளைப் பிடித்து அதனுள் இருக்கும் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு, மட்டிகளின் வெளிக்கோதை அதாவது, சிப்பிகளை, சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் என்னைப் போன்றவர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். அவர்களிடமிருந்து சிப்பிகளை நாம் குறிப்பிட்டதொரு விலைக்கு வாங்குவதோடு, விறகுக்கரியையும் நாம் விலைக்கு வாங்கி சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடுகின்றோம்.  

இந்நிலையில், எனது வீட்டு வளவில் சுண்ணாம்புச் சூளையொன்றை அமைத்து வைத்திருப்பதோடு, அச்சூளையினுள் சிப்பிகளையும் விறகுக்கரியையும் ஒன்றாகக் கலந்து இடுவதோடு, அச்சூளைக்கு தீ மூட்டி, ஒருநாள் இரவு முழுவதும் பதப்படுத்தும் வகையில் புகைய விடுகின்றேன்.  

இவ்வாறு தீயில் வெந்த சிப்பிகளை, மறுநாள் காலையில் சுண்ணாம்புச் சூளையிலிருந்து வெளியில் எடுத்து, சுத்தமான தரையில் பரவுவதோடு, அதற்கு சிறிதளவு தண்ணீர் பனுக்குகின்றேன். இவ்வாறு தண்ணீர் பனுக்கும்போது, தீயில் வெந்த சிற்பிகள் சிறு, சிறு துகள்களாகி வெள்ளை நிறமான பவுடராகின்றன. அச்சிற்பி பவுடரை அரித்தெடுத்து, பைகளில் பொதி செய்து விற்பனைக்குத் தயார் செய்கின்றேன் என்கின்றார் அவர்.  

வீட்டுக்கு வெள்ளை அடிப்பதற்கான சுண்ணாம்பு, வீட்டுக்கு பூசுவதற்கான சுண்ணாம்பு, வெற்றிலையுடன் உட்கொள்வதற்கான சுண்ணாம்பு என்று 3வகைகளாக தரம் பிரித்து சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.  

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்பானது, கொரோனாவுக்கு முன்னரான காலப்பகுதியில் சற்று மலிவான விலையில் விற்பனையாகியது. ஆனால், தற்போது எமது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பொருட்களின் விலையேற்றம் காரணமாக சுண்ணாம்பின் விலையும் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது என்கின்றார் அவர்.  

சுண்ணாம்பு உற்பத்திக்கான சிப்பிகள் தற்போது 300ரூபாய்வரை விற்பனை செய்யப்படுவதோடு, விறகுக்கரி 700ரூபாய் முதல் 1,000ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகின்றது என்கின்றார் அவர்.   முன்னர் தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவந்து விற்பனை செய்வோரிடமிருந்து விறகுக்கரியை நான் பெற்றுக்கொண்டேன். ஆனால், தற்போது அப்பகுதிகளில் விறகுக்கரிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அப்பகுதிகளிலிருந்து விறகுக்கரி கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவதில்லை.  

இவ்வாறான நிலையில் விறகுக்கரிக்கு பதிலாக, வெய்யிலில் நன்றாக காயவிடப்பட்ட பனம்பழ விதைகளை கரியாக்கி, சிப்பிகளுடன் ஒன்றாகக் கலந்து சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படுகின்றது என்கின்றார் அவர்.  

நான் வசிக்கும் பகுதியில் சுமார் 5பேர் இவ்வாறு சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  

சிப்பிகள் கிடைக்கும் பட்சத்திலேயே சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட முடியுமென்பதால், இத்தொழிலானது எமக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாக இல்லையென்பதோடு, அதன் மூலம் போதியளவான வருமானமும் கிடைப்பதில்லை.  

இதேவேளை, இவ்வாறு எம்மால் உற்பத்தி செய்யப்பட்ட சுண்ணாம்பை விலைக்கு வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் எம்மைத் தேடி வரும்வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறே எமது வியாபாரம் இடம்பெறுகின்றது என்கின்றார் அவர்.  

எனது குடும்பமானது 9பிள்ளைகளைக் கொண்ட பெரியதொரு குடும்பமாகக் காணப்படுவதால், சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலின் மூலம் ஈட்டும் வருமானம் எமது செலவுக்கு போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும், எனக்குத் தெரிந்த இத்தொழிலை செய்து அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தின் உதவியுடன் என்னால் முடிந்தவரை குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றேன்.  

எனக்கு 4ஆண் பிள்ளைகளும் 5பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இவர்களில் 3ஆண் பிள்ளைகள் திருமணம் முடித்துள்ளதோடு, ஏனைய 6பிள்ளைகளும் தற்போது என்னுடன் இருக்கின்றார்கள். என்னுடன் இருக்கும் 16வயதுடைய ஆண் பிள்ளை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார். எனது 5பெண் பிள்ளைகளில் ஒருவர் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிக்கு இணைந்து, தற்போது சுமார் 9மாதங்களாகின்றன. மற்றுமொரு மகள், சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலுக்கு ஒத்தாசையாக உள்ளார். ஏனைய 3பெண் பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியை தொடர்கின்றார்கள் என்கின்றார்.  

நானும் ஆஸ்துமா, கொலஸ்ரோல் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கூட, எனது குடும்ப வருமானத்துக்காக சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். ஏனெனில், எவரிடமும் கையேந்தாமல், எனது உழைப்பின் மூலம் எனது குடும்பம் முன்னேற வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.  

பாடசாலைக் கல்வி கற்கும் எனது 3பெண் பிள்ளைகளை கல்வியின் மூலம் உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவர வேண்டுமென்பதோடு, 5பெண் பிள்ளைகளையும் நல்ல முறையில் கரை சேர்க்க வேண்டுமென்பதே என்  முன்னால் காணப்படும் பாரிய சாவலாகும் என்கின்றார் அவர்.  

அதிகாலையில் எழுந்து எனது சமையல் உள்ளிட்ட வீட்டுக் கடமைகளைக் கவனிப்பதோடு மாத்திரமின்றி, கிடைக்கும் நேரத்தில் சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலைச் செய்து, எனது நேரத்தை பிரயோசனமுடையதாக மாற்றிக்கொள்கின்றேன். இவ்வாறு எனது நேரம் முழுவதையும் வீட்டுக் கடமைகளுக்கும் சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலுக்கும் பிரயோசனப்படுத்துவதால், வீண் கவலைகள் என் மனதை ஒட்டிக்கொள்வதில்லை. இதனால் நான் மிகுந்த மனோ தைரியத்துடனும் இருக்கின்றேன் என்கின்றார் அவர்.  

எனது வாழ்க்கையானது, இவ்வாறு கஷ்டமானதொரு சூழ்நிலைக்கு மாறுமென்று நான் முன்னர் எண்ணியிருக்கவில்லை. ஆனால், அப்போது கணவருடன் பழகிய சுண்ணாம்பு உற்பத்தித் தொழில், என்னை தலைநிமிர்ந்து வாழ வைக்கின்றது என்கின்றார் அவர். 

டொக்டர் தர்சினி முருகுப்பிள்ளை

"நோய்கள் அண்டாவண்ணமோ அல்லது, நோய்த்தாக்கத்தை தள்ளிப்போடும் வகையிலோ எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எம்மிடமே உள்ளது"  – டொக்டர் தர்சினி முருகுப்பிள்ளை

பொதுவாக ஒவ்வொரு மனிதனினதும்  தேகவாசி, நிறமூகூர்த்தம், பரம்பரை, மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவற்றை அடிப்படையாக்கொண்டு தேக ஆரோக்கியம் கணிக்கப்படுவதோடு மட்டுமன்றி  அவர்களின் அன்றாடப் பழக்கவழக்கம், உணவுப் பழக்கவழக்கம், அவர்கள் செய்யும் தொழில் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் மனிதனது தேக ஆரோக்கியம் தங்கியுள்ளதாகவும், மட்டக்களப்புக்கான பிராந்திய சுகாதார சேவைகள் பணியக சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரப் பிரிவுக்குரிய டொக்டர் தர்சினி முருகுப்பிள்ளை  (Dr. Dharshini Murugupillai - Environment, Occupational Health Unit, RDHS office, Batticaloa)   தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான நோய்களாயினும், அடிப்படையில் சுவாசத்தின் மூலமோ, தோல் மூலமோ, மென்சவ்வு மூலமோ (கண், உதடு, வாய்) பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆகவே, நோய்கள் அண்டாவண்ணமோ அல்லது, நோய்த்தாக்கத்தை தள்ளிப்போடும்; வகையிலோ எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எம்மிடமும்; தங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

இந்நிலையில், சுண்ணாம்பு உற்பத்தித் தொழிலை எடுத்துக்கொள்வோமாயின், அத்தொழிலில் ஈடுபடுவோர் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை மற்றும் தோல், கண்களில் எரிச்சல் தன்மையை எதிர்நோக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக மருத்துவத் தகவல்கள் எதிர்வுகூறுகின்ற நிலையிலும் கூட, எமது நாட்டைப் பொறுத்தவரையில் இத்தொழிலினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இதுவரையில் ஆராய்ச்சிபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லையெனவும், அவர் கூறுகின்றார்.

இருந்தபோதிலும், அந்நோய்த் தாக்கங்களிலிருந்து  பாதுகாப்புப்பெறும் வழிவகைகளையும் மருத்துவத் தகவல்கள் எடுத்துரைப்பதாகவும்;, டொக்டர் கூறுகின்றார்.

சுண்ணாம்பு உற்பத்தி;யின்போது வெளிவரும் புகையை அருகிலிருந்து சுவாசிப்பதை தவிர்த்துக்கொள்வதோடு, நீண்டநேரம் அத்தொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் மருத்துவ அறிவுரைகள் கூறுகின்றன. மேலும், நாம் வசிக்கும் இடத்திலிருந்து ஒதுக்குப்புறமானதும் காற்றோட்டமுள்ளதுமான இடத்தில் அத்தொழிலை மேற்கொள்வது சிறந்ததாகும். 

கைகளுக்கு கையுறைகளையும்  (Gloves), தோல் வரட்சி மற்றும் எரிச்சலிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் பாதுகாப்பு ஆடையையும்  (Apron),   கண்களைப் பாதுகாக்கும் வகையில்  (Safety Glass)  நச்சுப் புகையை சுவாசிக்காத வண்ணமும், தூசு எமது உடம்பினுள் உட்புகாத வண்ணமும் முகக்கவசத்தையும்  (Face Mask)        கால்களுக்கு பாதணிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும், அவர் கூறுகின்றார்.

அத்தோடு, உணவு உட்கொள்வதற்கு முன்னர் கை, கால், முகத்தை நன்றாகக் கழுவுதல் உள்ளிட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், அவர் கூறுகின்றார். ஆகவே, மேற்கூறப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து நாம் பாதுகாப்பாக இருப்போமெனவும், அவர் தெரிவித்துள்ளார். 

ஆர்.சுகந்தினி

Comments