பொருளாதார அடியாட்கள் எப்படியெல்லாம் நாடுகளை உருட்டிப் பிரட்டி எடுக்கிறார்கள்? | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார அடியாட்கள் எப்படியெல்லாம் நாடுகளை உருட்டிப் பிரட்டி எடுக்கிறார்கள்?

விமான விபத்தில் கொல்லப்பட்ட பனாமா மற்றும் ஈக்குவடோர் தலைவர்கள்

வளர்ந்த மற்றும் வளம் கொண்ட நாடுகள் ஏனைய நாடுகளின்விவகாரங்களில் எவ்வாறெல்லாம்தலையீடு செய்து தம்வசப்படுத்திக் கொள்ள, தமது பொருளாதார அடியாட்களை பயன்படுத்துகின்றன என்பதை ஒருநூலின் ஆதாரத்தோடு விளக்குகிறார் கட்டுரையாசிரியர்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hitman)) என்ற தலைப்பில் 2006இல் வெளியாகிய ஒரு நூல் வாசகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது 2016இல் இதன் புதிய வடிவம் வெளியாகி பெரும் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தது. ஜோன் பேர்கின்ஸ் என்பவரால் எழுதப்பட்ட இந்த நூல் அமெரிக்காவின் நவீன முதலாளித்துவத்தின் உள் பக்கங்களை வெளிப்படையாக விமர்சித்தது.

ஒரு பொருளாதார அடியாள் என்பதன் கருத்து யாதெனில் ஒரு எஜமானருக்காக ஒரு அடியாள் எவ்வாறு செயற்படுவாரோ அதேபோல் பொருளாதாரம் முகாமைத்துவம் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் நன்கு பயிற்றப்பட்டு, பல்கட்ட பரிசோதனைகள் ஊடாக விசுவாசிகளாகவும் அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களாக தேர்ச்சிபெற்றவர்கள் பொருளாதார அடியாள்களாக செயற்படுவர் என்பதாகும். திரைப்படங்களில் வரும் அடியாள்கள் முதலாளிக்காக முதலில் பேரம் பேசிப்பார்ப்பார்கள் ஒத்துப்போக மறுத்தால் அடிப்பார்கள் பிறகு துப்பாக்கியைத் தூக்குவார்கள் அதேபோலவே பொருளாதார அடியாட்களும் வெளிநாட்டு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் அவர்கள் செயற்படுத்த எத்தனிக்கும் அபிவிருத்தித்திட்டங்களின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகச் சொல்லுவார்கள் அத்துடன் மிக முக்கியமாக நாட்டின் தலைவரது இதனையொத்த கடந்தகால செயற்பாடுகள் பற்றிய கணிப்பீடுகளின் அடிப்படையில் தலைவருக்கும் அவரது குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்க கிடைக்கும் தனிப்பட்ட நன்மைகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவார்கள். உதாரணமாக ஒரு எரிசக்திவலு நிர்மாணத்திட்டம் வருகிறதென்றால் அதன் உப ஒப்பந்தங்களை எவ்வாறு அரச தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கலாம் என்பது பற்றி பேசலாம். இதன் மூலம் நாட்டின் தலைவரதும் குடும்பத்தினதும் அவர்தம் தொண்டர் அடிப்பொடிவருடிகளினதும் பொருளாதார ரீதியிலான நன்மைகள் என்னவாறு பெறப்படும் என்பது பற்றி அப்பொருளாதார அடியாள்கள் பேசுவார்கள் ஆனால் சாதாரண அடியாள்களைப் போல இவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருக்காது. மிரட்டல் தொனியிலும் பேச்சு இருக்காது. மிகவும் மென்மையாக மரியாதையாக இராஜதந்திர ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வரைமுறைகளுடன் ஒத்துப்போவதாக அது இருக்கும்.

ஆனால் அரச தலைவர் காட்டும் எதிர்வினை சாதகமானதாக இல்லாத பட்சத்தில் அத்தகைய திட்டங்களை ஏற்றுக்கொள்ளாத தலைவர்களுக்கும் அவர்களின் நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகள் குறித்து பரிவுடன் கூறுவார்கள். அது சாதாரண அடியாட்கள் ஒத்துழைக்க மறுப்பவர்களை அடித்துத் துவைத்து உடல் ரீதியாகத் தன்புறுத்துறுத்தி பணிய வைக்க எத்தனிப்பதைப் போல இல்லாவிட்டாலும் உளவியல் ரீதியாக மோசமான தாக்குதலாக அது இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் சாம தான பேத தண்டம் ஆகியவற்றில் முதல் மூன்றையும் பொருளாதார அடியாள்கள் செய்வார்கள் எனலாம். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் எவ்வாறு இத்தகைய பொருளாதார அடியாள்களை உருவாக்குகிறது. இவ்வாறு பயிற்றப்படும் பொருளாதார அடியாள்களின் வேலை என்ன அவர்கள் சர்வதேச ரீதியில் செயற்படும் நிறுவனங்கள் ஊடாக பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மீது எவர்கள் எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள் என்பது பற்றி மிகவும் தெளிவாக வாசகர்களுக்கு அந்நூல் வெளிப்படுத்தியது. நூலாசிரியரான ஜோன் பேர்க்கின்ஸ் அவ்வாறு பயிற்றப்பட்ட ஒரு பொருளாதார அடியாள் என்பதால் தனது சொந்த அனுபவங்களையே அந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக எரிசக்தி வளத்துறையில் தான் என்வாறு பொருளாதார அடியாளாகச் செயற்பட்டார் என்பதை விரிவாகக் கூறியுள்ளார்.

ஈரானின் மன்னர் ஷா, சவூதி அரேபியாவின் அரச குடும்பம், இந்தோனேசியாவின் சுகார்ட்டோவின் அரசாங்கம் அதேபோல தென்னமெரிக்காவின் ஈக்குவடோர், பனாமா போன்ற நாடுகளின் தலைமைத்துவங்களுடனான தமது கலந்துரையாடல்கள் குறித்த விரிவான விளக்கங்கள் அந்நூலில் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக தான் கொண்டு சென்ற முன்மொழிவுகளுக்கு நேரடியாக மறுப்புத் தெரிவித்த ஈக்குவடோர் மற்றும் பனாமா நாடுகளின் அரச தலைவர்கள் இருவரும் இரு வேறு தனிப்பட்ட சம்பவங்களில் தனியார் விமானங்களில் பறந்த வேளை விமான விபத்துகளுக்கு உள்ளாகி இறந்து போன சம்பவங்கள் குறித்து பேர்க்கின்ஸ் கூறுகையில் விமான விபத்துகளே எதிராளிகளை சாட்சிகள் இன்றி ஒழிப்பதற்கான சிறந்த வழி என்கிறார்.

அதேபோல சவூதி அரேபியா, ஈரான், இந்தோனேசியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் திட்டங்கள் ஊடாக எவ்வாறு மாற்றங்களுக்குள்ளாகின என்றும் எரிசக்தி வளத்துறையில் அமெரிக்கக் கம்பனிகள் எவ்வாறு இலாபமீட்டின என்பது குறித்து நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இன்றைய நவீன உலகில் முதலாளித்துவம் ஒரு ஆக்கிரமிப்பு முதலாளித்துவமாக மாறியுள்ளதுடன் முதலீடுகள் நிதிஉதவிகள் அபிவிருத்திட்டங்கள் ஊடாக அதன் செல்வாக்கு மென்மேலும் அதிகரித்துவருவதுடன் இப்போது புதுவருகையாக சீனாவும் இதில் இணைந்து கொண்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. சீனாவைப் பொறுத்தவரை அதன் தூதரகங்களில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் பொருளாதார அடியாட்களாகவும் செயற்படக்கூடியவர்கள். சீனாவும் தான் செல்வாக்குக்குட்படுத்த நினைக்கும் நாடுகளின் உட்கட்டமைப்பு விரிவாக்கத்துக்காக வேண்டியளவு கடன் வழங்கத் தயாராக இருக்கும்.

அத்துடன் அந்தந்த நாடுகளின் அரச தலைவர்களையும் அவர்தம் குடும்பங்களையும் நன்கு உபசரிக்கும். மனித உரிமை பொறுப்புக் கூறல் வெளிப்படைத்தன்மை போன்ற விவகாரங்களில் மோசமான நடத்தை கொண்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மனித உரிமைக்கவுன்ஸில் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளும் போது பேராதரவு வழங்கி அவற்றிலிருந்து காப்பாற்றும். அதன் மூலம் குறித்த நாடுகளின் தலைவர்களையும் முக்கிய புள்ளிகளையும் சொன்னதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாக மாற்றமுடியும்.

ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஆதரவு பெற்றிருந்த ஈரான் போன்ற நாடுகள் அதற்கெதிராகத் திரும்பினாலும் தொடர்ச்சியான அமெரிக்காவை எதிர்த்துவந்த லிபியத் தலைவர் கடாபி ஈராக்கியத் தலைவர் சதாம் உசைன் போன்றவர்கள் தம் சொந்த நாட்டு மக்களாலேயே மோசமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்பதையும் வரலாறு பேசுகிறது. இவற்றின் பின்னணியில் எவர் இருந்திருப்பார்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல. இன்றைய உலகில் ஒரு அரச தலைவரோ அரசாங்கமோ பெரிய பலசாலியாக இருப்பதாக உள்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் பாச்சா காட்டலாம். நாட்டின் ஒருமைத் தன்மை இறைமை பற்றியெல்லாம் தொண்டை கிழியக் கத்தலாம் ஆனால் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளின் முன் இவர்கள் வெறும் சுண்டைக் காய்கள் மட்டுமே.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments