தொழுநோயாளர்களை தனிமைப்படுத்திய மாந்தீவு; தொழுநோயைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை | தினகரன் வாரமஞ்சரி

தொழுநோயாளர்களை தனிமைப்படுத்திய மாந்தீவு; தொழுநோயைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை

தொழுநோய் மருத்துவர் தமிழ்வண்ணனுடன் ஒரு சந்திப்பு

தொழுநோய் ஒரு கொடிய நோய் என ஒரு காலத்தில் கருதப்பட்டது. தொழுநோய் கண்டவர்களை ஊருக்கு வெளியே தனிமையில் விட்டுவிடும் வழக்கம் உலகின் பல நாடுகளில் இருந்திருக்கிறது. அது ஒரு தொற்றநோய், அருவருக்கத்தக்க நோய், கைகால்களை முடக்கி விகாரப்படுத்தும் நோய் என்றெல்லாம் கருதப்பட்டது. நோய் கண்டவர்களை தனிமைப்படுத்துவது தான் அப்போதிருந்த ஒரே வழி. ஏனெனில் குணப்படுத்த மருந்து கிடையாது. பைபிள் புதிய ஏற்பாட்டில் தொழுநோயாளியை இயேசு கிறிஸ்து சுகப்படுத்துவதாக ஒரு தகவல் உள்ளது.  

எம். ராதா நடித்து புகழ்பெற்ற இரத்தக் கண்ணீர் நாடகம் பின்னர் அவர் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. பணக்கார மைனர் பேர்வழியான எம்.ஆர். ராதா பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர். அவருக்கு இறுதியில் தொழுநோய் ஏற்படுகிறது. படம் வெற்றி பெற்றாலும் தவறான ஒரு தகவலை அது சொல்லியிருந்தது. விபசாரி வீடுகளுக்கு செல்வர்களுக்கு தொழுநோய் வரும் என்பதுதான் அந்தச் செய்தி. மக்கள் அதை நம்பினார்கள். ஆனால் பல பெண் தொடர்புக்கும் தொழு நோய்க்கும் இடையே எந்தத் தொடர்பு இல்லை என்பதை நம்பும் வகையில் எடுத்துச் சொல்வதற்கு மருத்துவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நீண்ட காலம் எடுத்தது. 

தொழுநோயாளர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைக்க வேண்டும் என்பதால் தான் மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதியில் அதாவது மாந்தீவில் தொழுநோயாளர்களுக்கான ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டது. தொழுநோயாளர்களை படகில் ஏற்றி இத் தீவில் உள்ள ஆஸ்பத்திரியில் விட்டு விடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவது சாத்தியமில்லை. அங்கேயே தமது வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டியிருககும். எப்படியோ ஒரு வழியாக சுகமாகி திரும்பி வந்தாலும் குடுபத்தார் அவர்களை ஏற்றுக் கொள்வது அரிது. 

இந்த மாந்தீவு இன்றைக்கும் வெளியார் செல்ல முடியாத இடமாகத்தான் உள்ளது. இத்தீவில் உள்ள வைத்திசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் இயந்திரப்படகு மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மாந்தீவு வைத்தியசாலைக்கு சென்று வருகிறார்கள். வேறு எவரும் செல்வதற்கு அனுமதி இல்லை. இத் தீவு கடற்படையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. மீனவர்களும் இத் தீவு பக்கமாக ஒதுங்குவதில்லை. கடற்படைக்கு பயந்தல்ல; நோய் தொற்றி விடுமோ என்ற குருட்டுப் பயம்தான் காரணம். 

மாந்தீவு சுமார் நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. தொழுநோய் சிகிச்சைக்காக இலங்கையில் இரண்டு மருத்துவ மனைகளே உள்ளன. முதலாவது ஹெந்தளையில் அமைந்துள்ளது. 1708ம் ஆண்டு டச்சுக்காரர்களால் ஹெந்தளை மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. மாந்தீவு மருத்துவமனை 1921இல் பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் இருந்த இரண்டு கிலோ மீட்டர் படகு பயண தூரத்தல் மாந்தீவு உள்ளது. இதன் மேற்கு பக்கமாக படுவான்கரை உள்ளது. மாம்பழத்துக்கும் இத்தீவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு காலத்தில் இங்கே மான்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் அதனால் இத் தீவுக்கு மான் தீவு என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாந்தீவில் நிறைய குரங்குகள் உள்ளன. 

மாந்தீவு தொழுநோய் மருத்துவமனை ஆரம்பிக்ப்பட்டு நூறு வருடங்களாகின்றன. இது பெரிய கட்டடங்களைக் கொண்ட ஒரு ஆஸ்பத்திரி அல்ல. ஆனால் முன்னர் விசாலமானதாக இருந்திருக்க வேண்டும். முன்னர் அதாவது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே நிறைய நோயாளர்கள் இருந்தனராம். அப்போதெல்லாம் நோயாளர்கள் நன்றாக அதாவது சரியான முறையில் கவனிக்கப்பட்டிருப்பார்கள் என்று கருத முடியாது. ஏனெனில் காச நோயாளரையும் தொழுநோயாளர்களையும் தீண்டத்தகாதவர்களாகத்தான் சமூகம் ஒதுக்கி வைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் 1901ஆம் ஆண்டு தொழுநோய் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார்கள். பின்னர் 2018இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் பழைய சட்டத்தை நீக்கி விட்டது. ஏனெயில் இப்போது இரு ஒரு மோசமான நோய் அல்ல. முற்றாகக் குணப்படுத்தக் கூடிய நோய். 

மாந்தீவில் தற்போது இரண்டே இரண்டு நோயாளர் மட்டுமே தங்கியிருக்கின்றனர். நீண்ட காலமாகவே இங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் ஹக்மன வெலியத்தையை சேர்ந்தவர். மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்களில் ஒருவர் மாந்தீவு வரும்போது ஒன்பது வயது. இப்போது 65வயதாகிறது இவருக்கு. 

தொழுநோயாளர்களுக்கான ஒரு தீவாக மாந்தீவு இருக்கின்ற போதிலும் மாந்தீவு ஒரு பசுமைத் தீவு. சுத்தமான காற்று வீசும், மரங்கள் அடர்ந்த இத்தீவை எதிர் காலத்தில் உல்லாச பயணிகளுக்கான உல்லாச தீவாக மாற்றியமைக்க முடியும் என்ற எண்ணமே இத்தீவைப் பார்க்கும் போது எழுகிறது. 

மாந்தீவு தொடர்பான தகவல்களை சேகரித்தபோது எமக்கு அறிமுகமானவரே மருத்துவ நிபுணர் தமிழ் வண்ணன். இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சரும நோய்களுக்கான மருத்துவ நிபுணர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவரை அணுகி சில விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டோம். 

"தொழு நோயை முற்றாகக் குணப்படுத்தலாம். நோய் வீரியத்தைப் பொறுத்ததாக ஆறு மாதம் முதல் 12மாத காலத்தில் நோயைக் குணப்படுத்தலாம். 1983இல் தொழுநோய்க்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. உயர் தரத்திலான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன" என்று எம்முடன் அவர் பேசத் தொடங்கினார். 

"இது ஒரு தொற்று நோய், இது நோயாளியின் மூக்கிலிருந்து வெளிவரும் கசிவினால் நோய் பரவ முடியும். இக்கசிவிலுள்ள சிறு துணிக்கைகளிலிருந்து நோய்க் கிருமிகள் காற்றில் பரவி சுகதேகிகளைப் பீடிக்கிறது.  

இது பக்றீரியா கிருமியால் ஏற்படுகிறது. ”MYCOBACTERIUM LEPRAE” என்பது அதன்பெயர். இது நோயாளரின் உடலை விகாரமடையச் செய்கிறது ஆனால் உயிரைப் பறிக்காது. 

ஆரம்பத்தில் இதன் குணக்குறிகள் பாரதூரமானதாக இருக்கமாட்டாது. ஆரம்பத்திலேயே இந்தநோய் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால் முற்றிலுமாக சுகப்படுத்திவிட முடியும். 

காலம் பிந்தி மருத்துவரை நாடும்போது, அதனை சுகப்படுத்துவது சிரமமாகி அங்கங்கள் பழுதடைவதற்கு காரணமாகிவிடும். நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவரை நாடினால் அங்கவீனம் வராமல் தடுக்க முடியும். 

காலம் செல்லச்செல்ல இந்த நோயினால், நரம்பும், சருமமும் பாதிப்படையும். தோலில் தடிப்பும் திரட்சியும் ஏற்படும். நரம்பகள் உணர்வற்றுப் போகும். இந்த நிலையானது பாரதூரமானதொரு நிலையாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில்  

தோலில் நோவில்லாத காயங்கள் உருவாகும். தோல் உணர்ச்சி குறைந்த நிலையில் இருக்கும். தோல் நிறம் குறைந்தும் காணப்படலாம். நரம்புகள் பாதிக்கப்படுவதால்தான் நோவில்லாத காயங்கள் உருவாகின்றன. இந் நோய் கண்டவர் அதிலிருந்து முழுமையாக மீட்சி பெறுவது நோயின் வீரியத்தைப் பொறுத்தது. சராசரியாக கூறினால் 6மாதம் முதல் 12மாத காலத்துக்குள் நோயை சுகப்படுத்திவிட முடியும் என்றவரிடம் நோயாளர் குணமான பின்னர் திருமணம் செய்யலாமா? என்று கேட்டோம்.

இது பரம்பரை நோய் அல்ல என்பதால் தாராளமாகத் திருமணம் செய்யலாம் என்றவர் தற்போது நோயாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. என்ற நல்ல சேதியையும் சொன்னவர், இப்போது ஒரு வருடத்தில் 100என்ற அளவிலேயே நோயாளர் எண்ணிக்கை காணப்படுவதாக கூறினார். 

மக்கள் மத்தியில் இந்த நோயைப்பற்றிய போதிய தெளிவில்லை. பயங்கர நோயாகவே இதைக் கருதுகிறார்கள். நோயின் தாக்கம். அது பரவும் வழிவகைகள், அது உடலைப்பாதிக்கும் தன்மைகள் என்பவைகளை மக்கள் புரிந்து வைத்திருந்தால். நோயின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். பூரண சுகம் பெறவும் முடியும். 

தொழுநோய் பற்றிய அறிவை எமது மக்கள் போதிய அளவில் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. 

இந்த நோயாளர்களுக்கு ஒவ்வாத உணவு என்று எதுவும் கிடையாது  

தாராளமாக எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். போசாக்கு நிறைந்த உணவுவகைளை உட்கொள்வது நல்லது. இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் என்று சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டார் மருத்துவர் தமிழ் வண்ணன். 

சந்தித்தவர் : புளியந்தீவு தவபாலன்  

Comments