கரிக் குருவி புகட்டிய பாடம் | தினகரன் வாரமஞ்சரி

கரிக் குருவி புகட்டிய பாடம்

மாலைப் பொழுதில் நாய் ஒன்று கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தது. அதனைக் கண்ணுற்ற நண்டு வேகமாக அருகில் சென்று ஒரு பார்வை பார்த்தது. அதனை அவதானித்த நாய் கவனியாதது போல விலக 'என்ன பயமா?' என வம்புக்கு இழுத்தது நண்டு. நண்டின் வார்த்தை நாய்க்கு வெறுப்பை ஊட்ட,  கோபத்துடன், தனது காலைத் தூக்கியது. நண்டு; தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி போர் வீரன் போல நின்றது.  

எல்லாவற்றையும் அவதானித்த கரிக் குருவி அவற்றுக்கு அருகில் இருந்த சிறிய மணற் கும்பியில் சென்று அமர்ந்தது. கரிக்குருவியைக் கண்டதும் நாய் தன் காலை நிலத்தில் வைத்தது. கரிக்குருவி புன்னகையுடன் நின்றது. நாயும் நண்டும் விலக குருவி தலை அசைத்து, 'என்ன சண்டை சமாதானம் ஆகிவிட்டதா?' எனக் கேள்வி எழுப்பியது,  நண்டும் நாயும் நாணத்துடன் தலை குனிந்தன.

குருவி; அதே சிரிப்புடன் 'நீங்கள் அமைதியாக உங்கள் உங்கள் வேலைகளை கவனித்தால் ஏன் கோபம், வேதனைகள் வரப்போகின்றது? அதைவிடுத்து அழையா விருந்தாளியாக, சுனாமி மாதிரி, இன்னொருவரின் இடத்திற்குள் அத்துமீறிப் புகுந்து, தமது வீரத்தை, கோபத்தை காட்டி வேதனைப் படுத்துவது சரியா? என வினாத் தொடுத்தது.

நாய்; 'என்ன சுனாமியா?' என ஆச்சரியத்துடன் பார்க்க, 'சுனாமியை உங்களுக்கு தெரியாது.....இயற்கை அன்னை ஆக்ரோசத்துடன் அருகில் உள்ள இடங்களுக்குள் பிரவேசித்து கோரத்தாண்டவம் ஆடினாள்..... அந்த கொடூரத்தை, உக்கிரத்தை தாங்க முடியாது எத்தனையோ உயிரினங்கள் பெரிதும்  வேதனைப்பட்டன. என சோகத்துடன் கூறி பெருமூச்சொன்றையும் உதிர்த்தது.

குருவியின் குரலில் தெரிந்த வேதனையை உணர்ந்ததாக, 'எது நாட்டுக்குள் புகுந்தது' என மெல்லிய குரலில் நண்டு கேட்டது. அதற்கு குருவி,

'இந்தக் கடல்நீர்தான், மிகுந்த கோபத்துடன் கொந்தளித்து பனைமர உயரத்திற்கு பொங்கி எழுந்து. ஊருக்குள்  நுழைந்தது. அந்த  வேகத்தை கூறமுடியாது. அகப்பட்ட உடமைகள் உயிரினங்கள் சொத்துக்கள் என அத்தனையையும் ஒரு நிமிடத்தில்  உருட்டிப் புரட்டி சீரழித்துவிட்டது... பல உயிர்களையும் காவு கொண்டது.

அதேநேரம், கடல் தன் அழகையும், தனித்துவமான மென்மைத் தன்மையையும் இழந்தது. தன்னை நம்பி வாழ்ந்த அத்தனை கடல்வாழ் உயிர் இனங்களையும் துடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. இத்தனையும் கடல் கொண்ட கோபத்தினால் வந்த சீரழிவும் அவலங்களும் தான். அதே போல் மழை, காற்று என்பனவும் தனது நிலையில் மாறி கோபங் கொண்டால் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, புயல் என மாறி பூமித்தாயை நாசப்படுத்தி விடும். 'கோபம்' மிகக் கொடுமையானது, என நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்தது.

சற்று நேரம் அவ்விடத்தில்  ஒருவிதமான அமைதி குடிகொண்டது. குருவி தொடர்ந்தது. நாயைப் பார்த்து, 'நண்டு உம்மோடு விளையாடத்தானே வந்தது. ஆனால் நீதான் அவசரப்பட்டு  காலைத் தூக்கிப் போட்டாய். நல்ல காலம் நண்டு உன்னை கடிப்பதற்கு முன் நான் வந்துவிட்டேன். இல்லையென்றால்  உங்களுக்கிடையில்  பெரிய யுத்தம் நடந்து இருவருமே பாதிக்கப்பட்டிருப்பீர்கள். 'கோபம் பாவத்தை தேடும்' எனக் கூறி சிறகடித்துப் பறந்தது. நண்டும் நாயும் அதைப்பார்த்து மகிழ்வுடன் நின்றன.

(திருமலை தேன்மொழி)

 

Comments